• Home/
  • PET CT/
  • CT ஸ்கேன் vs MRI ஸ்கேன் – வேறுபாடுகள் என்ன?
A complete front view of an MRI scanner inside an hospital environment.

CT ஸ்கேன் vs MRI ஸ்கேன் – வேறுபாடுகள் என்ன?

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியவும் மற்றும் அதன் பல்வேறு நிலைகளை அறிந்து கொள்ள CT என்று சுருக்கமாக அழைக்கப்படும் கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன் மற்றும் MRI என்று சுருக்கமாக அழைக்கப்படும் காந்த அதிர்வு இமேஜிங் ஸ்கேன் சோதனையும் உதவுகின்றன. புற்றுநோய் மட்டுமல்லாது, உடலில் ஏற்படும் நோய்ப் பாதிப்புகளைக் கண்டறிய உதவும் சோதனைகளாக இவை விளங்குகின்றன.

MRI ஸ்கேன் சோதனை

உடலின் உள் உறுப்புகளில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை, மருத்துவர்கள் அறியும் வண்ணம் துல்லியமாகப் படம் பிடிக்க உதவும் சோதனையே, MRI ஸ்கேன் சோதனை ஆகும். இந்தச் சோதனையில், வலிமையான காந்தங்கள், ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சோதனையில், உறுப்புகள், தசைகள், திசுக்கள் உள்ளிட்ட உடலின் பாகங்கள், மிகத் துல்லியமாகப் படம் பிடிக்கப்படுகின்றன. எக்ஸ்ரே சோதனைகளை ஒப்பிடும்போது, இதில் அபாயகரமான கதிரியக்கம் பயன்படுத்தப்படுவது இல்லை.

MRI ஸ்கேன் சோதனை வலி உணர்வு இல்லாதது மற்றும் மிகவும் பாதுகாப்பான சோதனை ஆகும். எக்ஸ்ரே சோதனைகளில் கண்டறியப்படாத பாதிப்புகளை, MRI ஸ்கேன் சோதனைகளின் மூலம் எளிதாகக் கண்டறிய இயலும். MRI ஸ்கேன் சோதனையை, அணுக்கரு காந்த ஒத்ததிர்வு இமேஜிங் சோதனை (NMRI) அல்லது காந்த ஒத்ததிர்வு டோமோகிராபி (MRT) என்று அழைக்கலாம்.

CT ஸ்கேன் சோதனை

உடலின் பாகங்களை, விரிவான குறுக்கு வெட்டுத் தோற்றமாகப் படம் எடுக்கும் சோதனை முறைக்கு, CT ஸ்கேன் அல்லது கம்ப்யூட்டட் டோமோகிராபி சோதனை என்று பெயர்.இந்தச் சோதனையில், எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இரத்த நாளங்கள், எலும்புகள் மற்றும் மென் திசுக்கள் உள்ளிட்டவற்றைத் துல்லியமாகப் படம்பிடிக்க இயலும். நோய்கள், காயங்கள் மற்றும் உள் அமைப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது.

மூளை, மார்பு, வயிற்றுப்பகுதி மற்றும் இடுப்பு எலும்புப் பகுதிகளைத் துல்லியமாகப் படம் பிடிக்க உதவும் சிறந்த தேர்வாக, CT ஸ்கேன் சோதனை விளங்குகிறது. இந்தச் சோதனையின் போது, வளைய வடிவிலான ஸ்கேனர்ப் பயனபடுத்தப்படுகிறது. கட்டிகள், எலும்பு முறிவுகள் மற்றும் ரத்த கட்டிகள் போன்றவற்றை எளிதாகக் கண்டறிய உதவும் சோதனையாக இது உள்ளது.

வேறுபாடுகள்

CT ஸ்கேன்

உடல் உறுப்புகள், எலும்புகள், திசுக்கள் உள்ளிட்டவற்றின் முழுமையான மற்றும் துல்லியமான படங்களை எடுக்க, CT ஸ்கேன் சோதனை முறை உதவுகிறது. ஸ்கேன் எடுக்கப்பட வேண்டிய நபர், அதற்கான மேடையில் படுத்த உடன், அவரை, வளைய வடிவிலான, ஸ்கேனர் ஸ்கேன் செய்கிறது. இதன்மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முப்பரிமாண படங்களாக மாற்றப்படுகிறது. இந்த முப்பரிமாண படங்களின் உதவியால், நுரையீரலில் நிமோனியா பாதிப்பு, உறுப்புகளில் ஏற்படும் கட்டிகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் முறிவுகள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய முடியும்.

MRI ஸ்கேன்

உடலின் உள் உறுப்புகளை முழுமையாக மற்றும் துல்லியமாகப் படம்பிடிக்க, இந்தவகைச் சோதனை உதவுகிறது. இந்தப் பிரிவில், படங்களை எடுக்க வலிமையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை ஸ்கேன்கள், பாதிப்படைந்த செல்களையும் சாதாரண செல்களையும் வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது.

Vector image of front view of an MRI scanner.

நன்மைகள் மற்றும் தீமைகள்

நன்மைகள்

CT ஸ்கேன்

உடலின் கழுத்துப் பகுதியிலிருந்து தொடைப்பகுதி வரையிலான பகுதிகளை, ஒரு சில வினாடிகளிலேயே, இந்தச் சோதனையின் மூலம் படம்பிடிக்கலாம். புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதன் நிலையைக் கண்டறியவும், மேலும், புற்றுநோய் பாதிப்பு மீண்டும் ஏற்படும் சூழ்நிலையை அறியவும், மேற்கொண்ட சிகிச்சைப் பலனளிக்கிறதா என்பதைக் கண்காணிக்க உதவுகிறது. உடலின் முக்கிய உறுப்புகளான நுரையீரல், கல்லீரல், எலும்பு உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பின் அளவைக் கணக்கெடுக்கப் பேருதவி புரிகிறது. இதற்கு மெட்டாஸ்டேஸ்கள் என்று பெயர். பல்வேறு தருணங்களில், புற்றுநோய் பாதிப்பின் நிலைகளை அறிய, CT ஸ்கேன் சோதனை முறையே, பெரும்பாலான மருத்துவர்களின் முதல் தேர்வாக உள்ளது. CT ஸ்கேன் சோதனைப் புற்றுநோய் பாதிப்பு மட்டுமல்லாது, எலும்பு முறிவு, இரத்தம் உறைதல், முதுகெலும்பு மற்றும் மூளைப்பகுதிகளில் ஏற்படும் காயங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறியவும் மேற்கொள்ளப்படுகிறது.

MRI ஸ்கேன்

CT ஸ்கேன் சோதனையால் கண்டறிய இயலாத நோய்ப் பாதிப்புகளான புராஸ்டேட் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், மற்றும் சில குறிப்பிட்ட கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகளை, MRI ஸ்கேன் சோதனையின் மூலம் கண்டறியலாம் என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும். எலும்பு மற்றும் மூளைப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளின் அளவைக் கணக்கெடுக்க, CT ஸ்கேன் சோதனையைவிட, MRI ஸ்கேன் சோதனை, திறம்படச் செயலாற்றுகிறது. புற்றுநோய் பாதிப்பு மட்டுமல்லாது, உடலின் மென் திசுக்கள் மற்றும் மூட்டு இணைப்புகளில் ஏற்படும் காயங்கள், உள் உறுப்புகளான மூளை, இதயம், சீரண உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியவும், இந்த ஸ்கேன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் வாசிக்க : MRI ஸ்கேன் சோதனை- பயன்களும் பக்கவிளைவுகளும்…

தீமைகள்

CT ஸ்கேன்

CT ஸ்கேன் சோதனையில், அயனியாக்கும் கதிரியக்கம் பயன்படுத்தப்படுவதால், DNA சேதம் அடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாது, புற்றுநோய் பாதிப்பு, உடலின் பல்வேறு இடங்களுக்குப் பரவவும் காரணமாக அமைகின்றன.

CT ஸ்கேன் சோதனை மேற்கொள்ளும் 2000 பேரில் ஒருவருக்கு, புற்றுநோய் பாதிப்பு, உயிர்க்கொல்லி ஆக மாறும் வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கணித்துள்ளது.

MRI ஸ்கேன்

MRI ஸ்கேன் சோதனை முறையில், அயனியாக்கக் கதிரியக்கத்தின் பயன்பாடு இல்லையென்ற போதிலும், CT ஸ்கேன் சோதனையோடு ஒப்பிடும்போது, இதன் கால அளவு மிகவும் நீண்டதாக உள்ளது.

இவ்வகை ஸ்கேன் எடுக்க, நோயாளி, மூடிய அறையில் உள்ள அந்த மேடையில், சுமார் 20 முதல் 40 நிமிடங்கள் அசைவின்றிப் படுத்து இருக்க வேண்டும். இதன் காரணமாக, நோயாளிகள், கிளாஸ்ட்ரோபோபியா எனப்படும் பய உணர்வுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

இவ்விரு சோதனைகளிலும், ஸ்கேன் படங்களில், உடலின் உள் உறுப்புகள் துல்லியமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, கெடோலினியம் எனப்படும் கான்டிராஸ்ட் ஏஜெண்ட் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.