இந்திய மக்கள்தொகையின் மரபியல் வகைப்பாடுகள்
இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது 4,500க்கும் அதிகமான மக்கள் குழுக்களைக் கொண்ட பன்முகத்தன்மை மிக்க நாடாக விளங்குகிறது.மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், உடல் தோற்றங்கள், மரபணு கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்கள் வேறுபடுகின்றனர். இந்த வேறுபாடானது டி.என்.ஏ. எனப்படும் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த மரபணுத் தகவல்கள் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன.
இதில் வியப்பூட்டும் விஷயம் என்னவெனில், தொடர்பற்ற தனிநபர்களின் டி.என்.ஏ. 0.1 சதவீதமே வேறுபடுகிறது.எஞ்சியுள்ள 99.9 சதவீத டி.என்.ஏ.வானது ஒரேமாதிரியாகத் தான் உள்ளது. இதில் உள்ள முரண்பாடு என்னவெனில், மனிதர்களின் அற்புதமான இந்தப் பன்முகத்தன்மையானது, அந்த 0.1 சதவீதத்தில் மட்டுமே வைக்கப்பட்டு உள்ளன. டி.என்.ஏ.வில் 30 மில்லியன் இணைகள் உள்ளன. இவைகள் தான், தகவல் மூலாதாரத்திற்கான தடயங்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது. இந்த டி.என்.ஏ.,க்கள் தான், இந்திய மக்கள்தொகையின் வரலாற்றுத் தோற்றத்தை, மறுகட்டமைப்பு செய்வதற்குப் பேருதவி புரிந்துள்ளன. இது மனிதர்களில் உள்ள மரபணு வேறுபாடுகளை எளிதாகச் சுட்டிக்காட்ட உதவுகிறது. இந்த மரபணு மாறுபாடுகள், சிலரை நோய்ப்பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன, சிலரை, நோய்ப்பாதிப்பிற்கு எதிர்ப்புத் தன்மைக் கொண்டவர்களாக ஆக்குகின்றன. இதற்குச் சிலர் நிவாரண சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். சிலர், அந்தச் சிகிச்சைக்கு எதிரான விளைவுகளை அடைகின்றனர்.
இந்திய மக்களின் மரபணு மாறுபாட்டைக் கண்டறியும் ஆய்வுக்காக, 13 மாநிலங்களிலிருந்து 25 குழுக்களைச் சேர்ந்த 132 நபர்களின் 5.6 லட்சம் மரபணுக் குறிப்பான்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.சமகால இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள், மேற்கு யுரேசியர்களுடைன் தொடர்புடைய மூதாதையர்கள் வட இந்தியர்கள் என்றும், இந்தியாவிற்கு வெளியே எந்தக் குழுவுடனும் தொடர்பில்லாத மூதாதையர்கள் தென்னிந்தியர்கள் என்ற இரண்டு தனித்துவமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக, ஒவ்வொரு சமூக மக்களும், அவர்களுக்கு உள்ளேயே, திருமண நடைமுறைகளைப் பின்பற்றி வந்தனர். இதன்காரணமாக, இந்தியாவில் மக்கள்தொகைச் சார்ந்த நோய்ப்பாதிப்புகள், அதிக எண்ணிக்கையில் இருப்பதும், இந்த நோய்ப்பாதிப்புகளுக்குக் காரணமான மரபணு மாறுபாடுகள், இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானதாக உள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜீனோம் இந்தியா திட்டம்
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயிர்தொழில்நுட்பவியல் துறையானது, 2020ஆம் ஆண்டில், இந்த ஜீனோம் இந்தியா திட்டத்தைத் தொடங்கியது. 2024ல், 99 சமூகங்களைச் சேர்ந்த 10,000 நபர்களின் முழு மரபணு வரிசைமுறை மற்றும் தரவு பகுப்பாய்வு முடிந்ததாக உயிர்தொழில்நுட்பவியல் துறை அறிவித்தது.8 பெட்டாபைட் அளவிலான பிரமாண்டமான தரவுத் தொகுப்பானது, ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தரவு மையத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
1.4 பில்லியன் அளவிலான மக்கள்தொகைக் கொண்ட இந்தியாவில், 4,600க்கும் மேற்பட்ட அளவிலான மக்கள்தொகைக் குழுக்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவைகள், நெருங்கிய உறவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளுதல், மரபணு பன்முகத்தன்மை மற்றும் நோய்ப்பாதிப்பை உருவாக்கும் நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன. ஜீனோம் இந்தியா திட்டமானது, இந்திய மக்கள்தொகையில் உள்ள பல்வேறு நோய்ப்பாதிப்புகளின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாது, முன்கணிப்பு நோயறிதல் குறிப்பான்களை உருவாக்குவதற்கும் உதவுகின்றன.
ஜீனோம் இந்தியா திட்டத்தின் நோக்கங்கள்
மரபணு பன்முகத்தன்மை
இந்தியாவில் வசிக்கும் மக்களின் மரபணு வேறுபாட்டை வரைபடமாகத் தயாரிப்பதே ஜீனோம் இந்தியா திட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகும். இந்தியா பல்வேறு இனக்குழுக்களின் புகலிடமாக உள்ளது. ஒவ்வொரு குழுவும் கலாச்சாரம், புவியியல், வரலாறு ஆகியவற்றால் உருவான தனித்துவமான மரபணுக்களைக் கொண்டுள்ளது.பல்வேறு இனச் சமூக மக்களின் மரபணுக்களை வரிசைப்படுத்துவதன் மூலம், அடிப்படை மரபணு மாறுபாடுகள், உடல்நலம் சார்ந்த நோய்ப்பாதிப்புகளுக்கான தாக்கங்களைக் கண்டறிய உதவுகிறது.
நோய்ப்பாதிப்புத் தன்மையை அறிதல்
புற்றுநோய் உள்ளிட்ட நோய்ப்பாதிப்புகளுக்கு ஒருவர் உட்படும் தன்மையைத் தீர்மானிக்க, மரபணுக்கள் பேருதவி புரிகின்றன. மரபணு முன்கணிப்புகள் மூலம், மக்கள்தொகைக்கு ஏற்ற நோயறிதல் இலக்குகளையும், சிகிச்சைகளையும் உருவாக்க முடியும்.
மேலும் வாசிக்க : தசையின் வலிமை அதிகரிப்பு – உங்கள் பட்ஜெட்டிலேயே!
ஜீனோமிக் மருத்துவம் அல்லது மரபணு மருத்துவம்
மரபணு நுண்ணறிவு அடிப்படையிலான தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவ அணுகுமுறைகளானது, மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. ஜீனோம் இந்தியா திட்டம் மருத்துவத்தில் மரபணுத் தரவுகளை ஒருங்கிணைத்தது.இதன்மூலம், துல்லியமான நோயறிதல், நோய் முன்கணிப்பு, சிகிச்சைத் தேர்வுகள் உள்ளிட்டவை எளிதாகின. தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவ அணுகுமுறையானது, நோய்ப்பாதிப்புகளின் சுமையைக் குறைக்கவும், சுகாதார விளைவுகளை மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றின.
நெறிமுறைப் பரிசீலனைகள்
மரபணு ஆராய்ச்சியானது, பல்வேறு நெறிமுறைப் பரிசீலனைகள் குறித்த ஐயத்தை எழுப்புகிறது. மரபணு தரவுகளின் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக, நெறிமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் கடுமையான தரவு பாதுகாப்பு நடவடிக்கைகளை, ஜீனோம் இந்தியா திட்டம் வலியுறுத்துகிறது.
ஜீனோம் இந்தியா திட்டமானது, இந்திய மக்களின் மரபணு பன்முகத்தன்மை மற்றும் அதன் திறனை வெளிக்கொணரும் வகையிலான முன்னோடி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு இனக்குழுக்களிடமிருந்து, ஆயிரக்கணக்கான மரபணுக்களை வரிசைப்படுத்துவதன் மூலம், மனிதர்களின் உடல் ஆரோக்கியம், நோய்ப்பாதிப்புகள் உள்ளிட்ட நுண்ணறிவுகளை இது வழங்குகிறது. ஜீனோமிக் மருத்துவமானது, சுகாதார விநியோகத்தை மாற்றி அமைக்கிறது. தனித்துவமான மரபணு ஒப்பனைக்கு ஏற்ப, தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவ தீர்வுகளுக்குத் தேவையான அதிகாரத்தை வழங்குகிறது.