நேர மேலாண்மையை மேற்கொள்ளத் திறன்மிகு நுட்பங்கள்
நாம் மிகவும் விரும்பி பெறும் நேரத்தை, மிக மோசமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.- வில்லியம் பென்
கெட்ட செய்தி என்னவெனில் நேரம் பறக்கின்றது ; இதில் நல்ல செய்தி என்னவென்றால், அதை ஓட்டும் பைலட் நீங்கள்தான்….- மைக்கேல் ஆல்ட்சுலர்
முன்னணி அறிஞர்களின் நேரம் குறித்த இத்தகையக் கருத்துகள், நேரம் மற்றும் அதுகுறித்த முக்கியத்துவத்தை நமக்குப் பறைசாற்றுவதாக உள்ளன.
இன்றைய கார்ப்பரேட் உலகில், நேர மேலாண்மை நுட்பங்கள், காலத்தின் தேவையாக மாறி உள்ளது. நேர மேலாண்மையைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும் திறன்களைக் கொண்டவர்களையே, கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கின்றன.
சிறந்த நேர மேலாண்மை, சிறந்த செயல்திறனுக்குச் சமமானது ஆகும். தினமும் 10-15 நிமிடங்கள் நேர மேலாண்மைத் திட்டமிடலில் செலவிட்டால், இரண்டு மணி நேரம் மிச்சமாகும் என முன்னணி நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
நேர மேலாண்மை என்றால் என்ன?
நீங்கள் குறிப்பிட்ட சில செயல்களில் ஈடுபடும் போது, அதற்காகச் செலவிடும் நேரத்தைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்கும் நிகழ்வையே, நேர மேலாண்மை என்று குறிப்பிடுகிறோம். செயற்திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதே, இதன் தலையாய நோக்கமாகும்.
நேர மேலாண்மையைத் திறம்பட மேற்கொள்வதன் மூலம், வாழ்க்கை மற்றும் பணிநடவடிக்கைகளில் வெற்றியின் விகிதத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
நேர மேலாண்மை நடைமுறையானது, உங்களது மதிப்புமிக்க நேரத்தைச் சேமிப்பதோடு மட்டுமல்லாது, நேரத்தின் பயன்பாட்டையும் அதிகரிக்கின்றது.
திறம்பட நேர மேலாண்மை செய்வது நேரப் பயன்பாட்டை மேம்படுத்தி, உற்பத்தித் திறன் மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்கிறது.
நேர மேலாண்மைத் திட்டத்தைப் பயனுள்ளதாக மாற்ற ஆர்வம், நிச்சயத் தன்மை, எடுத்த முடிவில் தீர்க்கமாக இருத்தல், ஒழுக்கம் உள்ளிட்டவைகள் முக்கியமான காரணிகள் ஆக உள்ளன.
நேர மேலாண்மையைப் பயனுள்ளதாக மாற்றும் நுட்பங்கள்
நேர மேலாண்மையைப் பயனுள்ளதாக மாற்றும் நுட்பங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
சமயோசிதமாகச் செயல்படுதல்
நீங்கள் தலைமைப் பொறுப்பில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள், அவர்களுக்கான வேலைகள் மற்றும் திட்டங்களைக், குறித்த நேரத்தில் முடிக்க இயலாத சூழலுக்கு உட்படலாம். இதனால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் தேக்கமடைகின்றன. இது அவர்களுக்கான பணிச்சுமையையும் அதிகரிக்கின்றன. இந்த நிலையில், பணிக்கான நேரத்தை நிர்வகிப்பது என்பது கடினமான நிகழ்வாக மாறும்.
இந்தச் சூழ்நிலையில், வேலையைப் பல்வேறுப் பிரிவுகளாகப் பிரித்து மேற்கொள்ளுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தலாம். இதன்மூலம், வேலைக்கான நேரத்தை மிக எளிதாக நிர்வகிக்க முடிவதோடு, அந்த வேலையைச் சிறப்பாகவும் அதேநேரம் விரைவாகவும் செய்து முடிக்க இயலும்.
முன்னுரிமை வழங்குதல்
நடப்பு கார்ப்பரேட் உலகில், சரியான அளவிலான வழிகாட்டுதல் இல்லாததால், ஊழியர்கள், தங்களது கடமைகளிலிருந்து விலகிச் செல்வதற்கான சூழல் உருவாகி உள்ளது. நீங்கள் ஸ்மார்ட்டான இலக்குகளை மட்டும் வகுத்தால் போதாது, அதில் ஏற்படும் மாற்றங்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவது அவசியமாகிறது.
நேரத்தைச் சரிவர நிர்வகிக்க, முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதன்மூலம், முக்கியமான பணிகள் விரைந்து முடிவதோடு, பணிவிகிதத்தை மேம்படுத்த, நேரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.
தனித்து இயங்கும் திறன்
நீங்கள் உங்கள் ஊழியர்களை, தனித்து இயங்கச் செய்வதன் மூலம், அவர்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, பணியின் மீதான ஈடுபாடும் அதிகரிக்கின்றது.
சில ஊழியர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை, மிகவும் சிரமப்பட்டுச் செய்து கொண்டிருப்பர். சிலரோ, இதனை எளிய முறையில் மேற்கொள்வர்.
ஊழியர்களின் நடவடிக்கைகளில், நாம் குறுக்கிடாமல், அவர்களின் போக்கிலேயே, வேலையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். நீங்கள் அவர்களைத் தன்னிச்சையாகச் செயல்படவிட்டால் மட்டுமே, அவர்கள் நேரத்தின் அருமையை அறிவர். நாம் அவர்களின் நடவடிக்கைகளில் குறுக்கிடாமல் இருந்தால், அவர்களுக்குக் கவனச்சிதறல்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதோடு, வேலைகளில் ஈடுபட அதிக நேரம் கிடைக்கும்.
இதன்மூலம், அவர்கள் அவர்களுக்கே உரித்தான வழியில் நேரத்தை நிர்வகிக்கவும், பயன்படுத்தவும் செய்வர்.
முன்கூட்டியே திட்டமிடுங்கள்
நாளைய செயல்களுக்கு இன்றே திட்டமிடுவதால், நேரம் சேமிக்கப்படுவதுடன், மன அழுத்தமின்றி இன்றைய பொழுதை இனிமையாகக் கழிக்கலாம்.
முன்கூட்டியே திட்டமிடுதல் நிகழ்வானது, நேர மேலாண்மையைப் பயனுள்ளதாகவும் மற்றும் திறம்படவும் மேற்கொள்வதில் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இந்த நிகழ்வானது, நமக்கு ஒதுக்கப்பட்ட வேலையை அதிக ஈடுபாட்டுடனும், விரைந்து முடிக்கவும் உதவுகிறது.
மின் அஞ்சல்கள் சரிபார்க்கும் கால அளவை வரையறுத்தல்
வேலை துவங்கும் முன் மின்னஞ்சல்களைப் பார்ப்பது அவசியம். ஆனால், தேவையற்ற மின்னஞ்சல்கள் அதிகமிருந்தால், முக்கியமானவற்றை மட்டும் தேர்ந்தெடுப்பது சவாலாகும்.
ஊழியர், வாரத்திற்கு 30 மணிநேரத்தை, மின் அஞ்சல்கள் பார்ப்பதிலேயே செலவழிப்பதாக, புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நம் வேலைநேரத்தின் பெரும்பகுதி ஆகும்.
வேலைநேரத்தில், நாம் பதிலளிக்க வேண்டிய மின் அஞ்சல்களை மட்டும் பார்த்துவிட்டு, பின் ஓய்வாகவோ அல்லது, அன்றைய நாளின் பணியை முடித்த பின்போ, இந்தத் தேவையில்லாத மின் அஞ்சல்களைச் சரிபார்த்து, தேவையில்லாதவற்றை, அழித்துவிடலாம். இதன்மூலம், நமது அன்றாடப் பணிகளும் பாதிக்கப்படாத சூழல் ஏற்படும்.
மேலும் வாசிக்க : மிகப் பிரபலமான ஹெல்த்டிராக்கிங் செயலிகள் என்னென்ன?
கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும்
வேலை நேரத்தில் சமூக வலைதளங்களைப் பார்வையிடுதல், மொபைல் போனைப் பார்த்தல், மின் அஞ்சல்களைப் பார்த்தல், சக ஊழியர்களுடன் உரையாடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள், உங்களின் செயல்திறனைப் பாதிக்கவல்லக் காரணிகள் ஆகும். நீங்கள் உங்களது வேலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட நினைத்தால், இத்தகையக் கவனச்சிதறல்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, நண்பர்களுடன் கலந்துரையாட வேண்டாம். மொபைல் போனை, சிறிது தொலைவிற்குத் தள்ளி வைக்க வேண்டும். நீங்கள் செய்யும் வேலையில், முழுக்கவனம் செலுத்தினால், அந்த வேலையை விரைவாக முடிப்பதோடு, உற்பத்தித்திறனும் அதிகரிக்கும்.
கட்டமைப்பைப் பராமரித்தல்
நீங்கள் உங்கள் வேலையைக், குறிப்பிட்ட கால அளவில் முடிக்க வேண்டும் என்றால், அதற்குரிய உகந்த கட்டமைப்பை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும்.
நீங்கள் நாளை மேற்கொள்ள வேண்டிய வேலைகளை இன்றே திட்டமிட்டுவிட்டால், அதற்குரிய மனநிலையை முன்னரே உருவாக்கிக் கொள்ள முடிவதால், வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலும். இதன்மூலம், உற்பத்தித்திறனும் அதிகரிக்கும்.
ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல்
நேர மேலாண்மை என்பது, நமது வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. ஒரு நேரத்தில் ஒரு வேலையின் மீது கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே, நாம் செய்யும் வேலைகளில் தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள முடியும். அவ்வாறன்றி, ஒரே நேரத்தில், பல வேலைகளை மேற்கொள்ளும்பட்சத்தில், நிகழும் தவறுகளைச் சரிசெய்யவே, அதிகமான நேரத்தைச் செலவழிக்க வேண்டி இருக்கும்.
நேர மேலாண்மைக்கான கருவிகளைப் பயன்படுத்துதல்
தொழில்நுட்ப பயன்பாடு இல்லாத துறையே இன்று இல்லை. அந்தளவிற்கு, தொழில்நுட்பப் பயன்பாடு, அனைத்துத் துறைகளிலும் வியாபித்து உள்ளது. நேர மேலாண்மையையும் எளிதாக மேற்கொள்ளப் பல்வேறு வகையான கருவிகள் உள்ளன.
நேரத்தைக் கண்காணித்தல், செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு உள்ளிட்டவற்றைச் சரியாக மேற்கொண்டாலே, ஒதுக்கப்பட்ட வேலையை, எவ்விதத் தடையுமின்றிச் சிறப்பாகச் செய்து முடிக்கலாம்.
நேர மேலாண்மை ஆரம்பத்தில் சுமையாக இருந்தாலும், அதைப் பழக்கமாக்கிக் கொண்டால் அதன் பயன்கள் அளப்பரியவை என உணர்வீர்கள்.
நேர மேலாண்மையைச் சரியாக நிர்வகித்துப் பணியிடங்களில் உங்களின் செயல்திறனை மேம்படுத்தி, பொதுவாழ்விலும் சீரும் சிறப்புடனும் இருக்க வாழ்த்துகிறோம்.