மன அழுத்த நிர்வாகத்தில் மனந்தெளிநிலையின் நன்மைகள்
இன்றைய இயந்திரக் கதியிலான நவீன வாழ்க்கைமுறையில், மன அழுத்த நிகழ்வானது நீங்கா இடம் பிடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பணிச்சூழல், குடும்பம், சமூகம் உள்ளிட்ட விவகாரங்களில், நம்மீது ஏற்படும் எதிர்பார்ப்புகளே, மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. நாள்பட்ட மன அழுத்தமானது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. தெளிவான மனநிலை அல்லது மனந்தெளிநிலை ஒன்றே, இந்த மன அழுத்த பாதிப்பிற்குச் சிறந்த நிவாரணியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன அழுத்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்
மன அழுத்தம் என்பது சவாலான சூழ்நிலைகளுக்கு இயற்கை அளிக்கும் பதில் நடவடிக்கை ஆகும். இது சிறிய அளவினதாக இருக்கும் நிலையில், நன்மைப் பயப்பனவாக உள்ளன. மன அழுத்தமானது அதிகரிக்கும்போதோ அல்லது நாள்பட்ட மன அழுத்தமாக மாறும்போதோ, அது இதய நோய்ப் பாதிப்பு, கவலை, மனச்சோர்வு உள்ளிட்ட உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன.
மன அழுத்தத்தின் விளைவுகள்
மன அழுத்தம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகளில் முதன்மை இடத்தில் உள்ளது. நாள்பட்ட மன அழுத்தமானது, நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்தி, பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் வரக் காரணமாக அமைகின்றன. இதயத்துடிப்பின் வீதம் அதிகரித்தல், எரிச்சல் உணர்வு, ஈடுபாடு குறைதல், முக்கிய நிகழ்வுகளின் போது கவனக்குறைவு ஏற்படுதல் உள்ளிட்டவை, மன அழுத்தத்தின் விளைவுகளாக வரையறுக்கப்படுகின்றன.
உடலும், மனமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகும். மன அழுத்த நிகழ்வானது, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்பட்சத்தில், மனம் சார்ந்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றது. தெளிவான மனநிலை, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் அணுகுமுறையாக விளங்குகிறது.
தெளிவான மனநிலை என்றால் என்ன?
மனந்தெளிநிலை அல்லது தெளிவான மனநிலை என்பது, பண்டையக்கால புத்த மரபுகளில் காணப்படும் மன அமைதி சார்ந்த நடைமுறையாகும். இந்த நடைமுறையானது, மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில், உரிய அங்கீகாரத்தைப் பெற்று உள்ளது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமாக, ஒரு செயலில் ஈடுபடுதல், அதன் முடிவுகளை, எவ்வித மாற்றத்திற்கும் உட்படுத்தாமல், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதாகும்.
மனந்தெளிநிலைக்கான நுட்பங்கள்
சுவாசம் தொடர்பான விழிப்புணர்வு
இந்த நுட்பமானது மிகவும் எளிமையானது மட்டுமல்லாது, அதிகப் பயன்களைத் தரவல்லது ஆகும். இது உங்கள் சுவாச நிகழ்வில் கவனத்தைச் செலுத்துகின்றது. உங்கள் மனம் தேவையில்லாமல் அலைபாயும் போது, சுவாச நிகழ்வின் உள்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசத்தின் மீது கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் மனம் அமைதி அடைவதை உணர்வீர்கள்.
மனரீதியிலான ஸ்கேன்
இந்த நுட்பம் உங்கள் உடலின் பதட்டமான பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. தலை முதல் கால் வரை மனரீதியாக ஸ்கேன் செய்வதன் மூலம், அசவுகரியமான உணர்வுகளைக் கண்டறியலாம்.இதன்மூலம், உடல் உணர்வுகள் குறித்த விழிப்புணர்வானது அதிகரிப்பதனால், மன அழுத்தம் அடையாளம் காணப்பட்டு, அதிலிருந்து விடுபட இயலும்.
தியானம்
மனந்தெளிநிலைத் தியான நுட்பமானது, ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்த நிலையில், உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை, எதனுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளாமல், அமைதியான மனநிலையில் இருப்பதாகும். இது மனதை வெறுமையாக்குதல் என்று பொருள் கொள்ளக்கூடாது. அதற்குப்பதிலாக, வானத்தில் கடந்து செல்லும் மேகங்களாக, உங்கள் எண்ணங்களை உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரசித்து ருசித்துச் சாப்பிடுதல்
உணவின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து ருசித்துச் சாப்பிடுவதன் மூலம், அதன் சுவை, வாசனை உள்ளிட்ட காரணிகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்த இயலும். மெதுவாகச் சாப்பிடுவதனால், உணவை முழுமையாக அனுபவிக்க ஊக்குவிக்கிறது. இதனால், உணவுடனான ஆரோக்கியமான உறவு மேம்படுகிறது.
மனந்தெளிநிலையின் நன்மைகள்
மனந்தெளிநிலையை, நாம் அதன் நன்மைகளுக்காக மட்டும் தேர்ந்தெடுக்காமல், அதை நடைமுறைப்படுத்துவதன் மூலமே, நாம் உரிய பலனை அடைய முடியும். நம்மைச் சுற்றி உள்ள விசயங்களை, நம் மனம் கவனிக்கத் துவங்குவதன் மூலம், செயல்திறனானது மேம்படும், மேற்கொள்ளும் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இதன்மூலமாக, மன அழுத்தமானது குறையும்.
மேலும் வாசிக்க : ஃபிட்னெஸ் டிராக்கர்களினால் இவ்வளவு நன்மைகளா?
திறந்த மனதுடன் இருத்தல்
எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்ற விழிப்புணர்வுடன் இருப்பது நல்ல அணுகுமுறையாகவே கருதப்படுகிறது. இருந்தபோதிலும், நாம் எந்தளவிற்கு உன்னிப்பாகக் கவனித்துத் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் கூட, எல்லா விசயங்களும் எப்போதும் நாம் திட்டமிட்டது போன்று நடப்பதில்லை. இத்தகைய தருணங்களில். நாம் திறந்த மனதுடன் இருக்கும்போது, சகிப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்வதுடன், எதிர்மறையான சிந்தனைகளையும் குறைக்கிறது.
அனுபவங்களுடன் புதிய உறவுகள்
தற்போதைய நிலையில் கவனமாக இருப்பதால், சுற்றுச்சூழலை நன்கு உணர முடியும்.நம் மனதில் அதிகப்படியான எண்ணங்கள், உணர்வுகள் உள்ளிட்டவை எழும்போது, அதனை அடையாளம் காண முடிகிறது. இதன்காரணமாக, சமாளிக்கும் திறன் அதிகரிக்கிறது. இதனால், மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.
வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது
மனந்தெளி நிலையானது மனதிற்கு ஏற்படும் வலி உணர்வைக் குறைக்க மட்டுமல்லாது, மக்களின் உளவியல் சார்ந்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது. வலியின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்வதால், நாள்பட்ட வலிகள் என்றபோதிலும், குறைவான வலி உணர்வையே வழங்குகின்றன.
மனச்சோர்வு மற்றும் கவலையைக் குறைக்கிறது
நாம் இருக்கும் நிலையை, முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம், சில அறிகுறிகளைக் குறைப்பதன் மூலம், கவலை மற்றும் மனச்சோர்வின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது.
மனந்தெளிநிலையின் நன்மைகளைக் கவனமாகப் பின்பற்றி, மன அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…