இது மட்டும் செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கைக் கன்பார்ம்!
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பது உடல், மனம், உணர்வுகளின் அடிப்படையில் சிறப்பாக அமைந்த வாழ்வு ஆகும். நீங்கள் மேற்கொள்ளும் நற்பழக்கங்களே, உங்கள் உடலை, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சரிவிகித உணவுமுறை, சரியான உடல் உழைப்பு, அமைதியான மனநிலை, ஆழ்ந்த உறக்கம் உள்ளிட்ட பழக்கங்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கப் பேருதவி புரிகின்றன.
இத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து, இந்தச் செய்தித்தொகுப்பில் விரிவாகக் காண்போம்.
சரிவிகித உணவு முறை
புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்கள் கொண்ட கொட்டைகள் உள்ளிட்டவை அதிகம் உட்கொள்ள வேண்டும். உடலுக்கு நன்மைதரும் எவ்விதச் சத்துகளும் இல்லாத எண்ணெயில் பொறிக்கப்படும் சிப்ஸ் வகைகள், குளிரூட்டப்பட்ட உணவு வகைகள், துரித உணவு வகைகள் உள்ளிட்டவைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய உணவு வகைகளில், அதிகளவு சர்க்கரை மற்றும் உப்பு உள்ளது. இதை நாம் சாப்பிட்டு வரும்பட்சத்தில், உடற்பருமன், நீரிழிவு உள்ளிட்ட விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும்.
சரிவிகித உணவுமுறையில் அனைத்து சத்துக்களும் சரியான விகிதத்தில் இடம்பெறும். இந்த உணவுமுறையானது, நமது உடலுக்குத் தேவையான சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாது, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது. இந்த உணவுமுறை கலோரி அதிகரிப்பைத் தடுக்கிறது.. இதன்காரணமாக, உடல் எடைச் சரியான அளவில் பராமரிக்கப்படுகிறது. பழ வகைகள், காய்கறிகள், முழுத்தானியங்கள், உடலுக்கு நன்மைபயக்கும் கொழுப்புகள் உள்ளிட்டவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கை நம் கண்முன்னே…..
நீர்ச்சமநிலையைக் காத்தல்
நமது உடல், 60 சதவீதம் நீரால் ஆனது என்பதிலிருந்து, அதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.உடலின் நீர்ச்சமநிலை ஆற்றல் வழங்கி, வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. தினமும் போதிய அளவு நீர்ப் பருகுவது, சோர்வு உணர்வைக் குறைப்பதுடன், உடல் எடைக் குறைப்பிலும் முக்கியப் பங்காற்றுகிறது. உடலில் உள்ள கழிவுகளை, சரியான நேரத்தில் வெளியேற்றுவதால், தோல், முகம் உள்ளிட்ட பகுதிகள் மினுமினுப்புடன் இருக்க உதவுகிறது. தினமும் 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது இன்றியமையாததாகும். போதிய அளவிற்கு நீர் அருந்துவது சிறுநீரகக் கல் பாதிப்பைத் தடுக்கும். உடலின் வளர்சிதை மாற்ற வீதத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, கவனிக்கும் திறனையும் மேம்படுத்துகிறது.
உடற்பயிற்சிகள்
உடற்பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுகின்றன. உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அது உடலில் கலோரிகள் சேர்வதைத் தவிர்ப்பது மட்டுமல்லாது, உடல் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. உடற்பயிற்சிகள், இதய நலனுக்கு உகந்தது மட்டுமல்லாது, ரத்த ஓட்டம் சீராக்குகிறது. எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதன் மூலம், தசைகளின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது. மனம் சார்ந்த இடர்பாடுகளைக் களைவது மட்டுமல்லாது, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் சுரக்கும் எண்டார்பின்கள், மன அழுத்தத்தைக் குறைக்கின்றது.
குடி மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்த்தல்
குடி மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கம் உடல் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், சில சமயங்களில் உயிருக்கும் ஆபத்தாக மாறுகின்றன. புகைப்பிடிக்கும் பழக்கத்தின் மூலம், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுப்பாதைப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
மதுபான வகைகளை அதிகம் அருந்துபவர்களுக்கு, கல்லீரல் பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது.
ஆழ்நிலை உறக்கம்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு, அமைதியான மற்றும் ஆழ்நிலை உறக்கம் மிகவும் இன்றியமையாதது ஆகும். நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தான், பழுதடைந்த செல்கள், தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்கின்றன. இதன்காரணமாக, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது.உறக்கம் உடலுக்கு ஓய்வளிப்பதுடன், மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.சரியான அளவிற்கு உறக்கம் இல்லாத நபர், எப்போதும் சோர்வுடனேயே காணப்படுவார். சிறிய சிறிய விசயங்களுக்கு எல்லாம் அதிகம் கோபப்படுவார். மேலும், அவருடைய தனித்துவம் மற்றும் கற்றல் திறன் பாதிக்கப்படும். தேவையற்ற பதட்டம், எதிலும் விருப்பம் இல்லாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
இத்தகைய எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க வேண்டும் எனில், ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம் ஆகும். தினமும் இரவில் 6 முதல் 8 மணிநேரம் உறங்க வேண்டும்.
குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்குங்கள்
நீங்கள் கவலையில் உழலும்போது, உங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தான் உற்ற துணையாக இருப்பார்கள். உங்களின் ஏற்றத்தாழ்வுகள், நெளிவு, சுளிவுகளை அறிந்தவர்கள் அவர்கள்தான். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது புதிய அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் தருகிறது.இதன்காரணமாக, மன அழுத்தம் குறைகிறது. இது உடல்நல ஆரோக்கியத்திற்குக் காரணமாக அமைகிறது.
எலெக்ட்ரானிக் உபகரணங்களின் பயன்பாட்டைக் குறையுங்கள்
இந்த நவீன யுகத்தில், எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள் பயன்படுத்தாத மனிதர்கள் இல்லை என்று உறுதியாகக் கூற முடியும். அந்தளவிற்கு நமது வாழ்க்கையில், எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களின் பயன்பாடு நீக்கமற நிறைந்து உள்ளது. மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் அதீதப் பயன்பாடு, உங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைகின்றன.
மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றின் திரைகளை நீண்ட நேரம் காணும்போது, நமது கண்கள் விரைவாகச் சோர்வடைகின்றன. உடல் உழைப்பு கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. வீடியோ கேம்கள், ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதைத் தவிர்த்து, மைதானங்கள் உள்ளிட்ட வெளிப்புறங்களில் நண்பர்கள் விளையாட வேண்டும். இதன்மூலம் உடற்திறன் அதிகரிப்பதுடன், மன அழுத்த பாதிப்புகள் குறையும். நண்பர்களுடன் விளையாடி மகிழும்போது, குழுவாகச் செயல்படும் உணர்வு ஏற்படுகிறது. இரவு உறங்கச் செல்வதற்கு முன், அரைமணி நேரத்திற்கு முன்பாக, மின்னணு உபகரணங்களின் பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டும். இது, நீங்கள் ஆழ்ந்த நித்திரை மேற்கொள்ள அடிகோலும்.
சுகாதாரத்தைப் பேணுதல்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு, சுகாதாரம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நாம் சுகாதாரமாக இருப்பதன் மூலம், தொற்றுநோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். சுகாதாரத்தைப் பேணுபவர், எப்போதும் மன உறுதியுடன் காணப்படுவார். சுத்தம் மற்றும் சுகாதாரத்தை, நம் உடலில் மட்டுமல்லாது, நாம் புழங்கும் வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் உள்ள அறைகள் உள்ளிட்டவைப் பேணிக் காக்க வேண்டும்.
சுகாதாரப் பழக்கவழக்கங்களை முறையாக மேற்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளைக் கழுவுதல், அறை மற்றும் பொருட்களைச் சுத்தமாக வைத்திருத்தல், உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல், தினமும் இருமுறை பல்துலக்குதல், அடிக்கடி நகம் வெட்டுதல், குப்பைகளை முறையாக அகற்றுதல் போன்றவை அவற்றுள் அடங்கும். இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
மேலும் வாசிக்க : உடல் நலத்தைப் பாதிக்கும் வாழ்க்கை நெறிமுறைகள்
மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம்
உடல் ஆரோக்கியம் இருந்து, மனம் ஆரோக்கியமாக இல்லையெனில், எந்த விசயத்திலும் முழுமனதுடன் ஈடுபட முடியாது. இக்கட்டான தருணங்களில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைத் திட்டமிடுவது, மன ஆரோக்கியம் தான். எனவே, நாம் மன ஆரோக்கியத்திற்கும் போதிய முக்கியத்துவம் அளிப்பது நல்லது.
வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்
உடல்நலன் சார்ந்த வழக்கமான பரிசோதனைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், பெரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். தைராய்டு போன்ற பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்தால், மருந்துகள் மூலமே எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
வயது, பாலினம், உடல்நிலை போன்ற காரணிகளால் வழக்கமான பரிசோதனைகள் ஒருவருக்கொருவர் வேறுபடும்.மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப நடந்து கொண்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
உடல்நல ஆரோக்கியத்திற்குப் பழங்காலம் தொட்டே, சில பழக்கவழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகைய சில பழக்கவழக்கங்கள் குறித்து இங்கு காண்போம்.
வீட்டில் வெறுங்காலுடன் இருத்தல்
நாம் தினமும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகிறோம். அப்போது நாம் அங்கிருக்கும் அழுக்குகள், கிருமிகள் உள்ளிட்டவைகளையும் நமது வீட்டிற்குக் கொண்டு வருகிறோம். இக்கிருமிகளே நமக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படக் காரணமாகின்றன.வெளியே அணியும் அனைத்து காலணிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளியிடங்களுக்குச் சென்று வந்தவுடன், கை, கால்களை நன்கு கழுவ வேண்டும். வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதனால், வெறுங்காலுடனேயே இருக்கலாம். தேவைப்படுபவர்கள், வீட்டின் பயன்பாட்டிற்கு என்றே, தனியானதொரு காலணிகளைப் பயன்படுத்தலாம்.
தரையில் அமர்ந்து சாப்பிடுதல்
தரையில் அமர்ந்து, கால்களைச் சம்மணமிட்டுச் சாப்பிடும் போது, உடல் இலகுவாகிறது. உணவை எடுக்க முன்பும், சாப்பிடும் போது பின்புறமாகவும் உடலை வளைக்கும் போது, இரைப்பைக்குச் சிறந்த மசாஜ் ஆக அமைகிறது. இதன்மூலம், ஜீரணம் எளிதாகின்றது. இன்சுலின் சுரப்பு சீராவதால், பல்வேறு பாதிப்புகள் வருவது தடுக்கப்படுகிறது.
நின்றுகொண்டு சாப்பிடும் போது, இரத்த ஓட்டம் உடலின் அடிப்பகுதிக்கு அதிகமாகப் பாய்கிறது. இதனால், உணவு செரித்தல் மற்றும் செல்களால் உறிஞ்சப்படுதல் போன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.. இதன்காரணமாக, செரிமானக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தரையில் சம்மணமிட்டு அமர்வதன் மூலம், முதுகெலும்பின் அடிப்பகுதி தூண்டப்படுகிறது. இது உங்கள் மூளையை, இயல்புநிலையிலேயே வைத்திருக்க உதவுவதால், செரிமானம் சீராக நடைபெறுகின்றது.
கைகளால் சாப்பிடுதல்
உணவுகளை கைகளால் சாப்பிடும் போது, அதன் சுவை, மணம், தன்மை உள்ளிட்டவை உணர முடிவதால், சாப்பிடும் அனுபவம் முழுமையடைகிறது.செரிமானத்தைத் தூண்டுகிறது.
மண்பானையில் சமைத்தல்
நாம் மண் பானை உள்ளிட்ட மண்பாண்டங்களில் சமைத்த உணவைச் சாப்பிடுவதன் மூலம், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட அனைத்துச் சத்துக்களும் நேரடியாகக் கிடைக்கின்றன.
மண்பாண்டங்களில் போதிய அளவு ஈரத்தன்மை இருப்பதினால், இதில் சமைப்பதற்குக் குறைவான அளவிலான எண்ணெயே போதுமானதாக உள்ளது இதன்காரணமாக, உணவின் pH அளவு பராமரிக்கப்படுகிறது.இது உடல் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
தாமிரப் பாத்திரத்தில் இருக்கும் நீரை அருந்துதல்
முன்னொரு காலத்தில் எல்லாரது வீட்டிலும் தாமிரத்தாலான பாத்திரங்கள் இருக்கும். தாமிரப் பாத்திரங்கள், இயற்கையான வடிகட்டல் முறையாகும். இவ்வகைப் பாத்திரங்களில் ஊற்றி வைக்கப்படும் தண்ணீரானது, மிகவும் தூய்மையானது ஆகும். குடிநீரில் உள்ள ஆல்காக்கள், பூஞ்சைகள், பாக்டீரியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை இயற்கையான வடிகட்டல் முறையில் அகற்றி, சுத்தமானதாக மாற்றி, குடிப்பதற்கு ஏதுவானதாக மாற்றுகிறது. இந்தத் தண்ணீரை, தொடர்ந்து அருந்துவதன் மூலம், உடலில் ஏற்படும் காயங்கள் வேகமாகக் குணம் அடைகின்றன. இது மெலனின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதால், தோல் ஆரோக்கியத்தைக் காக்கிறது.
இத்தகையப் பழக்கவழக்கங்களை நாம் அன்றாடம் மேற்கொண்டு வந்தால், உடல் நலமுடனும், ஆரோக்கியத்துடனும் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழலாம்…..