டிஜிட்டல் மேமோகிராம் சோதனையும் அதன் நன்மைகளும்…
சர்வதேச அளவில், தோல் புற்றுநோயைத் தொடர்ந்து, மார்பகப் புற்றுநோயால், பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேம்பட்ட கண்டறியும் சோதனைகளும் மற்றும் அதற்கான சிகிச்சைகளும், புற்றுநோய் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைக்க மேமோகிராம் சோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேமோகிராம் என்றால் என்ன?
மார்பகப் புற்றுநோயை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய உதவும் சோதனையாக, மேமோகிராம் விளங்கி வருகிறது. இந்தச் சோதனையில், மார்பகப் பகுதி, குறைந்த அளவு எக்ஸ்ரே கதிர்ச் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்நாள் வரை, சோதனையின் மூலம் எடுக்கப்படும் படங்கள், படச்சுருள்களாகச் சேமிக்கப்பட்டு வந்தன. தற்போது அறிவியல் வளர்ச்சியின் பலனாக, டிஜிட்டல் மேமோகிராம் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது. இந்த வழிமுறையில், மேமோகிராம்கள் கணினியில் சேகரிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, அதிலேயே பகுப்பாய்வும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்காரணமாக, நமக்குத் துல்லிய முடிவுகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
மேமோகிராம் சோதனைச் செயல்முறை
மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபரை, எக்ஸ்ரே மெஷின் இருக்கும் அறையில், அவரது மார்பகப் பகுதிக்கு மேற்புற மற்றும் கீழ்ப்புற மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில், எக்ஸ்ரே கதிர்கள் ஊடுருவி செல்லுமாறு படுக்க வைக்கப்படுவார். கதிரியக்க நிபுணர், சில விநாடிகளுக்கு உங்கள் மார்பகப் பகுதியை அமுக்குவார். இதன்காரணமாக, உங்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம். இந்தச் சோதனை நிறைவடைய 20 நிமிடங்கள் வரை ஆகும்.
படச்சுருள் மேமோகிராம் சோதனையில் எடுக்கப்படும் கறுப்பு – வெள்ளைப் படங்கள், ஆவணங்களாகச் சேமித்து வைக்கப்படும். ஆனால் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், எக்ஸ்ரே கதிர்களினால் எடுக்கப்பட்ட படங்கள், மின்னணு சமிக்ஞைகளில் இருந்து டிஜிட்டல் படங்களாக, கணினியில் சேகரிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வு, டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள், டிஜிட்டல் போட்டோக்களாகச் சேமிக்கப்படும் நிகழ்விற்கு ஒப்பானது ஆகும்.
ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு இருப்பது என்ன?
மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள் காணப்படாத 49 ஆயிரம் பெண்களிடம், டிஜிட்டல் மற்றும் படச்சுருள் மேமோகிராம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தரவுகள், நியூ இங்கிலாந்து மெடிக்கல் ஜெர்னலில் வெளியிடப்பட்டு உள்ளன இவர்களில் 335 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- 50 வயதிற்குக் குறைவானவர்கள்
- பெரிய மார்பகங்களைக் கொண்டவர்கள்
- மாதவிடாய் சுழற்சியை இன்னும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் அல்லது மாதவிடாய் சுழற்சி நின்று ஒரு வருடத்திற்குள் ஆனவர்கள்
இவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், டிஜிட்டல் மேமோகிராம், சிறந்த முடிவுகளைத் தந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் வாசிக்க : 3D மேமோகிராம் – அறிந்ததும், அறியாததும்!
டிஜிட்டல் மெமோகிராமின் நன்மைகள்
- டிஜிட்டல் மேமோகிராம் சோதனையில் எடுக்கப்படும் படங்கள் எலெக்ட்ரானிக் முறையில் சேகரிக்கப்படுவதால், அதை எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் போது ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம்.
- ஆய்வின் போது, முடிவுகள், தவறாக வரும் பட்சத்தில், அதை மற்றொருவரின் பார்வைக்கு எளிதாக அனுப்பி மறுமதிப்பீடு செய்யலாம்.
- படச்சுருள் மேமோகிராம் சோதனையில் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிடும் போது, டிஜிட்டல் மேமோகிராம் சோதனையில் எடுக்கப்பட்ட படங்கள், மிகத் துல்லியமாக உள்ளன
- படச்சுருள் மேமோகிராம் சோதனையுடன் ஒப்பிடும் போது, டிஜிட்டல் மேமோகிராமில் 25 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே கதிரியக்கம், மார்பகப் பகுதியில் செலுத்தப்படுகிறது.
- டிஜிட்டல் மேமோகிராம் சோதனையின் போது எடுக்கப்படும் படங்கள், டிஜிட்டல் முறையில் கணினியிலேயே சேகரிக்கப்படுவதால், மறு பகுப்பாய்வுக்கும், எளிதாகப் பயன்படுத்தவும் வழிவகை ஏற்பட்டு உள்ளது.
டிஜிட்டல் மேமோகிராம் சோதனையின் நன்மைகளை அறிந்த நீங்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவிக்கரம் நீட்டலாமே!….