நீரிழிவுப் பாதிப்பு – அறிந்ததும், அறியாததும்…
சர்வதேச அளவில், நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையில், 49 சதவீதத்தை, இந்தியா தன்னகத்தே கொண்டு உள்ளது. அதாவது,இந்திய மக்கள்தொகையில் 70 மில்லியனுக்கு மேற்பட்டோருக்கு நீரிழிவுப் பாதிப்பு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் பாதிப்பு எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டிற்குள், இருமடங்காக அதிகரிக்கும் என்ற தகவல், மக்களிடையே, பேரதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் சவாலாக மாறியுள்ளன.இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, நிரந்தரமாகக் குணப்படுத்த வாய்ப்பு இல்லை என்பதே, இதில் சோகமான செய்தி. இந்தப் பாதிப்பிற்கான தற்காலிக நிவாரண சிகிச்சையின் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.
இந்தத் தருணத்தில் நீரிழிவுப் பாதிப்பு தொடர்பான மேலாண்மை நிகழ்வுகள் நாம் சரியாகப் பின்பற்றி வந்தாலே, நம்மை மட்டுமல்லாது, நம்மைச் சார்ந்தோரின் நலனையும் பாதுகாக்கலாம் என்பது திண்ணம்.
நீரிழிவுப் பாதிப்பு
நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான கணையம், இன்சுலின் ஹார்மோனைக் குறைவான அளவில் சுரந்தாலோ அல்லது சுரப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டாலோ, ஏற்படும் பாதிப்பு தான் நீரிழிவுப் பாதிப்பு ஆகும். இன்சுலின் ஹார்மோன், ரத்தத்தில் இருந்து சர்க்கரையைப் பிரித்து எடுத்து அதனைச் செல்களுக்கோ அல்லது, சேகரம் செய்யவோ பயன்படுத்துகிறது. இந்தப் பண்படுத்தப்படாத அதிகச் சர்க்கரை, கண்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தற்போதைய சூழலில், இந்தப் பாதிப்பு வயது, பாலினம் வித்தியாசமின்றி அனைவருக்கும் சர்வசாதாரணமாக ஏற்படுகின்றது.
நீரிழிவுப் பாதிப்பை 3 வகைகளாகப் பிரிக்கலாம்
டைப் 1 நீரிழிவுப் பாதிப்பு
இந்த நிலைப் பாதிப்பு கொண்டவர்களது உடலில், இன்சுலின் ஹார்மோன் சுரப்பது இல்லை. இதன்காரணமாக, இவர்கள் தினமும் ஊசி வழியாக உடலில் இன்சுலின் ஹார்மோனைச் செலுத்திக் கொண்டு, வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை மேற்கொண்டு, நாள்களைக் கடத்துவர்.
டைப் 2 நீரிழிவுப் பாதிப்பு
இந்தப் பாதிப்பு நிலை உள்ளவர்களின் உடலில், போதிய அளவிலான இன்சுலின் சுரப்பு இருப்பதில்லை. இதன்காரணமாக, இவர்களும் மாத்திரை அல்லது இன்சுலின் ஹார்மோனை, ஊசியின் மூலம் உடலில் செலுத்திக் கொண்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முயல்வர். ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையிலான உணவுமுறையை, இவர்கள் பின்பற்றுவதோடு மட்டுமல்லாது, வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களையும் மேற்கொண்டு, அவர்கள் நாள்களைக் கடத்துவர்.
கர்ப்பகால நீரிழிவுப் பாதிப்பு
பெண்களுக்கு, கர்ப்பக் காலத்தில் மட்டும், இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது. குழந்தைப் பிரசவித்த உடன், இந்தப் பாதிப்பு மறைந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள்
நீரிழிவுப் பாதிப்பிற்கு ஆண் மற்றும் பெண் என்ற பேதம் எதுவும் இல்லை. அறிகுறிகளின் விகிதத்தில் வேண்டுமென்றால் மாற்றங்கள் இருக்கலாமேத் தவிர, இருபாலினத்தவருக்கும் ஒரே அறிகுறிகளே ஏற்படுகின்றன.
அதிகப்படியான பசி உணர்வு மற்றும் தாகம் எடுத்தல்
அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
உடல் எடைத் திடீரென்று அதிகரித்தல் அல்லது குறைதல்
உடல் சோர்வு
அரிப்பு உணர்வு
பார்வை மங்குதல்
காயங்கள் மெதுவாக ஆறுதல்
குமட்டல் உணர்வு
தோல் பாதிப்புகள்
விளைவுகள்
நீரிழிவுப் பாதிப்பின் அறிகுறிகள், உடலில் அது ஏற்படுத்தும் பாதிப்புகளை வெளிக்காட்டுவதாக உள்ளன. இதன் பொதுவான விளைவுகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்த குழாய்களில் சேதத்தை ஏற்படுத்தி, பக்கவாத பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கேட்டராட், குளுகோமா போன்ற கண்கள் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
சிறுநீர்ப்பாதையில் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி, சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்கின்றன.
வைட்டமின் B12 குறைபாட்டை ஏற்படுத்தி, நரம்பு தொடர்பான பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
கால் ஆணி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
வறண்ட சருமம், ரத்த நுண்குழாய்களில் சேதங்களை ஏற்படுத்தி, தோல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
மன அழுத்தம், மன இறுக்கம் உள்ளிட்ட மனநிலைப் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
தடுப்பு முறைகள்
நீரிழிவுப் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது. இருந்தப் போதிலும், நீரிழிவு நோயாளிகள் வாழ்க்கை முறை மாற்றங்கள், பயிற்சிகள் மற்றும் உணவு முறையைப் பின்பற்றினால், அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது உறுதி.
நீரிழிவுப் பாதிப்பைத் தடுக்கும் வகையிலான சில தடுப்பு முறைகளை இங்குக் காண்போம்..
உகந்த உணவுமுறை
ஊட்டச்சத்து நிபுணருடன் கலந்தாலோசித்து, உகந்த உணவுமுறையைப் பின்பற்றவும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள், முழு தானியங்கள், மீன், கீரைகள், சியா விதைகள், தயிர் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தவை.
உடற்பயிற்சிப் பழக்கம்
நீரிழிவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளது. தினசரி உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முதலில் 10 நிமிடம் தொடங்கி, படிப்படியாக நேரத்தை அதிகரியுங்கள். நடை, டிரெட்மில், யோகா, நடனம் போன்ற பயிற்சிகளை மாற்றி மாற்றி செய்தால், உடற்பயிற்சி இனிமையான அனுபவமாக இருக்கும்.
வழக்கமான பரிசோதனைகள்
நீரிழிவுப் பாதிப்பு உள்ளவர்கள், அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு உள்ளிட்டவைகளின் அளவுகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாது, கண் மற்றும் பல் பரிசோதனைகளையும் மேற்கொள்வது அவசியம் ஆகும்.
மருத்துவம் மற்றும் உணவுமுறை
நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகள், எதையும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடக் கூடாது. அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளே, அவர்கள் சாப்பிட வேண்டிய உணவின் அளவைத் தீர்மானிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மற்றும் சாப்பிடும் உணவின் அளவுக்கு முக்கியப் பங்கு உள்ளது.
மேலும் வாசிக்க : இதய நோயில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
மன அழுத்தத்தைக் குறைத்தல்
பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்லுதல், புதிய படங்களைப் பார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், உங்கள் உடலின் மன அழுத்தத்தைக் குறைக்கவல்லது ஆகும். நீங்கள் எந்த அளவிற்கு, உங்களது மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து இருக்கின்றீர்களோ, அந்த அளவிற்கு, நீரிழிவுப் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்பது திண்ணம்..
மருத்துவக் காப்பீடுகளின் பங்கு
நீரிழிவு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியுள்ளது.சிகிச்சைக் கட்டணம், பல்வேறு மருத்துவமனைகளில், விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதே உண்மை. இந்நிலையில் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் அது மிகுந்த பலனளிக்கும்.சில காப்பீட்டு நிறுவனங்கள், அவசரக் கால சிகிச்சைகளுக்கும் ஏற்ற வகையிலான பலன்களையும் அளித்து வருகின்றன. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீரிழிவுக் காப்பீடு எடுக்கும் முன், நிறுவனங்களின் பலன்களை அறிந்துகொள்ளுங்கள். சரியான காப்பீடுகளைத் தேர்ந்தெடுப்பது நமது முக்கிய கடமையாகும்.
சுயக் கட்டுப்பாடுகள்
நீங்கள் வீட்டை விட்டு பிரிந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கின்றீர்கள் என்றால், உங்களுக்குச் சுயக் கட்டுப்பாடுகள் இருப்பது மிகவும் அவசியம் ஆகும். கீழேக் குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகளைத் தவறாது பின்பற்றும்பட்சத்தில், நீரிழிவுப் பாதிப்பை எளிதாக வெல்லலாம்.
எக்காரணத்தை முன்னிட்டும் அதிக உணர்ச்சிவசப்படக் கூடாது.
உங்களது உணவு வகைகளை நீங்களே வீட்டில் சமைத்துக் கொள்ள வேண்டும்.
உணவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடக் கூடாது.
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
மருந்துகளை, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தோட்டம் பராமரித்தல், நீச்சல் பயிற்சி, குதிரையேற்றம், மலையேற்றம், நடனம் உள்ளிட்டவைகளில் பங்கேற்க வேண்டும்.
நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு இருக்கக் கூடாது.
நீரிழிவுப் பாதிப்பு குறித்து நீங்களும், உங்களது குடும்ப உறுப்பினர்கள் முழுவதுமாக அறிந்திருப்பது அவசியம் ஆகும்.
நீரிழிவு நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள், தகுந்த உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு, வளமான வாழ்க்கை வாழ்வீராக…..