ஃபிட்னெஸ் டிராக்கர்ப் பயன்பாட்டில் இவ்வளவு ஆபத்தா?
உடற்பயிற்சி கண்காணிப்பு சாதனம் அணிந்திருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கலாம் என்பதை அறிய வேண்டும்.உடற்தகுதியைக் கண்காணிக்க நாம் பயன்படுத்தும் சாதனங்களில், பெயர், பிறந்த தேதி, பாலினம், உறக்க முறைகள் உள்ளிட்ட நமது தனிப்பட்ட தகவல்கள் அடங்கி உள்ளன. இத்தகவல்களை யாரும் அணுகக்கூடும் என்பதால், அவை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்.இதன்காரணமாக, நீங்கள் பயன்படுத்தும் ஃபிட்னெஸ் டிராக்கர்கள் எந்த அளவிற்குப் பாதுகாப்பானவை என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
எத்தகைய தகவல்கள் இதற்குத் தேவைப்படுகின்றன?
நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில், ஃபிட்னெஸ் டிராக்கர்ச் செயலியை நிறுவும்போது, அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். நீங்கள் உள்ளீடு செய்த இந்தத் தகவல்கள், செயலியின் புரோபைல் பக்கத்தில் இருக்கும். செயலியின் புரோபைல் பக்கத்திற்குச் சென்று, இந்தத் தகவல்கள் தனிப்பட்டவை என்ற ஆப்சனைத் தெரிவு செய்து கொள்ளவும்.
ஃபிட்னெஸ் டிராக்கர்கள், இரண்டு வகையான தரவுகளை முக்கியமாகக் கண்காணிக்கின்றன. முதலாவதாக, நீங்கள் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி அதாவது நீங்கள் மேற்கொள்ளும் காலடிகளின் எண்ணிக்கைகளின் மூலமாக, நடக்கும் தொலைவு, நீங்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் தொலைவு உள்ளிட்ட உடற்பயிற்சி நடவடிக்கைககள். இரண்டாவதாக, உங்களது இதயத்துடிப்பு, உடலில் கலோரியின் விகிதம் உள்ளிட்ட தரவுகளை, ஃபிட்னெஸ் டிராக்கர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கின்றன.இத்தகைய தரவுகளைக் கொண்டு, செயலியானது உங்களுக்குத் தினசரி அடிப்படையிலான அறிக்கைகளை வழங்கும்.
உங்கள் உடல்நலம் சார்ந்த இந்தத் தரவுகளைக் கொண்டு, சைபர்குற்றங்களில் ஈடுபடும் ஹேக்கர்களால், உங்களது முழுமையான புரோபைலை உருவாக்கிவிட இயலாது. இத்தகைய தரவுகள், ஃபிட்னெஸ் டிராக்கர் நிறுவனங்கள் பயன்படுத்தி உங்களுக்குத் தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர அளவிலான பட்டியல்களை வழங்குகின்றன.
உங்களின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலா?
ஃபிட்னெஸ் டிராக்கர்களைப் பயன்படுத்துபவர்களின் முக்கியக் கவலையாக இருப்பது, அவர்களின் தரவுகள் கசியும் நிகழ்வு தான் ஆகும். ஃபிட்னெஸ் டிராக்கர்கள் நிறுவனங்கள் யாவும் தரவுகளைப் பாதுகாக்கும் வகையிலான கொள்கைகளைப் பின்பற்றுவதாகத் தெரிவிக்கும்போதிலும், அதில் எந்தளவிற்கு உண்மையானது என்பதை நிரூபிக்க யாரும் முன்வருவதில்லை.
சில ஃபிட்னெஸ் டிராக்கர் நிறுவனங்கள் மேம்பட்ட தனியுரிமைக் கொள்கையைப் பின்பற்றுகின்றன.இந்த நிறுவனங்களே, வணிக நோக்கத்திற்காக, உங்களது தரவுகளை, மூன்றாவது நபரிடம் அளிக்கலாமா என்று பயனர்களிடம் கேட்கின்றது. இதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அதற்குரிய தனியுரிமைக் கொள்கைகள் இடம்பெற்றுள்ள பக்கத்திற்குச் சென்று, அதற்கான அனுமதியை வழங்க வேண்டும், இல்லையெனில், உங்களது தரவுகள் பாதுகாப்பானதாகவே இருக்கும்.
புதியவரவாக வந்துள்ள சில ஃபிட்னெஸ் டிராக்கர்களில், GPS வசதியானது தவறாது இடம்பெற்றுவிடுகின்றன. சில ஃபிட்னெஸ் டிராக்கர்ச் செயலிகள், ஸ்மார்ட்போனில் உள்ள GPS வசதியைப் பயன்படுத்திக் கொள்கின்றன. சைபர்குற்றங்களில் ஈடுபடும் ஹேக்கர்கள், ஃபிட்னெஸ் டிராக்கரில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்தி, பயனரின் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றனர். பாதுகாப்பிற்காக, ஃபிட்னெஸ் டிராக்கர்ப் பயன்படுத்தும்போது GPS-ஐ அணைக்கவும்.
ஃபிட்னெஸ் டிராக்கரின் வாயிலாக, உங்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்று நினைப்பவர்கள், தேவையில்லாத நேரத்தில் இன்டர்நெட் இணைப்பைத் துண்டித்து விடவும். பணம் செலுத்துதல், பிரவுசிங் செய்தல் உள்ளிட்ட பணிகளை ஸ்மார்ட்போனில் மேற்கொள்ளாதவர்கள், தரவுகள் திருட்டு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
தரவுகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
உங்களது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், சில பாதுகாப்பு நடைமுறைகளை நீங்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.
ஃபிட்னெஸ் டிராக்கர்ச் செயலியை ஆக்டிவேட் செய்ய, மின்னஞ்சல் முகவரி அவசியமானதாக உள்ளது. ஃபிட்னெஸ் டிராக்கர்ச் செயலிக்காகப் புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதைக் கொண்டு புதிய கணக்கை உருவாக்கவும். பணப்பரிவர்த்தனைகள் மற்றும் சமூகவலைதளங்களுக்கான மின்னஞ்சலை இங்கு பயன்படுத்த வேண்டாம்.
சமூகவலைதளப் பயன்பாடு, பணப்பரிவர்த்தனைகள், ஃபிட்னெஸ் டிராக்கர் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியானதொரு கடவுச்சொல்களை அமைக்க வேண்டும். இந்தக் கடவுச்சொல்களை, கடவுச்சொல் மேனேஜரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நீங்கள் ஃபிட்னெஸ் டிராக்கர்ச் செயலியைத் திறக்கும் போது, கடவுச்சொல் தன்னிச்சையாக உள்ளீடு செய்யப்பட்டு நீங்கள் பயன்படுத்த முடியும்.
மூன்றாம் தரச் செயலிகள் அல்லது நம்பகத்தன்மை அற்ற ஃபிட்னெஸ் டிராக்கர்கள் இலவசமாகக் கிடைக்கின்றன என எண்ணி, அதை ஸ்மார்ட்போனில் நிறுவி பயன்படுத்த வேண்டாம்.
ஃபிட்னெஸ் டிராக்கரைப் பயன்படுத்துவதற்கு முன்னர், அதில் உள்ள தனியுரிமைக் கொள்கையை, கவனமாகப் படித்துப் பார்க்கவும். அதில் வணிக நோக்கத்திற்காக, உங்களது தகவல்கள் மூன்றாவது நபரிடம் பகிர வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தால், அந்தச் செயலியைப் புறக்கணித்து விடுவது நல்லது. ஏனெனில், இதுபோன்ற தனியுரிமைக் குறைபாடுகளின் மூலமாகத் தான், ஹேக்கர்கள், தரவுகள் திருட்டில் ஈடுபடுவர் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.
மேலும் வாசிக்க : இரத்த சர்க்கரை அளவு கண்காணிப்பில் உணவுத்திட்டமிடல் செயலி
ஃபிட்னெஸ் டிராக்கர்ச் செயலியில், உங்களது தனிப்பட்ட தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்ட பிறகு, அதன் புரோபைல் பக்கத்திற்குச் சென்று, இந்தத் தகவல்கள் தனிப்பட்டவை என்ற ஆப்சனைத் தெரிவு செய்து கொள்ளவும்.
செயலி அப்டேட் ஆகும் சமயத்தில் வேறு ஏதேனும் விரும்பத்தகாத மால்வேர்கள் டவுன்லோடு ஆகவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். செயலியின் பிரத்யேகச் சமூகவலைதளப் பக்கத்திற்குச் சென்று, புது அப்டேட்களைப் பற்றி அவ்வப்போது அறிந்து கொள்வது அவசியமாகும்.
இன்றைய இயந்திரத்தனமான உலகில் விழிப்புணர்வு அவசியம். இளம்தலைமுறையினர் எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களில் மூழ்கி உள்ளதால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, ஃபிட்னெஸ் டிராக்கர்ப் போன்ற உடற்பயிற்சிகளைக் கண்காணிக்கும் செயலிகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதன் தனியுரிமைக் கொள்கைகளின் மீது ஒரு கண் வைத்துக்கொள்வது அவசியமாகும். விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதிசெய்வோமாக….