தெளிவான மனநிலையை உருவாக்கும் பயிற்சிகள்
இந்த நொடிப்பொழுதில், தன் மனதினுள் நிகழும் மன ஓட்டங்கள், புலனுணர்வுகள் மற்றும் உணர்வுகளின் மீது போதிய கவனம் செலுத்தும் வகையிலான நிலையையே, தெளிவான மனநிலை (Mindfulness) என்று குறிப்பிடுகிறோம். இம்மனநிலையை பேணுவதால், சுய விழிப்புணர்வு வளர்ந்து, மன அழுத்தம் குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கை அமையும்.
தெளிவான மனநிலையை உருவாக்க, கீழ்க்காணும் பயிற்சிகளை, நிபுணர்கள் பரிந்துரைச் செய்கின்றனர். அவைகளை இங்கு விரிவாகக் காண்போம்.
ஆழ்நிலைத் தியான பயிற்சிகள்
ஆழ்நிலைத் தியான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, அது உங்களின் மனதைச் சாந்தப்படுத்துவதோடு, தற்போது நீங்கள் மேற்கொண்டு இருக்கும் விவகாரங்களில், உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளப் பேருதவி புரிகிறது.மனதை ஒருநிலைப்படுத்த, வழிகாட்டிகள் அல்லது மந்திரங்களுடன் ஆழ்நிலைத் தியானம் செய்யுங்கள்..
வண்ணம் தீட்டுதல்
நாம் குழந்தைகளாக இருந்தபோது, கையில் ஏதாவது படங்கள் கொண்ட புத்தகங்கள் கிடைத்தால், அந்தப் படங்களுக்கு நாம் விரும்பிய வகையில் வண்ணம் தீட்டி மகிழ்ந்த காலங்கள் நினைவில் இருக்கிறதா?. இந்த எளிய செயல் கவலைகளை மறக்கச் செய்து, தெளிவான மனநிலையை உருவாக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.சிறிய வயதில், பேப்பர், பேனா, கலர்ப் பென்சில்கள் நமக்குக் கிடைத்தால், நமக்குள் ஒளிந்திருக்கும் ஓவியக் கலைஞன் விழித்துக் கொள்வான். அந்த நேரத்தில், நம் மனதில் உள்ள கவலைகள் மறைந்து இருக்கும். அந்த நேரத்தில், நாம் வரைந்த படத்திற்கு, நமக்குப் பிடித்த எந்த வண்ணங்களைக் கொண்டு நிரப்பலாம் என்பதிலேயே, நமது மனம் லயித்து இருக்கும்.
காலார நடந்துச் செல்லுங்கள்
நீங்கள் அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்துக் கொண்டு இருந்தால், அது உங்களுக்கு அதிகச் சோர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, தேவையில்லாத சிந்தனைகள் உருவாவதற்கும் காரணமாக அமைகின்றது. உடனடியாக, அந்த இடத்தைவிட்டு அகன்று, சிறிது தொலைவிற்குக் காலார நடந்துச் சென்று, இயற்கையின் அழகை ரசித்தால், நம் கவலைகளில் இருந்து மெல்ல விடுபட முடியும். இயற்கை, சிறந்த இதம் அளிப்பானாக, பல்வேறு விசயங்களில் உள்ளது. நாம் தற்போது இருக்கும் இடத்தைவிட்டு, சிறிய தொலைவிற்குக் காலார நடந்துச் சென்றால், நம் மனதில் உள்ள கவலைகள், வெகுதொலைவிற்குச் சென்றுவிடும்.
பிடித்த உணவுவகைகளைச் சாப்பிடுதல்
மனக் கவலைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா? இதற்கென்று நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியது இல்லை. உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை ரசித்து, ருசித்து, சாப்பிட்டாலே போதும்.
ஒவ்வொரு உணவு புசித்தலுக்கு முன்பும், மூச்சை ஆழமாக இழுத்துவிட வேண்டும்.
பசி உணர்வை, உங்களது உடல் அறிந்திருக்க வேண்டும்
பசி போகும்வரை, உணவைச் சாப்பிட வேண்டும்.
அமைதியாகவும், அதேசமயம் நன்றாகச் சுவாசப் பயிற்சியை மேற்கொண்டு சாப்பிட வேண்டும்.
முழு உடல் ஸ்கேனிங்
உடலின் எல்லாப் பகுதிகளிலும், உங்களது கவனத்தை, முறையாகக் கொண்டு செல்ல, இந்த வழிமுறை உதவுகிறது. தலைப் பகுதியில் துவங்கி, காலின் அடிப்பகுதி வரை நீளும் இந்தப் பயிற்சியில், ஏதேனும் ஒரு பகுதியில் அசவுகரியம் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. இது உடல் குறித்த சுய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது.
சுவாசப் பயிற்சி
தெளிவான மனநிலையைப் பெற மிகவும் எளிதான வழிமுறையாக உள்ளது சுவாசப் பயிற்சி. அமைதியான இடத்தில், வசதியாக அமர்ந்து கொண்டு, நமது கவனம் முழுவதையும் மூச்சுப் பயிற்சியின் மீதே வைத்திருக்க வேண்டும். உள்சுவாசம் மற்றும் வெளி சுவாச நிகழ்வுகளின் போது, உங்களது உடலில் நிகழும் மாற்றங்களைக் கவனியுங்கள். அந்த நேரத்தில், உங்கள் மனம் அலைபாயும் பட்சத்தில், கவனத்தை, சுவாச நிகழ்வுகளின் மீது திருப்புங்கள்.
அன்பைப் பகிர்தல்
உங்களின் நலன்விரும்பிகள் மற்றும் உங்களை அதிகம் நேசிப்பவர்களுக்கு, அன்பை வாழ்த்துகளாகவும், நல்ல நினைவுகளாகவும் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருங்கள். மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்றவற்றைப் பகிரும்போது, அது உங்களுக்கும் அவர்களுக்கும் பயனளிக்கிறது.
சிந்தனைகளைச் சீர்படுத்துங்கள்
அமைதியான இடத்தில் உட்கார்ந்து, உங்கள் செயல்கள் மற்றும் எண்ணங்களை கவனியுங்கள். அவற்றின் மூலத்தையும் ஆராயுங்கள். இது உங்கள் சிந்தனைகளை மேம்படுத்தும்.
நன்றி உணர்வுப்பயிற்சி
ஒவ்வொரு நாளும், நீங்கள் நன்றித் தெரிவிக்கும் வகையிலான மூன்று நிகழ்வுகளை நினைவுகூருவது, உங்களது மனதை மகிழ்ச்சியாகவும், தெளிந்த மனநிலையோடு வைத்திருக்க உதவும். அவைச் சிறிய விசயங்களாகக் கூட இருக்கலாம். இந்த நடைமுறை, உங்களது கவனத்தை, நேர்மறையான அம்சத்தை நோக்கி நகர வைக்கும்.
கேட்டல் பயிற்சி
அடுத்த முறை நீங்கள் வேறு யாருடனாவது உரையாடல் நிகழ்வில் பங்கேற்றால், குறுக்கே எதுவும் பேசாமல், அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதைக் கவனியுங்கள். அவர்களின் உடல் மொழி, பேசும் திறன், குரலின் தொனி உள்ளிட்டவைகளைக் கவனியுங்கள்.
ஒவ்வொரு நாளும், உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை, சிறுகுறிப்புகளாக எழுதப் பழகுங்கள். இது உங்கள் உணர்வுகள், அனுபவங்கள், எண்ணங்களைப் பிரதிபலிக்க உதவும். இது உங்களைப் பற்றிய நுண்ணறிவைப் பெறவும் உதவும்.
மேலும் வாசிக்க : உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சாதனங்கள்
மனநிறைவோடு பாராட்டுங்கள்
ஒவ்வொரு நாளும் உங்களை மற்றும் உங்களைச் சுற்றி உள்ள அழகான நிகழ்வுகளைப் பாராட்ட பழகிக் கொள்ளுங்கள். இது உங்களின் வாழ்க்கையை முழுவதுமாக அழகாக உணர வைக்கும்.
யதார்த்த வாழ்க்கை அவசியம்
தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து ஒட்டிக்கொண்டு இருக்காதீர்கள். அவ்வப்போது காலார நடந்து செல்லுங்கள், பிடித்த புத்தகத்தை வாசியுங்கள், மனதுக்குப் பிடித்தவர்கள், நண்பர்களுடன் நேரத்தைச் செலவழியுங்கள். இது உங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்குவதோடு மட்டுமல்லாது, மன அழுத்தத்தையும் குறைக்கச் செய்யும்.
கூர்நோக்குதல்
நீங்கள் இருக்கும் இடம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பொருட்களை உற்று கவனியுங்கள். அதன் வடிவம், இட அமைப்பு, நிறம், தன்மை, அதன் பயன்கள், பரவல், பொருளாதாரச் சிறப்பம்சம் உள்ளிட்டவைகளைக் கவனியுங்கள். இது வாழ்வின் அழகியலை உங்களுக்கு உணர்த்தும்.
டிஜிட்டல் தொடர்பு
மனதுக்குப் பிடித்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவ்வப்போது குறுந்தகவல், மின் அஞ்சல் உள்ளிட்டவைகளை அனுப்ப வேண்டும். அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள், உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவதால், நீங்கள் கவலைகளை மறக்கும் சூழல் உருவாகும்.
மன வரைபடம்
உங்களது சிந்தனை மற்றும் கருத்துருக்களின் உதவிகொண்டு மன வரைபடத்தை உருவாக்கவும். இது உங்கள் சிந்தனையின் வெளிப்படைத்தன்மையை உங்களுக்கு உணர்த்தும்.
நேர மேலாண்மை
எது முதலில் செய்ய வேண்டுமோ, அந்தச் செயலுக்கு முன்னுரிமை அளித்து குறிப்பிட்ட நேரத்தில் அதை முடிக்க வேண்டும். ஒரே நேரத்தில், பல செயல்களைச் செய்வதன் மூலம், அமைதியின்மையே ஏற்படும். ஒரு நேரத்தில் ஒரு செயலைச் செய்யப் பழகுவதன் மூலம், உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
சரியான உறக்கம்
தினமும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்வதன் மூலம் சரியான உறக்கம், உங்களுக்கு வசப்படும். இதன்காரணமாக, தெளிவான மனநிலை ஏற்படும் சூழல் உருவாகும்.
முடிவெடுப்பதில் போதிய கவனம்
ஒரு நிகழ்வு குறித்த முடிவை மேற்கொள்ளும் போதுதற்போதைய சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டால், அந்த முடிவுகளின் தன்மை, உங்களை மனதளவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
நிதி தொடர்பான விழிப்புணர்வு
செலவு மற்றும் சேமிப்பு விசயங்களில், போதிய நிதி விழிப்புணர்வை, நாம் மேற்கொள்ளும் பட்சத்தில், அது நிதி குறித்த விசயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வைப்பதோடு, உங்களது நல்வாழ்வைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்கின்றன.
இத்தகையப் பயிற்சிகளைத் திறம்பட மேற்கொண்டு, தெளிவான மனநிலையை அடைந்து, அமைதியானதொரு நல்வாழ்க்கையை வாழ்வீராக….