தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறை நன்மைகள்
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறை என்றால் என்ன?
நோயாளிகளின் மருத்துவம் சார்ந்த நிலைகளின் தரவைக் கண்காணிக்கும் நிகழ்விற்கு, டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முறையை, தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு முறை என்று குறிப்பிடுகின்றோம். இந்தத் தரவுகளை, மின்னணு முறையில் மாற்றி அமைத்து. தேவைப்படும்போது தொடர்ச்சியான மதிப்பீடுகளை மேற்கொள்ளச் சுகாதார வல்லுநர்களுக்குப் பேருதவி புரிகிறது.
நாள்பட்ட நோய்கள் மற்றும் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் தற்போதைய நிலையை, இணைய வசதியின் மூலம், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கண்காணித்து, அவர்களுக்கேற்ற சிகிச்சை வழங்க உதவும் முறையான, தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு முறைக்கு, மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறை என்பது, இணையம் வழியாக சுகாதார வல்லுநர்கள் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டு பாதிப்புகளுக்குத் தீர்வு காணும் முறையாகும்.
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறையின் பயன்பாடுகள்
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறையின் மூலம் கண்காணிக்கப்படும் பாதிப்புகள்:
உயர் ரத்த அழுத்தம்
உடல் எடை அதிகரிப்பு மற்றும் குறைவு
இதய நோய்ப் பாதிப்புகள்
நீரிழிவுப் பாதிப்பு
ஆஸ்துமா
நாள்பட்ட பல்மோனரி நோய்ப் பாதிப்பு
உறக்கமின்மை
உள்ளிட்ட பாதிப்புகளை, இணைய வசதியுடன், மருத்துவரின் நேரடித் தொடர்பின்றிக் கண்டறிந்து இப்பாதிப்புகளில் இருந்து நோயாளிகள் நிவாரணம் பெற முடியும்.
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் முன்னணி சாதனங்களாவன
நாடித்துடிப்பைக் கண்டறிய உதவும் ஆக்ஸிமீட்டர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிய உதவும் குளுக்கோ மீட்டர்கள், ரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் மானிட்டர்கள், ஸ்பைரோமீட்டர்கள் உள்ளிட்ட சாதனங்கள், தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறையில் முக்கியப் பங்காற்றுகின்றன.
இதயவியல் துறையில் பயன்படுத்தப்படும் தொலைநிலை நோயாளி கண்காணிப்பு சாதனங்களின் மூலம், உயர் ரத்த அழுத்தம், உடல் எடை மேலாண்மை உள்ளிட்டவைக் கண்காணிக்கப்படுகிறது.
நுரையீரல் சார்ந்த துறையில் பயன்படுத்தப்படும் தொலைநிலை நோயாளி கண்காணிப்பு சாதனங்களின் உதவி கொண்டு ஆஸ்துமா, சுவாசம் தொடர்பான பாதிப்புகளைக் கண்டறியலாம்.
உட்சுரப்பியியல் துறையில் பயன்படுத்தப்படும் தொலைநிலை நோயாளி கண்காணிப்பு சாதனங்களின் மூலம், நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது.
மூச்சுத்திணறல், இதயத்துடிப்பு, கரு வளர்ச்சி, சுவாசம், பார்கின்சன் நோய்ப் பாதிப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும் வகையிலான, தொலைநிலை நோயாளி கண்காணிப்பு சாதனங்களைப் பயன்படுத்த, நோயாளிகளுக்கும் பயிற்சி தேவைப்படுகின்றது.
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு சாதனங்களின் மேம்பட்ட தொழில்நுட்பம் சிக்கல்களைக் கண்டறிந்து தடுக்கும் திறன் கொண்டது. இதனால், இம்முறை இன்றைய தலைமுறையினரிடையே பிரபலமடைந்து வருகிறது.
செயல்படும் விதம்
தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறையானது, அதில் பயன்படுத்தப்படும் கேட்ஜெட்கள் பொறுத்து மாறுபடும் தன்மைக் கொண்டதாக உள்ளது. இந்த முறையில் பயன்படுத்தப்படும் கம்பி இல்லாத சென்சாரின் உதவியுடன் தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன, உடலியல் மார்க்கர்கள் குறிக்கப்படுகின்றன. இந்த முறையின் பயன்பாடுகள், பயனர்களின் தரவைக் கண்காணிக்க மற்றும் அதைப் பகுப்பாய்வு செய்யப் பயனர் இடைமுகத்தை வழங்குகின்றன.
இது நோயாளிகளிடமிருந்துப் பெறப்பட்ட தரவுகளை, அதோடு தொடர்புடைய தளத்தில் சேமிக்கின்றது. இந்தத் தரவுகளை, மருத்துவச் சேவை நிறுவனங்கள் பகுப்பாய்வு நிகழ்விற்கு உட்படுத்துகின்றன.
தொலைநிலை நோயாளிகளின் கண்காணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள்
தொலைநிலை நோயாளிகளின் கண்காணிப்பு முறையில் நோயாளிகளின் தரவுகள் செல்லுலார் முறை மற்றும் புளுடூத் தொழில்நுட்பத்தின் மூலம் சேகரிக்கப்படுகின்றன. செல்லுலார் அடிப்படையிலான தொலைநிலை நோயாளிகளின் கண்காணிப்பு சாதனங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல்போன்களின் நெட்வொர்க்கிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
தொலைநிலை நோயாளிகளின் கண்காணிப்பு முறையில், செல்லுலார் முறையிலான சாதனங்களை இயங்கும் நிறுவனங்கள், முன்னணி மொபைல் நிறுவனங்களுடன் கூட்டு சேர்கின்றன.
புளுடூத் முறையிலான சாதனங்கள், கம்பியில்லா இணைப்புகளின் வழியாக, இணையத்துடன் இணைந்து உள்ள சாதனங்களுக்குத் தரவுகளை அனுப்புகின்றன.
இவ்விரு தொழில்நுட்பங்களும் பாதுகாப்பானவையாகக் கருதப்பட்ட போதிலும், நோயாளிகளின் உடல்பாதிப்புகளைப் பொறுத்தே, மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் தேர்வு அமைகிறது.
நன்மைகள்
தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு முறை என்பது நோயாளிகளின் உடல்நிலையை தொலைவிலிருந்து கண்காணிக்கும் முறையாகும்.
இதன் நன்மைகளாவன
தனிநபர்களின் உடல்நலம் குறித்த விரிவான தகவல்கள்
மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கான விரைவான அணுகுமுறை
உடல்நலத்தரவுகளின் அடிப்படையிலான தாக்கம்.தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு முறையானது, மேம்பட்ட மருத்துவ முறையால் நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த முறையானது, நோயாளிகளுக்கு நிதிரீதியிலான பயன்களை அளிக்கிறது.
மேலும் வாசிக்க : தொலைமருத்துவம் – நன்மைகள் மற்றும் அதன் எதிர்காலம்
நோயாளியின் ஈடுபாட்டை மேம்படுத்துகிறது
தங்களுக்கு ஏற்பட்டு உள்ள மருத்துவப் பிரச்சினைகளை, நோயாளிகள் புரிந்து கொள்ளவும் மற்றும் நிர்வகிக்க, தொலைநிலை நோயாளி கண்காணிப்பு சாதனங்கள் பேருதவி புரிகின்றன.
மேம்பட்ட தொலைநிலை கண்காணிப்பு முறை நோயாளிகளின் தரவுகளை மருத்துவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்குகிறது.
நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு சாதனங்களின் உதவியுடன் எளிதாகக் கண்டறிய முடியும் என்பதால், அதிகமானவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது.
தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம், நோயாளிகளிக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளை உறுதிப்படுத்தி அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள முடியும்.
தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு முறை அமலில் இருந்தபோதிலும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகே அது பிரபலமடையத் துவங்கியது. பின்னர் அதன் அதீதப் பயன்பாட்டின் காரணமாக, சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.