உடல் நலத்தைப் பாதிக்கும் வாழ்க்கை நெறிமுறைகள்
நீங்கள் எந்த வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் முறையே வாழ்க்கை முறை ஆகும்.
தினசரி வாழ்க்கைக்கு, உடல் மற்றும் மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையை முழுமையாகவும் மகிழ்வாகவும் மாற்ற, சில மாற்றங்களும் புதிய பழக்கங்களும் அவசியம்.
செய்ய வேண்டியவற்றையும் தவிர்க்க வேண்டியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். வலைப்பதிவு குறிப்புகளைப் படிப்பதோடு, அவற்றை நடைமுறையில் முயற்சிக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியம், நேர்மறை மற்றும் எதிர்மறை எனும் இரண்டு வழிகளில் பாதிக்கப்பட்டு வருகிறது.
நேர்மறை என்பது உங்களைச் சுற்றியுள்ள நேர்மறையான பழக்கவழக்கங்களைக் குறிக்கின்றது. அதேநேரம், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் கெட்ட பழக்கவழக்கங்கள் விரைவில் மாற்றப்பட வேண்டியது முக்கியம் ஆகும்.
உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பழக்கங்கள்
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, உணவுமுறை இன்றியமையானது. சிலர் காலை உணவை தவிர்த்து, டிவி பார்த்துக்கொண்டே நொறுக்குத்தீனியைச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். இதனால், உணவுப் பழக்கங்களில் பாதிப்பு ஏற்படுவதைக் கவனிக்க மாட்டீர்கள்.
இயந்திரமயமான வாழ்க்கையில், வீட்டில் சமைக்காமல், கடைகளில் விற்பனை செய்யும் துரித உணவுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், உடல் எடை அதிகரித்து, உடற்பருமனால் அவதிப்படுகின்றனர். உடல் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல உடல்நலக் குறைபாடுகளையும் கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், உடற்பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது.
போதிய அளவு நீர் அருந்தாமை
மனித உடல் 80 சதவீதம் நீரால் ஆனது. நம் உடலின் செயல்பாடுகளுக்கும் நீர் இன்றியமையாதது. நீர் நம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தினமும் 6 முதல் 8 கிளாஸ்கள் தண்ணீர் அருந்துவது அவசியம். அப்போதுதான், இன்றைய நாளை அதிக உத்வேகத்துடன் கடக்க முடியும். போதிய அளவு நீர் அருந்தாத போது, உடலில் நீர்ச்சத்துக் குறைகிறது. இதனால், அடிக்கடி தலைவலி, உதடு வறண்டல், வாய் துர்நாற்றம், சிறுநீரகக் கல், சிறுநீர்ப்பாதை தொற்றுகள், உடல் சோர்வு, மலச்சிக்கல், தளர்வான தோல், வறட்சியான முடி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
போதிய உறக்கமின்மை
நம் உடல் சீராக இயங்க, சரியான அளவு உறக்கம் அவசியம். அப்போதுதான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். கணினி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் உபகரணங்களின் திரையை நீண்ட நேரம் பார்த்தல் போன்ற காரணங்களால் உறக்கத்தில் பாதிப்பு ஏற்படலாம். நன்றாக ஆரோக்கியமாக வாழ, தினமும் இரவு 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.
போதிய அளவு உறக்கம் இல்லாமல் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால், இதய நோய்கள், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம், உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இரவில் சரியான அளவில் உறங்காமல் இருந்தால் கவனச்சிதறல்கள் அதிகரிக்கும், காலை நேரத்தில் உறக்கம் வரும், இதனால், நீங்கள் அசதியாக உணர்வீர்கள், ஞாபகச் சக்தி குறையும் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் வாசிக்க : உங்கள் தினசரி பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமானதா?
சரியான உடற்பயிற்சி அல்லது உழைப்பின்மை
உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது. மூளையின் ஆரோக்கியத்தை மேம்பட, உடல் எடையை கட்டுக்குள் வைக்க, எலும்பு மற்றும் தசைகளை வலுவாக்க, அன்றாடப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள உடற்பயிற்சி உதவுகிறது
போதிய அளவு உடற்பயிற்சி இல்லாததால், கலோரி எரிதல் குறைந்து, உடல் எடை அதிகரித்து, உடற்பருமனுக்கு வித்திடுகிறது.
ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் பாதிப்பு உண்டாகிறது
வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுவதால் ஏற்படும் உடல்நலக்குறைவு
நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்
இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சூரிய ஒளி, சுத்தமான காற்று இல்லாமை
அலுவலகம், வீடு போன்ற மூடிய சுற்றுப்புறங்களில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு, மூளையில் செரடோனின் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால், மன அழுத்தம், படபடப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அதிகம் ஏற்படுகின்றன. தனிமை உணர்வு, பல அதீத விளைவுகளுக்கும் காரணமாக அமைகின்றது.
இந்த இன்னல்களிலிருந்து விடுபட, தினமும் சிறிதுநேரம் சூரிய ஒளியில் நமது உடல் முழுவதுமாகப் படும்படி இருக்க வேண்டும். சூரிய ஒளியில் வைட்டமின் இ போன்ற நம் உடலுக்கு நன்மைபயக்கும் சத்துக்கள் உள்ளன. இது எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. மனம் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
அதேபோன்று நமது உடலின் செயல்பாடுகள் சீராக இருக்கச் சுத்தமான பிராணவாயு மிகவும் இன்றியமையாதது ஆகும். குளிர்சாதன அறையில் நீண்ட நேரம் இருந்தால், சுவாசித்த காற்றையையே, மீண்டும் மீண்டும் சுவாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே, குளிர்சாதன அறையில் பணிபுரிபவர்கள், அவ்வப்போது, சிறிதுநேரம் வெளியே வந்து, சுத்தமான காற்றை, சுவாசிப்பது நலம் பயக்கும்.
வாழ்க்கைமுறையைப் பாதிக்கும் முக்கிய நோய்கள்
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் தொற்றாப் பாதிப்பு கொண்ட நோய்களின் காரணமாக மரணம் அடைந்து வருகின்றனர்.
புகையிலைப் பொருட்களின் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், குடிப்பழக்கம் போதிய உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட காரணிகள், மனிதனின் உடல்நல ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கின்றன. வாழ்க்கைமுறையைப் பாதிக்கும் சில முக்கிய நோய்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
புற்றுநோய்
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணம் யாதெனில், நம் வாழ்க்கைமுறையே ஆகும். மரபணுக்கள், ஹார்மோன் பாதிப்புகளின் காரணமாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.
நீரிழிவு பாதிப்பு
இது நீண்டகால குறைபாடு. உடலில் இன்சுலின் சுரப்பு விகிதத்தில் மாற்றம் நிகழும் போது, இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது. இன்றைய நவீன உலகில், இது வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் ஏற்படுகின்றது. போதிய உடல் உழைப்பு இல்லாதது, உடற்பருமன், குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது இந்தப் பாதிப்பு இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் நீரிழிவு பாதிப்பு உருவாகிறது.
சுவாசப் பாதிப்புகள்
உடலின் முக்கிய சுவாச உறுப்பான நுரையீரலைப் பாதிப்பதால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள், சில நேரங்களில் மரணத்திற்குக் காரணமாக அமைகின்றன. புகையிலைப் பொருட்கள் பயன்பாடு, காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணிகளால் இவ்வகைப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆஸ்துமா, சுவாசப் பாதிப்புகளில் மிக முக்கியமானது ஆகும்.
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் கெட்ட பழக்கங்களை அறவே தவிர்த்து, சிறந்த பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து, நல்வாழ்க்கை வாழ்வோமாக….