கருவுறுதலையும் விட்டு வைக்கலய்யா மன அழுத்தம்?
மன அழுத்தம் என்பது, மனநிலைச் சார்ந்த உணர்ச்சிகளில் ஏற்படும் தாக்கத்தைக் குறிக்கின்றது. இதனால் நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம்.மன அழுத்த பாதிப்பானது, பெண்களிடையே, இனப்பெருக்கம் சார்ந்த விசயங்களில், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதிகப்படியான மன அழுத்தமானது, கவலை, மனச்சோர்வு, எரிச்சல் உணர்விற்குக் காரணமாக அமைகிறது. இது பெண்களின் உறக்கச் சுழற்சியைச் சீர்குலைப்பதோடு, கவனமின்மைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் ஹார்மோன் சுரப்பில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, உடலில் கடும் விளைவுகளை உண்டாக்கும்.
மன அழுத்த பாதிப்பு
சர்வதேச அளவில், 33 சதவீத அளவிலான மக்கள், தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கிறது.
மன அழுத்த பாதிப்பானது
உடல் நலத்தைப் பாதிப்படையச் செய்வதாக 77 சதவீதம் பேரும்
மனநல ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக, 73 சதவீதம் பேரும்
உறக்கச் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக 48 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர். இதுமட்டுமல்லாது, பொருளாதாரம், பணிச்சூழல், குடும்பப் பொறுப்புகள், உறவுமுறை விவகாரங்கள், பணி நிலைத்தன்மை, தனிப்பட்ட மருத்துவ விவகாரங்கள், அந்தரங்கப் பாதுகாப்பு உள்ளிட்டவைகளிலும், கடும்பாதிப்பை, மன அழுத்த பாதிப்பானது ஏற்படுத்துகின்றன
.
மன அழுத்த பாதிப்பானது, பெண்கள் கர்ப்பம் தரித்தல் நிகழ்வைக் கடினமாக்குகிறது என்பதை, மருத்துவ நிபுணர்களாலேயே உறுதி செய்ய இயலவில்லை. ஆனால், இந்தப் பாதிப்பு கருத்தரித்தலைக் கடினமாக்கும் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கருவுறுதலைப் பாதிக்கும் மன அழுத்த பாதிப்பு
மன அழுத்த பாதிப்பிற்கும், பெண்களிடையே கருவுறாமை நிகழ்விற்கும் இடையேயான உறவு தொடர்பான விவாதம், பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கருவுறாமைப் பாதிப்பு உள்ள பெண்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களுக்கு, அதிக மன அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், மன அழுத்த பாதிப்பானது, மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை.
குழந்தையில்லாதவர்கள் கவலை, மனச்சோர்வு, தனிமை, சுயக்கட்டுப்பாடு இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.தங்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு குறித்து, அவர்கள் வெளியில் யாரிடமும் குறிப்பாக நண்பர்களிடத்திலும் கூடத் தெரிவிப்பதில்லை. மனதிற்குள்ளேயே, இந்தப் பாதிப்பை அவர்கள் பூட்டி வைப்பதினால், கடுமையான உளவியல் பாதிப்பிற்கும் உள்ளாகின்றனர். இதன்காரணமாக, அவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கும் உள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
அறிவியல் பின்னணி
பெண்களின் கர்ப்பம் தரிக்கும் திறனை, மன அழுத்தம் நேரடியாகப் பாதிப்பதாக, ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்த பாதிப்பிற்குக் காரணமான ஆல்பா அமைலேஸ் நொதியைத் தன்னகத்தே கொண்ட பெண்கள், மற்ற பெண்களைவிட, கர்ப்பம் தரிக்க 29 சதவீத அளவிற்குக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
கருவுறாமைப் பாதிப்பிற்கு உள்ளான பெண்கள், அதிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்பது பற்றிச் சிந்திக்காமல், புகைப் பிடித்தல், மதுப்பழக்கம் உள்ளிட்ட தீயப் பழக்கங்களை நாடிச் செல்கின்றனர். ஏற்கனவே, கருவுறாமையால் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு, இந்தக் கெட்ட பழக்க வழக்கங்கள், மலட்டுத்தன்மைப் பிரச்சினை ஏற்படவும் காரணமாக அமைகின்றன.
அண்டவிடுப்பு, விந்து குறைபாடு, பெஃல்லோபியன் குழாய் அடைப்பு போன்ற காரணங்களால் கருத்தரிப்பு நிகழாவிட்டாலும், காலப்போக்கில் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு
மன அழுத்தம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியைச் சீர்குலைக்கிறது. இது கருப்பையின் முட்டை வெளியீட்டைப் பாதித்து, கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கிறது.
மன அழுத்த பாதிப்பானது, பெண்களின் உடலில் அசாதாரணமாக நிகழும் ஹார்மோன் சுரத்தலில் ஏற்படும் வேறுபாடுகளுக்கும் காரணமாக அமைகின்றது. இந்த ஹார்மோன் வேறுபாடானது, மலட்டுத்தன்மைக் குறைபாடு ஏற்படவும் வழிவகுக்கிறது. இதன்காரணமாக, பாலிசிஸ்டிக் ஓவாரியன் சிண்ட்ரோம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கர்ப்ப சிக்கல்களை ஏற்படுத்துகின்றன
மன அழுத்த பாதிப்பானது, பெண்களிடையே குறைப்பிரசவம், பிறப்பு விகிதம் குறைவு, ப்ரீகிளாம்ப்சியா உள்ளிட்ட கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களின் விகிதத்தை அதிகரிக்கின்றன.உடல்ரீதியான பாதிப்புகள் மட்டுமல்லாது, மனநலம் சார்ந்த எதிர்மறையான விளைவுகளுக்கும் காரணமாக அமைகின்றன. பெண்கள், தங்களது கர்ப்பக் காலத்தில் மன அழுத்தமாக இருப்பதன் மூலம், குழந்தைப் பேறுக்குப் பிறகு, மனச்சோர்விற்கான வாய்ப்பை அதிகரித்துவிடும். இதன்காரணமாக, தாய் -சேய் பிணைப்பானது பாதிப்பிற்கு உள்ளாகின்றது.
மேலும் வாசிக்க : பணி – வாழ்க்கைச் சமநிலையில் மன அழுத்த மேலாண்மை
கர்ப்பக் காலத்தில் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் முறைகள்
பெண்கள், தங்களது கர்ப்பக் காலத்தில் மட்டுமல்லாது, தங்களுக்கு எந்த நேரத்தில் மன அழுத்த பாதிப்பு தோன்றினாலும், உடனடியாக மனநல மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடப்பது நன்மைபயக்கும். கர்ப்ப காலத்தில் நிகழும்பட்சத்தில், மகளிர் நல மருத்துவர்கள், மகப்பேறியல் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு அதன்படி நடப்பது நல்லது.
உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையிலான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவும்.
சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றவும்.
உடலின் நீரேற்ற நிலையைப் பேணிக்காக்கவும்.
தினமும் இரவில் போதிய அளவிற்கு உறங்கவும்.
மனம் அமைதி பெற யோகா மற்றும் உடற்பயிற்சிகளைத் தவறாது மேற்கொள்ளவும்.
உங்களுக்குத் தேவையில்லாத நடவடிக்கைகளில் இருந்து விலகி இருங்கள்
குழந்தைப் பிறப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை, நிபுணர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒத்த எண்ணம் கொண்டவர்களோடு பழகுங்கள், உங்களது மனஓட்டத்தை அவர்களுடன் பகிருங்கள். இதன்மூலம், உங்கள் சந்தேகங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
இக்கட்டான தருணங்களில் உங்களுக்கு யார் உதவுவார்கள் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற ஒரு குழுவை உருவாக்க்கிக் கொள்ளுங்கள்.
மனச்சோர்வு, பதட்ட உணர்வு இருப்பின், உடனடியாக அதற்குரியச் சிகிச்சைகளைப் பெற வேண்டும்.
மன அழுத்த பாதிப்பிற்குக் காரணமானவைகளைக் கண்டறிந்து, அதிலிருந்து கூடுமானவரை விலகி இருங்கள்.
மன அழுத்த பாதிப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம், கருவுறுதல் நிகழ்வை, எவ்விதச் சிரமமும் இன்றிச் சிறப்பானதொரு நிகழ்வாக மாற்றி அமைக்க முடியும்.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, மருத்துவரின் ஆலோசனை ஒன்றே சரியான தீர்வாக அமைய முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.