ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயலிகளின் நன்மைகள்
மனிதனின் புலனுறுப்புகளில் ஒன்றாக மொபைல் போன் மாறிவிட்டது என்றே நாம் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு, மக்களின் வாழ்க்கையில், மொபைல் போன் நீக்கமற நிறைந்துவிட்டது. உலக அளவில் 83 சதவீதப் பேரிடம், ஸ்மார்ட்போன்கள் உள்ளதாக, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில் தெரியவந்து உள்ளது. இந்த நவீன உலகில், ஸ்மார்ட் போன்கள் தொலைதொடர்பு வசதிக்கு மட்டுமல்லாமல், உடல்நல ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் பயன்படுகின்றன.
உடல்நல ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் வகையிலான செயலிகளை ஸ்மார்ட்போன்களில் நிறுவுவதால், நமது உடல்நலத்தின் மீது நாம் எப்போதும் அதிக அக்கறையுடன் இருக்க இயலும்.சந்தையில் தற்போதைய அளவில் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் டிஜிட்டல் முறையில் தீர்வினை வழங்கவல்லச் சிகிச்சை முறைகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
கொரொனா பெருந்தொற்றுக் காலத்தில், இந்தச் செயல்களின் பயன்பாடு, மிக அபரிமிதமான அளவிற்கு அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும். சில நாடுகளில், மருத்துவ செயலிகளின் பயன்பாட்டு வளர்ச்சி 135 சதவீதம் என்ற இமாலய அளவை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. வயது, பாலினம் வித்தியாசமின்றி, அனைத்துத் தரப்பினரும் தங்களது உடல்நிலையின் மீது அதிக அக்கறைக் காட்டினர். தொலைமருத்துவம் குறித்த தெளிவை, 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பெற்றிருந்தனர்.
மருத்துவ நடைமுறைகளுக்குச் செயலிகள் உகந்ததா?
ஸ்மார்ட்போனில் நிறுவப்படும் ஆரோக்கியம் சார்ந்தச் செயலிகள், இ-ஹெல்த் சேவையின் ஒருபகுதியாக விளங்குகிறது. இந்தச் செயலிகளானது ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், கணினிகள் மற்றும் அணியக்கூடிய சாதனங்களில் நிறுவப்படும் மென்பொருள் தொகுப்பாக உள்ளது.
தொலைமருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுப்புகளானது, தொலைதூரத்தில் உள்ள நோயாளியின் மருத்துவத் தரவுகளைச் சேகரித்து, நோயாளியையும், மருத்துவரையும் வாரத்தின் எல்லா நாட்களிலும், 24 மணிநேரமும் தொடர்ந்து தொடர்பில் வைத்திருக்க உதவுகிறது.
நாள்பட்ட நோய்ப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த ஆரோக்கியம் சார்ந்தச் செயலிகள், இனிய வரப்பிரசாதமாக அமைந்து உள்ளன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை உள்ளிட்ட அம்சங்கள், உடல்நலத்தைப்பேணிக்காப்பதில் பேருதவி புரிகின்றன.
மருத்துவர்கள், தங்களது மருத்துவ அறிவை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கும், மேலும் தாங்கள் பெற்ற அறிவு மற்றும் அனுபவத்தை, இளம் மருத்துவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு உதவுகின்றன.
நோயைக் கண்டறிய உதவும் மென்பொருளின் உதவிகொண்டு, உடல்நலப் பிரச்சினைகளை, உரிய நேரத்தில் அடையாளம் கண்டறிந்து, அதற்கேற்ற சரியான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள உதவுகிறது.
இத்தகையச் செயலி முறையானது, மருத்துவச் சேவைகளை வழங்கவல்லப் புதுமையான வழிமுறை ஆகும். இது மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறைச் சார்ந்த ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவுகின்றன.
உடல்நல ஆரோக்கியத்திற்கான செயலிகளின் நன்மைகள்
மருத்துவ தரவுகள் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு
மொபைல் ஹெல்த் நிகழ்வில், பயனர்களின் மருத்துவத் தரவுகளைச் சேகரிக்கக் குளுகோமீட்டர்கள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள், ECG சாதனங்கள், செயலிகள் உள்ளிட்டவை ஈடுபடுகின்றன. இவைகள், தொடர்ச்சியாக, மருத்துவ விபரங்களைச் சேகரித்து வருகின்றன. இத்தகையத் தரவுகள், உடனடியாக மருத்துவரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய சிகிச்சை முறைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
சில வகைச் செயலிகள், இந்தத் தரவுகளைச் சேகரிப்பதோடு மட்டுமல்லாது, அவற்றை, மனிதர்களின் தலையீடு இல்லாமல், பகுப்பாய்வுச் சோதனையையும் மேற்கொள்கின்றன. பகுப்பாய்வுச் சோதனையை விரைந்து மேற்கொள்வதன் மூலம், எவ்வளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவல்ல நோய்ப் பாதிப்புகளாக இருந்தாலும், அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து உரியச் சிகிச்சை வழங்க உதவுகிறது.
மருத்துவ நடைமுறையில் நிகழும் தவறுகளைக் குறைக்கின்றது
போதிய அனுபவமில்லாத மருத்துவர்கள்
நோயாளி – மருத்துவர் இடையே சரியான அளவிலான தொடர்பு இல்லாதது
மருத்துவர்களுக்கு அதிகப் பணிச்சுமை
உடல்நலப் பாதிப்பின் தீவிரம்
ஆய்வக அறிக்கைகளில் போதிய துல்லியத்தன்மை இல்லாதது
உள்ளிட்ட காரணங்களினால், மருத்துவ நடைமுறையில், 80 சதவீதத் தவறுகள் நிகழ்கின்றன.
மருத்துவ நிபுணர்கள் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருந்தாலும், அவர்களின் மருத்துவ நடைமுறைகளில் தவறுகள் ஏற்படலாம். இத்தவறுகளைக் குறைக்க முடியுமே தவிர, முற்றிலுமாக அகற்ற முடியாது. இந்நிலையில், செயலிகள் நமக்கு வரப்பிரசாதமாக விளங்குகின்றன.
Epocrates எனப்படும் நுட்பத்தின் உதவியால், மருத்துவர்கள் தற்போது தாங்கள் மேற்கொள்ளும் மருந்து மற்றும் சிகிச்சை முறைச் சரியானதா அல்லது இல்லையா என்பதைக் கண்காணிக்கின்றனர்.
eLabJournal என்ற செயலியானது, ஆய்வகச் சோதனை முடிவுகளை மிக விரைவாக மற்றும் துல்லியமாக அளவீடு செய்கின்றது.
MedCalX நுட்பம், நோயாளிகளின் சிகிச்சை முறைகளைத் திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
இத்தகைய தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு, இன்றைய கால மருத்துவர்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது. இவை நோய்க்கண்டறிதலை எளிதாக்குகின்றன. மேலும், சரியான சிகிச்சை முறைகளை வழங்கி, பக்கவிளைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
சிகிச்சைக் கட்டணங்களைக் குறைக்கிறது.
மருத்துவமனை அல்லது கிளினிக்குகளுக்குச் செல்லும் வகையிலான போக்குவரத்துச் செலவு மற்றும் அங்கு மருத்துவருக்கு வழங்கப்படும் கலந்தாலோசனைக் கட்டணம் உள்ளிட்டவை, இதன்மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மருத்துவர்களுக்கான கன்சல்டிங் கட்டணமே 150 டாலர்கள் என்ற அளவில் இருந்து 450 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணங்கள், காப்பீட்டில் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைமருத்துவ முறையில், மருத்துவருக்கான கன்சல்டிங் கட்டணமாக, 40 அமெரிக்க டாலர்கள் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாது, நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் நீங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க முடியும்.
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, சேமிப்பை அதிகரிக்கச் செய்கின்றது. டிஜிட்டல் சேவைகளின் மூலம், மருத்துவத் துறையில் சுமார் 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்குச் சேமிக்கப்படுகிறது.
மருத்துவச் செயலிகள், நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், சரியான நேரத்தில் மருத்துவரைச் சந்திப்பதையும், தேவையற்ற ஆய்வகச் சோதனைகளையும் கட்டுப்படுத்துகின்றது.
நோயாளி – மருத்துவர் இடையே தொடர்பை ஏற்படுத்துகிறது
மருத்துவர் நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 20 நோயாளிகளை மட்டுமே பார்க்க இயலும். இதன்படி பார்த்தால், அவர் ஒரு நோயாளியை ஆராய, 25 நிமிடங்கள்வரை ஆகின்றது. பாதிப்பு மிகவும் தீவிரமாக இருப்பின், அதற்கான நேரத்தை நம்மால் கணிக்க இயலாது. போதிய நேரமின்மையால், நோயாளி – மருத்துவர் இடையேயான தொடர்பு குறைகின்றது. நோயாளி, மருத்துவரை நேரில் சந்திக்கும் போது, அவர் நமது மருத்துவ ஆவணங்களைச் சரிபார்ப்பார். மருத்துவரை நேரில் சந்திக்காத போது, அவர் அளிக்கும் மருந்துகள் சரியானதுதானா என்ற சந்தேகம், நோயாளிக்கு ஏற்படுவது இயல்புதான்..
மொபைல் போன் மூலமான உடல்நலச் செயலிகள், நோயாளி – மருத்துவருக்கு இடையே உள்ள தொடர்பின் முட்டுக்கட்டைகளை அகற்றுகின்றன. போன் அழைப்புகள், அரட்டை ரீதியிலான உரையாடல்கள், வீடியோ அழைப்புகள் உள்ளிட்டவைகளின் மூலமாக நோயாளி – மருத்துவர் எந்த நேரம் வேண்டுமானாலும் தொடர்பில் இணைய முடியும். மருத்துவம் முறையில் தோன்றும் சந்தேகங்களை, நோயாளிகள், இணையத்தின் வாயிலாகத் தொடர்பு கொண்டு கேட்டுத் தெளிவு பெறலாம். நோயின் அறிகுறி ஏதாவது தென்படும்பட்சத்தில், அது முற்றும்வரைக் காத்திருக்காமல், உடனடியாக, மருத்துவரைத் தொடர்பு கொண்டு, நிவாரணம் பெறலாம்.
மேலும் வாசிக்க : கலோரிகளைக் கண்காணிக்க உதவும் AI வழிமுறை
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கிறது
மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சரியான உணவுமுறை, சீரான இயக்கம், போதிய அளவிலான தரமான உறக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ளச் செயலிகள் ஊக்குவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மன அழுத்த பாதிப்பு என்பது மிகவும் அபாயகரமானதாக நிகழ்வாக விளங்கியது. அந்தக் காலகட்டத்தில், உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தைக் காப்பது என்பது சவாலான நடவடிக்கையாக இருந்தது.
ஸ்மார்ட்போனில் உள்ள உடல்நலம் சார்ந்த செயலிகள், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள நோயாளிகளை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது, வாழ்வின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
டெலிமெடிசின் எனப்படும் தொலைமருத்துவ முறையானது, மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருவதன் காரணத்தினால், ஸ்மார்ட்போன் மூலமான உடல்நலம் சார்ந்த செயலிகளின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம், நோயாளி – மருத்துவர் இடையேயான தொடர்பு வலுப்படுகிறது.
வரும் காலங்களில், ஸ்மார்ட்போன் மூலமான உடல்நலப் பராமரிப்பில், குறிப்பிடத்தக்க அளவிலான கண்டுபிடிப்புகள் நிகழும். இதன்மூலம், நோய்ப் பாதிப்புகளுக்குப் புதுமையான முறையில் தீர்வு காணப்படும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.