இரத்த அழுத்த சோதனையின் அடிப்படை இதுதானோ?
உடல் ஆரோக்கிய நிகழ்விற்கு இதயத்துடிப்பின் வீதம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு என ஒவ்வொரு அளவீடும் முக்கியமானதாக உள்ளது. மிதமிஞ்சிய அளவிலான சோதனைகள், உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்துவதாக இருப்பினும், உடல் ஆரோக்கியத்திற்கு, இத்தகைய சோதனைகள், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இரத்த அழுத்த சோதனையானது, இதய ஆரோக்கிய மேம்படுத்தலைக் குறிப்பிடுவதற்கான அளவீடு ஆகும்.
இரத்த அழுத்தம்
இரத்த நாளங்களில் இரத்தம் செலுத்தும் அழுத்தமே இரத்த அழுத்தம் ஆகும். தமனிகளின் சுவர்களுக்கு எதிரான ரத்தத்தின் ஆற்றலை அளவிடுகிறது. இதயமானது, உங்கள் உடலைச் சுற்றி, ரத்தத்தைப் பம்ப் செய்கிறது. இரத்த அழுத்தமானது, சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் எண்களாகக் கணக்கிடப்படுகிறது.
சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம்
சிஸ்டாலிக் அழுத்தம் என்பது, இதயம் துடிக்கும் போது ஏற்படும் அழுத்தம் ஆகும். டயஸ்டாலிக் அழுத்தம் என்பது, இதயம் ஓய்வில் இருக்கும்போது ஏற்படும் அழுத்தம் ஆகும். இவை, உங்கள் ரத்த அழுத்தத்தின் முழுமையான விளக்கத்தை அளிக்கவல்லதாக உள்ளன.
சாதாரண நிலையிலான ரத்த அழுத்தம்
மனிதர்களின் சாதாரண நிலையிலான ரத்த அழுத்தத்தின் அளவு 120/80mmHg ஆகும். இது அவர்களின் உடல் ஆரோக்கியம், வயது, பாலினம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து வேறுபடும்.
இரத்த அழுத்த சோதனை
நீங்கள் உங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க, அதற்கென்று உள்ள பட்டையை, கையில் மாட்டிக் கொள்கிறீர்கள். அந்தப் பட்டையானது, உங்கள் கையை அழுத்தி வீக்கமடையச் செய்யும்போது, உங்கள் உடலில் ரத்த ஓட்டமானது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பின் சிறிதுசிறிதாகப் பட்டையின் பிடி தளரும்போது, ரத்த ஓட்டமானது மீண்டும் துவங்குகிறது. இது தமனிகள் வழியாகப் பாயும் ரத்தத்தை அளவிடுகிறது. இரத்த ஓட்டமானது துவங்கும் மற்றும் நிற்கும் நிகழ்வில் உள்ள எண்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இரத்த அழுத்த சோதனையின் வழிமுறைகள்
இரத்த அழுத்த சோதனைச் செய்துகொள்பவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இருக்கையில் அமைதியான மனநிலையில் அமர்ந்து கொள்ளவும். கால்கள் தரையைத் தொடும்படி இருக்க வேண்டும்.
பின் அந்தப் பிரத்யேகப் பட்டையை, கையின் மேற்பகுதியில் இறுக்கமாகக் கட்ட வேண்டும். பட்டை, இதயத்தின் அருகில் இருக்குமாறுபார்த்துக் கொள்ள வேண்டும்.
இறுக்கமாகக் கட்டப்பட்ட பட்டையானது, உங்கள் கைகளை அழுத்தி வீக்கமடையச் செய்யும்.
அப்போது நீங்கள் ஒரு அழுத்தத்தை உணர்வீர்கள், ஆனால், இதனால் உங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.
அப்போது நிகழும் அழுத்த மாறுபாடுகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் மூலம் கணக்கிடப்பட்டு, சோதனையின் அளவீடுகள் திரையில் தோன்றும்.
இரத்த அழுத்த சோதனைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
இரத்த அழுத்தமானது, உடலுக்கு மிகவும் அவசியமான நிகழ்வாக உள்ளது. இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படும் நிலையை, உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்சன் என்று வரையறுக்கிறோம். இந்த நிலையானது தொடரும்பட்சத்தில், இதயத்தையும், தமனிகளையும் பாதிப்பிற்கு உள்ளாக்கி, கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.
இரத்த அழுத்தம் குறையும்போது, உடல் உறுப்புகளுக்குப் போதிய அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மேலும் வாசிக்க : உடற்பயிற்சி எந்தளவிற்கு முக்கியமானது – அறிவோமா?
ஹைபர்டென்சன் அல்லது உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகள்
குடும்ப வரலாறு
உங்கள் குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பின், உங்களுக்கும் அந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம்
வயது
வயது அதிகரிக்க அதிகரிக்க, உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
வாழ்க்கைமுறை
ஆரோக்கியமற்ற உணவுமுறை, போதிய அளவிலான உடற்பயிற்சியின்மை, அதிக மன அழுத்தம்
மற்ற காரணிகள்
நீரிழிவு பாதிப்பு, சிறுநீரக நோய்கள் இருப்பின், அது இரத்த அழுத்த அளவில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும்.
இரத்த அழுத்த மாறுபாட்டைக் கண்காணித்தல்
இரத்த அழுத்த மாறுபாட்டைக் கண்காணிப்பது முக்கியமான நடவடிக்கை ஆகும். உங்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பின், சுகாதார வல்லுநர் மருந்து முறைகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் உள்ளிட்டவைகளைப் பரிந்துரைச் செய்வார். இரத்த அழுத்த வீதத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், இதய நோய்ப்பாதிப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்புகளின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இயலும்.
இரத்த அழுத்த வீதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக.