பார்கின்சன் நோய்ப்பாதிப்பைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்
பார்கின்சன் நோய்ப்பாதிப்பு என்பது மூளையின் செயல்பாடுகள் தொடர்பான ஒரு நரம்பியல் பாதிப்பு ஆகும். இது பொதுவாக மூளையின் ஒரு பகுதியில் உள்ள நரம்பு மண்டல செல்களின் (நியூரான்கள்) செயல்பாட்டைச் சீர்குலைத்துப் பாதிப்பை உண்டாக்குகிறது. தசைகளின் கட்டுப்பாடு, சமநிலை மற்றும் இயக்கம் தொடர்பான அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் பார்கின்சன் நோய்ப்பாதிப்பைக் கண்டறிகின்றனர். பார்கின்சன் நோய்ப்பாதிப்பு சிந்தனைத் திறன் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட உடல் செயல்பாட்டின் பிற அம்சங்களையும் வெகுவாகப் பாதிக்கின்றது. [...]