உடல் செயல்திறனை அதிகரிக்கும் செயல்பாட்டுப் பயிற்சிகள்
இன்றைய இளம்தலைமுறையினர் மற்றும் ஐ.டி.துறைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர், நாளின் பெரும்பகுதியை, ஜிம்களிலேயே செலவழித்து வருகின்றனர். அந்தளவிற்கு, அவர்களின் வாழ்க்கையில், உடற்கட்டை மேம்படுத்திக் கொள்வது அத்தியாவசியமானதாக உள்ளது.
நாம் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக ஜிம்மிற்குச் சென்றால், அங்கு இளம்தலைமுறையினரைக் காணலாம். அவர்களில் பெரும்பாலானோர் மூட்டு இணைப்புகள் மற்றும் தசைகளுக்கு வலுவூட்டும் இயந்திரங்கள் அல்லது அதிக எடைகளைப் பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்வர்.இத்தகையப் பயிற்சிகள், அவர்களுக்கு உரியப் பலனை அளிக்கும் என்றபோதிலும், ஜிம்மிற்கு வெளியே, இந்தப் பயிற்சிகள் அவர்களுக்குப் பெரும்பாலும் பயன்படுவது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஆனால், அதேநேரத்தில், உடலை வளைத்தல், முறுக்கிக் காட்டுதல், அதிக எடைகளைத் தூக்குதல், அதிகப் பாரம் ஏற்றுதல், பள்ளத்தில் இருந்து மேடான பகுதிகளுக்குத் தள்ளிச் செல்லுதல், அதிகப் பலத்துடன் இழுத்தல் உள்ளிட்ட பயிற்சிகள், உங்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கூட எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளது. இத்தகையப் பயிற்சிகளையே, செயல்பாட்டுப் பயிற்சிகள் என்று வரையறுக்கின்றோம். இந்தப் பயிற்சிகளானது, தினசரி நடவடிக்கைகளுக்கும், கட்டமைப்பில் உருவான உடற்பயிற்சிகளுக்குமான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது.
செயல்பாட்டுப் பயிற்சிகள் உடலை முழுமையாகப் பலப்படுத்துகின்றன.உடலைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்வதோடு மட்டுமல்லாது, சமநிலையையும் காக்க உதவுகிறது. இந்தப் பயிற்சிமுறையானது, உங்களை எந்தவொரு உடற்பயிற்சி முறையுடனும் ஒருங்கிணைக்க உதவுகின்றது. வாழ்க்கைத்தரம் மற்றும் உடல் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. உங்களின் ஒவ்வொரு சாதாரண நடவடிக்கைகளையும், உடற்பயிற்சியின் மூலம் நல்வாழ்க்கையைப் பராமரிப்பதற்கான நல்வாய்ப்புகளாக மாற்றுகின்றன.
செயல்பாட்டுப் பயிற்சிகள் என்னென்ன?
செயல்பாட்டுப் பயிற்சிகள் என்பது தசைகள் மற்றும் மூட்டு இணைப்புகளுக்கு வலுவூட்டுவது மட்டுமல்லாது, உடல் முழுமையும் பலப்படுத்தும் பயிற்சிகளின் தொகுப்பாக உள்ளன.
உடல் எடையைப் பராமரிக்கும் வகையிலான ஸ்குவாட் பயிற்சி
இந்தப் பயிற்சியானது, உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகின்றன. இது உடலின் ஸ்திரத்தன்மையையும் தோரணையையும் காக்க உதவுகிறது.
பிளாங் பயிற்சி
முழு உடலையும் உறுதிப்படுத்தும் வகையிலான பயிற்சி இதுவாகும். வயிற்றுப்பகுதியில் காணப்படும் தசைகள், தோள்கள், கீழ் முதுகுத் தசைகள் உள்ளிட்டவைகளில் இது கவனம் செலுத்துகிறது. முதுகுவலியைக் குறைக்க உதவும் இந்தப் பயிற்சியானது, உடலின் சமநிலைத் தன்மையையும் மேம்படுத்த உதவுகிறது.
குளூட்டியல் தசைக்கான பயிற்சி
இந்தப் பயிற்சியானது, அமர்தல், உடலின் முன்னோக்கிய இயக்கங்கள் உள்ளிட்டவைச் சீரமைப்பதுடன், உடலின் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொடைப்பகுதியில் உள்ள எலும்புகள், கீழ் முதுகுப் பகுதியைப் பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியின் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
புஷ் அப் எடுத்தல்
ஒரே நேரத்தில் உடலின் மேற்பகுதி மற்றும் மையப்பகுதியை வலிமையூட்டும் பயிற்சியாக, புஷ் அப் பயிற்சி விளங்குகிறது. இந்தப் பயிற்சியில், மார்பு, தோள்கள், டிரைசெப்ஸ் உள்ளிட்டவைகள் ஈடுபடுகின்றன. இது உடலைப் பலப்படுத்துவது மட்டுமல்லாது, உடலின் நிலைத்தன்மைக்கும் முக்கிய காரணமாக அமைகின்றன.
பக்கவாட்டுப் பயிற்சி
இந்தப் பயிற்சி உடலின் பக்கவாட்டுப் பகுதிகளை வலுப்படுத்தி, இயக்கங்களை மேம்படுத்துகிறது.தொடைகளின் வெளிப்புறப் பகுதிகள், குளூட்டியல் தசைகள் உள்ளிட்டவை, இந்தப் பயிற்சியில் பங்குபெறுகின்றன. இந்தப் பயிற்சி அன்றாட நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளுக்கு உதவுகிறது. மேலும், உடலின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.
இந்தப் பயிற்சிகள் அனைவருக்குமானதா?
நிச்சயமாக, அனைத்து வயதினரும் செயல்பாட்டுப் பயிற்சிகளைத் தாராளமாக மேற்கொள்ளலாம். நீங்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்துப் பணிபுரிபவராக இருந்தபோதிலும், உங்களது உடல் அமைப்பு நேராகவும், அதிக வலிமையுடனும் திகழ, செயல்பாட்டுப் பயிற்சிகள் பேருதவி புரிகின்றன. அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்ப்பவர்களின் தோள் மற்றும் இடுப்புப் பகுதியின் இயக்கங்களை மேம்படுத்த, இத்தகையப் பயிற்சிகள் உதவுகின்றன.
வயதானவர்களுக்கு இந்தப் பயிற்சியானது, அன்றாட நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவுகிறது. அவர்களின் உடலின் நிலைத்தன்மையை அதிகரிக்கவும், காயங்களின் போது அவர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
இளைஞர்கள் அதிக எடை தூக்குதல், வேகமாக செயல்படுதல் போன்றவற்றால் அவர்களின் ஆற்றல் அளவு அடிக்கடி மாறுகிறது.இந்த மாறுதல்களுக்கு ஏற்ப, அவர்களின் இயக்கங்களைச் செவ்வனே மாற்றி அமைக்கச் செயல்பாட்டுப் பயிற்சிகள் உதவுகின்றன.
செயல்பாட்டுப் பயிற்சிகள் எளிமையானதா?
செயல்பாட்டுப் பயிற்சிகள் மிகவும் எளிமையானது ஆகும். ஏனெனில், இந்தப் பயிற்சிகளுக்கென்று எவ்வித உபகரணங்களும் தேவையில்லை. நீங்கள் வெளியிடங்களுக்குச் சென்றிருந்தால் கூட, அங்கிருந்து, நீங்கள் இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள இயலும். இது உடல் வலிமையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, செயல்திறனையும் அதிகரிக்கச் செய்கின்றன.
நன்மைகள்
சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு
உடலின் அனைத்துப் பாகங்களையும் எளிதாக இயங்க செயல்பாட்டுப் பயிற்சிகள் உதவுவதினால், உடலின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு பேணப்படுகிறது. இது மூத்த குடிமக்கள், நிலைதவறி விழுவதில் இருந்து பாதுகாக்கின்றது.
காயங்களில் இருந்து பாதுகாப்பு
நீங்கள் அதிக எடைக் கொண்ட பொருளைத் தூக்கும்போது, முதுகுவலி ஏற்படுவதை உணரலாம். இதுவே, நீங்கள் செயல்பாட்டுப் பயிற்சிகளைச் செய்பவராக இருப்பின், அதிக எடையை, எவ்விதச் சிரமமும் இல்லாமல் தூக்குவதோடு மட்டுமல்லாது, அந்த நிகழ்வின் போது, எவ்வித விபத்தும் ஏற்படாத வண்ணம் காக்க முடியும்.
செயல்திறன் மேம்பாடு
தடகள வீரர்கள், தங்களது செயல்திறன் மற்றும் நெகிழ்வுத் தன்மையை, செயல்பாட்டுப் பயிற்சிகளின் மூலம் மேம்படுத்திக் கொள்கின்றனர். உதாரணமாக, படகு ஓட்டும் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், ஸ்குவாட் பயிற்சியின் மூலம், கால் தசைகளுக்குப் போதிய வலுப்படுத்தியப் பின்னரே, போட்டியில் பங்கேற்கின்றார்.
மேலும் வாசிக்க : சரிவிகித இந்திய உணவுமுறையைத் திட்டமிடுதல்
தசைகளின் வலிமையை மேம்படுத்துகிறது
நம் உடல் சீராக இயங்க வேண்டுமெனில், தசைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. செயல்பாட்டுப் பயிற்சிகள் தசைகளின் வலிமையை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
மனதில் கொள்ள வேண்டியவை
கடினமான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதற்கு முன், எளிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சியின் போது உடலின் நிலைத்தன்மையைக் காப்பது அவசியம்.
உடற்பயிற்சியின் போது வேகத்தை அதிகரிப்பது மற்றும் எடையை அதிகரிக்கப் போதிய கால அவகாசம் எடுத்துக் கொள்வது நல்லது.
உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது போதிய பாதுகாப்பு நடைமுறைகளையும், மன அமைதியையும் கடைபிடிப்பது அவசியமாகும். இல்லையெனில், உடற்பயிற்சி நிகழ்வே, வெறுக்கத்தக்க நிகழ்வாக மாறிவிடும். அப்படி மாறும்பட்சத்தில், விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
செயல்பாட்டுப் பயிற்சிகளைச் செவ்வனே மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாகப் பேணிக்காத்து, நல்வாழ்க்கை வாழ்வோமாக…