நோய்ப்பாதிப்பைத் தடுக்க உதவும் மரபணுச் சோதனைகள்
டி.என்.ஏ.வில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மையால் உடலில் உண்டாகும் பாதிப்பே மரபணுக் குறைபாடு ஆகும்.பெற்றோரிடம் காணப்படும் பண்புகள் மட்டுமல்லாது, அவர்களிடையே காணப்படும் நோய்ப் பாதிப்புகளும், அவர்களது சந்ததிக்குக் கடத்தப்படலாம். மரபணுக் குறைபாடுகளைக் குணப்படுத்த இயலாது என்றபோதிலும், அதனைக் குறிப்பிட்ட வழிமுறைகளின் உதவியால், கட்டுப்படுத்த இயலும். மரபணுக் குறைபாடுகள், சிறு குழந்தைகளின் இறப்பு நிகழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில், மரபணுக் குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்து வருகிறது. தனியார் அறக்கட்டளைச் சார்பில் 2006ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுமுடிவுகளின்படி, இந்தியாவில் 1000 குழந்தைகளுக்கு, 64.4 குழந்தைகளுக்குப் பிறப்புக் குறைபாடு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சிறு குழந்தைகள், மரபணுக் குறைபாடுகளுக்கு அதிகமாகப் பாதிக்கப்படும் நிலையில், பெற்றோரின் மரபணுவை முன்கூட்டியே ஆராய்வது அவசியமானதாகிறது. பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்னதாகவோ, அல்லது திருமணத்திற்கு முன்பாகவே ஆணும், பெண்ணும் மரபணுப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலமாகவே, எதிர்காலத்தில் ஆரோக்கியமான குழந்தைப் பிறத்தலை உறுதி செய்ய முடியும் என்ற நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். நெருங்கிய உறவிற்குள் திருமணம் செய்யும் பட்சத்தில், பிறக்கும் குழந்தைகள், ஏதாவதொரு குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை அறிந்தபின்னரும், அதே தவறை, நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருவது தான் சோகமான விசயம் ஆகும்.
மரபணுக் குறைபாடுடனான குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெற்றோர் ஆரோக்கியமானவர்களாக இருக்கும் போது, அவர்களின் மரபணுவில், ஏதாவது பிறழ்வு நிகழும் போது, மரபணுக் குறைபாட்டுடனான குழந்தை அவர்களுக்குப் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது. மக்களிடையே மரபணுக் குறைபாடுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே, மரபணு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.
பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவர். பெற்றோர்களின் மரபணுவில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய கேரியர் மரபணுச் சோதனை எனப்படும் CGT சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சோதனையின் மூலம், மரபணுக் குறைபாடு கொண்ட குழந்தைப் பிறப்பு தடுக்கப்படுகிறது.
மரபணு நோய் அபாயம்
மரபணுக்கள், பெர்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு, பாரம்பரியமாகக் கடத்தப்படுகின்றன. இதன்காரணமாக, குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், பொதுவான ஜீன்கள் தொகுப்பு காணப்படுகின்றன. மரபணுக்களில் ஏதேனும் பிறழ்வு நிகழ்ந்து இருப்பின், அது நீரிழிவுப் பாதிப்பு, உடல் பருமன், இதய நோய்கள், தைராய்டு பாதிப்பு, சினைப்பை நோய்க்குறி, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
மரபணு சார்ந்த நோய்ப் பாதிப்புகள் குறித்து அறிதலை மேற்கொண்டு, நமக்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்படும்பட்சத்தில், அந்தத் தகவல்களை, மருத்துவ நிபுணரிடம் பகிர்வதன் மூலம், நோய்க் கண்டறிதல் மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் எளிதாகும். சரியான நேரத்தில், உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்வதே, ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான துவக்கப் புள்ளியாக அமையும்.
மேலும் வாசிக்க : இயல்பான மற்றும் அசாதாரண நடத்தைகள்
தீர்வு இதுதான்
சர்வதேச அளவில், மரபணுச் சோதனையானது மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆரோக்கியமாக உள்ள ஒரு நபரை, மரபணுச் சோதனைக்கு உள்ளாக்கும் போது, அது அவரது மரபணு நிலைகளின் முன்கணிப்புகளைச் சரிபார்க்க உதவுகிறது. உதாரணமாக, நோய்ப் பாதிப்புகள், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறைக் காரணிகளில் மரபணு மாறுபாட்டின் அடிப்படையிலான பாதிப்புகளை முன்கூட்டியே அறிய இயலும்.
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைக்கான மரபணுச் சோதனைப் பயனுள்ளதாக இருக்கிறது. இது நாம் ஆரோக்கியமாக இருக்க உதவும் உணவு வகைகள் மற்றும் மரபணுக்களுடன் இணக்கமான உணவுகள் குறித்த தகவல்களை அளிக்கிறது.இதன்மூலம் உடல் எடை விவகாரத்தில், விரும்பத்தக்க இலக்குகளை அடைய பேருதவி புரிகிறது. இத்தகைய உணவுப் பரிந்துரைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்கிறது, உடல் அமைப்பை மேம்படுத்துகிறது, உணவுமுறைச் சார்ந்த நோய்களின் ஆபத்தைக் குறைக்க உதவுகின்றன.
உடற்பயிற்சி தொடர்பான மரபணு அறிக்கைகள், நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்ப, உங்கள் உடல் மேற்கொள்ளும் சகிப்புத்தன்மைக் குறித்த தகவலை வழங்குகின்றது.
ஒரே ஒரு மரபணுச் சோதனையின் மூலம், அத்தனை நன்மைகளையும் பெற முடியும் எனில், இன்னும் ஏன் தயக்கம். உடனடியாக, நன்கு தேர்ந்த நிபுணரை அணுகி மரபணுச் சோதனை மேற்கொள்ளுங்கள். இதன்மூலம் ஆரோக்கியமான வாழ்வை முன்கூட்டியே கணித்து வாழத் துவங்குங்கள்.