தலை மற்றும் மூளைப் பகுதியின் MRI ஸ்கேன் – அறிவது என்ன?
மருத்துவர் நம்மிடம் தலை அல்லது மூளைப்பகுதியை, MRI ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினாலே, நமக்கு இனம்புரியாத பயம் வந்துவிடும். ஆனால், அந்தப் பயம் இனி தேவையில்லை. MRI ஸ்கேன் என்பது வலி இல்லாத, பாதுகாப்பான செயல்முறையாக மாறிவிட்டது. ஆண்டு ஒன்றிற்கு 10 மில்லியன் பேர் MRI ஸ்கேன் சோதனையை மேற்கொள்வதாக, சர்வதேச அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்தக் கட்டுரையில், மூளைப்பகுதியில் எடுக்கப்படும் MRI ஸ்கேன் எவ்வாறு உயிர்க் காக்கும் கருவியாகச் செயல்படுகிறது என்பதையும், MRI ஸ்கேன் சோதனை முறைக் குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு காண முயல்வோம்….
தலைப்பகுதி MRI ஸ்கேன் என்றால் என்ன?
மூளை மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள திசுக்களைத் தெளிவாகப் படம் எடுக்கும் சோதனை முறைக்குத் தலைப்பகுதி MRI ஸ்கேன் என்று பெயர். மூளைப்பகுதியில் ஏற்பட்டு உள்ள குறைபாடுகள் மற்றும் காயங்களை, எவ்வித அறுவைச் சிகிச்சையும் இல்லாமல், கண்டறிய மருத்துவர்கள், இந்தச் சோதனையைப் பரிந்துரைக்கின்றனர். இந்தச் சோதனையின் மூலம் கிடைக்கும் படங்களைக் கொண்டு, பாதிப்புகளின் தீவிரத்தை அறியும் மருத்துவர்கள், அதற்குரிய தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள உதவுகிறது.
எவ்வாறு வேலைச் செய்கிறது?
MRI ஸ்கேன் சோதனை முறையில் வலிமையான காந்தத்தின் உதவியுடன், ரேடியோ அலைகள் உடலின் குறிப்பிட்ட பகுதியில் செலுத்தப்பட்டு, அங்கிருந்து வரும் சிக்னல்களை, ஸ்கேனர் உடன் இணைக்கப்பட்டு உள்ள கணினி, முப்பரிமாண படங்களாக மாற்றுகிறது. இத்தகைய தெளிவான படங்கள், நோயைக் கண்டறிய உதவுகின்றன. CT ஸ்கேன்கள் மற்றும் எக்ஸ்ரே சோதனைகளில் பயன்படுத்தப்படுவது போன்று, MRI ஸ்கேன் சோதனைகளில், கதிரியக்கம் பயன்படுத்தப்படுவது இல்லை.
உங்கள் உடல் MRI ஸ்கேனரில் வைக்கப்படும் போது, ஸ்கேனரில் இருந்து வெளிப்படும் வலிமையான காந்தப்புலம், உடலில் உள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள புரோட்டான்களை மறுசீரமைக்கிறது. இந்த நிகழ்வால், உடலில் உள்ள திசுக்களில் எவ்வித மாற்றங்களும் நிகழ்வதில்லை. புரோட்டான்கள் மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்புகின்றன. அப்போது அவை ஆற்றலை வெளியிடுகின்றன. இந்த ஆற்றலை, MRI ஸ்கேன் இயந்திரம் உள்வாங்கிப் படங்களாக உருவாக்குகின்றன. ரேடியோ அலைகள், இந்தச் சிக்னல்களை, ஸ்கேனர் உடன் இணைக்கப்பட்டு உள்ள கணினிக்கு அனுப்பி, அதைத் தெளிவான முப்பரிமாண படங்களாக மாற்றுகின்றன.
உடலின் மென்மையான திசுக்களை, MRI ஸ்கேன் தெளிவாகப் படம் பிடிப்பதால், மூளையின் நிலைகளைத் துல்லியமாக அறிய உதவுகிறது. தசைகள், கொழுப்பு, ரத்த குழாய்கள், நரம்புகள் உள்ளிட்டவை, மென் திசுக்களாக அறியப்படுகின்றன. மனித மூளை, கிட்டத்தட்ட 60 சதவீதம் கொழுப்புகளாலும், 75 சதவீதம் நீரினாலும் ஆனதாகும். ஒவ்வொரு மூளைத் திசுவும், 100 பில்லியன் நரம்புத் திசுக்களால் ஆனது ஆகும். இதன்காரணமாகவே, மூளைப்பகுதியை ஸ்கேன் எடுக்க, MRI ஸ்கேன், சிறந்த தேர்வாக அமைகிறது.
தலைப்பகுதி MRI ஸ்கேன் ஏன் எடுக்க வேண்டும்?
உங்கள் மூளைப்பகுதியை, பல்வேறு துண்டுகளாகப் பார்க்க, மருத்துவருக்கு, MRI ஸ்கேன் உதவுகிறது. MRI ஸ்கேன், உடலில் ஏற்பட உள்ள பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் நிலையில், தலைப்பகுதியில் எடுக்கப்படும் MRI ஸ்கேன் சோதனை, பின்வரும் பாதிப்புகளைக் கண்டறிய உதவுகிறது.
- நோய்த் தொற்றுக்கள்
- பக்கவாதம்
- மூளைக்கட்டிகள்
- மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ்
- மூளையிலிருந்து ரத்தம் வடிதல்
- கண் அல்லது காதின் உட்பகுதியில் ஏற்படும் குறைபாடுகள்
- பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் குறைபாடுகள்
- இரத்தம் உறைந்து போதல்
- மூளையில் உள்ள ரத்த நாளங்கள் வீங்குதல்
- அசாதாரணமான வளர்ச்சி
- முதுகுத் தண்டுவடத்தில் காயங்கள்
- நீர்க்கட்டிகள்
- வீக்கம்
- ஹார்மோன் சுரத்தலில் குறைபாடுகள்
- ஹைட்ரோசெபாலஸ் உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறியலாம்.
- பார்வைக் குறைபாடுகள்
- நடுக்கம்
- வலிப்புத் தாக்கங்கள்
- நாள்பட்ட தலைவலி
- தசைப் பலவீனம்
- உணர்வுத் தன்மையற்ற தசைகள்
- நடத்தை அல்லது சிந்தனையில் மாற்றம்
- காதுகேளாமை
- பேசுவதில் சிரமங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின், மருத்துவர் உங்களை MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்துவார்.
ஸ்கேன் சோதனைத் தெரிவிப்பது என்ன?
MRI ஸ்கேன் படங்கள், மூளையைச் சுற்றி உள்ள பகுதியில் ரத்த ஓட்டம் மற்றும் அங்குள்ள திரவங்களின் நிலைகளையும், தமனிகள் மற்றும் நரம்புகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களை அறிய உதவுகிறது.
மூளைப்பகுதியின் MRI ஸ்கேன், அப்பகுதியில் உருவாகி உள்ள புண்களை அடையாளம் காட்டுகிறது. இந்தப் புண்கள், மூளையின் சாதாரண திசுக்கள் போல் அல்லாமல், அடர் அல்லது வெளிறிய புள்ளிகளாக இருக்கும். இந்தப் புண்கள், நோய்த்தொற்று, கட்டி அல்லது மல்டிபிள் ஸ்கீளிரோசிஸ் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம்.
MRI ஸ்கேன் படங்களின் மூலம், மூளையின் முக்கிய பாகங்களான செரிப்ரம், மூளைத் தண்டு மற்றும் செரிபெல்லம் பகுதியின் ரத்த ஓட்டம் மற்றும் திசுக்களின் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை அறியலாம்.
பெருமூளை :
மூளையின் முன்பகுதி ஆகும். இது இயக்கம், உடல் வெப்பநிலை, தொடுதல், பார்வை, காதுகேட்கும் திறன், உணர்வு மற்றும் கற்றல் உள்ளிட்டவைகளுக்குக் காரணமாகிறது.
மூளைத்தண்டு :
இது நடுப்பகுதி ஆகும். கண் மற்றும் வாய் இயக்கம், தொடுதல் உணர்வு, பசி உணர்வு, இதயச் செயல்பாடு மற்றும் தசை இயக்கம் உள்ளிட்டவைகளுக்கு ஆதாரமாக உள்ளது.
சிறு மூளை :
இது மூளையின் பின்பகுதி ஆகும். இது தன்னிச்சையான தசை இயக்கத்தை ஒருங்கிணைக்கிறது. உடல் தோற்றம் மற்றும் சமநிலையைப் பேணிக்காக்க உதவுகிறது.
ஸ்கேன் சோதனைக்குத் தயாராவது எப்படி?
தலைப்பகுதியில் MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்ள எதுவும் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. நீங்கள் உங்கள் விருப்பம்போல் சாப்பிடலாம், அருந்தலாம், மருந்து வகைகளைச் சாப்பிடலாம். மருத்துவர் உங்களுக்கு வயிற்றுப்பகுதியில் MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்வதாகச் சொன்னால் மட்டுமே, சோதனைக்கு 4 முதல் 6 மணிநேரத்திற்கு முன்பாக, சாப்பிடவோ எதையும் அருந்தவோ கூடாது.
ஸ்கேன் எடுக்கும் போது, நோயாளியின் உடலில் உலோகத்தாலான பொருட்கள் ஏதும் இருந்தால், தெளிவற்ற படங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஸ்கேனிங் அறைக்குச் செல்வதற்கு முன்னரே, பேனா, நகைகள், காது கேட்கும் கருவி, ஊசிகள், ஜிப் போன்ற பொருட்கள் மற்றும் செயற்கைப் பல் செட் உள்ளிட்டவைகளை வெளியிலேயே வைத்துவிட்டுச் செல்வது நல்லது.
ஒப்பனைப் பொருட்கள், நகப்பூச்சு, சன்ஸ்கிரீன், வியர்வைச் சுரப்பைத் தடுக்கவல்ல வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றில் உலோகம் இருப்பதால், இதுபோன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், சோதனைக்குச் செல்லும் முன்னர், அதைக் கழட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
MRI ஸ்கேன் சோதனை எடுப்பதற்கு முன்பாக, கீழ்க்கண்ட உடல்நலக் குறைபாடுகள் இருப்பின், அதை உடனடியாக, மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
சிறுநீரக நோய்கள்
சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு நீங்கள் உள்ளாகி இருந்தால், உங்களால், கேடோலினியம் மருந்தை உட்செலுத்த இயலாது. கேடோலினியம், MRI ஸ்கேன் சோதனையின் துல்லியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது . சிறுநீரகப் பாதிப்பு உடையவர்களுக்கு, இந்தக் கேடோலினியம் மருந்து, சோதனையின் போது செலுத்தப்பட்டால், நெஃப்ரோஜெனிக் சிஸ்டமிக் ஃபைப்ரோசிஸ் என்ற நோய் உருவாகி, உடலின் மற்ற உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மேலும் வாசிக்க : MRI ஸ்கேன் எடுக்க ஆகும் கால அளவு என்ன?
கர்ப்ப காலம்
பெண்கள் தங்கள் கர்ப்பக் காலத்தில், MRI ஸ்கேன் சோதனையை மேற்கொள்ளும் பட்சத்தில், கேடோலினியம், கருவில் உள்ள சிசுவைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள், இந்தச் சோதனையை, தங்களது கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
கிளாஸ்ட்ரோபோபியா
மூடிய அறையில் தனிமையில் இருக்கும் போது ஏற்படும் பய உணர்வையே, கிளாஸ்ட்ரோபோபியா என்கிறோம். இந்த உணர்வு உள்ளவர்கள், மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது.
- உடலில் மெட்டல் பிளேட் பொருத்திக் கொண்டவர்கள்
- இதயத்தில் ஸ்டெண்ட் பொருத்திக் கொண்டவர்கள்
- செயற்கை வால்வு பொருத்திக் கொண்டவர்கள்
- பேஸ்மேக்கர் வைத்து உள்ளவர்கள்
- செயற்கை மூட்டு பொருத்திக் கொண்டவர்கள்
- குண்டுக்காயம் அடைந்தவர்கள் என இவர்களுக்கு, MRI ஸ்கேன் சோதனையின் போது விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுவது சாலச் சிறந்தது.
தலை அல்லது மூளைப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பை, அதற்குரிய ஸ்கேன் சோதனைகளை மேற்கொண்டு, சிகிச்சைகளைச் செய்து, தீர்வு காணவும்….