திறந்த முறை MRI vs மூடிய வகை MRI – சாதக, பாதகங்கள்
MRI (காந்த அதிர்வு இமேஜிங்) ஸ்கேன் முறையானது, ரேடியோ அலைகள் மற்றும் காந்த அதிர்வுகளைப் பயன்படுத்தி, உடலின் உள் உறுப்புகளைப் படம் பிடிக்கும் சோதனை முறையாகும். உடல் உறுப்புகளான எலும்புகள், மூட்டுகள், மென்மையான திசுக்கள் உள்ளிட்டவற்றில் ஏதேனும் அசாதாரண மாற்றங்களை உணர்ந்தால், மருத்துவர் அங்கு ஏற்பட்டு உள்ள பாதிப்புகளைக் கண்டறிய MRI ஸ்கேன் சோதனையைத் தான் பரிந்துரைச் செய்வார்.
உடல் உள் உறுப்புகள் குறித்து மருத்துவர்கள் அறியும் வண்ணம் உருவாக்கப்பட்டது தான் இந்த MRI ஸ்கேனர் இயந்திரங்கள். தற்போது, இந்த ஸ்கேனர் மெஷின்கள், நோய்ப்பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.
MRI ஸ்கேனர் மெஷின்களின் வகைகள்
பயன்பாட்டைப் பொறுத்து, MRI ஸ்கேனர் மெஷின்கள், இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றோம். அவையாவன
- திறந்த முறை MRI ஸ்கேனர் மெஷின்கள்
- மூடிய வகையிலான MRI ஸ்கேனர் மெஷின்கள்
இதில், மூடிய வகையிலான MRI ஸ்கேனர் மெஷின்களே, தற்போது பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. மூடிய அறையைப் பார்த்துப் பயப்படுபவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு மட்டுமே, திறந்த முறை MRI ஸ்கேனர் மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விரு வகைகளுக்கும் அதன் இயந்திர வடிவமைப்பு மட்டுமே மாறுதே அன்றி, மற்ற பெரிய அளவிலான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூடிய வகையிலான MRI ஸ்கேன் முறை
திறந்த முறை MRI ஸ்கேனர் மெஷின்களை ஒப்பிடும் போது, மூடிய வகையிலான MRI ஸ்கேனர் மெஷினில், ஒரு ஆள் படுக்கும் அளவிலான மேடை உள்ளது. இதில் நோயாளியைப் படுக்க வைத்து ஸ்கேன் எடுப்பதன் மூலம், அவரது உடல் உள் உறுப்புகளைத் துல்லியமாகப் படம் எடுக்க இயலும். MRI ஸ்கேனர் இயந்திரத்தில் பெரிய காந்தம் உள்ள நிலையில், ரேடியோ அலைகளை உடலினுள் செலுத்தி, அங்கிருந்து வரும் சிக்னல்களைக் கொண்டு, உள் உறுப்புகள் படம் பிடிக்கப்படுகின்றன. ஸ்கேனர் உடன் இணைக்கப்பட்டு உள்ள கணினி, இந்தச் சிக்னல்களைப் படங்களாக மாற்றுகிறது. MRI ஸ்கேனர்களில் உள்ள காந்தப்புலத்தின் வலிமை ”டெஸ்லா” என்ற அலகால் அளக்கப்படுகிறது. இது “T” என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
இந்த வகையிலான ஸ்கேன் முறையில் எடுக்கப்படும் படங்கள், அதிகத் துல்லியத் தன்மை உடன் இருப்பதால், மருத்துவர், நோயாளிக்குச் செய்ய வேண்டிய சரியான சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுப்பார். இந்த வகையில் எடுக்கப்படும் ஸ்கேன்களின் வடிவங்களை வைத்து படங்கள் உருவாக்க முடியும், மற்ற வகைகளில் இது சாத்தியம் இல்லை. எனவே பல்வேறு முக்கிய தருணங்களில், மருத்துவர்களால், இந்த மூடிய வகையிலான MRI ஸ்கேன் முறையே பரிந்துரைக்கப்படுகிறது.
சாதகங்கள்
திறந்த முறை MRI ஸ்கேனர் மெஷின்கள்களோடு ஒப்பிடும் போது, அதிக அளவிலான நோய்களைத் திறம்படக் கண்டறிகிறது.
இதில் மிகவும் வலிமையான காந்தப்புலம் பயன்படுத்தப்படுவதால், ஸ்கேன் நிகழ்வு மிக வேகமாக நடைபெறுகிறது.
அதிக வலிமையான காந்தப்புலம் பயன்படுத்தப்படுவதால், மிகவும் துல்லியமான படங்கள் கிடைக்கின்றன. பல்வேறு தருணங்களில், மிகத்துல்லிய படங்களுக்கு 1.5 T போதுமானதாக உள்ளது.
ஃபைப்ரோ குருத்தெலும்பு பகுதியில் காயங்கள்
மணிக்கட்டுப் பகுதியில் உடற்கூறியல் கட்டமைப்பில் மாற்றங்கள்
கல்லீரல் மெட்டாஸ்டேஸ்கள்
மூச்சுக்குழாய் பிளெக்ஸஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு நரம்பு தெரிவுநிலை
ஸ்கீளிரோசிஸ் பகுதியில் காயங்கள்
CAD நோயாளிகளுக்குப் பல அல்லது ஒற்றைக் கல நிலைகள்
உள்ளிட்ட பாதிப்பு கொண்டவர்களுக்கு, 3.0 T அளவிலான காந்தப்புலம் பயன்படுத்தப்பட்டுத் துல்லியமான படங்கள் எடுக்கப்படுகின்றன.
பாதகங்கள்
நீண்ட நேரம் அசைவற்று இருக்க வேண்டும்
ஸ்கேனர் வைக்கப்பட்டு இருக்கும் மேடையில் படுத்து இருக்கும் போது, ஸ்கேன் எடுத்து முடியும் வரை, நாம் அசைவற்று இருக்க வேண்டும். ஸ்கேன் எடுக்கும் போது சற்று அசைந்தால் கூட, தெளிவற்ற மற்றும் மங்கலான படங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஸ்கேன் எடுத்து முடியும் வரை, அசைவற்று இருக்க வேண்டும். சில தருணங்களில், நோயாளிகள் அசைந்து விடுவர். இதனால், மீண்டும் ஒருமுறை ஸ்கேன் எடுப்பது கட்டாயமாகிறது.
கிளாஸ்ட்ரோபோபிக் எனப்படும் பய உணர்வு :
மூடிய வகையிலான MRI ஸ்கேன் முறையில், ஸ்கேனர் இயந்திரத்தின் வடிவம் மற்றும் அதன் அமைப்பு உள்ளிட்டவை நெருக்கமாக, மூடிய நிலையிலேயே இருக்கும். இந்த அமைப்பு, சில நோயாளிகளுக்கு நடுக்கத்துடன் கூடிய பய உணர்வை ஏற்படுத்திவிடும். ஸ்கேன் இயந்திரத்தில் ஸ்கேன் எடுக்கச் சில நிமிடங்கள் ஆகும். அப்போது, ஸ்கேன் அறையில், நோயாளியைத் தவிர்த்து வேறு யாரும் இருக்க அனுமதி இல்லை. மூடிய அறைக்குள் தனியாக இருக்கும் நிலை, சிலருக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்திவிடும். மூடிய அறைக்குள், தனிமையில் இருக்கும் போது ஏற்படும் பய உணர்விற்குக் கிளாஸ்ட்ரோபோபியா என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதீத சத்தம்
மூடிய வகையிலான MRI ஸ்கேன் முறையில் ஸ்கேன் எடுக்கப்படும் போது, அதீத சத்தம் உண்டாகின்றது. இது ஸ்கேன் எடுப்பவருக்கு ஒரு அசவுகரியத்தை நிச்சயம் ஏற்படுத்தும். கிளாஸ்ட்ரோபிக் எனப்படும் பய உணர்வு கொண்டவர்களுக்கு, இந்த அதீத சத்தம், மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பது திண்ணம். ஸ்கேன் எடுக்கப்படும் நிகழ்வின் போது, இந்த அதிகச் சத்தத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, காதில் பஞ்சு வைத்துக் கொள்ளவோ அல்லது ஹெட்செட்டை மாட்டிக் கொள்ளவோ, மருத்துவர்ப் பரிந்துரைப்பார்.
உடற்பருமன் கொண்டவர்களுக்கு ஏற்றது அல்ல
நீங்கள் அதிக உடற்பருமன் கொண்டவராக இருந்தால், உங்களுக்கு, இந்த மூடிய வகையிலான MRI ஸ்கேன் முறைச் சரியான தேர்வாக அமையாது. இதன் குறுகலான அமைப்பு, உடற்பருமன் கொண்ட நபர்களை, அந்த அமைப்பில் சரியாகப் பொருத்த இயலாது. எனவே, இவர்களுக்கு என்று, அகலமான அலைப்பு கொண்ட ஸ்கேனர் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
திறந்த முறையிலான MRI ஸ்கேன் முறை
இந்த முறையிலும் காந்தப் புலங்கள் மற்றும் ரேடியோ அலைகளே பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஸ்கேனர் இருக்கும் இடம் திறந்த நிலையில் இருக்கும். அதாவது, மேற்பகுதியில் பெரிய காந்தம் இருக்கும். கீழ்ப்பகுதியில் நான்கு திசைகளும் திறந்த நிலையில் இருக்கும். இதன்காரணமாக, கிளாஸ்ட்ரோபோபிக் எனப்படும் பய உணர்வு உள்ளவர்களும், இந்த முறையைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
சாதகங்கள்
திறந்த கட்டமைப்பு
இந்தத் திறந்த கட்டமைப்பு முறையால், கிளாஸ்ட்ரோபோபியா எனப்படும் பய உணர்வை ஏற்படுத்தாது. எந்த இடத்தில் உங்களுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டுமோ, அந்த இடத்தை மட்டும் ஸ்கேனரின் கீழ் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதும். துல்லியமான படங்களை எடுத்துவிடும்.
அமைதியான சூழல்
மூடிய வகையிலான MRI ஸ்கேனர் மெஷின்களைப் போன்று, இதுஅதிகச் சத்தத்தை எழுப்பாது. சிறிய அளவிலான சத்தம் வந்தாலும், அது நோயாளியைப் பெரிய அளவில் பாதிக்கும் வகையில் இருக்கப் போவதில்லை.
குழந்தைகளுக்கு ஏற்றது
மூடிய வகையிலான MRI ஸ்கேனர் மெஷின்கள், குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல என்று குறிப்பிட்டு இருந்த நிலையில், அவர்களுக்கு ஏற்ற சரியான தேர்வு, இந்தத் திறந்த முறையிலான MRI ஸ்கேனர் மெஷின்கள் தான் ஆகும், நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஸ்கேன் எடுக்கிறீர்கள் என்றால், குழந்தையின் அருகிலேயே, நீங்கள் இருக்க முடியும்.
எளிதாகத் திருப்பும் வசதி
நீங்கள் இந்த வகை ஸ்கேன் முறையில், நோயாளியை நிற்க வைத்துக் கூட ஸ்கேன் எடுக்க முடியும். முதுகுத்தண்டு பகுதியில் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் முதுகுவலி உள்ளவர்களுக்கு இந்த முறையிலான ஸ்கேன் முறை, வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சமத்துவத்தை ஊக்குவிக்கின்றது
மாற்றுத் திறனாளிகள் என்றழைக்கப்படும் உடல் ஊனமுற்றோர், சக்கர நாற்காலியில் பயணிப்போரால், மூடிய வகையிலான ஸ்கேனர் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. அவர்களுக்கு, இந்தத் திறந்த முறையிலான MRI ஸ்கேனர் மெஷின்களே உகந்தது ஆகும். இந்த முறைத்தான், அவர்களுக்கு ஸ்கேன் எடுக்க உதவுகிறது.
குறைவான பக்கவிளைவுகள்
மூடிய வகையிலான MRI ஸ்கேனர் மெஷின்களில் ஸ்கேன் எடுப்பதற்கு முன்னர் நோயாளிக்கு அளிக்கப்படும் மருந்து, உடலில் வேறுவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்த முறையில், அந்தப் பாதிப்பு கணிசமான அளவில் குறைக்கப்படுகின்றது.
முந்தைய அறுவைச் சிகிச்சையின் போது மெட்டல் பிளேட் உள்ளிட்டவை உடலில் பொருத்தப்பட்டு இருந்தால், மூடிய வகையிலான MRI ஸ்கேனர் மெஷின்களில் ஸ்கேன் எடுக்கும் போது, தெளிவற்ற படங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால், திறந்த முறையிலான MRI ஸ்கேனர் மெஷின்களில் குறைந்த வலிமையிலான காந்தப்புலங்களே பயன்படுத்தப்படுவதால், மெட்டல் பிளேட் உள்ளிட்டவைகள் இருந்தாலும், தெளிவான படங்கள் கிடைக்கின்றன.
மேலும் வாசிக்க : MRI ஸ்கேன் சோதனைக்குத் தயாராவது எப்படி?
செலவினம் குறைவு
மூடிய வகையிலான MRI ஸ்கேன் முறையை ஒப்பிடும் போது, திறந்த முறையிலான MRI ஸ்கேன் முறையில் ஸ்கேன் எடுக்கக் குறைந்த அளவே, செலவு பிடிக்கும். ஏனெனில், இதில் நிலையான காந்தம் மற்றும் கிரையோஜென் இல்லாத வடிவமைப்பு உள்ளதால், பராமரிப்பு கட்டணம் மிகவும் குறைவு ஆகும். இதனை நிறுவுவது மிகவும் எளிதான காரியம் ஆகும்.
பாதகங்கள்
திறந்த முறையிலான MRI ஸ்கேன் முறையில் 0.5 T அளவிலான காந்தப்புலமே பயன்படுத்தப்படுவதால், இவை எடுக்கும் படத்தின் தரம் குறைந்த அளவினதாகவே இருக்கும்.
திறந்த முறையிலான MRI ஸ்கேன் முறையில், குறைந்த அளவு வலிமையிலான காந்தப்புலமே பயன்படுத்தப்படுவதால், உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஸ்கேன் செய்ய முடியாது.
இந்த முறையில், முழுமையான ஸ்கேன் படங்களை எடுக்க இயலாது.
உங்களுக்கு எந்த வகை MRI ஸ்கேன் சோதனைப் பொருந்துகிறது என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அதை மேற்கொண்டு தீர்வு காண்பீராக….