மேமோகிராம் சோதனைக்கு நீங்கள் தயாரா?
மார்பகப் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிவதில் மேமோகிராம் சோதனைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. மார்பகப் புற்றுநோய் பாதிப்பை எளிதில் கண்டறிந்து அதற்குரிய முறையான சிகிச்சைகளை நாம் விரைந்து மேற்கொண்டால், இறப்பை நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போடலாம் என்று அமெரிக்கப் புற்றுநோய் சொசைட்டி குறிப்பிட்டு உள்ளது.
மறந்துறாதீங்க பெண்களே!!!
40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட பெண்கள், மார்பகப் புற்றுநோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் தங்களது உடலில் தென்படவில்லை என்றாலும், அவர்கள் ஆண்டிற்கு ஒருமுறை, மேமோகிராம் சோதனைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
மேமோகிராம் சோதனையின் போது, ஏதாவது அசாதாரண மாற்றங்கள் கண்டறியப்பட்டால், உங்களுக்கு, மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் உடனடியாக, அதற்காக உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகி எந்த வகை மேமோகிராம், உங்களுக்கு உகந்தது என்பதை அறிந்து கொண்டு, அதற்காக, நீங்கள் உங்களைத் தயார்ச் செய்து கொள்ள வேண்டும்.
மேமோகிராம் சோதனைத் தயாராவது எப்படி?
எந்தவொரு நிகழ்வும் வெற்றி அடைய வேண்டும் என்றால், அதற்காக நாம் முன்கூட்டியே, தயார் நிலையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அதேபோல, மேமோகிராம் சோதனைக்கும், நாம் தயார்ச் செய்துகொள்வது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
மேமோகிராம் சோதனைக்கு எவ்வாறு தயார்ச் செய்வது என்பது குறைத்து விரிவாகக் காண்போம்…
- மார்பகப் பகுதியில் வலி அல்லது மாற்றங்கள்
- உங்கள் மார்பகப் பகுதியில் சமீபகாலமாக வலி
- மார்பகத்தின் வடிவம், அளவு அதன் தன்மை
- மார்பகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் கட்டி
என ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர்ந்தால், உடனடியாக, மருத்துவரிடம், இதுகுறித்துத் தெரிவிக்கவும். மருத்துவர், உங்களுக்கு டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனையைப் பரிந்துரைச் செய்வார்.
மார்பகப் பகுதியில் வரும் கட்டி அல்லது மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மார்பகப் பகுதியில் கட்டி இருக்கும்பட்சத்தில், உடனடியாக, அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.
சரியான மையத்தைத் தேர்வு செய்தல்
நீங்கள் டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனைக்குப் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில், 3D மேமோகிராம் சோதனைகள் போன்ற நவீன வசதிகளுடன் கூடிய அதே சமயம் நாள் ஒன்றிற்கு அதிக எண்ணிக்கையில் மேமோகிராம் சோதனைகளை மேற்கொள்ளும் மையத்தைத் தேர்ந்து எடுப்பது அவசியம் ஆகும்.
பெண்களே கவனம்…
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்தின் போது இயற்கையிலேயே ஏற்படும் ஹார்மோன் சுரத்தலில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளினால், அவர்களது மார்பகப் பகுதி வீக்கம் அடைந்தோ அல்லது தளர்ந்தோ காணப்படும். எனவே, இத்தகைய தருணங்களில், மேமோகிராம் சோதனை மேற்கொள்வதைத் தவிர்த்து, மாதவிடாய் சுழற்சி காலத்திற்குச் சில நாட்கள் முன்பாகவோ அல்லது, அதற்குப் பின்னரோ, மேமோகிராம் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
மேமோகிராம் சோதனைக்குச் செல்லும் முன்னர், கீழ்க்கண்ட ஆவணங்களை, தங்கள் கைவசம் வைத்திருப்பது அவசியம் ஆகும்.
- அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணம்
- இருப்பிட ஆவணம் ( சில மையங்களில் இதைக் கட்டாயம் கேட்கின்றனர்)
- மருத்துவ காப்பீட்டு அல்லது அதுகுறித்த விபரங்கள்
- வீட்டு வருமானம் குறித்த விபரங்கள் ( மேமோகிராம் சோதனையை, இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலேயோ பெற இந்தத் தகவல்கள் அவசியமாகின்றன)
- இதற்குமுன், மேமோகிராம் சோதனைச் செய்து இருந்தால், அந்தப் பழைய சோதனையின் முடிவுகளையும் , மருத்துவரிடம் காண்பித்து விளக்கம் பெறுவது நல்லது.
மேலும் வாசிக்க : டிஜிட்டல் மேமோகிராம் சோதனையும் அதன் நன்மைகளும்…
தவிர்க்க வேண்டியவை
மேமோகிராம் சோதனைக்கு நாள் குறித்து விட்டால், அப்போது முதல் குறிப்பிட்ட சில பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். இல்லையெனில், இது சோதனையில், தவறான முடிவுகள் வருவதற்கு வழிவகுத்துவிடும்.
- டியோடரண்ட்கள்
- வியர்வைச் சுரத்தலைத் தடுக்கும் மருந்துகள்
- கிரீம் லோஷன்கள்
- அழகுச் சாதனப் பொருட்கள்
- வாசனைத் திரவியங்கள்
உள்ளிட்ட பொருட்களின் பயன்பாட்டை அறவே தவிர்த்துவிட வேண்டும்
மேமோகிராம் சோதனையின் போது, சிறிது வலி உணர்வு ஏற்படும். முந்தைய சோதனையின் போதும், நீங்கள் வலியை உணர்ந்து இருந்தால், மருத்துவரிடம் இதுகுறித்து விளக்கி, சோதனைக்கு 1 மணி நேரத்திற்கு முன்னரே, அதற்கான வலி நிவாரணியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சோதனையின் போது எளிதில் கழற்றக்கூடிய வகையிலான எளிமையான உடைகளையே அணிய வேண்டும்.
கழுத்தில் அணியும் நகைகள் மற்றும் காதில் அணியும் அணிகலன்களைத் தவிர்க்க வேண்டும்.
மருத்துவரிடம் அவசியம் பகிர வேண்டிய தகவல்கள்
- மார்பக மாற்று அறுவைச் சிகிச்சைச் செய்து கொண்டவர்கள்
- குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுபவர்கள்
- கர்ப்பிணிகள் உள்ளிட்டோர், தங்களது நிலையை, மருத்துவரிடம் தெளிவாக விளக்கிச் சொல்வது அவசியம் ஆகும்.
மார்பகப் புற்றுநோயின் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு நல்வாழ்க்கை வாழ்வீர்….