50 வயதிலும் இளமையான சருமத்தை வழங்கும் உணவுகள்
வயது முதிர்வு என்பது எல்லா உயிரினங்களிலும் காணப்படும் இயற்கையான நடைமுறை ஆகும். இந்த இயற்கையான நிகழ்வை, நம்மால் தடுக்க முடியாது என்றபோதிலும், சில வகையான உணவுகளை உண்பதன் மூலம், சிறிதுகாலத்திற்குத் தள்ளிப்போடலாம்.
உடலில் உள்ள உறுப்புகளில் அதிகம் சிலாகிக்கப்படாத உறுப்பாக, தோல் விளங்கி வருகிறது. உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளை, தோல் தான் முதலில் வெளிப்படுத்துகின்றது. ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி ஆக்சிடண்ட்கள், வைட்டமின்கள், நுண் ஊட்டச்சத்துகள் மற்றும் நீர் நிறைந்த உணவுகளை உண்பது தோலின் மினுமினுப்பை நீண்டகாலம் பாதுகாக்கும்.
தோல் பகுதியின் முதிர்ச்சி என்பது உடலின் உள்பகுதியில் இருந்து துவங்குவதால், நீங்கள் உங்கள் உணவுமுறையில் உரிய கவனம் செலுத்த் வேண்டியது அவசியமாகும். தோல் முதிர்ச்சி நிகழ்வைத் தடுக்க, சீரான உணவுமுறை இன்றியமையாததாக உள்ளது. சூரியக் கதிர்கள் படுதல் உள்ளிட்ட வாழ்க்கைமுறைக் காரணிகளும், தோல் பாதுகாப்பிற்கு முக்கியப்பங்கு வகிக்கின்றன. வைட்டமின்கள், மினரல்கள் அதிகம் கொண்ட உணவு வகைகளானது, தோல் முதிர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.
வயது முதிர்வைத் தடுக்கும் உணவுகளில் வைட்டமின்கள், எலாஜிக் அமிலம், இயற்கைக் கொலாஜன் பூஸ்டர்கள் உள்ளன. கொலாஜன் தோலின் மைய அடுக்கில் இருந்து மினுமினுப்பைத் தருகிறது.வயது அதிகரிக்க, அதிகரிக்க, தோல் பகுதியில் உள்ள கொலாஜனின் அளவும் குறைகிறது. ஆரோக்கியமான, சரிவிகித உணவுமுறையானது, தோலை இயற்கையாகவே, பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க உதவுகிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவு வகைகள், தோல் முதிர்ச்சி அடைவதைத் தடுக்க உதவுகின்றன.
ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் கொண்ட உணவு வகைகள், தோல் பகுதியை, சூரியக்கதிர்களின் மூலம் ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதற்கு மட்டுமல்லாது, சுருக்கங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கிறது.
கிரீன் டீயானது, தோலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கச் செய்து, முதிர்ச்சியின் அறிகுறிகளைக் குறைக்கின்றது.
சர்க்கரை அதிகம் உட்கொள்ளலைக் குறைத்துக் கொள்வதன் மூலம், தோல் முதிர்ச்சிக்குக் காரணமாக விளங்கும் மேம்பட்ட கிளைகேசன் பொருட்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும்.
ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடைய சால்மோன் மீன்களை அதிகம் உட்கொள்வதன் மூலம், இளமையான சருமம் கிடைக்கப் பெறுவீர்கள்.
அவகேடோக்கள்
அவகேடோ, மிகவும் தித்திப்பான பழங்கள் மட்டுமல்லாது, அதிக ஊட்டச்சத்துகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தோலின் மினுமினுப்பு மற்றும் வறண்ட சருமப் பாதிப்பைத் தடுக்கும் வகையிலான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகள், இதில் அதிகம் உள்ளன. நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. அவகேடோ பழங்களில் உள்ள லுயூட்டின் மற்றும் ஜியாஜாந்தின், தோல் பகுதியை, புறஊதாக்கதிர்களின் பாதிப்பில் இருந்து காக்க உதவுகிறது. அவகேடோவில் உள்ள வைட்டமின் A, B, C, E மற்றும் K, தோலைப் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.
புரோக்கோலி
புரோக்கோலி, வயது முதிர்வு மற்றும் அழற்சியைத் தடுக்கவல்லது ஆகும். இதில் உள்ள வைட்டமின் C மற்றும் K, தோலில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது. கொலாஜன் உற்பத்திக்கு, வைட்டமின் C முக்கியப் பங்காற்றுகிறது. புரோக்கோலியைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம். சாலட் அல்லது சூப் வடிவிலும் இதைச் சாப்பிடலாம். புரோக்கோலியில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது.
கொட்டைகள்
பாதாம், வால்நட் போன்ற கொட்டை உணவு வகைகளில், புரதங்கள், வைட்டமின் E, ஆன்டி ஆக்சிடண்ட்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், மினரல்கள் அதிகளவில் உள்ளன. இவ்வகைக் கொட்டைகள், சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்களின் ஆபத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. வைட்டமின் E, சருமத்திற்கு உரிய வலிமையை வழங்கி, அதைப் பளபளப்பாக மின்ன செய்கிறது.
வால்நட் கொட்டையில் அதிகளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்களும், ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. வால்நட் கொட்டைகள், உணவுகளின் செரிமான நிகழ்விலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. தோலின் ஆரோக்கியம் என்பது, உடலில் உள்ள நுன்ணுயிரிகளைப் பொறுத்தே அமைகின்றது. குடல் பகுதியில் உள்ள நன்மைப் பயக்கும் நுண்ணியிரிகளானது, உடலின் வெப்பநிலைக் கட்டுப்பாடு, திரவத்தைத் தக்கவைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளின் மூலம், தோல் பராமரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
டார்க் சாக்லேட்கள்
அனைத்துத் தரப்பினராலும் விரும்பி உண்ணப்படும் சாக்லேட்களில் பெர்ரி வகைப் பழங்களை விட அதிக ஆண்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன.சாக்லேட் வகைகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, வயது முதிர்வு நிகழ்வானது தாமதமாக நடைபெறுவதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டார்க் சாக்லேட்டின் கோகோ பிளேவனால்கள் புறஊதாக்கதிர்களிலிருந்து தோலைப் பாதுகாக்கின்றன.சருமத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, அதன் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, மினுமினுப்பாக இருக்க உதவுகிறது.
டார்க் சாக்லேட்களில், 70 சதவீத அளவிற்குக் கோக்கோ உள்ளது. இதுமட்டுமல்லாது, மெக்னீசியமும் அதிகளவில் உள்ளது. மெக்னீசியம், மன அழுத்த அளவைக் குறைத்து, சுகமான உறக்கத்திற்கு வழிவகுப்பதன் மூலம், தோல் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.
டார்க் சாக்லேட் பிரியர்கள், அதில் உள்ள சர்க்கரையின் அளவையும் கவனத்தில் கொள்வது அவசியம் ஆகும். அதிகப்படியான சர்க்கரையானது, கொலாஜனின் செயல்பாட்டைத் தடுத்து, தோல் சார்ந்த பிரச்சினைகள் வரக் காரணமாக அமைகின்றன.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
தோல் ஆரோக்கியத்திற்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பங்கு அளப்பரியது ஆகும். இதில் உள்ள வைட்டமின் A, தோலில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதோடு மட்டுமல்லாது, சேதமடைந்த கொலாஜன்களைப் புதுப்பிக்க உதவுகிறது.
தக்காளி
தக்காளி மற்றும் தக்காளிச் சாற்றில் லைகோபீன் அதிகளவு உள்ளது. இயற்கைக் கரோட்டினாய்டான லைகோபீன், சூரியக்கதிர்களிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களின் பாதிப்புகளில் இருந்து தோலைப் பாதுகாக்கிறது.
மீன் வகைகள்
சால்மோன், டுனா, மேக்கெரல் உள்ளிட்ட மீன் வகைகளில் அதிகம் உள்ள ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களானது, தோலின் பளபளப்பிற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது. இந்த வகை மீன்களில் வைட்டமின் E மற்றும் துத்தநாகம் அதிகளவில் உள்ளது. இவை, அரிப்பு, பரு, காயங்கள் உள்ளிட்டவைகளைக் குணப்படுத்த உதவுகிறது.
மாதுளை
மாதுளம்பழத்தில் வயது முதிர்வைத் தாமதப்படுத்தும் காரணிகள் இருப்பதால், அது உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் வாசிக்க : உறக்க நிலையை மேம்படுத்த உதவும் சுற்றுப்புற ஒலிகள்
குறைவாகச் சாப்பிட வேண்டிய உணவுகள்
அதிகளவிலான கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவு வகைகளானது, சருமத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடுகின்றன. இதன்காரணமாக, தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு, இளம்வயதிலேயே முதுமைத்தன்மைத் தோன்றிவிடுகிறது. நமது உடலில் கல்லீரல் ஒழுங்காகச் செயல்படும்பட்சத்தில், கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படும். அவ்வாறு வெளியேற்றப்படாத கழிவுகள், தோலுக்கு மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றன.
வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு கொண்ட உணவுகள், இறைச்சிகள் உள்ளிட்டவைகளை அளவுடன் சாப்பிட்டால், பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.
மேற்கூறிய வழிமுறைகளைக் கையாண்டு, வயது முதிர்வைத் தாமதப்படுத்தி, என்றும் மார்க்கண்டேயனாக வாழ்வோமாக…