உடற்பயிற்சித் திட்டங்களில் ஓய்வின் முக்கியத்துவம்
உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் சத்தான உணவு ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றன.நீங்கள் விளையாட்டு ஆர்வலராக இருந்தால், உங்கள் உடலின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு, தேவையான உடற்பயிற்சிகளைச் செய்தபின், போதுமான அளவிற்கு ஓய்வில் ( உடற்பயிற்சி செய்யாதிருத்தல் நிலை) இருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்கும் நிலை மட்டுமே ஓய்வு நாள் என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலில் உண்டாகும் மன அழுத்தமானது, உடலை விரைவில் சோர்வடையச் செய்துவிடுகிறது. இந்தச் சோர்வுப் பாதிப்பில் இருந்து, உடலை விடுவித்துக் கொள்ள, இந்த ஓய்வு நாட்கள் பேருதவி புரிகின்றன.
போதிய அளவிலான உடற்பயிற்சிக்குப் பின்னர், உடலை அதீதச் சோர்வில் இருந்து மீட்க உதவும் ஓய்வு நாட்களை, எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இன்றி, உற்சாகமாக அனுபவியுங்கள்.
ஓய்வு நாட்களுக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம்?
உடற்பயிற்சி திட்டங்களில், ஓய்வு நாட்களுக்கு என்று தனியானதொரு முக்கியத்துவம் உண்டு. உடற்பயிற்சி நிபுணர் 3-10 நாள் திட்டத்தில் குறைந்தது ஒரு நாளை ஓய்வு நாளாக ஒதுக்குவார்.மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளின் திறனைப் பொறுத்து, ஓய்வு நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். போதுமான ஓய்வு நாட்கள் அமையப் பெற்றால் மட்டுமே, மேற்கொண்ட உடற்பயிற்சித் திட்டங்களுக்கான இலக்கை எட்டமுடியும்.
ஓய்வு நாட்களால் ஏற்படும் நன்மைகள்
தசைகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளைச் சரிசெய்தல்
நாம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, நமது உடலில் உள்ள தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த அழுத்த விளைவே, தசைகளின் வலிமை மற்றும் உறுதித்தன்மைக்குக் காரணமாக அமைகின்றன. அழுத்தத்திற்கு உள்ளான தசைகள், பழுதுகளில் இருந்து தங்களைச் சரிசெய்து கொள்வதற்கும், வலிமைப் பெறவும், போதிய அளவிலான ஓய்வு மற்றும் மீட்பு நாட்கள் அவசியமாகின்றன. இந்த ஓய்வு நாட்களிலேயே, தசைகளின் வளர்ச்சி மற்றும் வலிமை நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
உடலியல் மாற்றங்கள்
உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளும் வண்ணம், ஓய்வு நாட்களின் போது, தசைச் செல்களில், உடலியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. தசைகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளைச் சரிசெய்யும் விதமாக, ஊட்டச்சத்துகளும், ஆக்சிஜனும் அப்பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. உடல் இழந்த சக்தியானது மீட்டெடுக்கப்பட்டு, சோர்வு நிகழ்விலிருந்து விடுபடுகிறது.
போதுமான அளவிலான ஓய்வு எடுக்காதபோது, பாதிப்பின் அபாயம் அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்புச் சக்தியானது பலவீனம் அடைவதால், பல்வேறு வகையான நோய்த் தொற்றுகள் எளிதாகத் தாக்கும் சூழல் உருவாகிறது.
ஆழ்ந்த உறக்கம்
தசைகள், தங்களது பழைய நிலையை மீண்டும் அடைய, ஆழ்ந்த உறக்கமானது முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆழ்ந்த உறக்க நிகழ்வின் போது, நமது உடலில் சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன்கள், திசுக்களின் வளர்ச்சிக்கும், அதில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும் உதவுகி்றது.
போதுமான அளவிலான உறக்கம் இல்லாத நிலையானது, பாதிப்பிலிருந்து மீள்வதைத் தாமதப்படுத்துகிறது. இதன்காரணமாக, உடலில் விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ்கின்றன.
உறக்க நிகழ்வைப் பாதிக்கும் காரணிகள்
மொபைல் போன்களின் பயன்பாடு
சமூக ஊடகப் புகழுக்கு அடிமையானவர்கள், லைக்ஸ் மற்றும் கமெண்ட்களுக்காகப் படுக்கையறையில் பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பில் செலவிடுகின்றனர். இந்த உபகரணங்களில் நீல நிற ஒளியானது, உறக்க நிகழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உறக்கத்திற்குக் காரணமான மெலடோனின் ஹார்மோன் சுரப்பை, இந்த நீலநிற ஒளியானது தடைச் செய்கிறது. இதன்காரணமாக, போதிய உறக்கம் நிகழ்வதில்லை. எனவே, உறங்கச் செல்வதற்கு 30 நிமிடங்கள் முன்பாகவே, ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு உபகரணங்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது.
காஃபி உள்ளிட்டவைகளின் அதீதப் பயன்பாடு
இரவில் மைதா, பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை உண்டால், அவைச் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும்.இதன்காரணமாக, உங்களது உறக்கமானது தடைபடும். இரவுநேரத்தில் காஃபி குடித்தால், அதில் உள்ள காஃபின் வேதிப்பொருள், உறக்கத்திற்குக் காரணமான மெலடோனின் ஹார்மோன் சுரப்பைத் தடைச் செய்கிறது. அதுமட்டுமல்லாது, உடல் சுறுசுறுப்பாக இருக்கத் தேவையான அட்ரினலீன் சுரப்பைத் தூண்டுகிறது. இதன்காரணமாக, உறக்க நிகழ்வு கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
படுக்கையறை உறங்க மட்டுமே…
படுக்கையறையைப் படுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த இடத்தில், உங்களது பணி தொடர்பான இமெயில்களை அனுப்புதல், பணி குறித்த சிந்தனை. வந்த இமெயில்களுக்குப் பதில் அளித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொண்டால், அது உறக்கத்திற்கு நீங்களே போட்டுக் கொள்ளும் முட்டுக்கட்டைகளாக அமையும். நீங்கள் உங்களது படுக்கையறையிலேயே இருந்தவாறு, அடுத்த நாளுக்குரிய நடவடிக்கைகள் குறித்து சிந்தித்துக் கொண்டு இருந்தால், மன அழுத்தத்திற்கு உள்ளாகி, உறக்கநிலையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
எளிய வகை உடற்பயிற்சிகள்
ஓய்வு நாட்களில், எதுவும் செய்யாமல் முழுவதுமாக ஓய்விலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தசைகள் உள்ளிட்ட பாகங்களுக்கு எவ்விதச் சிரமத்தைத் தராமல், அதேசமயம், தசைகளுக்கு, ரத்த ஓட்டத்தைத் தரவல்ல, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
நடைப்பயிற்சி, யோகா, சைக்கிளிங் பயிற்சி உள்ளிட்ட செயல்பாடுகள், தசைகளில் ஏற்படும் விறைப்புத்தன்மையையும், அதனால் ஏற்படும் வேதனையையும் குறைக்கிறது. இதன்காரணமாக, மீட்பு செயல்முறைத் துரிதப்படுத்தப்படுகிறது.
மேலும் வாசிக்க : உடல் எடையைக் குறைக்க மட்டுமா உடற்பயிற்சிகள்?
சரியான ஊட்டச்சத்து முறையைத் தேர்ந்தெடுத்தல்
தசைகளின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஊட்டச்சத்து முறையானது முக்கியப் பங்காற்றுகிறது. சரியான விகிதத்தில் புரதங்கள், கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள் அடங்கிய உணவு வகைகள், தசைகளின் உருவாக்கத்திற்கும், பழுதுகளைச் சரிசெய்வதற்கும் பேருதவி புரிகிறது. தசைகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளைச் சரிசெய்ய, புரதங்களில் உள்ள அமினோ அமிலங்கள் உதவுகின்றன. அதேபோன்று, இழந்த ஆற்றலை மீட்க, கார்போஹைட்ரேட் உதவுகிறது. நீரேற்றமும் முக்கியப் பங்கு வகிக்கின்றது, உடலின் வளர்சிதை மாற்ற்ச் செயல்பாடுகளுக்கும், ஊட்டச்சத்துக்களை, உடலில் தேவைப்படும் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல நீரேற்ற நிகழ்வு உதவுகிறது.
காயங்கள் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வது, உடல் எடைக் குறைப்பு, தசைகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட எந்த வகையான நோக்கத்திற்காகவும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், ஓய்வு என்பது அத்தியாவசிய தேவையாகும். போதிய அளவிலான ஓய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பது சாத்தியம் ஆகும்.