இரத்த அழுத்த அளவுகள் தெரிவிப்பது என்ன?
இன்றைய நவீன உலகில், பெரும்பாலான மக்களை அல்லல்படுத்தும் நிகழ்வாக, உயர் ரத்த அழுத்த பாதிப்பானது, விளங்கிவருகிறது. சைலண்ட் கில்லர் என்ற அடைமொழியுடன், இந்தப் பாதிப்பானது குறிப்பிடப்படுகிறது. சர்வதேச அளவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோரைப் பாதிக்கும் இந்த உயர் ரத்த அழுத்தமானது, பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. உயர்ரத்த அழுத்த பாதிப்பை, வாழ்க்கைமுறையிலான மாற்றங்கள் மற்றும் மருத்துவ முறைகளுடன் மட்டுமே நிர்வகிக்க இயலும்.
இரத்த அழுத்தம் என்றால் என்ன?
இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படும் அழுத்தமாகும்.இது சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் என்ற இரண்டு அளவீடுகளால் அளவிடப்படுகின்றன. சிஸ்டாலிக் என்பது, இதயம் சுருங்கும்போது ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது. டயஸ்டாலிக் அழுத்தம் என்பது, இதயம், அதன் துடிப்புகளுக்கு இடையில் ஓய்வு எடுக்கும்போது, உண்டாகும் அழுத்தம் ஆகும்.
தமனிகளில், ரத்த அழுத்தம் தொடர்ச்சியாக அதிகமாக இருக்கும்போது, அது இதயம் சீராக இயங்குவதில் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்பானது, ரத்த நாளங்களைச் சேதப்படுத்தி விடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதய நலனில் ரத்த அழுத்த அளவுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
ஒரு நபரின் ஆரோக்கியமான ரத்த அழுத்தம் என்பது 120/80 mmHg ஆகும். இதில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தத்தையும், இரண்டாவதாக உள்ள 80, டயஸ்டாலிக் அழுத்தமாகவும் வரையறுக்கப்படுகிறது.
மருத்துவர்களில் பெரும்பாலானோர், உயர் ரத்த அழுத்தத்தைக் கண்டறிவதற்கான கட் ஆஃப் நிலையாக, 90mmHg க்கு மேல், 140யைப் பயன்படுத்துகின்றனர். இரத்த அழுத்த அளவு 120/80mmHg க்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில், உயர்ரத்த அழுத்த பாதிப்பை உருவாக்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
வண்ணம் சார்ந்த ரத்த அழுத்த வரைபடங்கள், சிறந்த சுயகண்காணிப்பு வழிவகுக்கின்றன.
பச்சை : ≤ 140/≤ 90 mmHg – இரத்த அழுத்தம் கட்டுக்குள் உள்ளது
மஞ்சள் : >140/>90 mmHg – உயர் ரத்த அழுத்த பாதிப்பு
சிவப்பு : > 180 mmHg/>110 mmHg – அபாயக் கட்டத்தில் ரத்த அழுத்தம்
இரத்த அழுத்த அட்டவணையின் முக்கியத்துவம்
உடலின் ரத்த அழுத்தமானது குறைந்தாலும் அல்லது அதிகரித்தாலும், அது சைலண்ட் கில்லராக மாறி, உடலுக்குப் பெரும் ஆபத்தை விளைவித்து விடுகிறது. சில நேரங்களில், எவ்வித அறிகுறிகளும் இல்லாமலேயே, ஆபத்தை விளைவிக்கின்றது. இரத்த அழுத்தத்தை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும்.
இரத்த அழுத்த பிரிவு | சிஸ்டாலிக் அழுத்தம்
(mmHg) |
டயஸ்டாலிக் அழுத்தம்
(mmHg) |
குறைந்த ரத்த அழுத்தம் | <100 | <60 |
உகந்த அளவு | <120 | <80 |
சாதாரண அளவு | <130 | <85 |
உயர் சாதாரண அளவு | 130 – 139 | 85 – 89 |
உயர் ரத்த அழுத்தம் – நிலை 1 | 140-159 | 90- 99 |
உயர் ரத்த அழுத்தம் – நிலை 2 | 160 – 179 | 100 – 109 |
உயர் ரத்த அழுத்தம் – நிலை 3 | >=180 | >=110 |
இந்த ரத்த அழுத்த அட்டவணையானது, ரத்த அழுத்தத்தைச் சுயமாக கண்காணிக்க உதவுகிறது. இதுமட்டுமல்லாது துல்லியமான நோயறிதல் நிகழ்விற்கும் மற்றும் ஆரோக்கியம் மேம்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும் உதவுகிறது. இது, உங்கள் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி பழக்கவழக்கங்களில், மாற்றங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது.
மேலும் வாசிக்க : உடல் ஆரோக்கியம் மேம்பாடு நிகழ்வில் மரபணு சோதனை
இரத்த அழுத்தத்தை எப்போது பரிசோதிக்க வேண்டும்?
வயது அதிகரிக்க அதிகரிக்க, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது. வயதானவர்களுக்கு, சிஸ்டாலிக் அழுத்தம் அதிகரித்து, டயஸ்டாலிக் அழுத்தம் குறைவாகவும் காணப்படும். இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலானோர் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக அமர்ந்து பணிபுரிந்து வருவதால். உயர் ரத்த அழுத்த பாதிப்பு அல்லது குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு, எந்த வயதினருக்கும் எளிதாக வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இளைய தலைமுறையினருக்கு, சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் அழுத்தமானது குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
இன்றைய இளம்தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் BMI விகிதங்கள், அவர்களிடையே, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இரத்த அழுத்தத்தை அளவிட, வயது ஒரு பொருட்டே அல்ல. எந்த வயதினரும், ரத்த அழுத்த விகிதத்தைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இரத்த அழுத்த விகிதம் 120/80 – வருடத்திற்கு ஒருமுறை
120/80க்கும் அதிகமாக இருப்பவர்கள் – வருடத்திற்கு இரண்டு முறை
140/90 க்கு மேல் இருப்பவர்கள் – அடிக்கடி ரத்த அழுத்த மாறுபாட்டை அளவீடு செய்து கொள்வது நல்லது.
அசாதாரண ரத்த அழுத்த மாறுபாட்டின் விளைவுகள்
இரத்த அழுத்த மாறுபாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். தவறும்பட்சத்தில், உயர்ரத்த அழுத்த பாதிப்பானது, எவ்வித அறிகுறிகளும் இல்லாமல், இதயத்தின் இயக்கத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன.
இதய நோய்கள்
உடலின் ரத்தஓட்டத்தை உறுதி செய்யும் வகையில், நெகிழ்வான, மீள் அழுத்தத்தை, ஆரோக்கியமான தமனியானது தன்னுள் கொண்டுள்ளது. உயர்ரத்த அழுத்தம் தமனிகளைப் பாதித்து, பக்கவாதம் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.
நரம்பியல் குறைபாடுகள்
நாள்முழுவதும் ஓய்வு இன்றி இயங்கும் மூளையின் செயல்பாடுகள் சீராக இருக்க வேண்டுமெனில், ரத்த ஓட்டம் சரியாக இருப்பது அவசியமாகும். ஹைபர்டென்சன் எனப்படும் உயர்ரத்த அழுத்தமானது பக்கவாதம், சிந்தனைத்திறனில் குறைபாடு, டிமென்சியா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
நாள்பட்ட சிறுநீரக நோய்கள்
ஆரோக்கியமான ரத்த நாளங்களே, சிறுநீரக ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. சிறுநீரகத்தின் முதன்மைப் பணியானது வடிகட்டுதல் மற்றும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதே ஆகும். இரத்த அழுத்த நிகழ்வில் ஏற்படும் அசாதாரணமானது, ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தின் இயக்கத்தைச் சிதைத்து, நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.
பார்வைத்திறன் குறைபாடு
ஹைபர்டென்சன் எனப்படும் உயர்ரத்த அழுத்தமானது, கண்களில் உள்ள ரெட்டினா படலத்தைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாது, பார்வை நரம்புகளில் உள்ள ரத்த நாளங்களையும் பாதிக்கின்றது. இதன்காரணமாக, பார்வைச் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் உயர் ரத்த அழுத்த பாதிப்பானது, எலும்புகளின் அடர்த்தியைக் குறைக்கின்றது. உறக்க நிகழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஞாபகமின்மையை ஏற்படுத்துகிறது, ஆளுமைத்திறனில் மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவுகள் – பராமரிக்க வழிகள்
உங்களுக்கு ரத்த அழுத்த அளவீடானது சாதாரணமான அளவில் இருப்பின், பயப்படத் தேவையில்லை. அதில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதை உடனே சரிசெய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இரத்த அழுத்த மாறுபாடுகளைத் தவிர்க்க உதவும் வகையினான சில நடைமுறைக் குறிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
ஆரோக்கியமான உணவுமுறை
அதிகளவிலான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் குறைந்த அளவிலான உப்பு கொண்ட வகையிலான சரிவிகித உணவுமுறையானது, ரத்த அழுத்த அளவு, குறுகிய காலத்திலேயே குறைக்க உதவுகிறது. அவகேடோ, முழுத் தானியங்கள், வாழைப்பழம், கீரைகள், டார்க் சாக்லேட்கள், விதைகள், கொட்டைகள் உள்ளிட்ட உணவு வகைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
மதுவகைகளைத் தவிர்க்க வேண்டும்
மதுப்பழக்கமானது, ரத்த அழுத்தத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாது, இதய நோய்கள் வருவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
உடற்பயிற்சிப் பழக்கம்
தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், ரத்த அழுத்தமானது கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஏரோபிக் உடற்பயிற்சிகள், படிகளில் ஏறுதல், நடைப்பயிற்சி உள்ளிட்ட சாதாரண உடற்பயிற்சிகள், உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமல்லாது, ரத்த அழுத்தத்தைச் சீராக்குகின்றது.
மன அழுத்தத்தைக் குறைத்தல்
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் இதயம் வேகமாக இயங்கி, இதயத்துடிப்பு சீரற்ற முறையில் இருக்கும். இதன்காரணமாக, ரத்த அழுத்தமும் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளுடனேயே இருக்கும். தியானம் மற்றும் யோகாப் பயிற்சிகளை மேற்கொண்டு, மனதை ஒருநிலைப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
உடலின் நீரேற்ற அளவு முக்கியம்
உடலில் இருந்து அதிகளவிற்கு நீர்ச்சத்தானது வெளியேறும்பட்சத்தில், இதயம் இயங்குவதில் தடை ஏற்படுகின்றது. இதன்காரணமாக, ரத்த அழுத்த விகிதத்தில் மாறுபாடு ஏற்படுகின்றது. தினமும் போதிய அளவிற்கு நீர் அருந்துவதன் மூலம், உடலின் நீர்ச்சமநிலைக் காக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தமும் சீராகக் காணப்படுகின்றது. நாளொன்றுக்கு ஆண்கள் 3.7 லிட்டரும், பெண்கள் 2.7 லிட்டர் அளவிற்கு நீர் அருந்துவது அவசியமாகும்.
நிகோட்டினுக்குச் சொல்லுங்க BYE
சிகரெட், மெல்லும் புகையிலை என நிகோட்டின் எந்தவகையில் இருந்தாலும், அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். நிகோட்டின் வேதிப்பொருளானது, ரத்த நாளங்களில் தடைகளை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றது. இதன்காரணமாக, இதயம் சீராக இயங்குவது தடைபடுகிறது. இதனால் ரத்த அழுத்த விகிதம் அதிகரிக்கின்றது.
சிறந்த உறக்கம்
உறக்க நிகழ்வில் ஏற்படும் இடையூறுகள், ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உறக்க நிலையில் இருக்கும்போது, ரத்த அழுத்தம் குறைகின்றது. தினசரி 7 முதல் 8 மணிநேர உறக்கம் இன்றியமையாததாகும்.
இரத்த அழுத்த அளவீடுகளைக் கண்காணித்து, மாறுபாடுகள் இருப்பின், அதற்குரிய காரணங்களை ஆராய்ந்து, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக….