இந்தியர்களிடையே காணப்படும் ஃலைப்ஸ்டைல் நோய்கள்
மக்கள்தொகையில், மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நாட்டில் மக்கள்தொகை 1.2 பில்லியன் என்ற அளவில் உள்ளது. நாட்டு மக்களிடையே, மாறிவரும் வாழ்க்கைமுறையின் காரணமாக, வாழ்க்கைமுறைத் தொடர்பான நோய்கள், அதிக அளவில் உள்ளன.
அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, போதிய அளவிலான மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக, தொற்று நோய்களின் பாதிப்பு ஆபத்தான அளவில் உள்ளது.இவைகள் நாள்பட்ட நோய்களாக மாறும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், இதற்குச் சிகிச்சையளிப்பது, கடும் சவாலாக உள்ளது.
வாழ்க்கைமுறை நோய்கள்
மனிதர்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக, அவர்களின் உடல்நலத்தில் ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படுகின்றன. இந்தப் பாதிப்புகள், வாழ்க்கைமுறை நோய்கள் என்று வரையறுக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப, உடற்பருமன், நீரிழிவு, இதய நோய்கள் என வாழ்க்கைமுறை நோய்களும் அதிகளவில் காணப்படுகின்றன.
விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில், அதன் வளர்ச்சிக்கு ஏற்ப, வாழ்க்கைமுறை நோய்களின் விகிதமும் ஏறுமுகத்திலேயே உள்ளன. 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியா ஃபிட் அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள மக்கள்தொகையில், 45.10 சதவீதம் பேருக்கு, இந்த நோய்கள் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது, லக்னோ நகரத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானோர், ஏதாவதொரு வாழ்க்கைமுறை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய மக்களின் உணவுமுறை மற்றும் போதிய அளவிலான உடல் உழைப்பு இல்லாததே, வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. பெரும்பாலான மக்கள் அதிகக் கொழுப்பு, அதிக சர்க்கரை கொண்ட உணவு வகைகளைச் சாப்பிட்டு வருகின்றனர். ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளின் காரணமாக, இந்த வாழ்க்கைமுறை நோய்களில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.
மனிதர்களின் வாழ்க்கைமுறையைப் பொறுத்து, அவர்களுக்கு ஏற்படும் வாழ்க்கைமுறை நோய்களும் வேறுபடுகின்றன. உதாரணமாக, ஒருவர் நீண்டநேரம் உட்கார்ந்தவாறே இருப்பவருக்கு, இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் காணப்படும் முக்கிய வாழ்க்கைமுறை நோய்கள்
நீரிழிவு
நாட்டின் மக்கள்தொகையில், பெரும்பாலானோருக்கு இருக்கும் பாதிப்பாக, நீரிழிவுப் பாதிப்பு விளங்கி வருகிறது. முக்கியமாக, நகரப்பகுதி மக்களிடையே, இந்தப் பாதிப்பு அதிகளவில் உள்ளது. 1970இல் 2% மட்டுமே இருந்த இந்தப் பாதிப்பு, 2020இல் 15%க்கு மேல் அதிகரித்தது.தற்போதைய நிலவரப்படி, சுமார் 60 மில்லியன் மக்களுக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இளம்வயதில், நாம் மேற்கொள்ளும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், உடலின் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடலில் மிதமிஞ்சிய சர்க்கரையின் அளவால், இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இது, பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு மூலக்காரணமாக அமைந்து விடுகிறது.
ஆரோக்கியமான, சரிவிகித உணவுமுறைகளால் மட்டுமே அதிக சர்க்கரையை கட்டுப்படுத்தி, நீரிழிவிலிருந்து நிவாரணம் பெற முடியும்.ஆரோக்கியமான உணவுமுறையோடு, உடல் உழைப்பும், நீரிழிவுப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
உடற்பருமன்
நாட்டின் வாழ்க்கைமுறை நோய்களில் உடற்பருமனும் முக்கியமானது.உடற்பருமன் நோய், குழந்தைகளையும் மிக அதிக அளவில் பாதிக்கின்றது. 1955ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2015ஆம் ஆண்டில், உடற்பருமனால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிகை, 2 மடங்கிற்கும் மேல் அதிகரித்து உள்ளது. ஆண்களைவிட, பெண்களில், இந்தப் பாதிப்பு அதிகளவில் உள்ளது.
ஹைபர்டென்சன்
ஹைபர்டென்சன் பாதிப்பை, உயர் ரத்த அழுத்தம் என்றும் குறிப்பிடலாம். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதி மக்களிடையே, இந்தப் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இந்தப் பாதிப்பு முற்றும்போது, மூளைப் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. சில நேரங்களில், மூளைச் செயலிழப்புக்கும், இது காரணமாக அமைந்துவிடுகின்றன. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடல் உழைப்பு இல்லாததன் காரணமாக, இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது.
புற்றுநோய்
இந்தியர்களிடையே காணப்படும் மிக முக்கியமான பாதிப்பு இது ஆகும். புகையிலைப் பொருட்களின் பயன்பாடு, உடற்பருமன், போதிய உடற்பயிற்சி இல்லாதது, எண்ணெயில் பொறித்த மற்றும் துரித உணவு வகைகளை அதிகம் உண்பதன் காரணத்தினால், புற்றுநோய்ப் பாதிப்பு ஏற்படுகின்றது.
டெல்லிப் போன்ற மெட்ரோபாலிடன் நகரங்களில், மிதமிஞ்சிய வாகனங்களின் பயன்பாடுகளால், சுற்றுச்சூழல் விரைவாக மாசு அடைகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றில், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேதிபொருட்கள் அதிக அளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து சுவாசிக்கும் போது, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. நகர்ப்புற மக்களிடையே, மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. அதிக மன அழுத்தம், குறைவாகச் சாப்பிடும் இயல்பு, ஒழுங்கற்ற உறக்கநிலை, மாதவிடாய் தாமதமாக ஏற்படுதல் உள்ளிட்ட காரணங்களினால், இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது.
30 முதல் 69 வயதினரிடையே நிகழும் 70% மரணங்களுக்கு புற்றுநோயே காரணம்.புற்றுநோய்ப் பாதிப்புகளை, தகுந்தச் சிகிச்சைகளின் மூலம், முன்கூட்டியே கண்டறிந்தால், அதன்மூலம் ஏற்படும் இழப்புகளில் இருந்துத் தற்காத்துக் கொள்ளலாம்.
சுவாசம் தொடர்பான நோய்கள்
அதீதக் காற்று மாசுபாடு, புகைப்பிடித்தல், உயிர் எரிபொருள் பயன்பாடு, அசாதாரண வாழ்க்கைச்சூழல் உள்ளிட்ட காரணங்களினால், சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. மூச்சுக்குழல் பாதிப்பு, நிமோனியா உள்ளிட்ட பாதிப்புகள், இதில் முக்கியமானவைகள் ஆகும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடையே, இந்தப் பாதிப்பு அதிகளவில் உள்ளது.
இதய நோய்கள்
இந்தியாவில் அதிகம் மரணம் ஏற்படுத்தும் நோயாக, இதய நோய்கள் உள்ளன. இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக, மாரடைப்பு ஏற்படுகின்றது. இரத்த குழாய்களில் அடைப்பு, இந்தியர்களிடையே பொதுவாகக் காணப்படும் பாதிப்பாக உள்ளது. இந்தப் பாதிப்பு மரபியல் ரீதியாகவும் ஏற்படலாம்.உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறைகளில் சில பயனுள்ள மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், இந்தப் பாதிப்பை வென்றெடுக்கலாம்.
நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்புகள்
இது மெதுவாக நிகழும் பாதிப்பு என்றபோதிலும், இறுதியில், சிறுநீரகத்தையே, முற்றிலும் செயலிழக்கச் செய்துவிடுகின்றது. இந்தப் பாதிப்பிற்கான அறிகுறிகளை, முன்கூட்டியே கண்டறிய முடியாது என்பதால், உணவுமுறைகளில், கூடுதல் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகிறது.
இனப்பெருக்கச் சுகாதாரப் பாதிப்புகள்
இந்தியப் பெண்களிடையே, இனப்பெருக்கம் சார்ந்த பாதிப்புகளின் என்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாறிவரும் வாழ்க்கைமுறை, மன அழுத்தம் நிறைந்த பணி மற்றும் வாழ்க்கை, வாழ்க்கைச் சமநிலையைப் பேணுவதில் சிரமம் உள்ளிட்ட காரணங்களினால், பெண்களுக்கு ஹார்மோன்களில் சமநிலையற்ற தன்மை, மாதவிடாய் கோளாறுகள், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பக்கவாதம்
மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்படுவதினால், பக்கவாதம் ஏற்படுகின்றது. பக்கவாத பாதிப்பிற்கு உயிரைக் கொல்லும் பாதிப்பு உள்ளபோதிலும், வாழ்க்கைமுறையில் சில பயனுள்ள மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், இதை எளிமையாகத் தவிர்க்கலாம்.
மேலும் வாசிக்க : இது மட்டும் செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கைக் கன்பார்ம்!
மனம் சார்ந்தப் பிரச்சினைகள்
மன இறுக்கம், பதட்டம் உள்ளிட்ட மனம் சார்ந்தப் பிரச்சினைகள், இந்தியர்களிடையே அதிகம் காணப்படுகின்றன.
வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
ஆரோக்கியமற்ற உணவுமுறை
புகையிலைப் பொருட்கள், ஆல்கஹால், போதை மருந்துகள்
சோர்வு அல்லது அசதி
உடல்நலம் குன்றி இருத்தல்
தவறான பழக்கவழக்கங்கள்
பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவதில் தாமதம்
வலுவற்ற மருத்துவ கட்டமைப்பு
பாதிப்புகளைத் தவிர்க்கும் வழிகள்
வழக்கமான உடற்பயிற்சிகள்
போதிய அளவு ஓய்வு மற்றும் உறக்கம்
நல்லப் பழக்க வழக்கங்கள்
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள்
நம்நாட்டு மக்களிடையே, ஒரு எண்ணம், அவர்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்து உள்ளது. அதுயாதெனில், நோயின் பாதிப்பு முற்றிய பின்பே, அதாவது, அறுவைச் சிகிச்சைத் தேவைப்படும் காலம் வரும்போதே, அவர்கள் மருத்துவரின் உதவியை நாடுகின்றனர். இந்த எண்ணத்தை, அவர்கள் மாற்றிக் கொள்வது நல்லது.
எந்த வகையான நோயாக இருந்தாலும், அதைத் தகுந்த சிகிச்சைகளின் மூலம் முன்கூட்டியே கண்டறியும்பட்சத்தில், நிச்சயமாக, அந்த நோயின் பாதிப்புகளில் இருந்து விடுபட இயலும்.
நோய்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு, நல்வாழ்க்கை வாழ வாழ்த்துகிறோம்….