Heart disease prevention infographics with related icons and contents.

இதய நோயில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை அவதிக்குள்ளாக்கும் பாதிப்பாக இதய நோய்ப்பாதிப்பு விளங்கி வருகிறது. இது இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளினால், இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பு மாரடைப்பு, பக்கவாதம், இதயம் செயலிழப்பு போன்ற அபாயகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.

இதய நோய்ப் பாதிப்பைத் தடுக்கவேண்டும் என்றால், நீங்கள் சில பழக்கவழக்கங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியமாகின்றது. அவைகள் குறித்து விரிவாகக் காண்போம்.

ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்

ஆரோக்கியமான உணவுமுறை என்பது, இதயநோய் மட்டுமல்லாது, அனைத்து வகையான உடல் பாதிப்புகளையும் தடுக்கும் வழிமுறையாக உள்ளது. ஆரோக்கியமான உணவில் பழங்கள், காய்கறிகள், முழுத்தானியங்கள், நல்ல புரதங்கள், கொழுப்புகள் அடங்கும்.உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கொழுப்புகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் கொண்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய உணவு வகைகள், உடலில் அதிகக் கொழுப்பு படிவதற்குத் தூண்டுகோலாக அமைந்து, அதிக ரத்த அழுத்த பாதிப்பு, இதய நோய் உள்ளிட்டவை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன. ஆன்டிஆக்சிடண்ட்கள், வைட்டமின்கள், மினரல்கள் அதிகம் கொண்ட உணவு வகைகள், இதயத்தைப் பாதுகாப்பதிலும், சிறந்து இயங்கச் செய்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

வழக்கமான உடற்பயிற்சி நடவடிக்கைகள்

இதயத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, உடற்பயிற்சிகள் முக்கிய காரணியாக அமைகிறது. வழக்கமான உடற்பயிற்சி எடையைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.தினமும் 30 நிமிடங்கள் மிதமானது முதல் சற்று கடினமான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதை, பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளை ஏதோ கடனுக்கு மேற்கொள்வது போல் அல்லாமல், ஒவ்வொரு பயிற்சிகளையும் உற்சாகமாக அனுபவித்துச் செய்தால், இனிய அனுபவமாக அமையும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம் ஆடுதல் என மனதுக்குப் பிடிக்கும் வகையிலான பயிற்சிகளை உற்சாகமாக மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்வதை, வாழ்க்கைமுறையின் தினசரி நடவடிக்கைகளாக மாற்றி அதைப் பின்பற்ற வேண்டும்.

Infographics and vector images related to heart diseases,its symptoms and prevention methods.

புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்

இதய நோய்ப் பாதிப்பு ஏற்பட முதன்மைக் காரணமாக, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இந்தப் பழக்கமானது இதயம், ரத்த குழாய்களில் சேதம் விளைவிப்பது மட்டுமின்றி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, இதயத்திற்கு ரத்தததை எடுத்துச் செல்லும் பாதையில் அடைப்புகளை ஏற்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், இந்தப் பழக்கத்தை விரைவில் கைவிடவேண்டியது அவசியமான நிகழ்வாக உள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட உதவும் பொருட்டு, நிகோடின் மாற்றுச் சிகிச்சை, கவுன்சிலிங் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் பயன்பாட்டில் உள்ளன.

மன அழுத்தத்தை நிர்வகித்தல்

இதய ஆரோக்கியப் பராமரிப்பிற்கு, மன அழுத்தத்தை நிர்வகித்தல் முக்கியப் பங்காற்றுகிறது. மன அழுத்த பாதிப்பு, நீண்ட நாள்களாக இருந்தால், அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, இதயப் பாதிப்பிற்குக் காரணமாக அமைகின்றது. மன அழுத்தத்தை நிர்வகிக்க, மனதை இலகுவாக்கும் பயிற்சிகள், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், தியானம், யோகா டைய் சி உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மனதுக்குப் பிடித்தவர்களுடன் பொழுதைக் கழிப்பது, பிடித்த இசையைக் கேட்பது, உற்சாகமாகத் திகழ அவ்வப்போது குளியல் போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள், மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது ஆகும்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள்

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், இதய நலன் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியக் காரணமாக அமைகின்றன. நீங்கள் இதயப் பாதிப்புக் காரணமாக, மருத்துவரிடம் சென்றால், அங்கு அவர் உங்களது உடலின் ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு உள்ளிட்டவைகளைக் கண்காணிப்பார். நீரிழிவுப் பாதிப்பு அல்லது உயர் ரத்த அழுத்தம் உங்களுக்கு இருந்தால், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், தகுந்த மருத்துவப் பரிசோதனைகளை, சரியான நேரத்தில் மேற்கொண்டு, இதய நோய்ப் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவது முக்கியம் ஆகும்.

மேலும் வாசிக்க : மருந்து பின்பற்றுதலின் முக்கியத்துவம் அறிவோமா?

சரியான உறக்க அளவு

இதய நோய்ப்பாதிப்பிலிருந்து விடுபட, போதுமான மற்றும் தரமான உறக்கம் முக்கியக் காரணியாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. சரியான உறக்கம் இல்லாத நிலையானது, உடல் எடையைக் கணிசமாக அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. தினசரி இரவு 7 முதல் 9 மணிநேர உறக்கம் அவசியமான ஒன்றாகும். சரியான உறக்கம் மேற்கொள்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவது அவசியம் ஆகும். இரவு உறங்கச் செல்வதற்குக் குறைந்தது 1 மணிநேரத்திற்கு முன்பாகவே, ஸ்மார்ட்போன், கணினி, டிவி உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்தி விடுவது இன்றியமையாததாகும்.

இதய நோய்ப் பாதிப்பைத் தடுப்பதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். இது நீண்டகால நடைமுறை ஆகும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ள உத்திகளைச் சரியாகப் பின்பற்றினால், இதய நோய்ப் பாதிப்பின் அபாயத்தைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேணிக்காக்க முடியும். இந்த உத்திகளைப் பின்பற்றுவது முதலில் உங்களுக்குச் சவாலாக இருந்தபோதிலும், இதை வழக்கப்படுத்திக் கொண்டால், நல்வாழ்க்கை, நம் கைவசமே….

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.