முழு உடல் PET ஸ்கேனை எப்போது மேற்கொள்ள வேண்டும்?
முழு உடல் PET ஸ்கேன் சோதனை முறை, , நோயறிதல் மற்றும் மருத்துவ முன்னேற்றத்தின் அடையாளமாக விளங்குகிறது. நவீனக்கால இமேஜிங் தொழில்நுட்பங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், முழு உடல் PET ஸ்கேன் உள்ளது.
புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவதோடு மட்டுமல்லாது, உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களின் செயல்பாடுகளைத் துல்லியமாக அறிய, PET ஸ்கேன் பேருதவி புரிவது அனைவரும் அறிந்ததே…
முழு உடல் PET ஸ்கேன் என்றால் என்ன?
முழு உடல் PET ஸ்கேன் என்பது நோயைக் கண்டறியும் சோதனை ஆகும். இந்தச் சோதனையில், கதிரியக்கப் பொருளை, டிரேசர் என்ற வடிவில், நோயாளியின் ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்து, அது வெளியிடும் பாசிட்ரான் கதிர்களை, உடலிலுள்ள செல்கள் உட்கிரகிக்கும் நிலையில், புற்றுநோய் பாதிப்பிலான செல்களை அடையாளம் கண்டறிவதோடு, உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் செயல்பாடுகளை, மருத்துவர்கள் மதிப்பீடு செய்ய உதவுகிறது.
முழு உடல் PET ஸ்கேன் படங்களின் மூலம், உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் வளர்சிதை மாற்றங்கள் குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இந்தத் தகவல்களின் உதவியினால், புற்றுநோய், இதய நோய் மற்றும் நரம்பு தொடர்பான குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய முடிகிறது.
செயல்படும் விதம்
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சுகவீன அபாயங்களை அடையாளம் கண்டு, அதன் பாதிப்புகளுக்கு ஏற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைத்து, விரைவில், அந்த இக்கட்டிலிருந்து விடுதலைப் பெற PET ஸ்கேன் சோதனை முறை உதவுகிறது.
PET ஸ்கேன் சோதனையைச் செய்வதற்கு முன், நாம் சில முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயம் ஆகும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பட்டினியாக இருத்தல், ஓய்வு எடுத்தல் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஸ்கேன் மையத்திற்கு வந்த உடனே, கதிரியக்கப் பொருளான புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் ( FDG), ரேடியோடிரேசராக, ஊசி மூலம் உட்செலுத்தப்படும். இந்த டிரேசர், உடலின் இயற்கையான வளர்சிதை மாற்றத்தை அடையாளம் காட்டும். சில செல்களில், இதன் அளவு அதிகமாக இருக்கும். இந்த நிலைத் தென்பட்டால், புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.
ஊசி மூலம் உட்செலுத்தப்பட்ட ரேடியோடிரேசர், உடல் முழுவதும் பரவ சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும். இந்த நேர வித்தியாசம், டிரேசர் வகையைப் பொறுத்து மாறும். டிரேசர், உடல் முழுவதும் பரவிய பின்னரே, ஸ்கேன் சோதனையைத் துவங்க வேண்டும்..
பயன்பாடுகள்
நவீன மருத்துவத்தின் முன்னணி அம்சமாக, முழு உடல் PET ஸ்கேன் சோதனை உள்ளது. நம் உடலில் நிகழும் பலதரப்பட்ட மருத்துவ குறைபாடுகளைக் கண்டறியும் கருவியாக, இந்தச் சோதனை விளங்கி வருகிறது.
புற்றுநோய் பாதிப்பு நிலைகளைக் கண்டறிதல், என்ன சிகிச்சை என்பதைத் திட்டமிடல், நோய்ப்பரவல், சிகிச்சையின் பலன் மற்றும் பாதிப்பு மீண்டும் வருவதற்கான கூறுகள் தென்பட்டால், அதற்கெனத் தனிப்பட்ட சிகிச்சை முறைகளை வகுக்க, PET ஸ்கேன் சோதனை உதவுகிறது.
முழு உடல் PET ஸ்கேன்கள், இதயம் தொடர்பான நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் சிக்கல்களைக் களைய உதவுகிறது. கரோனரி தமனியில் ஏற்படும் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிந்து, மாரடைப்பு வராமல் தடுக்கவும், அதற்கான சரியான மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும் வழிவகைச் செய்கிறது.
அல்சைமர், பார்கின்சன் நோய், வலிப்பு நோய் உள்ளிட்ட நரம்பு தொடர்பான குறைபாடுகளுக்குத் தகுந்தச் சிகிச்சை அளிக்க முழு உடல் PET ஸ்கேன் பேருதவி புரிகிறது.
புற்றுநோய் மற்றும் இதய நோய் விவகாரங்களில், முழு உடல் PET ஸ்கேன் சோதனைகள், பாதிப்பைக் கண்டறியவும், பாதிப்பின் பரவலைக் கணக்கிடவும் மேற்கொண்ட சிகிச்சைப் பலனளித்ததா என்பதை மதிப்பிடவும், நோயாளிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் கொள்ளவும் உதவுகிறது.
நன்மைகள்
உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் வளர்சிதை மாற்றம் குறித்த முழுமையான தகவல்களை வழங்குவதால், பல்வேறு வகை நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்குரிய சரியான சிகிச்சைகளை அளிக்க வழிவகைச் செய்கிறது.இதன்மூலம், நோயாளிகள், பாதிப்பில் இருந்து பூரண நலன் பெற முடிகிறது.
இந்தச் சோதனையின் போது, குறைவான அளவிலேயே கதிரியக்கத் தனிமம் பயன்படுத்தப்படுகிறது. இது உடனடியாக, உடலில் இருந்து வெளியேறி விடுகிறது. இந்தச் சோதனையில். வலி என்ற பேச்சுக்கே இடமில்லை. சோதனை முடிவுற்ற சில நிமிடங்களிலேயே, நாம் நம் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும்.
குறைகள்
முழு உடல் PET ஸ்கேன் சோதனையில், குறைந்த அளவு கதிரியக்கம் பயன்படும் போதிலும், கர்ப்பிணிகள், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உள்ளிட்டோர், இந்தச் சோதனையை மேற்கொள்ளும் முன்னர், மருத்துவரிடம் தக்க ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது.
இந்தச் சோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பாமர மக்களுக்கு இந்தச் சோதனை, எட்டாக் கனியாகவே உள்ளது.
மேலும் வாசிக்க : பயாப்ஸி சோதனையைவிட PET ஸ்கேன் சிறந்ததா?
முழு உடல் PET ஸ்கேன் சோதனையை எப்போது மேற்கொள்ள வேண்டும்?
புற்றுநோய் பாதிப்பு நோயாளிகள், நோயின் நிலை, மேற்கொண்ட சிகிச்சையின் தன்மை, பாதிப்பு மீண்டும் வருவதற்கான அறிகுறி உள்ளிட்டவைகளைக் கண்டறிய PET ஸ்கேன் சோதனைப் பயன்படுகிறது.
இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள் அல்லது அதற்கான அறிகுறி கொண்டவர்களின் ரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை உன்னிப்பாகக் கவனிப்பதற்கு முழு உடல் PET ஸ்கேன் சோதனை உதவுகிறது. கரோனரி தமனி நோயை முன்கூட்டியே கண்டறிந்து, மாரடைப்பு வரும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது.
நரம்பியல் குறைபாடுகளான அல்சைமர், பார்கின்சன் மற்றும் வலிப்பு நோய்களுக்கு, முழு உடல் PET ஸ்கேன் முழுபயன் அளிக்கிறது. இந்த ஸ்கேன் சோதனை முறை, மூளையின் வளர்சிதை மாற்றத்தைத் துல்லியமாகக் கணித்து, அதற்குரிய சரியான சிகிச்சைகளை அளிக்க உதவுகிறது.
புற்றுநோய் மற்றும் இதய நோய் விவகாரங்களில், பாதிப்பை அடையாளம் காணவும், பாதிப்புகளை அளவிடவும், எந்தச் சிகிச்சை உகந்தது என்பதைத் தீர்மானிக்கவும் முழு உடல் PET ஸ்கேன் சோதனைப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.