உயர் ரத்த அழுத்த பாதிப்பைத் தடுக்கும் வழிமுறைகள்
நமது உடல் சிறந்த முறையில் இயங்க, ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். தமனிகளில் ரத்த ஓட்டத்தால் உண்டாகும் அழுத்தமே ரத்த அழுத்தம் ஆகும்.சாதாரண ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவிலும், உயர் ரத்த அழுத்தம் 180/120 என்ற அளவிலும் உள்ளது. உயர் ரத்த அழுத்த நிகழ்வையே, நாம் ஹைபர்டென்சன் என்கிறோம். இந்த ரத்த அழுத்த அளவானது எப்போதும் ஒரே சீராக இருக்காமல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட கால உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
சரியான உணவு, அதிக ஸ்மார்ட்போன் பயன்பாடு, உடற்பயிற்சி இன்மை ஆகியவை ஹைபர்டென்சனை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், உரிய மருந்துகளைத் தக்கநேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம், இந்தப் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்.
ஹைபர்டென்சன் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள்
உயர் ரத்த அழுத்த பாதிப்பு, பல்வேறு காரணங்களால் உண்டாகலாம். ஆரோக்கியமான நல்வாழ்க்கையை வாழ்வதன் மூலமே, இந்தப் பாதிப்பைத் தடுக்க முடியும்.
உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தவல்லப் பொதுவான காரணிகள்
மன அழுத்தம்
மன அழுத்த பாதிப்பானது, சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்றைய நவீன யுகத்தில், குழந்தைகளுக்கும், இந்தப் பாதிப்பு ஏற்படுவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும் போது, ரத்த அழுத்தம் உயர்வதால், அது பாயும் ரத்த குழாய்களும் விரிவடைகின்றன. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
புகை மற்றும் மதுப் பழக்கம்
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களில் உள்ள நிகோட்டின் வேதிப்பொருளானது, நம் உடலில் உள்ள செல்களைச் சுருங்கச் செய்து விடுகின்றன. அதேபோன்று, அதீத மதுப் பழக்கமானது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முதன்மைக் காரணியாக உள்ளது.
அறிகுறிகள்
உயர் ரத்த அழுத்த பாதிப்பின் பொதுவான அறிகுறிகள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன.
கடுமையான தலைவலி உணர்வு
தலைப் பகுதி மற்றும் நரம்புப் பகுதிகளில் ஏற்படும் கடுமையான வலி உணவு, ஹைர்டென்சன் பாதிப்பு இருப்பதை உங்களுக்கு உணர்த்துகிறது.
குமட்டல், தலைச்சுற்றல்
ஹைபர்டென்சன் பாதிப்பு இருப்பவர்களுக்கு, தலைச்சுற்றல் , வாந்தி, குமட்டல் உணர்வுகள் காணப்படும்.
வலி மற்றும் அசவுகரியம்
மார்புப் பகுதியில் தாங்க முடியாத வலி மற்றும் அசவுகரியம் இருப்பது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதை உணர்த்துகிறது.
பார்வைக் குறைபாடு
உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, பார்வைத் திறனில் பிரச்சினைகள் ஏற்படும்.
தடுப்பு நடவடிக்கைகள்
வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை உயர் ரத்த அழுத்த பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் முதன்மை இடத்தில் உள்ளன.
மற்ற முறைகளாவன…
உடற்பயிற்சிகள்
விறுவிறுப்பான நடைப்பயிற்சி, மெதுவாக ஓடும் வகையிலான ஜாக்கிங் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகள், உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன. தினமும் 30 நிமிடங்கள் கால அளவிற்கு மிதமான உடற்பயிற்சிகள் மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆரோக்கியமான உணவுமுறை
குறைந்த அளவிலான உப்பு, கொழுப்பு கொண்ட உணவு வகைகள், ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. பழ வகைகள், காய்கறிகள், முழுத்தானியங்கள், குறைந்த அளவிலான கொழுப்பு உள்ள பால் பொருட்கள் உள்ளிட்டவைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
மன ஓட்டத்தைப் பராமரிக்கவும்
மனநிலைத் தான் எல்லாவிதமான பாதிப்புகளுக்கும் முதன்மைக் காரணமாக அமைகின்றது. சில விசயங்களில், நாம் திட்டமிட்ட நிகழ்வுகள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நடக்கவில்லை என்றால், அதனால் ஏற்படும் கோபம்,வருத்தம் உள்ளிட்ட காரணங்களினால், ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும்.
தியானம், யோகாப் பயிற்சி, சுவாசப் பயிற்சிகள் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதன் மூலம், உங்களது உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு தடுக்கப்படுகின்றது.
உடல் எடையைப் பராமரிக்கவும்
அதிக உடல் எடை மற்றும் உடற்பருமன் நிகழ்வானது, ஹைபர்டென்சன் பாதிப்பை உருவாக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியின் மூலம், சரியான உடல் எடையைப் பேணிக்காத்து வந்தால், உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
போதிய அளவிலான உறக்கம்
இரவில் போதிய உறக்கமின்மை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்
மன அழுத்த நிகழ்வானது உங்களது உடல்நிலையை மட்டுமல்லாது மனநிலையையும் மழுங்கச் செய்து விடுகிறது. இதயம் வேகமாகத் துடிப்பதனால், ரத்த அழுத்த விகிதமும் அதிகரிக்கின்றது. மனதை ஒருமுகப்படுத்தும் வகையிலான பயிற்சிகள், தியானம் உள்ளிட்டவை, உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகின்றன.
புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல்
உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடலுக்குத் தீமைப் பயக்கும் பல்வேறு பாதிப்புகளுக்கு, புகைப் பிடிக்கும் பழக்கமே, முக்கியக் காரணமாக அமைகின்றது. இந்தப் பழக்கத்தைக் கைவிடுவதன் மூலம், ஹைபர்டென்சன் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மிதமான அளவிலான மதுப்பழக்கம்
அதீத அளவிலான மதுப்பழக்கம், உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்குக் காரணமாக அமைகின்றது. ஆல்கஹால் உள்ளிட்ட மதுவகைகளைக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளும் போது, அது மனம் அமைதி அடைய உதவுவதுடன், ரத்த அழுத்த விகிதத்தைக் குறைக்கின்றது.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைக் குறைத்தல்
உப்பு அதிகம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்த மாறுபாட்டை அவ்வப்போது கண்காணித்தல்
இரத்த அழுத்த மாறுபாட்டை அவ்வப்போது கண்காணிப்பதன் மூலம், ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சில நேரங்களில் ரத்த அழுத்த விகிதம் அதிகரிக்கும் போது, நம் உடலில் சில விரும்பத்தகாத பாதிப்புகள் ஏற்படலாம்.
கழுத்துப்பகுதியில் வலி உணர்வு, மனதில் அமைதியின்மை, சுவாசித்தலில் பிரச்சினைகள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக, ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது நல்லது.
ஆலிவ் எண்ணெய் பயன்பாடு
ஆலிவ் எண்ணெயில் உள்ள பாலிபீனால்கள், ரத்த அழுத்த விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள், ஆலிவ் எண்ணெயை, தங்களது உணவுமுறையில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், ரத்த அழுத்த விகிதத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஆலிவ் எண்ணெயில் ஒமேகா 3, ஒமேகா 9 கொழுப்பு அமிலங்களும் மற்றும் செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் குறைந்த அளவில் உள்ளதால், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களுக்கு மாற்றாக, ஆலிவ் எண்ணெயையே பயன்படுத்தலாம்.
மேலும் வாசிக்க : இந்தியாவில் பரவலாகக் காணப்படும் மரபியல் நோய்கள்
புரோபயாட்டிக்களை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்
குடல் நுண்ணுயிரிகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அவை வெளியிடும் நைட்ரிக் ஆக்சைடு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.நமது உணவுமுறையில் உடலுக்கு நன்மைப் பயக்கும் நுண்ணுயிரிகள் உள்ள உணவு வகைகளை ( பால், தயிர்) அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், இத்தகைய உணவு வகைகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, இன்சுலின் ஹார்மோனின் எதிர்ப்பைக் குறைக்கவும் செய்கின்றன.
ஹைபர்டென்சன் பாதிப்பிற்கான சிகிச்சை முறையில், சமீபகாலமாகப் புரோபயாட்டிக் உள்ளிட்ட பதங்கள் பிரபலமாகி வருகின்றன.
கவலைகளைக் குறைத்தல்
கவலையால் கார்ட்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இது இதயத்துடிப்பை அதிகரித்து, ரத்த நாளங்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது.இது தற்காலிகமான நிகழ்வு தான் என்றபோதிலும், அடிக்கடி கவலைப்படுவதால், கார்ட்டிசோல் ஹார்மோனின் சுரப்பு, இதயம், சிறுநீரகங்கள் உள்ளிட்டவைகளைப் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றன.
காபி குடிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்
நீங்கள் அடிக்கடி காபி குடிப்பவர் என்றால், உங்களுக்கு, ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படுவத்ற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். நீங்கள் குடிக்கும் காபியில் உள்ள காஃபின் எனும் வேதிப் பொருளானது, உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
உடற்பயிற்சி, போதிய அளவிலான உறக்கம், ஆரோக்கியமான உணவுமுறை, மிதமான மதுப்பழக்கம், யோகா மற்றும் தெளிந்த மனநிலைக்கான பயிற்சிகள் அடங்கிய வாழ்க்கை முறையே, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பைத் தடுக்க உதவும் ஆபாந்பாந்தவன் ஆகும்.