MRI ஸ்கேன் சோதனைக்குத் தயாராவது எப்படி?
நம் உடலில் தோன்றும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை அளிக்கவும் மற்றும் சிகிச்சையின் பலனைக் கண்காணிக்கவும் MRI என்று சுருக்கமாக அழைக்கப்படும் காந்த அதிர்வு இமேஜிங் சோதனைப் பயன்படுத்தப்படுகிறது.
MRI ஸ்கேன் சோதனைக்குத் தயார் ஆவோமா?
MRI ஸ்கேன் சோதனையில், வலிமையான காந்தப்புலங்கள் பயன்படுத்தப்படுவதால், உங்களுக்கு MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்ளப்படுவதாக இருந்தால், முன்கூட்டியே, உங்கள் மருத்துவரிடம், உடல்நிலைக் குறித்த ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்.
உங்களுக்குக் கிளாஸ்ட்ரோபோபியா ( மூடிய அறையைக் கண்டால் ஏற்படும் பயம்) பாதிப்பு இருந்தால், மருத்துவரிடம் இதுகுறித்துத் தெரிவித்து, அதற்கேற்ப,தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், கர்ப்பிணிகள், உடலில் மெட்டல் பிளேட் பொருத்திக் கொண்டவர்கள், டாட்டூ போட்டுக் கொண்டவர்கள், குண்டு காயம் அடைந்தவர்கள், சிறுநீரகப் பிரச்சினை அல்லது ஒவ்வாமைப் பிரச்சினை உள்ளவர்கள், மருத்துவர்களிடம் இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிப்பது நல்லது.
நீங்கள் ஏதாவதொரு உடல்நலக் குறைவுக்காக, மருந்துகள் உட்கொள்பவராக இருந்தால், அந்த மருந்துப் பட்டியலை, MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அதனைக் காண்பித்து அதற்கு அவர் ஆலோசனையின்படி நடந்து கொள்ள வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில், ஸ்கேன் சோதனை மேற்கொள்வதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பாகவே, உணவு மற்றும் திரவப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்துவார்.
சோதனைக்கு முன்னதாகத் தவிர்க்க வேண்டியது என்னென்ன?
டியோடரண்ட் பயன்படுத்தலாமா?
MRI ஸ்கேன் சோதனைக்கு முன்னதாக, டியோடரண்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், டியோடரண்ட்டில் அலுமினியம் முக்கிய பகுதிப்பொருளாக உள்ளது. MRI ஸ்கேன் இயந்திரத்தில் காந்தங்கள் உள்ளதால், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
அதேபோல், வியர்வைச் சுரத்தலைத் தடுக்கும் வேதிப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் அல்லது உடலில் பூசிக்கொள்ளும் லோஷன்கள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
சோதனைக்கு முன் குளிக்கலாமா?
குளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், குளிக்கும் சமயத்தில் தலைமுடி மற்றும் உடலுக்கு எவ்வித லோஷன்கள் மற்றும் ஜெல்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் நலம்.
சோதனையின் போது பிரா அணியலாமா?
MRI ஸ்கேன் சோதனையின் போது, சில தருணங்களில் மருத்துவமனை வழங்கும் கவுன் போன்ற உடை அணிய அறிவுறுத்துவர். சில மருத்துவமனைகளில், இதைப் பின்பற்றுவது இல்லை. உலோகத்தாலான பட்டன், ஜிப், பெல்ட் உள்ளிட்டவற்றைக் கொண்ட பிரா போன்ற உள்ளாடைகளை, சோதனையின் போது தவிர்ப்பது நல்லது.
சோதனையின் போது அசைந்தால் என்ன ஆகும்?
ஸ்கேனர் மேடையில் நோயாளியை, படுக்க வைத்த பின்னர், அவர் அசையாமல் நிலையாகப் படுத்து இருக்க வேண்டும். ஒருவேளை, அவர் அசையும்பட்சத்தில், தெளிவற்ற, மங்கலான படங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்?
MRI ஸ்கேன் சோதனை நிகழ்வின் போது, நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நகைகளில், முக்கிய பகுதிப்பொருளாக உலோகம் உள்ளது. இத்தகைய நகை உள்ளிட்ட ஆபரணங்களை, வீட்டிலேயே வைத்துவிட்டு வருவது சாலச்சிறந்தது. ஏனெனில், ஸ்கேன் மையத்தில், நீங்கள் கழட்டி வைத்தால், அது திருடுபோகும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவரிடம் எதையும் மறைக்காதீர்கள்
- சிறுநீரகத்தில் பிரச்சினைக் காரணமாக மேற்கொண்ட மருத்துவம்
- நீரிழிவு மேற்கொண்ட மருத்துவம்
- கருத்தரித்தல் காலம்
- இதயத்தில் பேஸ்மேக்கர்ப் பொருத்தி இருந்தால்,அதன் விபரங்கள்
குண்டுக் காயங்கள் உள்ளிட்ட விபரங்கள் இருப்பின், அதைத் தயங்காமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் மறைக்கும் இத்தகைய விசயங்கள், ஸ்கேன் சோதனை முடிவில், தெளிவற்ற மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதால், இதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
மேலும் வாசிக்க : MRI ஸ்கேன் – அறிந்ததும்….அறியாததும்…
கிரியாட்டின் ரத்த சோதனை
MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்வதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக, கிரியாட்டின் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்
- நீரிழிவு பாதிப்பிற்கு உள்ளானவர்கள்
- ஒரு சிறுநீரகம் கொண்டோர்/ சிறுநீரகத்தின் செயலற்ற தன்மை
பாதிப்பு உள்ளவர்கள், இந்தச் சோதனையைக் கண்டிப்பாக மேற்கொண்டு, இதற்கான முடிவுகளை, MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்ளும் நிபுணரிடம் வழங்க வேண்டும்.
உணவு முறை
MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாகவே, திட உணவுப்பொருட்கள் சாப்பிடுவதைத் நிறுத்திவிட வேண்டும்.
இதய நோய் தொடர்பாக MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்பவர்கள், 2 மணி நேரத்திற்கு முன்னதாக, உணவு உட்கொள்வதை நிறுத்துவதோடு மட்டுமல்லாது, காபி போன்ற ஃகாபின் உள்ள பானங்கள் அருந்துவதை நிறுத்திவிட வேண்டும்.
இத்தகைய வழிமுறைகளைச் சரியாகக் கையாண்டு, MRI ஸ்கேன் சோதனையைத் திறம்பட மேற்கொண்டு, நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபட்டுச் சுகமான வாழ்க்கை வாழ்வோமாக…..