வீட்டில் இருந்து வேலைபார்ப்பவர்களின் கவனத்திற்கு…
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைச் செய்யுமாறு பணித்தன.கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையிலும், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும், பல நிறுவனங்கள் இன்றளவும் பாதுகாப்பு நடவடிக்கையாக வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் நடைமுறையைத் தொடர்ந்து வருகின்றன. துவக்கத்தில், வீட்டில் இருந்து வேலைப் பார்ப்பது வசதியானதாகத் தோன்றும். அலுவலகத்திற்குச் செல்வதால் ஏற்படும் மன அழுத்தம் தவிர்க்கப்படுவதுடன், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. இருப்பினும், நாள் முழுவதும் ஒரே இடத்தில் மேசையில் உட்கார்ந்திருப்பது சலிப்பானதாக மட்டுமல்லாமல், சோர்வையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
போதிய உடற்பயிற்சி இல்லாமை
மன இறுக்கப் பாதிப்பு
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைப் பராமரிப்பதில் சிரமம்
குழப்பமான உணவுப் பழக்கம்
மனநிலை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு உள்ளிட்ட உணர்வுகள் ஏற்படுகின்றன.
வீட்டில் இருந்து வேலைச் செய்பவர்களுக்கான, சில வீட்டு வேலைக் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன
தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதைத் தவிர்க்கவும், அவ்வப்போது சிறிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளவும்.
நடப்பது, கைகள் மற்றும் கால்களை நீட்டுவது போன்ற வீட்டிலேயே செய்யத்தக்க வகையிலான நீட்சிப்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
சமையலறையில் சமைக்கும் போதோ அல்லது பாத்திரங்கள் கழுவும்போதோ, அதிகமாக முதுகு வளைவதைத் தவிர்க்கவும். இது உங்கள் உடல் தோரணையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, முதுகுவலி பாதிப்பிற்கும் காரணமாக அமைந்துவிடும்.
தரையைத் துடைக்கும் போதும் , கூட்டி பெருக்கும்போதும், குனிவதற்குப் பதிலாக, நீண்ட கைப்பிடிகள் கொண்ட துடைப்பங்கள் மற்றும் தரைத் துடைப்பான்களைப் பயன்படுத்தி, நேராக நின்று கொண்டு பணிகளை மேற்கொள்ளவும்.
போதிய அளவு உறக்கம் இன்றியமையாதது ஆகும். சரியான அளவிலான உறக்க நிகழ்வானது, உடல் வலிகளைக் குறைப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
அன்றைய நாளின் சிறிய பகுதியை, தியானம் மேற்கொள்வதற்கு ஒதுக்குங்கள். இது எதிர்மறையான நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்த பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.
உடலில் ஏதாவது அசாதாரணமான வலி அல்லது வலி உணர்வு இருப்பின் அதைப் புறந்தள்ளாதீர்கள். அவ்வப்போது உடல் மொழியையும் கேளுங்கள். நாள்பட்ட வலி உணர்வானது, அதிகளவிலான பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.
வீட்டினுள் இருக்கும்போது கூட இடுப்பு பெல்ட், கைத்தடி உள்ளிட்டவைகளைப் பயன்படுத்த தயங்க வேண்டாம். இது முதுகு மற்றும் முழங்கால் பகுதிகளில் ஏற்படும் வலி உணர்வைக் குறைக்கும்.
உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் வழிமுறைகள்
ஆரோக்கியமான உணவுமுறை
வீட்டில் இருந்து வேலைச் செய்வது என்பது, நீங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பியதைச் சாப்பிடலாம் என்றபோதிலும், அது தவறான நடைமுறையாகக் கருதப்படுகிறது. உடலுக்கு நன்மைப் பயக்கும் வகையிலான ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அளவில் இருக்கும் உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலமாகவே, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திட முடியும். கீரை வகைகள், பருப்பு வகைகள், முட்டை, பீன்ஸ், பழ வகைகள் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அருந்துவதில் எப்போதும் சோம்பேறித்தனம் வேண்டாம். அன்றைய நாளின் துவக்கத்தில், சில பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி, அந்த நாளின் முடிவில், அனைத்துப் பாட்டில்களில் உள்ள தண்ணீரும் குடித்து முடித்திருக்க வேண்டும். இதை நாம் அன்றாட வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உடலில் போதிய அளவிலான நீரேற்றம் எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். சிப்ஸ்கள் போன்ற எண்ணெயில் வறுத்த பதார்த்தங்களுக்குப் பதிலாக, ஆரோக்கியமான தின்பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
வீட்டிலேயே உடற்பயிற்சிக் கூடம் அமைப்போம்
கொரோனா பெருந்தொற்று நிகழ்வானது, நம் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், உடற்பயிற்சியின் மூலம் நாம் இழந்த உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும். ஜிம்மிற்குச் செல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை. டிரெட்மில் உள்ளிட்ட உபகரணங்களுடன், வீட்டிலேயே உடற்பயிற்சியை மேற்கொள்ள இயலும். யோகாப் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். ஆன்லைன் வாயிலான உடற்பயிற்சி, ஜூம்பா பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெறலாம். உடல் எப்போதும் ஃபிட் ஆகவும், மனதை ரிலாக்ஸ் ஆகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டிலேயே அலுவலகச் சூழலை உருவாக்குங்கள்
அலுவலகத்தில் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து வேலைகளைச் செய்வோமோ அதுபோன்று, வீட்டிலேயே வேலைப் பார்ப்பவர்கள், அதற்கென்று தனியானதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் வேலைச் செய்தாலும், வீடு முழுவதையும் பணிக்காகப் பயன்படுத்த வேண்டாம். பணிகளைச் சிறந்தமுறையில் மேற்கொள்ளும் பொருட்டு, சரியான அளவிலான மேசை மற்றும் நாற்காலிகளைப் பயன்படுத்தவும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைச் செய்யும்போது, உடல் தோரணையைச் சரியான அளவில் பராமரிப்பது முக்கியம் ஆகும். இல்லையெனில் கழுத்து, முதுகுவலி உள்ளிட்டவற்றால் அவதிப்பட நேரலாம்.
மேலும் வாசிக்க : ஆளுமைத்திறன் குறைபாடுகளைப் புரிந்துகொள்வது எப்படி?
பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையைப் பராமரிக்கவும்
வீட்டில் வேலைச் செய்தாலும், நாள் முழுவதும் தொடர்ந்து வேலைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.அலுவலகத்தில் எவ்வளவு நேரம் வேலைச் செய்வீர்களோ, அதே கால அளவிற்கே, வீட்டிலேயும் வேலைச் செய்ய வேண்டும். வீடு மற்றும் குடும்பத்திற்கும் போதிய அளவிலான நேரம் ஒதுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் போதிய நேரத்தைச் செலவிடுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சேர்ந்து சமைக்கவும். குழந்தைகளுடன் விளையாடி பொழுதை இனிமையாகக் கழிக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்து டிவியில் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழவும்.
சேரில் அமர்ந்தவாறே, கால்களை அவ்வப்போது உயர்த்திக் கொண்டிருக்க வேண்டும். கழுத்து, மணிக்கட்டு உள்ளிட்டவைகள் சீராக இயங்க, அதற்கேற்ற உடற்பயிற்சிகளையும், மார்பு மற்றும் முதுகுப்பகுதிகளுக்கு ஏற்ற சிறு சிறுப் பயிற்சிகளையும் அவ்வப்போது மேற்கொள்வது நல்லது.
வீட்டில் இருந்து வேலைபார்ப்பவர்கள், இத்தகைய நடவடிக்கைகளைக் கவனமாகப் பின்பற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்களாக….