முழு உடல் MRI பரிசோதனைப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டியது என்ன?
முன்னுரை:
முழு உடல் MRI என்பது ஒரு மருத்துவ நோயறிதல் செயல்முறையாகும், இது முழு உடலின் துல்லியமான மற்றும் விரிவான படங்களை எடுக்க வலுவான காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகிறது. மனித உடலின் உள் உறுப்புகள் மற்றும் கட்டமைப்புகள் பற்றிய விரிவான பார்வையை வழங்குகிறது, மேலும் இந்தச் செயல்முறைப் பொதுவாக முடிவதற்குச் சுமார் 40 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகும். முழு உடல் MRI பரிசோதனையின் மூலம், முழு உடலையும் பரிசோதிக்க முடியும். இது நோயின் வீரியம், வீக்கம் மற்றும் ஏதேனும் அசாதாரண வளர்ச்சியைக் கண்டறிய உதவும். மல்டிபிள் மைலோமா, புரோஸ்டேட் புற்றுநோய், மெலனோமா மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றங்கள் உள்ளவர்களுக்கு இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நோய் கண்டறியும் கருவியாகும்.
முழு உடல் MRI பரிசோதனை இலக்கு MRI பரிசோதனையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
முழு உடல் MRI பரிசோதனைகள் பொது மக்களுக்கானது அல்ல என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். இலக்கு வைக்கப்பட்ட MRI பரிசோதனை என்பது ஒரு தனிநபரின் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பரிசோதனைச் செய்ய உத்தரவிடப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வலியை அனுபவிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
உதாரணமாக, ஒரு நபருக்கு இடுப்பில் வலி இருந்தால், அவர்கள் முழு உடலையும் பரிசோதனைச் செய்வதற்குப் பதிலாக வலி இருக்கும் பகுதியை மட்டும் பரிசோதனைச் செய்வது இலக்கு MRI பரிசோதனையாகும்.
இலக்கிடப்பட்ட MRI பரிசோதனைகள் மிக விரைவானவை மட்டுமல்ல, உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்வதற்கு ஏதுவாக, அந்தப் பகுதியின் படங்கள் மிகவும் துல்லியமானதாகவும் மற்றும் விரிவான விவரங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
முழு உடல் MRI பரிசோதனைகள் மருத்துவ இமேஜிங்கில் ஒரு விலைமதிப்பற்ற கருவியாக இருந்தாலும், இந்த MRI மூலம் சில வகையான புற்றுநோய் அல்லது நோயியலைக் கண்டறிய முடியாமல் போகலாம். எனவே, முழு உடல் MRI பரிசோதனையை மட்டும் நம்பாமல், கொலோனோஸ்கோபிகள், பேப் ஸ்மியர்ஸ் மற்றும் மோமோகிராம்கள் போன்ற வழக்கமான புற்றுநோய் பரிசோதனை நடைமுறைகளைப் புறக்கணிக்காமல் இருப்பது விவேகமானது.
மேற்கூறிய புற்றுநோய் பரிசோதனை நடைமுறைகள் குறிப்பிட்ட புற்றுநோய்கள் மற்றும் அசாதாரணங்களைக் கண்டறிவதில் எப்போதும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, முழு உடல் MRI அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் விரிவான பரிசோதனையை வழங்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட புற்றுநோய்கள் மற்றும் நோய்க்குறியீடுகளை முன்கூட்டியே கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் பொருத்தமான நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு ஒரு விரிவான திரையிடல் திட்டத்தை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் தனிநபர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் வலி உள்ளவர்கள் இலக்கு MRI பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும்.
நோய் அறிகுறிகளின் இடம் எப்போதும் உடலில் உள்ள அடிப்படை நோயின் தோற்றத்தைக் குறிக்காது. எடுத்துக்காட்டாக, தோள்பட்டைப் பகுதியில் வலி என்பது தோள்பட்டைக்குள்ளேயே பிரச்சனை உள்ளது என்று அர்த்தமல்ல. இது பித்தப்பைப் புற்றுநோய் அல்லது வெவ்வேறு உறுப்புகளைப் பாதிக்கும் மற்றொரு நிலையைக் குறிக்கலாம். இங்குதான் முழு உடல் பரிசோதனை நுண்ணறிவுகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முழு உடலையும் ஒரு விரிவான பரிசோதனைச் செய்வதன் மூலம், அறிகுறியின் இருப்பிடத்தின் அடிப்படையில் உடனடியாக அறியப்படாத சாத்தியமான நோய்த் தளங்களைக் கண்டறிய முடியும்.
மேலும் வாசிக்க : MRI மிகச்சிறந்தது என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன
முழு உடல் MRI பரிசோதனைச் செய்வதால் உண்டாகும் தீமைகள்:
ஆம், முழு உடல் MRI பரிசோதனையினால் சில தீமைகள் உள்ளன.
முதன்மையானது முழு உடல் MRI பரிசோதனையின் விலை. இது பலருக்கும் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். முழு உடல் MRI பரிசோதனை இலக்கு MRI பரிசோதனையை விட விலை அதிகம்.
மரபணு ஆபத்துக் காரணிகள், அசாதாரண ஆய்வக முடிவுகள் அல்லது அறிகுறிகள் இல்லாத நபர்கள் முழு உடல் பரிசோதனைச் செய்துகொள்வது தற்செயலான கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் வாய்ப்பை வழங்கக்கூடும்.
இந்த எதிர்பாராத கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் அல்லது முக்கியமானதாக இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் இது எண்டோஸ்கோபி அல்லது பயாப்ஸிகள் போன்ற தேவையற்ற தொடர்சிகிச்சை நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் தனிநபர்களிடையே உடல்நலத்தைப் பற்றிய கவலையையும் ஏற்படுத்தலாம்.
இந்தத் தற்செயலான கண்டுபிடிப்புகள் உளவியல் ரீதியான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம். எனவே, முழு உடலையும் பரிசோதனைச் செய்வதற்கு முன் சிந்தித்து முடிவெடுப்பது நலம்.
முழு உடல் MRI பரிசோதனையின் சில நன்மைகள்:
முழு உடல் MRI பரிசோதனையின் நன்மைகளில் ஒன்று, மற்ற பரிசோதனைகளைப் போலல்லாமல், அயனியாக்கும் கதிர்வீச்சு இல்லாமல் துல்லியமான மற்றும் விரிவான முடிவுகளை வழங்குகிறது. முழு உடலின் துல்லியமான படங்களைப் படம்பிடிப்பதன் மூலம், MRI விரிவான மதிப்பீட்டிற்கு உதவுகிறது.
முழு உடல் MRI என்பது முதுகெலும்பு, கல்லீரல் அல்லது மூளைப் போன்ற உடலின் குறிப்பிட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்கான ஒரு சிறந்த நுட்பமாகும். முழு உடலையும் விரிவான பரிசோதனைச் செய்யும் திறன் காரணமாக இது இலக்கு பகுதிகளுக்கு அப்பால் முடிவுகளைக் காட்ட முடியும்.
இது ஒரு தனிநபரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்ற விரிவான விபரங்களுடன் முடிவுகளை வழங்குவதால், வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களில் உள்ள கட்டிகள் உட்பட உடல் ரீதியான அசாதாரணங்களைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் சிறந்த சிகிச்சையை வழங்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. எனவே இது எப்போதும் சிறந்த சிகிச்சைக்கான திட்டமிடலிலும் மற்றும் தொடர்ச் சிகிச்சையின் போது தேவைப்படும் பரிசோதனைகளிலும் முதன்மையாக இருக்கிறது.
முடிவுரை:
முழு உடல் MRI பரிசோதனையின் நன்மை, தீமைகள் மற்றும் இலக்கு MRI பரிசோதனைகளுடன் ஒப்பிட்டும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்த்தோம். இது சுகாதாரப் பராமரிப்பை நிர்வகிப்பதில் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது. முழு உடல் MRI பரிசோதனைகள் எப்போதும் நோய்களின் அடிப்படைப் பகுதிகளைக் குறிப்பதில் மருத்துவர்களுக்கு உதவுவதோடு, அதற்குப் பிறகு தகுந்த சிகிச்சைத் திட்டங்களை வகுப்பதிலும் உதவுகின்றன.