நீரிழிவுப்பாதிப்பு – இது நிச்சயமாக ஸ்வீட் நியூஸ் இல்ல!
இன்றைய நிலையில், இந்தியாவில் மிக அதிகமானோரைப் பாதித்து உள்ள நோய்ப்பாதிப்பு என்றால், அது நீரிழிவு நோய்ப் பாதிப்பு தான் என்று எவ்விதத் தயக்கமும் இன்றிச் சொல்ல முடியும். அந்த அளவிற்கு, இந்தப் பாதிப்பு, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வயது வித்தியாசம் இன்றி, அனைவரையும் பாடாய்படுத்தி வருகிறது.
நீரிழிவுப் பாதிப்புக் கொண்டவர்கள், அதிகச் சுயக் கட்டுப்பாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், இந்தப் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவது மிகக் கடினம்.இந்தப் பாதிப்புக் கொண்டவர்கள், உணவு விசயங்களில் மிகுந்த கட்டுப்பாட்டு உணர்வுடன் இருக்க வேண்டும். உரிய மருந்து, மாத்திரை வகைகளை, தக்க நேரத்தில் எடுத்துக் கொள்வது, அதன் பாதிப்பைக் குறைக்கும். இவர்கள் அனைத்து விவகாரங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவது, நோய்ப்பாதிப்பை, மேலும் தீவிரம் அடையாமல் காக்கும். நீரிழிவு நோய்ப் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கவல்லச் சிகிச்சைகள், மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகச் செலவு ஆகும் வாய்ப்பு உள்ளதால், இந்தப் பாதிப்புக் கொண்டவர்கள், தகுந்த மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
நீரிழிவு நோயாளிகள், தங்களது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், அவர்கள் உயிரிழப்பைக் கூடச் சந்திக்க நேரும் வாய்ப்பு இருப்பதால், கூடுதல் கவனம் தேவை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய ரத்த சோதனைகள் செய்யப்படுகின்றன. உடல்நலக்குறைவின் போது, மருத்துவர் நோயைக் கண்டறிய ரத்த சோதனைக்கு பரிந்துரைப்பார்.இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின் தேவை
நீரிழிவு நோயாளிகள், ரத்த பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம்
உடல்நிலையில் ஏற்படும் மாறுதல்களை எளிதாகப் புரிந்துக் கொள்ள முடிகிறது.
எந்தவிதச் சிகிச்சை முறைத் தேவை என்பதை அறிய உதவுகிறது
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தொடர்ந்துக் கண்காணிக்க உதவுகிறது
பாதிப்பு தீவிரம் அடைவதைத் தடுக்கிறது.
இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு கொண்டவர்களுக்கு, அவர்களது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எதிர்பாராதவகையில், கணிசமான அளவிற்குக் குறையும். இது, அவர்கள் மேற்கொண்டுவரும் சிகிச்சையின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். இரத்தத்தில், சர்க்கரையின் அளவு குறையும்பட்சத்தில், உடல் சோர்வு, நடுக்கம், பலவீனம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இரத்த சர்க்கரைச் சோதனை
இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அடர்த்தியைக் கண்டறிய, ரத்த சர்க்கரைச் சோதனைப் பேருதவி புரிகின்றது. நீரிழிவுப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ரத்த சர்க்கரைச் சோதனை, அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் மாறுபாட்டைத் துல்லியமாக அளப்பதால், இந்தச் சோதனை, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த ரத்த சர்க்கரைச் சோதனையை, ரத்த வங்கிகள், ஆய்வகங்கள், பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்ளலாம். இந்தச் சோதனையை, தற்போது வீட்டிலேயே, குளுகோமீட்டர்க் கருவியின் உதவியுடனும் மேற்கொள்ள முடியும். வீட்டில், குளுகோமீட்டர் மூலம் மேற்கொள்ளப்படும் சோதனையில், அப்போதைய சர்க்கரையின் அளவினை மட்டுமே மதிப்பிட இயலும்.
பல்வேறுவிதமான ரத்த சர்க்கரைச் சோதனைகள்
நீரிழிவுப் பாதிப்பைக் கண்டறியும் பொருட்டும், ரத்தத்தில், சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாறுபாட்டைக் கண்டறியவும், மருத்துவர்ப் பல்வேறு வகையான ரத்த சர்க்கரைச் சோதனைகளைப் பரிந்துரைச் செய்கின்றார்.
HBA1C சோதனை
மருத்துவர், HBA1C சோதனையின் மூலம் கடந்த 2 முதல் 3 மாத கால அளவில் மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில் சராசரி ரத்த சர்க்கரையின் அளவை மதிப்பிடு செய்கின்றார்.
HBA1C மதிப்பு
5.7 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் – நீரிழிவு பாதிப்பு இல்லை
5.7 முதல் 6.4 சதவீதம் – நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலை
6.5 சதவீதத்திற்கு மேல் – நீரிழிவு பாதிப்பு
சாப்பிடாமல் இருந்து மேற்கொள்ளப்படும் சோதனை
இரவு முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து, காலையில், இந்த ரத்த சர்க்கரைச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சோதனையின் அளவீடு
99 mg/dl ஆக இருந்தால் – நீரிழிவுப் பாதிப்பு இல்லை
100 முதல் 125 mg/dl – நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலை
126 mg/dlக்கு மேல் இருந்தால் – நீரிழிவுப் பாதிப்பு
மேலும் வாசிக்க : வீட்டிலேயே ரத்த அழுத்த மாறுபாட்டைக் கண்காணிக்கலாம்
குளுக்கோஸ் ஏற்புத்திறன் சோதனை
குளுக்கோஸை முக்கியப் பகுதிப்பொருளான திரவ உணவைச் சாப்பிடுவதற்கு முன்னும் மற்றும் சாப்பிட்ட பிறகு, இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சோதனைக்கு முன்னதாக, இரவு முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து, காலையில், ரத்த மாதிரியை எடுத்துச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின்னர், குளுக்கோஸ் கலந்தத் திரவம் அளிக்கப்படுகிறது. பின்னர் 1 மணிநேர இடைவெளிகளில் 3 முறைச் சோதனை மேற்கொள்ளப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மதிப்பிடப்படுகிறது.
மதிப்பு 140 mg/dlக்கும் குறைவாக இருந்தால் – நீரிழிவுப் பாதிப்பு இல்லை
140 முதல் 199 mg/dlக்கு இடையில் இருந்தால் – நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலை
200 mg/dlக்கு மேல் இருந்தால் – நீரிழிவுப் பாதிப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது.
விளைவுகள்
இரத்தத்தில், சர்க்கரையின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, நமது உடலில் பல்வேறு அசௌகரியங்களுக்குக் காரணமாகிறது.
ஹைப்போகிளைசீமியா
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவாக இருப்பதை ஹைப்போகிளைசீமியா என்கிறோம்.இது உயிரையே பறிக்கின்ற அளவுக்கு மிகக் கொடுமையான நிகழ்வாக மாறி உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 mg/dl அளவைவிடக் குறைந்தால்
வியர்வை அதிகமாகச் சுரத்தல்
அதிகக் கோபம்
எரிச்சல் நிலை
அதீதக் கவலை
அதிக உடல் சோர்வு
சுயநினைவை இழத்தல் உள்ளிட்டவை, ஹைபோகிளைசீமியாவின் அறிகுறிகள் ஆகும்.
ஹைபர்கிளைசீமியா
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும் நிலையை, ஹைபர்கிளைசீமியா என்று குறிப்பிடுகிறோம். உணவு சாப்பிட்ட பிறகும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 180 mg/dl க்கு அதிகமாக இருந்தால், அதை அதிகச் சர்க்கரை நிலை என்கிறோம். இதேநிலைத் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், அதனை, நீரிழிவுப் பாதிப்பு என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிகத் தாகம் எடுக்கும் உணர்வு
அடிக்கடி தலைவலி ஏற்படுதல்
உடல் அசதி
அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
வாய் உலர்ந்து போதல் உள்ளிட்டவைகள், ஹைபர்கிளைசீமியாவின் அறிகுறிகள் ஆகும்
சோதனை எப்போது மேற்கொள்ள வேண்டும்?
நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் செயல்பாடுகள், நபருக்கு நபர் வேறுபடும். நோயாளிகளுக்கு உள்ள நீரிழிவுப் பாதிப்பின் வகையைப் பொறுத்து, அவர்களின் சிகிச்சை முறைகளும் மாறுபடும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கும் சோதனையை, எத்தனை முறை, எந்தக் கால இடைவெளிகளில் மேற்கொள்ள வேண்டும் என்ற மருத்துவரின் பரிந்துரையை, கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மருத்துவர்கள், நீரிழிவுப் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய நாள் ஒன்றுக்கு 3 முறை, இந்தச் சோதனையை மேற்கொள்ள அறிவுறுத்துவர். இதுவே, முதலாம் வகை நீரிழிவுப் பாதிப்பு இருப்பின், நாள் ஒன்றுக்கு 10 முறைகள், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்பாக
உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் மற்றும் பின்
இரவு உறங்கச் செல்வதற்கு முன்
வழக்கமான பழக்கவழக்கங்களில் மாற்றம் மேற்கொள்ளும் போது
புதிய மருத்துவ முறையைத் துவக்கும் போது
உள்ளிட்ட காலக்கட்டங்களில், சோதனையை மேற்கொள்வது நல்லது.
இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு கொண்டவர்கள், காலை உணவு, மதிய சாப்பாடு மற்றும் இரவு உணவிற்கு முன்னதாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்கும் சோதனைகளை மேற்கொண்டால், துல்லியமான அளவீடுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளே, உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அவ்வப்போது கண்காணித்து, அதல் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ முறைகளை மேற்கொண்டு, இந்தப் பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் பெறுவீராக…