• Home/
  • PET CT/
  • மேமோகிராம் சோதனை – அறிந்ததும்… அறியாததும்!!!
A female doctor standing near a window looking at the mammogram film image showing the results of a mammogram test.

மேமோகிராம் சோதனை – அறிந்ததும்… அறியாததும்!!!

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பை, முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் சோதனையே, மேமோகிராபி(மார்பக ஊடுகதிர்ப் படச்சோதனை) ஆகும். இந்தச் சோதனையில், மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பெண்களிடத்தில், அவர்களின் மார்பகப் பகுதியில், குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி, அப்பகுதியில் உள்ள திசுக்களில் ஏதாவது அசாதாரண மாற்றங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியலாம். இதன்மூலம், மார்பகப் புற்றுநோயின் துவக்க நிலை அறிகுறிகள் தீவிரம் அடைவதற்கு முன்னரே, அவர்களை, இந்தப் பேராபத்திலிருந்து காக்கலாம்.

மார்பகப் புற்றுநோய் என்பது, பெண்களின் மார்பகப் பகுதியில் ஏற்படும் அசாதாரண மாற்றம் ஆகும்.

  • கட்டி
  • கொடூர வலி
  • முலைக்காம்பு பகுதியில் ஏற்படும் இடமாற்றம் உள்ளிட்டவையே, இதன் அறிகுறிகள் ஆகும்.

இந்த அறிகுறிகளை வைத்து, ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்பதை, மேமோகிராம் சோதனையின் மூலம் கண்டறியலாம்.

மேமோகிராபிசோதனைச் செயல்முறை

மார்பகப் புற்றுநோய் குறைபாடு காரணமாகச் சிகிச்சைக்கு வரும் நபரின் மார்பகப் பகுதியில், குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்கள் செலுத்தப்பட்டு, மேமோகிராம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேமோகிராம் சோதனையின் போது, எக்ஸ்ரே மெஷினில் அவரது மார்பகப் பகுதி படும்படியாகப் படுக்க வைக்கப்படுகிறார். பின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டு உள்ள சிறிய அமைப்பின் உதவியுடன், மார்பகப்பகுதி அமுக்கப்படுகிறது. எக்ஸ்ரே மெஷினில் வெளிவரும் கதிர்கள், எதிர்ப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ள டிடெக்டரின் மூலம் ஊடுருவுகிறது. இந்த டிடெக்டர், மின்னணு சமிக்ஞைகளை, கணினியில், டிஜிட்டல் படமாக மாற்றி அமைக்கிறது. இத்தகைய படங்களை, மேமோகிராம் என்று குறிப்பிடுகின்றனர்.

வலி உணர்வு

மேமோகிராம் சோதனையின் போது, ஒவ்வொரு மார்பகப்பகுதியும் சில விநாடிகளுக்கு அமுக்கப்பட வேண்டி இருப்பதால், அது சிலருக்கு வலி ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், இந்த வலி உணர்வானது, சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்பதால், இதற்கு நாம் அதிகம் பயப்பட வேண்டிய தேவை இல்லை. மேமோகிராம் சோதனையை, 20 நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம்.

மேமோகிராம் சோதனையின் போது, குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்களே, மார்பகப் பகுதியில் செலுத்தப்படுகிறது. செலுத்தப்படும் எக்ஸ்ரே கதிர்களின் அளவு, இயற்கைச் சூழ்நிலையில், 3 மாத கால அளவில், நம் உடலில் செலுத்தப்படும் எக்ஸ்ரே கதிரின் அளவிற்குச் சமம் ஆகும்.

மெமோகிராபியின் வகைகள்

மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே எளிதாகக் கண்டறிய உதவும் மேமோகிராம் சோதனையின் பயன்பாட்டைப் பொறுத்து இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

படச்சுருள் மேமோகிராம் சோதனை

படச்சுருள் மேமோகிராம் சோதனையில், கறுப்பு – வெள்ளை நிறங்களிலேயே நமக்குப் படங்கள் கிடைக்கின்றன. இந்தச் சோதனை, மிகவும் மெதுவாக நடைபெறும் சோதனை ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பே, இந்தச் சோதனை, புழக்கத்திலிருந்து விலகி விட்டது.

டிஜிட்டல் மேமோகிராம்

இந்த வகைச் சோதனையின் போது, சம்பந்தப்பட்ட நபரின் மார்பகப் பகுதியில், குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி, அப்பகுதி திசுக்களில் ஏற்பட்டு உள்ள அசாதாரண மாற்றம் அளவிடப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் டிஜிட்டல் படங்களைக் கொண்டு, புற்றுநோய் உள்ளதா அல்லது இல்லையா என்பதைக் கண்டறியலாம். குறைந்த அளவிலான எக்ஸ் கதிர்களே இங்குப் பயன்படுத்தப்படுவதால், இது மிகவும் பாதுகாப்பான சோதனையாகக் கருதப்படுகிறது.

நன்மைகள்

  • டிஜிட்டல் மேமோகிராம் சோதனையில் எடுக்கப்படும் படங்கள் எலெக்ட்ரானிக் முறையில் சேகரிக்கப்படுவதால், அதைக் கணினியில் மட்டுமல்லாது, கதிரியக்க நிபுணர்களும் பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.
  • முடிவுகள், ஒருவருக்குத் தவறாக அமையும் பட்சத்தில், அதை மற்றொருவரின் பார்வைக்கு எளிதாக அனுப்பி மறுமதிப்பீடு செய்யலாம்.
  • படச்சுருள் மேமோகிராம் சோதனையில் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிடும் போது, டிஜிட்டல் மேமோகிராம் சோதனையில் எடுக்கப்பட்ட படங்கள், அதிகக் கிளாரிட்டி உடன் உள்ளன
  • படச்சுருள் மேமோகிராம் சோதனை உடன் ஒப்பிடும் போது, டிஜிட்டல் மெமோகிராமில் குறைந்த அளவு (25 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே) கதிரியக்கம், மார்பகப் பகுதியில் செலுத்தப்படுகிறது.

டிஜிட்டல் மேமோகிராம் சோதனையின் போது எடுக்கப்படும் படங்கள், டிஜிட்டல் முறையில் கணினியிலேயே சேகரிக்கப்படுவதால், மறு பகுப்பாய்வுக்கும், எளிதாகப் பயன்படுத்தவும் வழிவகை ஏற்பட்டு உள்ளது

3D டிஜிட்டல் மேமோகிராம்

அமெரிக்காவில் 3D மற்றும் 2D மேமோகிராம் சோதனைகள் புழக்கத்தில் உள்ளன. இவ்விரு சோதனைகளும் ஒரே அளவிலான வழிமுறைகளையும், கால அளவையும் கொண்டு உள்ளது.

3D சோதனையில் மார்பகப் பகுதியின் முப்பரிமாண படங்களும், 2D சோதனையில் இரண்டு பரிமாண படங்களும் நமக்குக் கிடைக்கின்றன.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையால், 3D மேமோகிராம் சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும்பாலானோரால் மேற்கொள்ளப்படும் சோதனை முறையாக இது விளங்கி வருகிறது.

2D சோதனை முறைகளைக் காட்டிலும் 3D சோதனை முறையில், தவறான ரிசல்ட் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான மருத்துவமனைகள் 3D சோதனை முறையையே பின்பற்றி வருகின்றன. அமெரிக்காவின் வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில், 2D சோதனைக்கு ஆகும் கட்டணங்களையே, 3D சோதனைக்கு வசூலிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்மைகள்

  • 3D மேமோகிராம் சோதனையின் மூலம் புற்றுநோய் கண்டறியும் விகிதம் கணிசமான அளவு அதிகரிக்கிறது.
  • கூடுதல் சோதனைகளை மேற்கொள்வதற்கான தேவைகளைக் குறைக்கிறது.
  • மார்பகப் புற்றுநோய் மட்டுமல்லாது, மற்ற வகைப் புற்றுநோய்களையும் கண்டறிய உதவுகிறது.
  • தவறான முடிவுகள் வருவதைக் கட்டுப்படுத்துகிறது.
  • பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களிடையேயும், புற்றுநோய் கண்டறிதலை எளிதாக்குகிறது.

2020ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 2D மேமோகிராம் சோதனை உடன் ஒப்பிடும் போது, கூடுதலாக 1.5 மில்லியன் 3D மேமோகிராம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஸ்கிரீனிங் மேமோகிராம்

மார்பகப் புற்றுநோய் பாதிப்பைத் துவக்க நிலையிலேயே கண்டறிய உதவும் வழக்கமான எக்ஸ்ரே கதிரியக்கச் சோதனையே ஸ்கிரீனிங் மேமோகிராம் ஆகும்.

டயக்னாஸ்டிக் மேமோகிராம்

நீங்கள் 30 வயதிற்கு மேம்பட்டவராக இருந்தால், மேமோகிராம் சோதனையின் முடிவுகளில் மார்பகக் கட்டி, முலைக்காம்பு அமைப்பில் இடமாற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

வேறுபாடுகள்

ஸ்கிரீனிங் மேமோகிராம் மற்றும் டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனைகளின் வழிமுறைகள் முழுமையாக ஒத்து இருந்தாலும், சில வேறுபாடுகள் இருக்கததான் செய்கின்றன.

மேமோகிராம் சோதனையின் போது, மார்பகப் பகுதியின் மேல், கீழ்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்துவதற்கு முன்னால், அந்தப் பகுதிகளில் சிறிது அழுத்தம் ஏற்படும் வகையில் அமுக்கப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் படங்களை வைத்து, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்கிரீனிங் மேமோகிராம் சோதனையில், இந்த நிகழ்வு 10 முதல் 15 நிமிட கால அளவிலேயே முடிவடைந்து விடுகிறது. டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனையில், துல்லிய முடிவுகளைக் காணும் பொருட்டு, மேலும் கூடுதல் இடங்களில், மார்பகப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்படுவது உடன், தேவைப்படும் சில இடங்களில் உருப்பெருக்கம் செய்யப்பட்டுப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

டயக்னாஸ்டிக் மெமோகிராமின் சோதனை மேற்கொள்ளும் பட்சத்தில், அதன் முடிவுகள் அன்றைய தினமே, நமது கைக்கு வந்துவிடும், அப்போதுதான், இந்த விவகாரத்தில், அடுத்து நாம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதை நாம் முடிவு செய்ய முடியும்.

ஸ்கிரீனிங் மேமோகிராம் சோதனையின் முடிவுகள் நமது கைகளுக்குக் கிடைக்கச் சில நாட்கள் கூட ஆகலாம். ஸ்கிரீனிங் மேமோகிராம் சோதனையை ஒப்பிடும் போது, டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனை முடிவுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட பெண்கள், மார்பகப் புற்றுநோய்

பாதிப்பிற்கான அறிகுறிகள் தங்களது உடலில் தென்படவில்லை என்றாலும், அவர்கள் ஆண்டிற்கு ஒருமுறை, மேமோகிராம் சோதனைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

மேமோகிராம் சோதனையின் போது, ஏதாவது அசாதாரண மாற்றங்கள் கண்டறியப்பட்டால், உங்க்ளுக்கு, மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் உடனடியாக, அதற்காக உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகி எந்த வகை மேமோகிராம், உங்களுக்கு உகந்தது என்பதை அறிந்து கொண்டு, அதற்காக, நீங்கள் உங்களைத் தயார்ச் செய்து கொள்ள வேண்டும்.

தயாராவது எப்படி?

எந்தவொரு நிகழ்வும் வெற்றி அடைய வேண்டும் என்றால், அதற்காக நாம் முன்கூட்டியே, தயார் நிலையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அதேபோல, மேமோகிராம் சோதனைக்கும், நாம் தயார்ச் செய்துகொள்வது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
மேமோகிராம் சோதனைக்கு எவ்வாறு தயார்ச் செய்வது என்பது குறைத்து விரிவாகக் காண்போம்…

Image of mammogram test result on shown on multiple windows of a desktop.

மார்பகப் பகுதியில் வலி அல்லது மாற்றங்கள்

  • உங்கள் மார்பகப் பகுதியில் சமீபகாலமாக வலி·
  • மார்பகத்தின் வடிவம், அளவு அதன் தன்மையில் வேறுபாடு·
  • மார்பகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் கட்டி

என ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர்ந்தால், உடனடியாக, மருத்துவரிடம், இதுகுறித்துத் தெரிவிக்கவும். மருத்துவர், உங்களுக்கு டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனையைப் பரிந்துரைச் செய்வார்.

மார்பகப் பகுதியில் வரும் கட்டி அல்லது மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மார்பகப் பகுதியில் கட்டி இருக்கும்பட்சத்தில், உடனடியாக, அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.

சரியான மையத்தைத் தேர்வு செய்தல்

நீங்கள் டயக்னாஸ்டிக் மேமோகிராம் சோதனைக்குப் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில், 3D மேமோகிராம் சோதனைகள் போன்ற நவீன வசதிகளுடன் கூடிய அதே சமயம் நாள் ஒன்றிற்கு அதிக எண்ணிக்கையில் மேமோகிராம் சோதனைகளை மேற்கொள்ளும் மையத்தைத் தேர்ந்து எடுப்பது அவசியம் ஆகும்.

பெண்களே கவனம்…

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்தின் போது இயற்கையிலேயே ஏற்படும் ஹார்மோன் சுரத்தலில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளினால், அவர்களது மார்பகப் பகுதி வீக்கம் அடைந்தோ அல்லது தளர்ந்தோ காணப்படும். எனவே, இத்தகைய தருணங்களில், மேமோகிராம் சோதனை மேற்கொள்வதைத் தவிர்த்து, மாதவிடாய் சுழற்சி காலத்திற்குச் சில நாட்கள் முன்பாகவோ அல்லது, அதற்குப் பின்னரோ, மேமோகிராம் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

40 மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள், மேமோகிராம் போன்ற சோதனைகளை ஆண்டிற்கு ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, 45 முதல் 49 வயதிற்கு உட்பட்ட பெண்கள், வருடாந்திர மார்பகப் புற்றுநோய் பரிசோதனைச் செய்து கொள்வது கட்டாயம் என்று அமெரிக்கப் புற்றுநோய் சொசைட்டி பரிந்துரைச் செய்து உள்ளது.

40 முதல் 49 வயது வரையிலான பெண்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேமோகிராம் சோதனையைச் செய்து கொள்வது நல்லது என்று, அமெரிக்க மருந்தாளுநர்கள் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் வாசிக்க : மேமோகிராம் – BIRADS மதிப்பெண்ணின் முக்கியத்துவம்

யாருக்கு அதிகப் பாதிப்பு?

50 முதல் 54 வயதிற்கு உட்பட்ட பெண்கள், ஆண்டிற்கு ஒரு முறையும் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மேமோகிராம் சோதனையைச் செய்து கொள்ள அமெரிக்க முன்னணி மருத்துவத் துறை நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. 70 முதல் 74 வயது வரையிலான பெண்களுக்கு, மேமோகிராம் சோதனைப் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • 40 வயது (அதற்குக் குறைவானவர்கள் அல்ல) மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள், பரிசோதனையைத் துவக்க வேண்டும்.
  • மேமோகிராம் சோதனை மட்டுமல்லாது, எம் ஆர் ஐ ஸ்கேனும் எடுக்க வேண்டும்.·
    வருடாந்திரச் சோதனை மேற்கொள்வது நல்லது
  • உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த மேமோகிராம் சோதனையை ஆண்டிற்கு ஒருமுறைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவர்கள், வருடாந்திர மேமோகிராம் சோதனை உடன் எம் ஆர் ஐ ஸ்கேனையும் எடுப்பது நல்லது. பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் அதிகப் பாதிப்பு இருக்கும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

BI-RADS மதிப்பு

மேமோகிராம் சோதனையின் முடிவுகள் நமக்குக் கிடைக்க 10 முதல் 15 நாட்களாவது ஆகும். அதுவரை, சோதனையின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு நம்முள் இருந்து கொண்டே இருக்கும்.

அமெரிக்காவின் கதிரியக்கக் கல்லூரி, 1980ஆம் ஆண்டு முதல், மார்பகப் பட அறிக்கை மற்றும் தரவு அமைப்பு (BI-RADS)

முறையிலேயே, மேமோகிராம் சோதனை முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

மேமோகிராபிசோதனையின் முடிவுகளை, கதிரியக்க நிபுணர்கள், (BI-RADS) மதிப்பை 0 முதல் 6 என்ற இலக்கங்களாலேயே குறிப்பிட்டு வருகின்றனர். இந்தக் குறிப்பிட்ட இலக்கங்களின் மூலம், மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதைத் துறைச் சார்ந்த மருத்துவர்களும், கதிரியக்க நிபுணர்களும் புரிந்து கொண்டு, நமக்குச் செய்ய வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து முடிவு செய்து வருகின்றனர்.

BI-RADS மதிப்பு 0 எனில், கதிரியக்க நிபுணரால் ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை என்றும், மீண்டும் ஒருமுறை மேமோகிராம் அல்லது சோனோகிராம் சோதனை மேற்கொள்ளப் பரிந்துரைச் செய்வார்.

BI-RADS மதிப்பு 1 எனில், மார்பகப் பகுதியில் எவ்வித அசாதாரண மாற்றங்களும் இல்லை என்று அர்த்தம்.

BI-RADS மதிப்பு 2 எனில், மார்பகப் பகுதியில் கால்சியம் படிவுகள் அல்லது சிறு கட்டிகள் இருப்பதாகப் பொருள். இருந்தபோதிலும், இவைப் புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பது நிம்மதி தரும் அம்சம் ஆகும்.

BI-RADS மதிப்பு 3 எனில், மார்பகப் பகுதியில் சிறு கட்டிகள் உள்ளன. இருந்தபோதிலும் அவை, புற்றுநோய் கட்டிகள் அல்ல. இருப்பினும், 6 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை மேமோகிராம் சோதனையை மேற்கொள்ளப் பரிந்துரைக்கின்றனர்,

BI-RADS மதிப்பு 4 எனில், மார்பகப் பகுதியில் அசாதாரண மாற்றங்கள் தென்படுகின்றன. இது புற்றுநோய் பாதிப்பு ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. தேவைப்பட்டால், பயாப்ஸி எனப்படும் திசுப் பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும்.

BI-RADS மதிப்பு 5 எனில், மார்பகப் பகுதியில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இது 95 சதவீதம் புற்றுநோய் கட்டி ஆக உருமாற வாய்ப்பு உள்ளதால், பயாப்ஸி சோதனைச் செய்து கொள்வது அவசியம் ஆகும்.

BI-RADS மதிப்பு 6 எனில், மார்பகப் பகுதியில், புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேமோகிராம் சோதனை ஏன் சிறந்தது?

மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே எளிதாகக் கண்டறிய மேமோகிராம் சோதனைப் பேருதவி புரிகின்றது. இதன்காரணமாக, புற்றுநோயின் பாதிப்பு தீவிரம் அடைவத்ற்கு உள்ளாக, நாம் சிகிச்சைகளைத் துவங்கி விரைவிலேயே, மார்பகப் புற்றுநோய் என்ற அரக்கனிடம் இருந்து விடுதலைப் பெற்று விடலாம். இதன்மூலம், புற்றுநோயின் காரணமாக ஏற்படும் இறப்புகளின் விகிதத்தையும் பெருமளவு கட்டுப்படுத்தலாம்.

மேமோகிராம் சோதனையின் போது, சில வகைப் புற்றுநோய் கட்டிகளை அடையாளம் காண முடியாத நிலை உள்ளதால், சில தவறான முடிவுகளும் அவ்வப்போது வருகின்றன.

இருப்பினும், மேமோகிராம் சோதனையின் முடிவுகள் 87 சதவீதம் துல்லியம் உடையதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தக் கட்டுரை, உங்களுக்கு மேமோகிராம் சோதனைத் தொடர்பான முழுமையான புரிதல்களை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறோம்…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.