மரபியல் அடிப்படையிலான தனிப்பட்ட உணவுத்திட்டங்கள்
நீங்கள் ஜிம்மில் வேர்க்க, விறுவிறுக்க உடற்பயிற்சிகள் செய்துவந்த போதிலும், நீங்கள் விரும்பும் உடற்கட்டு வரவில்லையேன்னு வருத்தப்படுகிறீர்களா? அதற்கு உங்கள் உடலில் உள்ள DNA எனும் மரபணு தான் காரணம் என்பதை அறிவீர்களா?
சிலர் சத்தான உணவு உண்டும் எடை கூடவில்லை என்கின்றனர். மற்றவர்கள் உடற்பயிற்சி செய்தும், உணவுக் கட்டுப்பாடு கடைபிடித்தும் எடை குறையவில்லை என புலம்புகின்றனர்.
நீங்கள் எந்த உடற்தோற்றத்தில் இருக்கின்றீர்கள், இருக்கப் போகின்றீர்கள் என்பதற்கு, நீங்கள் மேற்கொள்ளும் உணவுமுறையைவிட, உங்களது மரபணுக்களுக்குத் தான், அதிகளவிலான பங்கு உள்ளது.
மனிதகுலத்திற்கு நலம் பயக்கும் வகையில் மரபணுக்களை டிகோடிங் செய்யும் நடைமுறை, மெட்ரோ நகரங்களில் பிரபலம் அடைந்து வருகிறது.
தனிப்பட்ட உணவுத் திட்டங்களைப் புரிந்துகொள்ளல்
ஒருவரின் உயிரியல் அமைப்பு, வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கிய இலக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும் உணவுத் திட்டங்களே தனிப்பட்ட உணவுத்திட்டங்கள் ஆகும்.
மனிதர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், சீரான நல்வாழ்க்கை வாழும் பொருட்டு, மரபியல், வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளை, நமக்குத் தேவையான விகிதத்திற்கு மாற்றி அமைத்து, தனிப்பட்ட உணவுத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
பின்னணியில் உள்ள அறிவியல்
தனிப்பட்ட உணவுத்திட்டங்கள் முறையானது, ஒவ்வொரு நபர்களின் மரபணு விவரங்கள், வளர்சிதை மாற்றம், வாழ்க்கை முறைக் காரணிகள் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளன. நம் உடலின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையிலான உணவுத்திட்டங்களை உருவாக்க, மரபணு தொடர்பான ஆராய்ச்சிகள், வளர்சிதை மாற்றம், ஊட்டச்சத்துக் குறித்த அறிவியல் உள்ளிட்டவைகள் பேருதவி புரிகின்றன.
ஒரு நபரின் ஊட்டச்சத்து முறைகள், அவரின் உணர்திறன், சுகாதார நடவடிக்கைகளுக்கு, அவரின் உடல் எவ்வாறு வினைபுரிகிறது என்பதை, ஆராய்ச்சியாளர்கள், ஜெனிடிக் மார்க்கர்கள் எனப்படும் மரபணுக் குறிப்பான்களைக் கொண்டு அறிந்துக் கொள்கின்றனர். ஒருவரின் தனிப்பட்ட மரபணுத் தகவல்களைக் கொண்டு, அவருக்கேற்ற உணவுப் பரிந்துரைகளை மேற்கொள்ளவும், ஊட்டச்சத்து உணவுமுறையை மேம்படுத்தவும் முடியும்.
ஊட்டச்சத்துக்கள் எவ்வாறு உடலில் உட்கிரகிக்கப்படுன்றன, அவை வளர்சிதை மாற்றம் அடைகின்றன மற்றும் உடலில் இருந்து கழிவுகளாக வெளியேறுகின்றன உள்ளிட்ட ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட வளர்சிதை மாற்ற நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளை, வளர்சிதைமாற்றவியல் கொண்டு அறிய இயலும். இந்த அறிவியலை நாம் ஆழப் புரிந்து கொள்ளும்பட்சத்தில், தனிப்பட்ட ஊட்டச்சத்து உணவுமுறையின் அடிப்படையில், ஒருவரின் வளர்சிதை மாற்ற பண்புகளை, நாம் விரும்பியவாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
தனிப்பட்ட உணவுமுறையின் நன்மைகள்
உடல் ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்க்கைக்கு, தனிப்பட்ட உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஊட்டச்சத்து உட்கொள்ளலை உகந்ததாக்குகிறது
ஒருவரின் உடல்நிலைக்கு ஏற்ப, தேவையான ஊட்டச்சத்துக்களை சரியான விகிதத்தில் அளிப்பதால், குறைபாடுகள் நீங்கி ஊட்டச்சத்து உட்கொள்ளல் மேம்படுகிறது.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
ஒருவரின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உடலின் ஆற்றல் அளவு மேம்படுத்தப்படுகிறது.
ஒவ்வாமைப் பாதிப்பைத் தவிர்த்தல்
தனிப்பட்ட உணவுமுறையானது, உடலுக்கு ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுவகைகளைத் தவிர்த்து விடுவதினால், அந்தப் பாதிப்பில் இருந்து, நமக்கு நிவாரணம் கிடைப்பதுடன், சீரணச் செயல்பாடுகளும் மேம்படுவதால், உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கின்றது.
நீடித்த நிலைத்தன்மை
நிலையான உணவுப்பழக்கங்களை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது..
தனிப்பட்ட உணவுமுறைகளின் வடிவமைப்பில் சில காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றை அறிவதன் மூலம் இம்முறையின் முக்கியத்துவத்தை உணரலாம்.
விருப்பமான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை
ஒருவரின் வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கங்கள், விருப்பங்கள் ஆகியவை தனிப்பட்ட உணவுமுறையின் அங்கங்களாகும். பரிந்துரைக்கப்பட்ட உணவுக் கட்டமைப்பு அவரது உணவுமுறையை மேம்படுத்த உதவுகிறது.
சுகாதார இலக்குகள்
உடல் எடை நிர்வாகம், தடகள வீரருக்கு உரிய செயல்திறன், குறிப்பிட்ட மருத்துவ நிலைகள் ஆகியவை பலரின் குறிக்கோள்கள். இவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கு, இந்தத் தனிப்பட்ட உணவுமுறை இனிய வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது.
தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பற்றாக்குறை
தனிப்பட்ட உணவுமுறை நிகழ்வானது, ஒருவரின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையையும் கண்டறிந்து அதைச் சரிசெய்கிறது. இதன்மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
எத்தகைய உணவுமுறை என்றாலும், அது தொடர்ந்து செயல்படக்கூடியதாக இருக்க வேண்டியது அவசியமாகும். உடலுக்கு நன்மை பயக்கும் தனிப்பட்ட உணவுமுறை தொடர்ச்சியான கண்காணிப்பையும், தேவையான திருத்தங்களையும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், திறன்மிக்க உணவுமுறையை நாம் பெற முடியும்.
இன்றைய நவீன யுகத்தில், நாம் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்களின் அளவு, உட்கொள்ளல் கால அளவு, உட்கிரகிக்கப்படும் நேரம், ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை மொபைல் செயலிகளே கண்காணிக்கின்றன. மரபியல் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதப் பரிந்துரைகளின் அடிப்படையில் இவற்றை மேம்படுத்துவதே போதுமானது என்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும் வாசிக்க : ஊட்டச்சத்துகள் உறிஞ்சுதலில் மரபியல் காரணிகளின் பங்கு
நிலையானதொரு வாழ்க்கைமுறை
தங்களது மரபியல் மற்றும் வளர்சிதை மாற்ற பண்புகளுடன் இணக்கமாக இருக்கும் வகையிலான தனிப்பட்ட உணவுமுறைகள், நிலையான வாழ்க்கைமுறைக்கு அடிகோலிடுவதோடு மட்டுமல்லாது, உடல் எடை மேலாண்மையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்தத் தனிப்பட்ட உணவுமுறையினை, நீண்டக் காலத்திற்குப் பின்பற்றுவதன் மூலம், உடல் ஆரோக்கியம் ஊக்குவிக்கப்படுகிறது.
உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்துகிறது
தனிப்பட்ட உணவுமுறையானது உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்துகிறது, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நற்பண்புகளால் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
விளையாட்டு வீரர்களுக்குப் பயன்
தனிப்பட்ட உணவுமுறையானது, ஊட்டச்சத்துக்கள் உட்கொள்ள உகந்த சூழ்நிலையை உருவாக்குகிறது. இதன்மூலமான ஆற்றலைத் தங்குதடையின்றிக் கிடைக்க வழிவகைச் செய்கிறது, உடல் உழைப்பு மேம்பட, அதற்கான ஊட்டச்சத்துக்களைத் தக்கச் சமயத்தில் பரிந்துரைச் செய்கிறது. உடலின் செயற்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இத்தகைய பண்புகளால், இந்த உணவுமுறை, தடகள விளையாட்டு வீரர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்டோருக்கு இனிய வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது என்று கூறினால், அது மிகையல்ல.
உடலுக்குத் தீமைப் பயக்கும் உணவுமுறைக்கு விடைக்கொடுத்து, மரபணு உடன் தொடர்புடைய தனிப்பட்ட உணவுமுறையைப் பின்பற்றுங்கள். ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழுங்கள்…..