தனிப்பட்ட ஆரோக்கியத்தில் AI நுட்பத்தின் நன்மைகள்
மருத்துவத் துறையானது, சமீபகாலமாக,AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ML எனப்படும் இயந்திரக் கற்றல் முறைகளின் அதீதப் பயன்பாட்டினால், பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை அடைந்து வருகிறது. ஒரு புதிய மருந்தை உருவாக்க, 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவுகள் மட்டுமல்லாது, பல ஆண்டுகள் காத்திருப்பது அவசியம் ஆகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் முறைகள் குறைந்த செலவில் மற்றும் குறுகிய காலத்தில் புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க உதவுகின்றன.நோயறிதல், மருந்து மேம்பாடு, மருத்துவப் பரிசோதனைகள், சுகாதாரப் பகுப்பாய்வு நிகழ்வுகளில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகமாக உள்ளது.
நோயாளியின் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு
மருத்துவத் துறையில், செயற்கை நுண்ணறிவானது, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அபாயகரமான நோய்ப்பாதிப்புகளைக் கண்டறிவதில் இருந்து, மக்களை, அதன் நோய்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை நிர்வகிக்க உதவுகிறது.
புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிதல்.
இதய மாற்று நிராகரிப்பு விகிதத்தை முன்கூட்டியே அறிய உதவுகிறது.
உறக்கம், இதயத்துடிப்பு, சுவாச முறைகளைக் கண்டறிவதன் மூலம் வாழ்க்கை முறை மற்றும் மருத்துவக் கண்காணிப்பை அறியப் பயன்படுகிறது.
புதிய வகை மருந்துகளின் கண்டுபிடிப்புகள்
மருத்துவப் பரிசோதனைகள்
தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகள். மருத்துவச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பல்வேறு நோக்கங்களுக்காக, செயற்கை நுண்ணறிவு முறையைப் பின்பற்றுகின்றன.
நோயறிதலில் செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் என்ன?
தோல், கல்லீரல் மற்றும் இதய நோய்ப் பாதிப்புகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் பேருதவி புரிகின்றன. இந்த நுட்பங்கள், நோய்ப்பாதிப்புகளைத் துவக்க நிலையிலேயே கண்டறிந்து, துல்லியமான நோயறிதலை நடத்தி, உரிய நேரத்தில் சரியான சிகிச்சையை வழங்க உதவுகிறது. நோயறிதலில் செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
மேம்பட்ட துல்லியம்
நோய்பாதிப்புகள் குறித்த மருத்துவத் தரவுகளை, செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைக் கையாண்டு, பகுப்பாய்வு செய்வதன் மூலம், நோயை, துவக்க நிலையிலேயே கண்டறிய இயலும். இதன்மூலமாக, நோய்க்கண்டறிதலில் ஏற்படும் பிழைகளின் அளவும் குறைகின்றது. செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், அதிக அளவிலான மருத்துவத் தரவுகளை, குறித்த நேரத்தில் பகுப்பாய்வு மேற்கொள்ள நிபுணர்களுக்கு உதவுகிறது. இதன்மூலம், பகுப்பாய்வின் துல்லியமும் மேம்படுகிறது.
சோதனை முடிவுகளை விரைவாகக் கண்டறிதல்
நோயறிதல் நிகழ்வில். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சோதனைகளைக் குறுகிய காலத்தில் பகுப்பாய்வு நிகழ்த்தி, சோதனை முடிவுகளை விரைவாக வழங்க உதவுகிறது. இது தனிநபர்களின் மரபணு, வளர்சிதை மாற்றம், உயிர்த் தகவலியல் தரவுகளை, குறைந்த நேரத்தில் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. இது செலவுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாது, சரியான சிகிச்சையை, உரிய நேரத்தில் மேற்கொள்ள உதவுகிறது.
தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவ முறைகள்
தனிநபர்களின் மரபணு, உடலியல் மற்றும் நடத்தை நிலைமைகளுக்கு ஏற்ப நோய்ப்பாதிப்புகள் மற்றும் அதன் சிகிச்சைகள் மாறுபடுகின்றன. எனவே, அனைத்து மக்களுக்கும், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகளை வழங்குவது முக்கியம் ஆகும். மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடானது, நோயாளிகளுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மருந்துத் திட்டங்களை வழங்க உதவுகிறது.
பகுப்பாய்வில் முன்கணிப்பு
நோயாளிகளின் மரபணு நிலைமைகள், மருத்துவப் பதிவுகள், அவர்களது வாழ்க்கை முறை அடிப்படையில் சாத்தியமான நோய்ப்பாதிப்புகளைக் கணிக்கச் செயற்கை நுண்ணறிவானது உதவுகிறது. இது நோயாளிகளின் நிகழ்நேர எலெக்ட்ரானிக் முறையிலான மருத்துவப் பதிவுகளைப் பகுப்பாய்வு செய்து, சிகிச்சையின் முடிவுகளைத் துல்லியமாகக் கணிக்கிறது.
மருத்துவ வழிகாட்டல்கள்
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள், நோய்களுக்குப் பொருத்தமான சிகிச்சைகளைப் பரிந்துரைக்க, செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மருத்துவத் துறையில் சில முக்கிய AI செயல்பாடுகள்
நோயறிதல் மற்றும் இமேஜிங்
கதிர்வீச்சு புற்றுநோய் இயலில், நோயறிதல் இமேஜிங் நிகழ்விற்கு, செயற்கை நுண்ணறிவானது பரவலாகப் பயன்படுகிறது. நோய்ப்பாதிப்புகளை விரைவாகவும் மற்றும் துல்லியமாகவும் கண்டறிய உதவும் MRI ஸ்கேன் சோதனை மற்றும் X-ray சோதனைகளின் மூலம் கிடைக்கும் படங்களைப் பகுப்பாய்வு செய்ய, மருத்துவ நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவு நுட்பத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம், கண்ணுக்குப் புலப்படாத அம்சங்களும் எளிதில் கண்டறியும் வாய்ப்பு ஏற்படுகிறது.
வாழ்க்கைமுறை மேலாண்மை மற்றும் கண்காணிப்பு முறைகள்
உறக்க நிகழ்வுகள், உடலியல் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளைப் பகுப்பாய்வு செய்ய, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாதனங்கள் பேருதவி புரிகின்றன,. நல்வாழ்வு, ஆரோக்கிய மேம்பாடு உள்ளிட்டவைத் தொடர்பான முழுமையான பகுப்பாய்வை, இத்தகையச் சாதனங்கள் வழங்குகின்றன. நீரிழிவுப் பாதிப்பிற்கு நீண்ட நெடிய சிகிச்சைமுறையானது தேவைப்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாதனங்கள் பேருதவி புரிகின்றன.
புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு
மருத்துவத் துறையில், புதிய மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்களும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. இது மருந்து ஆராய்ச்சியில், புதிய மருந்து தொடர்பான சூத்திரங்கள் மற்றும் அதன் வடிவமைப்புகளைக் கண்டறிய உதவுகிறது.
மருத்துவப் பரிசோதனைகள்
செயற்கை நுண்ணறிவானது, மருத்துவப் பரிசோதனைகளிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. நோயாளிகளை, அவர்களின் மருத்துவப் பதிவேட்டின் அடிப்படையிலான சோதனைகளுக்குப் பரிந்துரைச் செய்கின்றது. சோதனைகளின் இறுதியில் கிடைக்கும் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்யவும், செயற்கை நுண்ணறிவானது உதவுகிறது.
சவால்கள் மற்றும் வரம்புகள்
மருத்துவத் துறையில், செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும்போதிலும், அதற்கென்று குறிப்பிட்ட அளவிலான வரம்புகள் மற்றும் சவால்கள் இருக்கவே செய்கின்றன.
தரவுகளின் தனியுரிமை
நோயாளிகள் மற்றும் பயனர்களின் உடல்நலம் சார்ந்த தரவுகள் மற்றும் மருத்துவப் பதிவுகள், அது அவர்களின் தனிப்பட்டதரவுகளாகக் கருதப்படுகின்றன. இதற்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமாகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் முறைகள் பெரும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய உதவுகின்றன. ஆனால், தரவுகள் இல்லாதபோது நோயறிதல் கடினமாகிறது.இந்தத் தரவுகள் பாதுகாப்பு நிகழ்வில். முன்னணி நிறுவனங்கள், கடும் சவாலைச் சந்தித்து வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள தரவு பாதுகாப்புச் சட்டங்கள், தரவுகளைக் கையாளும் நிறுவனங்கள் மீது கடுமையான பொறுப்புகளைச் சுமத்துகின்றன.
நிச்சயமற்ற தன்மை
நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய செயற்கை நுண்ணறிவு நுட்பமானது சிறப்பாகச் செயல்படும்போதிலும், இதன் துல்லியத் தன்மைக் குறித்த ஐயம், பெரும்பாலானோரிடம் இருக்கத்தான் செய்கிறது.
போதிய பயிற்சி இன்மை
மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டின் மிகப்பெரிய சவாலானது, போதிய தொழில்நுட்பப் பயிற்சி இல்லாதது ஆகும். குறிப்பிட்ட பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டைப் புரிந்துகொள்வது சிக்கலானது. இதற்குப் போதிய பயிற்சி பெறுவது சவாலாக உள்ளது.
மேலும் வாசிக்க : வயதுமூப்பு காலத்தில் உடற்பயிற்சிக்கான நன்மைகள்
போதிய கட்டமைப்பு இல்லாமை
மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவைச் செயல்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்பான பற்றாக்குறைத் தொடர்ந்து நிலவி வருகிறது. இது மருத்துவ நிபுணர்கள், பயிற்சியாளர்கள், நோயாளிகளுக்கு இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் திறனை மேம்படுத்த ஒருங்கிணைக்கச் சரியான கட்டமைப்பு இருக்க வேண்டும்.
நெறிமுறை அடிப்படையிலான சவால்கள்
மருத்துவத் துறையில். செயற்கை நுண்ணறிவின் பயன்பாடானது, பல்வேறு நெறிமுறைச் சவால்களை உள்ளடக்கியவாறு உள்ளது. இத்துறையில், பொறுப்புணர்வு என்பது மிகவும் இன்றியமையாததாகும். நாம் கொடுக்கும் தரவுகளைப் புரிந்துகொண்டு செயற்கை நுண்ணறிவின் அல்காரிதம் எவ்வாறு முடிவுகளை வழங்குகின்றது என்பது புரியாத புதிராகவே உள்ளது. நோயறிதல் நிகழ்வில், ஏதேனும் தவறுகள் நிகழும்பட்சத்தில், அதன்மீது குற்றம் சுமத்துவது என்பது நடைமுறைக்கு இயலாத ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு என்று நிலையான நெறிமுறைக் கட்டமைப்பு இல்லாத நிலையானது, பொறுப்புக்கூறலை வரையறுப்பதைக் கடினமான நிகழ்வாக்குகின்றது.
மருத்துவத் துறை மட்டுமல்லாது, இன்றைய நவீன உலகில் அனைத்துத் துறைகளிலும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுட்பமானது, வியாபித்து உள்ளது. இதன் பயன்பாடுகள், அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.
AI நுட்பத்தின் பங்களிப்பு அபரிமிதமான அளவிற்கு உள்ளபோதிலும், இதில் உள்ள சவால்கள் மற்றும் வரம்புகளை முழுமையாகப் புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே, இதன்மூலம், நமக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை…