முதல் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு – ஒரு ஒப்பீடு
நீரிழிவுப் பாதிப்பானது, சர்வதேசப் பிரச்சினையாக உருமாறி உள்ளது. உலக அளவில், மில்லியன்கள் அளவிலான மக்கள், இதன் பிடியில் சிக்கி உள்ளனர் என்பதே, அதிர்ச்சியளிக்கும் விசயம் ஆகும். நீரிழிவுப் பாதிப்பை, சிலர்த் தொற்றுநோய் என விளக்கின்றனர். ஆனால், அது மிகவும் தவறான கருத்து ஆகும். நீரிழிவுப் பாதிப்பு என்பது ஒரு நாள்பட்ட நோய் என்பதே சரி ஆகும். இது ரத்தத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு சர்க்கரைக் கொண்டுள்ள நிகழ்வு ஆகும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவல்ல இன்சுலின் ஹார்மோனின் போதிய சுரப்பு இல்லாமையால், இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது. உடலில் போதிய அளவிலான இன்சுலின் ஹார்மோன் சுரந்தாலும், அதை உடல் செல்கள் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலும், நீரிழிவுப் பாதிப்பு உருவாகின்றது.இதன்காரணமாக, உடல் பருமன் மற்றும் ஹைபர்டென்சன் எனப்படும் உயர்ரத்த அழுத்த பாதிப்பும் ஏற்படுகின்றன.இந்த நிலையில், உடலில் நல்ல கொழுப்புகளின் அளவு சரிவடைந்து, டிரைகிளிசரைட்ஸின் அளவு அதிகரிக்கிறது. இந்த டிரைகிளிசரைட்ஸ், உடலின் ஆரோக்கியச் சீர்கேட்டிற்குக் காரணமாக அமைகின்றன.
நீரிழிவுப் பாதிப்பின் வகைகள்
முதல் வகை நீரிழிவுப் பாதிப்பு
இந்தப் பாதிப்பு, இன்சுலின் சார்பு பாதிப்பு என்றும், சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வகைப் பாதிப்பு உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும், கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செல்களையும் பாதிக்கிறது.இதன்மூலம், இன்சுலின் சுரப்பு குறைவாகவோ அல்லது சுரப்பு முற்றிலும் தடைபடுகிறது. உடலின் ஆற்றல் தேவைக்காக, இன்சுலின் அவசியமாகின்றது. இன்சுலின் விவகாரத்தில் பாதிப்பு நிகழும்போது, குளுக்கோஸ் மட்டும் ரத்தத்தில் அதிகளவில் கலக்கின்றது. இதன்காரணமாக, இரத்தத்தில், சர்க்கரையின் அளவு அதிகரிக்கின்றது. இதன்விளைவாக, நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுகின்றது.
இந்த வகைப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளவர்களுக்கு, இன்சுலினை, ஊசி மூலம் தினமும் உடலில் செலுத்திக் கொள்வது அவசியமாகிறது. இப்பாதிப்பு கொண்டவர்களின் கணையமும் பாதிப்பு அடைகின்றன. புற்றுநோய்ப் பாதிப்பின் காரணமாக, கணையம் அகற்றப்பட்டவர்களுக்கு, இவ்வகைப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் ஆகும்.
பாதிப்பிற்கான காரணம்
முதலாம் வகை நீரிழிவுப் பாதிப்பிற்கான உண்மையான காரணம் இதுவரை மருத்துவத்துறையில் கண்டறியப்படவில்லை. எனினும், மரபியல் மற்றும் சுற்றுப்புறக் காரணிகளால் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வகைப் பாதிப்பிற்கு, சில வகை வைரஸ்களும் துணைபுரிவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அறிகுறிகள்
பார்வை மங்குதல்
அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
அதீதப் பசி உணர்வு மற்றும் தாகம்
மனநிலையில் அடிக்கடி மாற்றம், எரிச்சல் உணர்வு
சோர்வு உணர்வு மற்றும் உடல் பலவீனம்
திடீரென உடல் எடைக் குறைதல்
சிகிச்சை
முதலாம் வகை நீரிழிவுப் பாதிப்பிற்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்துவதே ஒரே சிகிச்சை முறையாகும்.இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், தினசரி குறைந்தது 4 முறை, ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். முதலாம் வகை நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கார்போஹைட்ரேட் அதிக உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் கார்போஹைட்ரேட் உணவின் பயன்பாடும் கண்காணிக்கப்படுகிறது.
இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு
இந்தப் பாதிப்பு,இன்சுலின் சாராத பாதிப்பு என்றும் வயதுவந்தோருக்கான நீரிழிவுப் பாதிப்பு என்று வரையறுக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள், இந்த வகைப் பாதிப்பினால் அவதியுற்று வருகின்றனர். முன்னொரு காலத்தில், வயதானவர்களுக்கு மட்டுமே வந்து கொண்டிருந்த, இந்தப் பாதிப்பானது, தற்போதைய நிலையில் இளைய சமுதாயத்தினருக்கே அதிகமாக வருகிறது. கணையத்தின் செல்கள் போதிய இன்சுலினைச் சுரக்கும் போதிலும், உடல் செல்கள் அதைப் பயன்படுத்த முடியாததால் இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாகிறது.
கணையம், இன்சுலின் ஹார்மோன் சுரப்பில் ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த சில ஆண்டுகளாக, அதன் அளவு பெருமளவு குறைந்து விட்டதாகவும், இதன்காரணமாக, நீரிழிவுப் பாதிப்பிற்கு, பெரும்பாலானோர் உள்ளாகி வருவதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தப் பாதிப்பு தீவிரம் அடையும் நிலையிலேயே, பாதிப்பு இருப்பதையே, பெரும்பாலானோர் உணர்கின்றனர்.
பாதிப்பிற்கான காரணம்
மரபியல் காரணிகள் மற்றும் வாழ்க்கைமுறையில் மேற்கொள்ளும் மாற்றங்களின் மூலம், இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாவதன் காரணமாக, இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக உடல் எடை, போதிய அளவிலான உடற்பயிற்சி மேற்கொள்ளாதது, பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிகச் சர்க்கரைக் கொண்ட உணவு வகைகளின் அதிக நுகர்வு, ஆரோக்கியமற்ற உணவுமுறை உள்ளிட்ட காரணிகளாலும், இந்த வகைப் பாதிப்பு ஏற்படுகின்றது.
அறிகுறிகள்
அதீதத் தாக உணர்வு
அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
எளிதில் குணமாகாத தோல் பாதிப்புகள்
உடல் எடைக் குறைதல்
கண் பார்வை மங்குதல்
குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு
அதிக அசதி மற்றும் பலவீனம்
எரிச்சல் மனநிலை
சிறுநீர்ப்பையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்
கை, கால்கள் மரத்துப் போதல்
உள்ளிட்டவை இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
சில தருணங்களில், இந்த அறிகுறிகள் தென்படாமலும் இவ்வகைப் பாதிப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க : தனிப்பட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியமா?
சிகிச்சை முறைகள்
இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பிற்கு, பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் புழக்கத்தில் உள்ளன. உணவுமுறையைக் கண்காணித்தல், உடற்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல், உடல் எடையைக் குறைத்தல் உள்ளிட்ட வழிமுறைகள் உதவிபுரிகின்றன. இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் வகையிலான மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருத்துவமுறைப் பலனளிக்காத போது, இன்சுலின் ஊசிகள் தேவைப்படுகின்றன.
நீரிழிவுப் பாதிப்பு உடையவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுமேயானால், அது இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு, தோல் பாதிப்புகள், நரம்பு சம்பந்தமான பாதிப்புகள், கால்களில் புண்கள், கண்பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கும், எடுத்துக்கொள்ளும் இன்சுலின் அளவைத் தீவிரமாகக் கண்காணிப்பதற்கும், மருத்துவ நிபுணரைக் கலந்தாலோசிப்பது அவசியமாகும்.
உலகை அச்சுறுத்தும் நீரிழிவுப் பாதிப்பைத் தடுப்பு வழிமுறைகள் மூலம் எதிர்கொண்டு, நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் வளமாக வாழ்வோம்.