கற்றல் குறைபாடுகளை நிர்வகிக்கும் முறைகள்
குழந்தைகளிடையே ஏற்படும் கற்றல் குறைபாடுகள், அவர்களின் கல்விப்பாதையில் குறிப்பிடத்தக்கத் தடைக்கற்களை வைக்கின்றன. இந்தக் குறைபாட்டை, சரியான புரிதல், அணுகுமுறையுடன் நிர்வகித்து, சமாளிக்க இயலும். கற்றல் குறைபாடுகள் என்றால் என்ன, அது எவ்வாறு அவர்களின் கற்றல் அனுபவங்களைப் பாதிக்கின்றன என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மட்டுமே பாதிப்பிற்கான சிகிச்சை நடைமுறையைத் துவங்க முடியும்.
கற்றல் குறைபாடுகள்
குழந்தைகள் கற்றலுக்குத் தேவையான திறன்களைப் பெற இயலாத நிலையே கற்றல் குறைபாடு ஆகும். வாசித்தல், எழுதுதல், புரிந்து கொள்ளுதல், தகவல்தொடர்பு உள்ளிட்டவைகளில் இந்தக் குறைபாடு கொண்ட குழந்தைகள் மிகுந்த சிரமப்படுவார்கள். கற்றல் குறைபாடுகளின் அறிகுறிகளை, பெற்றோர்கள் அங்கீகரிப்பது அவசியம் ஆகும். இதன்மூலம், அவர்கள் தங்களது குழந்தைக்குப் பொருத்தமான ஆதரவையும், தலையீட்டையும் வழங்க இயலும்.
கற்றல் குறைபாடுகளை அடையாளம் காணுதல்
கற்றல் குறைபாடுகளை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், சரியான நேரத்தில் தலையிட்டு அதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்துவதற்கும், அவர்களின் கல்விப் பயணத்தில் வெற்றிக்கனியை ருசிப்பதற்கும் முக்கியப்பங்கு அளிக்கிறது. பெற்றோர்கள் கற்றல் குறைபாடுகளின் அறிகுறிகளை அறிந்திருக்க வேண்டும். கல்வி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான போராட்டங்கள், அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதில் சிரமங்கள், மோசமான திறன்கள், கற்றல் நடவடிக்கைத் தொடர்பான விரக்தி மற்றும் பதட்டம் ஆகியவை முக்கிய அறிகுறிகள் ஆகும்.இந்த அறிகுறிகளை, குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கீகரிப்பதன் மூலம், அவர்களின் கற்றல் நிகழ்வில் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்திச் செய்யும் வகையிலான தொழில்முறையிலான மதிப்பீடுகளும் மேற்கொள்ளலாம்.
அறிகுறிகள்
குழந்தைகளிடையே காணப்படும் கற்றல் குறைபாடுகளின் பொதுவான அறிகுறிகளாவன:
- வாசித்தல் மற்றும் எழுதுவதில் சிரமங்கள்.
- வழிமுறைகளைப் பின்பற்றுவதில் சிக்கல்கள்.
- கவனச்சிதறல்களின் காரணமாக, ஈடுபாடு குறைதல்.
- மனக்கிளர்ச்சி ஏற்படுதல்.
- கைகள் – கண்கள் ஒருங்கிணைப்பில் சிரமம்.
- உணர்வுகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிக்கல்.
- தெளிவற்ற கையெழுத்து.
கற்றல் குறைபாடுகளின் வகைகள்
டிஸ்லெக்ஸியா
இது மொழிச் சார்ந்த இயலாமைப் பாதிப்பாக வரையறுக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு, எழுதப்பட்ட சொற்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் நிலவுகிறது. வாசித்தல், எழுதுதல், எழுத்துக்கூட்டி படித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், இந்தப் பாதிப்பு கொண்ட குழந்தைகள் அதிகம் சிரமப்படுவர். டிஸ்லெக்ஸியா பாதிப்பு, வாசிப்பு குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள்
- புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுதல்
- வாசிப்பதில் சுணக்கம் ஏற்படுதல்
- எழுத்துகளைப் பிழையுடன் எழுதுதல்
- எழுத்துக்கூட்டி படிப்பதில் அதீதச் சிரமம்
வாசித்தல் பெரிய வேலையாக அவர்கள் கருதுவதால், பெரும்பாலும், அதனைத் தவிர்க்க முற்படுவர்.
டிஸ்கால்குலியா
இது குறிப்பாக, கணிதப் பாடத்தில் நிகழும் இயலாத நிலையைக் குறிக்கிறது. இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, எண்கணிதம் மற்றும் கணிதக் கருத்துகளில் சிக்கல்கள் நிலவுகின்றன.
அறிகுறிகள்
- எண்களை அடையாளம் காண்பதில் சிக்கல்கள்
- கூட்டல், கழித்தல், பெருக்கல் அட்டவணைகள் மற்றும் வகுத்தல் உள்ளிட்ட கணிதச் செயல்பாடுகளைக் கற்றுக்கொள்வதில் சிரமம்
- வடிவங்களைப் பகுப்பாய்வு செய்வதில் சுணக்கம் நிலவுதல்
டிஸ்கிராபியா (Dysgraphia)
இந்தக் குறைபாடு, எழுதுதல் பாதிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. கடிதங்களை எழுதுதல் அல்லது வரையறுக்கப்பட்ட இடத்திற்குள் எழுதுவது, இந்தப் பாதிப்பு உடையவர்களுக்கு மிகுந்த சிரமம் ஆகும். எண்ணங்களை, எழுத்துகளாக மாற்றுவது, இவர்களுக்குச் சவாலான நிகழ்வு ஆகும்.
அறிகுறிகள்
- நேர்க்கோட்டில் எழுதுவதைக் கடினமாக உணர்வர்
- எழுத்துகளைத் தலைகீழாக எழுதுவர்
- பேனா அல்லது பென்சிலைப் பிடிப்பதில், சிக்கல்களை எதிர்கொள்வர்
- தெளிவற்ற கையெழுத்து
- சொற்கள் விடுபட்டு எழுதுதல்
சொற்கள் அல்லாத கற்றல் குறைபாடுகள்
இது மூளைப் பாதிப்பு நிகழ்வு ஆகும். இந்தப் பாதிப்பானது, மூளையின் வலது அரைக்கோளப் பகுதியில் துவங்குகிறது. காட்சி, இடம், உள் உணர்வு உள்ளிட்டவற்றில், இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன்காரணமாக, மதிப்பீட்டுச் செயல்முறைகள் கடுமையான பாதிப்படைகின்றன.
அறிகுறிகள்
- ஷூ லேஸ்களைக் கட்டுவது உள்ளிட்ட எளிய பணிகளை மேற்கொள்வதில் கூட சிரமம் எதிர்கொள்வர்
- காட்சி தகவல்களைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாத நிலை
- தொலைவு, இடம் சார்ந்த உறவைத் தீர்மானிப்பதில் சிரமம் நிலவுதல்
மேலும் வாசிக்க : குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைக்கிறீர்களா?
செவிவழி மற்றும் காட்சி செயலாக்கப் பாதிப்புகள்
இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, காட்சி மற்றும் ஒலிக் குறிப்புகளை, வழக்கமான வழியில் புரிந்துகொள்ள இயலாத நிலைக் காணப்படுகிறது.
அறிகுறிகள்
- ஒரேமாதிரியான தோற்றம் கொண்ட சொற்களால் குழப்பம் அடைதல்
- உரையாடல்களைப் பின்பற்றுவதில் சிரமப்படுதல்
கற்றல் குறைபாடு பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
அசாதாரணமான நரம்பியல் மாற்றங்களே, கற்றல் குறைபாட்டிற்கான காரணங்களாக வரையறுக்கப்படுகின்றன. இந்தப் பாதிப்பானது, குழந்தைப் பிறந்தவுடனோ அல்லது குழந்தைப் பருவத்திலோ ஏற்படலாம்.
கற்றல் குறைபாடு பாதிப்பு கொண்ட பெற்றோர்களுக்கு, அவர்களின் குழந்தைகளுக்கு, இந்தப் பாதிப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது.
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல்நலக்குறைவுகள்
குழந்தைப் பிறப்பு நிகழ்வின்போது ஏற்படும் சிக்கல்கள்
கர்ப்பக் காலத்தின் போது,பெண்கள் மது அல்லது போதைவஸ்துகளை உட்கொள்ளுதல்
குழந்தைப் பருவத்தில், மூளைக்காய்ச்சல் போன்ற நோய்ப்பாதிப்புகளுக்கு உள்ளாவதன் மூலம், கற்றல் குறைபாடு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறைபாடுகளை நிர்வகிப்பதில் பெற்றோர்களின் பங்கு
கற்றல் குறைபாடுகளுடனான குழந்தைகளின் பயணத்தை ஆதரிப்பதில், அவர்களின் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும். வீட்டில் ஆதரவான சூழலை உருவாக்குவதன் மூலம், குழந்தைகளின் நம்பிக்கையை மேம்படுத்தவும், சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கவும் பெற்றோர்கள் உதவுகின்றனர்.இது குழந்தைகளுக்கு ஊக்கம், பொறுமை, புரிதல் உள்ளிட்டவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாது, கல்வி நிறுவனங்களில், குழந்தை, தன் தேவைகளுக்கு வாதிடும் மனப்பாங்கையும் வளர்க்கிறது.
பெற்றோர்களுக்கான உதவிக்குறிப்புகள்
குழந்தையின் கற்றல் நிகழ்வுக்கான சவால்கள் மற்றும் அதன் ஆதரவைப் பெறுவதற்கான ஆதாரங்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், உணர்வுகள் குறித்து வெளிப்படையாக அவர்களுடன் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையான உறுதி மற்றும் ஊக்கத்தை வழங்குங்கள்.
குழந்தைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட உத்திகளை உருவாக்கும் பொருட்டு, அவர்களின் ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஒத்துழைப்பு நல்குங்கள்.
குழந்தைகள் சிறிய அளவிலான சாதனைகள் புரிந்தாலும், அவர்களைப் பாராட்டிக் கொண்டாடுங்கள். இதன்மூலம், நம்பிக்கையும், உந்துதலும் அதிகரித்துப் பெரிய சாதனைகள் மேற்கொள்ள முயற்சிப்பர்.
குழந்தைகளுக்குச் சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்து, வளர்ச்சி மனப்பாங்கை மேம்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் பெற்றோர்களே, கற்றல் குறைபாடு பாதிப்பை, தக்க வழிமுறைகளைப் பின்பற்றி, அதிலிருந்து உங்கள் குழந்தைகளை விடுபடச் செய்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் சிறக்கச் செய்வீர்களாக…