ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆயுளை நீட்டிக்குமா?
நாம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுவது மட்டுமல்லாது, நமது ஆயுட்காலமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, பிரிட்டிஷ் மருத்துவ ஜெர்னலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாமை, போதிய அளவிலான உறக்கம், ஆரோக்கியமான உணவுமுறை, வழக்கமான உடல் செயல்பாடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளின் மூலம், நாம் நமக்குச் சாதகமான வாழ்க்கைமுறையைச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும்.
மனிதர்களின் ஆயுட்காலத்தைப் பாதிக்கும் காரணிகளாக மரபணுக்கள் மற்றும் வாழ்க்கைமுறை உள்ள நிலையில், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை நிகழ்வானது, அவர்கள் முன்கூட்டியே மரணிக்கும் வாய்ப்பை 78 சதவீதம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
குறைந்த வாழ்நாள் அல்லது அகால மரணத்தின் மரபணு ஆபத்துகளை, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் மூலம், 60 சதவீதத்திற்குக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும் வாசிக்க : உங்கள் வாழ்க்கைமுறை மற்றவர்களைப் பாதிக்கிறதா?
ஆராய்ச்சியின் முடிவுகள் சொல்வது என்ன?
2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு பங்கேற்பாளரின் ஆயுட்காலத்திற்கான மரபணு முன்கணிப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. உணவுமுறை மற்றும் உறக்க நடைமுறைகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறைக் காரணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
குறைந்த ஆயுட்காலம் தொடர்பான மரபணு ஆபத்து கொண்ட 40 வயது நபர்கள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைத் தொடங்கும்பட்சத்தில், அவர்களின் ஆயுட்காலம் சுமார் 5.5 ஆண்டுகள் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
நடுத்தர வயதைத் தொடுவதற்கு முன்பே, நாம் சாதகமான வாழ்க்கைமுறைப் பழக்கவழக்கங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால், அது ஆயுட்காலத்தைக் குறைக்கவல்ல மரபணுக்களின் விளைவுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளாக அமையும் வாய்ப்பு உள்ளது.
சாதகமான வாழ்க்கைமுறையை, ஒரு பொருட்டாகக் கருதாமல், குறைந்த ஆயுட்காலத்திற்கான மரபணுக்களைக் கொண்டவர்கள், சாதாரணமான ஆயுட்காலத்தைக் கொண்டவர்களோடு ஒப்பிடும்போது, 21 சதவீத அளவிற்கு விரைவாக மரணத்தைத் தழுவுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மரபணுக் குறைபாடுகள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைக் கொண்டவர்கள், நீண்ட ஆயுட்காலம் கொண்டவர்களை விட இரண்டு மடங்கு விரைவாக மரணமடைகின்றனர்.
மனிதர்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதில், மரபணுக்காரணிகளின் பங்கு அளப்பரியது ஆகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மரபணுக்காரணிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்து உள்ளனர்.
குறைந்த ஆயுட்காலத்திற்குக் காரணமான மரபணுக் காரணிகளின் தாக்கத்தைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றி, ஆயுட்காலத்தை அதிகரித்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…