நீரிழிவுப் பாதிப்பைக் குணப்படுத்தவல்ல உடற்பயிற்சிகள்
நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளுக்கு, ஒரு குறிப்பிட்ட உணவு வகைகளும், உடற்பயிற்சிகள் கொண்ட வாழ்க்கைமுறையும் பரிந்துரைக்கப்படுகிறது. நீரிழிவுக்கு உடற்பயிற்சி தேவையா என்ற உங்கள் கேள்வி புரிகிறது.நீரிழிவுப் பாதிப்பைக் குணப்படுத்தவல்லச் சிறந்த உடற்பயிற்சி முறைகளையும், அதன் பயன்களையும் விரிவாகக் காண்போம்.
உடற்பயிற்சி நீரிழிவு மட்டுமின்றிப் பல நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது.உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடை நிர்வகிக்கப்படுகிறது, ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது, தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறுகின்றன, கவலை மற்றும் பதட்ட உணர்வு குறைகிறது, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, இன்சுலின் ஹார்மோனின் செயல்பாட்டை அதிகரித்து, நீரிழிவுப் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது.
நீரிழிவால் ரத்த சர்க்கரை அளவு மாறுபடும்போது, உடல் ஆற்றலிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.உடலுக்கு வலிமை அளிக்கும் பயிற்சிகள், நெகிழ்வுத்தன்மை அளிக்கவல்ல உடற்பயிற்சிகள், ஏரோபிக் உள்ளிட்ட பயிற்சிகள், நீரிழிவு நோய்ப்பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதாக உள்ளன.
நீரிழிவுப் பாதிப்பைக் கட்டுப்படுத்தவல்ல உடற்பயிற்சிகள் குறித்து விரிவாகக் காண்போம்.
நடைப்பயிற்சி
நீரிழிவுப் பாதிப்பைக் கட்டுப்படுத்தவல்லச் சிறந்த உடற்பயிற்சியாக, நடைப்பயிற்சியானது விளங்குகிறது. இந்தப் பயிற்சியை மேற்கொள்ள டிரெட்மில் போன்ற உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காக்கள் அல்லது போக்குவரத்து குறைவாக உள்ள சாலைகளில் தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது ஆகும். நடைப்பயிற்சியின் போது, இயற்கையின் படைப்புகளைப் பார்த்தபடியே, காலார நடந்தால், மனதிற்கும் புத்துணர்வு கிடைக்கும். நண்பர்களுடன் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சுகமே அலாதிதான்..
குழு விளையாட்டுகள்
குழு விளையாட்டுகள், நீரிழிவுப்பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய சரியான பயிற்சியாக உள்ளது. உடற்பயிற்சி இலக்குகளை உணராத நிலையில், உடற்பயிற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது கடினம் என்பதால், கால்பந்து, டென்னிஸ், கூடைப்பண்ட்து உள்ளிட்ட குழு விளையாட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இத்தகைய விளையாட்டுகள், நம் உடலுக்குச் சிறந்ததொரு ஏரோபிக் பயிற்சிகளை வழங்குகின்றன. இந்த விளையாட்டுகளை விளையாடும்போது, நாமும், நம் நண்பர்களும் நம்மை உணராமலேயே உடற்பயிற்சி மேற்கொள்கிறோம் என்பதே நிதர்சனம்.
நடனம்
நீரிழிவுக்கான உடற்பயிற்சிகளில் மிகவும் சுவாரஸ்யமானது, நடனப் பயிற்சி ஆகும். நீங்கள் ஜிம்மில் ஏரோபிக், ஜூம்பா, பாலிவுட் நடனத்தைத் தேர்வு செய்யலாம்.நீங்கள் அதிக ஈடுபாட்டுடன் ஒரு நடனமுறையைத் தேர்ந்தெடுத்து ஆடும்போது, அது உங்களை வியர்வையில் முழுவதுமாக நனைத்துவிடும். அத்தகைய நடனப் பயிற்சிகளே, உங்களை நீரிழிவுப் பாதிப்பில் இருந்து காக்கும் அருமருந்து ஆகும். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் விளைவாக, நீங்கள் நடனப் பயிற்சிக்காக ஜிம்மிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே, ஜூம்பா நடனப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு ஆடி மகிழலாம். 20-30 நிமிட நடனப்பயிற்சி உடற்பயிற்சியின் பலனைத் தரும்.
யோகா
யோகாப் பயிற்சியானது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாது, இனிமையான உறக்கத்திற்கும், சிறந்த மனநிலை ஏற்படுதலுக்கும் காரணமாக அமைகிறது. உங்களுக்கு வெளியிடங்களுக்குச் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள விருப்பமில்லாத போது, நீங்கள் வீட்டில் இருந்தவாறே, யோகாப் பயிற்சிகளை மேற்கொண்டு, உடற்பயிற்சி மேற்கொண்டதற்கான பலனைப் பெறலாம்.
சைக்கிளிங்
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த வகை உடற்பயிற்சியாக, சைக்கிளிங் விளங்கி வருகிறது. இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு, மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி உணர்வு மற்றும் கீல்வாத பாதிப்பு உருவாகிறது. இந்தப் பாதிப்புகளுக்குச் சிறந்ததொரு தீர்வாக, சைக்கிள் ஓட்டும் பயிற்சியானது உள்ளது. குறைந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவல்ல இந்தப் பயிற்சியானது, உங்கள் தினசரி உடற்பயிற்சி இலக்குகளை அடைய உதவுகிறது.
நீச்சல்
கோடைக்காலத்தில் நீச்சல் பயிற்சியானது, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது. நிலத்தில் சாதாரணமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சியைவிட, தண்ணீரில் மேற்கொள்ளும் வகையிலான உடற்பயிற்சிகள், இதயத்துடிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. முழுமையான உடல் ஆரோக்கிய நிகழ்விலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஸ்கிப்பிங்
குழந்தைப் பருவத்தில், நாம் அனைவரும் வேடிக்கையாக விளையாடிய விளையாட்டு, நீரிழிவு நோய்ப்பாதிப்பைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?. இந்த விளையாட்டுப் பயிற்சியானது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கின்றது. உடல் தசைகளின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது, இதயத்துடிப்பின் வீதத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடலின் கொழுப்பு அளவு உள்ளிட்டவைகளைக் குறைக்கிறது. இதன்மூலம், நீரிழிவுப் பாதிப்பின் தீவிரம் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் வாசிக்க : இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் இயற்கை வழிமுறைகள்
உடலுக்கு வலிமை அளிக்கவல்லப் பயிற்சிகள்
உடலுக்கு வலிமை அளிக்கவல்லப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உடல் தசைகள் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைவதோடு, நீரிழிவுப் பாதிப்பின் தீவிரத்தையும் குறைக்கின்றன. இந்தப் பயிற்சிகள், சிறந்த மனநிலையை உருவாக்குவதோடு, மன ஆரோக்கியத்திற்கும் பேருதவி புரிகின்றன. மன அழுத்தம், கவலை, மன இறுக்கப் பாதிப்புகளைக் குறைக்கிறது.
உணவுக்குறிப்புகள்
இரத்தத்தில் சர்க்கரை அளவை அடிக்கடி கண்காணித்தல்
நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சிரிய இடைவெளிகளில் கண்காணித்து, ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதற்கேற்ற வகையில் உணவுமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுவகைகள், சர்க்கரை உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகின்றது. காய்கறிகள், பழ வகைகள், முழுத் தானியங்கள், விதைகள், கொட்டைகள் உள்ளிட்ட உணவுவகைகளில், நார்ச்சத்து அதிகம் உள்ளது.
பகுதிவாரியாகச் சாப்பிடவும்
நீரிழிவு நோயாளிகள், தாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எந்த அளவிற்குச் சாப்பிடுகிறோம் என்பதில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உணவை, பல பகுதிகளாகப் பிரித்து, சீரான கால இடைவெளிகளில் பகுதிவாரியாகச் சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும்.
நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகள் மேற்குறிப்பிட்ட உடற்பயிற்சி முறைகள், உணவுக்குறிப்புகள் உள்ளிட்டவற்றைக் கவனமாகக் கையாண்டு, நீரிழிவுப் பாதிப்பில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…