3D மேமோகிராம் – அறிந்ததும், அறியாததும்!
3D மேமோகிராம்: மார்பகப் புற்றுநோய் கண்டறிதலில் நவீன அணுகுமுறை
மார்பகப் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாக மாறி வருகிறது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேமோகிராம் சோதனைகள் பல ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோயைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், வழக்கமான 2D மேமோகிராம் அல்லாமல் 3D மேமோகிராம் என்ற மேம்பட்ட தொழில்நுட்பம் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
3D மேமோகிராம் என்றால் என்ன?
மார்பகப் பகுதியில் திடீரென்று தோன்றும் கட்டிகள், வலி, முலைக்காம்பு பகுதியில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவைகள் தொடர்பாக, மருத்துவரைக் கலந்தாலோசிக்கச் சென்றால், பெரும்பாலும் அவர் 3D மேமோகிராம் சோதனைக்குப் பரிந்துரைச் செய்வார்.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ள மார்பகப் புற்றுநோயின் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மேம்பட்ட சோதனையே, 3D மேமோகிராம் சோதனை ஆகும்.
வழக்கமான 2D மேமோகிராம் சோதனையைப் போன்றே, 3D மேமோகிராம் சோதனையும், மார்பகப் பகுதியில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது. 3D மேமோகிராம் சோதனையானது, மார்பகப் புற்றுநோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் இல்லாத நிலையிலும், அதில் ஏற்பட்டு உள்ள மாற்றங்களைக் கொண்டு, புற்றுநோய் உள்ளதா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிய பயன்படுகிறது.
3D மேமோகிராம் சோதனை, மார்பகத் திசுப்பகுதியில் படிந்து உள்ள கால்சியம், மார்பகங்களுக்கு இடையே காணப்படும் மாற்றங்கள், காலப்போக்கில், மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள், மார்பகத்தின் அடர்தன்மை உள்ளிட்டவைகளையும் அளவிட மருத்துவர்களுக்குத் துணைபுரிகிறது.
3D மேமோகிராம் சோதனை, மார்பக டோமோசின்தசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனையில், எக்ஸ் கதிர்கள் மார்பகப் பகுதியை, பல்வேறு கோணங்களில் படம் எடுத்து, பின் அந்தப் படங்களை ஒருங்கிணைத்து மார்பகத் திசுக்களின் முப்பரிமாண படங்களாக நமக்கு வழங்குகின்றது.
இந்தச் சோதனையின் வழிமுறை, சாதாரண மேமோகிராம் சோதனையின் வழிமுறையை ஒத்து உள்ள போதிலும், இதன்மூலம் கிடைக்கும் படங்கள், மருத்துவரை, இதுகுறித்த தெளிவான முடிவிற்கு வரத் துணைபுரிகிறது
.
2D மேமோகிராம் சோதனையைவிட, 3D மேமோகிராம் சோதனையானது, மார்பகப் புற்றுநோய் பாதிப்பை, முன்கூட்டியே, அதேசமயம் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. இதன்மூலம், புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகள் காணப்படும் நபரை, மீண்டும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்துவதில் இருந்து அவர்களைக் காக்கிறது.
3D மேமோகிராம் சோதனைச் செயல்படும் விதம்
3D மேமோகிராம் சோதனையானது, 100க்கும் மேற்பட்ட இரண்டு பரிமாண படங்களை எடுக்கின்றது. 2D மேமோகிராம் சோதனையில், வெறும் 4 இரண்டு பரிமாண படங்கள் மட்டுமே எடுக்கப்படுகின்றன.
3D மேமோகிராம் சோதனையில், ஒவ்வொரு எக்ஸ்ரே கதிரும் 1 மில்லிமீட்டர்த் தடிமன் அளவிலான மார்பகப் பகுதிகளை படம்பிடிக்கின்றன. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கிரெடிட் அட்டையின் தடிமனுக்கு நிகர் ஆகும். எக்ஸ்ரே மெஷின் உடன் இணைக்கப்பட்டு உள்ள கணினி, 100க்கும் மேற்பட்ட படங்களை ஒருங்கிணைத்து, மார்பகப் பகுதியின் முப்பரிமாண படமாக நமக்கு அளிக்கின்றது.
மேலும் வாசிக்க : மேமோகிராம் சோதனையின் வகைகள் யாவை?
3D மேமோகிராம் தரும் நன்மைகள்
- 3D மேமோகிராம் சோதனையின் மூலம் புற்றுநோய் கண்டறியும் விகிதம் கணிசமான அளவு அதிகரிக்கிறது.
- கூடுதல் சோதனைகளை மேற்கொள்வதற்கான தேவைகளைக் குறைக்கிறது.
- மார்பகப் புற்றுநோய் மட்டுமல்லாது, மற்ற வகைப் புற்றுநோய்களையும் கண்டறிய உதவுகிறது.
- தவறான முடிவுகள் வருவதைக் கட்டுப்படுத்துகிறது.
- அடர்ந்த மார்பகங்கள் கொண்ட பெண்களிடையேயும், புற்றுநோய் கண்டறிதலை மேம்படுத்துகிறது.
யார் 3D மேமோகிராம் சோதனையை மேற்கொள்ளலாம்?
மேமோகிராம் சோதனைத் தேவைப்படுபவர்கள் அனைவரும் 3D மேமோகிராம் சோதனையை மேற்கொள்ளலாம். 2D மேமோகிராம் சோதனையில், பெரிய மார்பகங்கள் கொண்டவருக்கு, மார்பகப் புற்றுநோய் பாதிப்பைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளதால், அவர்களுக்கு 3D மேமோகிராம் சோதனைப் பரிந்துரைக்கப்படுகிறது.
முன்னணி மருத்துவமனைகள், 3D மேமோகிராம் சோதனையைச் செயல்படுத்த துவங்கிவிட்டன. ஆனால், எல்லா மருத்துவ சோதனை மையங்களிலும் இந்த வசதி இன்னும் அமல்படுத்தப்படாததால், மக்கள் இந்த வசதியைப் பெற அதிகச் செலவு மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.
3D மேமோகிராம் சோதனையின் மகத்துவத்தை அறிந்த நீங்கள், இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்தச் சோதனையை மேற்கோள் காட்டி உதவலாமே!….