மேமோகிராம் – BIRADS மதிப்பெண்ணின் முக்கியத்துவம்
மார்பகப் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனைகளான மேமோகிராம் (மார்பக ஊடுகதிர்ப் படச்சோதனை), அல்ட்ரா சவுண்ட் சோதனை மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் சோதனைகளின் முடிவுகள், மார்பகப் பகுதி பட அறிக்கை மற்றும் தரவு அமைப்பு எனப்படும் BIRADS குறியீட்டு மதிப்பெண்களாகவே வழங்கப்படுகின்றன.
மேமோகிராம் சோதனை, அல்ட்ரா சவுண்ட் சோதனை மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் சோதனைகளின் முடிவுகள், எழுத்துப்பூர்வமாக, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதால், அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள், கதிரியக்க நிபுணர்கள் உள்ளிட்டோர், இந்த BIRADS குறியீட்டு மதிப்பெண் முறைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினர்.
இந்த BIRADS குறியீட்டு மதிப்பெண் முறையின் மூலம், மார்பகப் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறி உள்ளதா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது.
BIRADS குறியீட்டு மதிப்பெண் முறை
BIRADS குறியீட்டு மதிப்பெண் முறையில் முடிவுகள் 0 முதல் 6 என்ற இலக்கங்களைக் கொண்டதாக உள்ளது.
பிரிவு 0
மதிப்பீடு : கூடுதலாகச் சில படங்களைக் கொண்டு ஒப்பீடு செய்ய வேண்டும்.
இதன்மூலம் அறிவது : BIRADS குறியீட்டு முறையில், இத்தகைய மதிப்பெண் கிடைத்து இருந்தால், கதிரியக்க நிபுணர், இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகளின் படங்களை ஒப்பீடு செய்ய வேண்டும். இல்லையெனில், கூடுதல் படங்களைப் பெறும் நோக்கில், மீண்டும் ஒருமுறை மேமோகிராம் சோதனை அல்லது அல்ட்ரா சவுண்ட் சோதனையை மேற்கொள்ள அறிவுறுத்துவார்.
இந்தக் குறியீட்டு மதிப்பெண் வந்தால், கூடுதல் படங்களைக் கொண்டு ஒப்பீடு செய்தல் அவசியம் ஆகும்.
பிரிவு 1
மதிப்பீடு : நெகட்டிவ்
அறிவது : அசாதாரண மாற்றங்கள் அல்லது குறிப்பிடும்படியான எவ்வித மாற்றங்களும் காணப்படவில்லை
வழக்கமான ஸ்கிரீனிங் மேமோகிராம் சோதனைகளைத் தொடர வேண்டும்.
பிரிவு 2
மதிப்பீடு : புற்றுநோய் அல்லாத கட்டிகள் அடையாளம் கண்டுபிடிப்பு
அறிவது: கால்சியம் படிவுகள் உள்ளிட்ட புற்றுநோய் அல்லாத கட்டிகள் இருப்பதைக் கண்டறிதல்.
வழக்கமான ஸ்கிரீனிங் மேமோகிராம் சோதனைகளைத் தொடர வேண்டும்.
மேலும் வாசிக்க : ஸ்கிரீனிங் – டயக்னாஸ்டிக் மேமோகிராம் : வேறுபாடுகள்
பிரிவு 3
மதிப்பீடு : புற்றுநோய் அல்லாத கட்டிகள்
அறிவது : தற்போதைய நிலையில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அடுத்த மேமோகிராம் சோதனையின் போது, இவற்றில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
6 மாத கால அளவில் மேமோகிராம் சோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பிரிவு 4
மதிப்பீடு : அசாதாரண மாற்றங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன
அறிவது : இந்த அசாதாரண மாற்றங்கள், புற்றுநோய் கட்டிகளாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
தேவைப்பட்டால் பயாப்ஸி எனப்படும் திசுப் பரிசோதனைச் செய்யப் பரிந்துரை.
பிரிவு 5
மதிப்பீடு : புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அறிவது: அடையாளம் காணப்பட்டு உள்ள கட்டிகள், புற்றுநோய் கட்டிகளாக இருக்க அதிக வாய்ப்பு.
பயாப்ஸி சோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
பிரிவு 6
மதிப்பீடு : பயாப்ஸி சோதனையில் புற்றுநோய் இருப்பது உறுதி
அறிவது : மேமோகிராம் சோதனையில் புற்றுநோய் கட்டிகள் அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில், பயாப்ஸி சோதனையில் அது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மார்பகப் புற்றுநோய் பாதிப்பிற்கான சிகிச்சையை உடனடியாகத் துவங்குவது நல்லது.
BIRADS குறியீட்டு மதிப்பெண் முறை, மார்பகப் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறி உள்ளதா, இல்லையா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடிவதால், பெண்களிடையே, இதற்கு வரவேற்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.