குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைக்கிறீர்களா?
அடிமையாதல் நிகழ்வு என்பது மிகவும் சிக்கலான பாதிப்பு ஆகும். இது வாழ்க்கையையும், குடும்பங்களையும் சிதைத்து, பேரழிவிற்கும் காரணமாகிறது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு, தங்களது உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவதை அறிந்தபின்னரும், அவர்களால், குடிப்பழக்கத்தை நிறுத்த முடிவதில்லை. நீங்கள் உண்மையிலேயே குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட விரும்பினால், அதற்கான உதவிக்குறிப்புகள் குறித்த அறிவை நீங்கள் பெற வேண்டியது அவசியமாகிறது.
போதைக்கு அடிமையாதல் என்பது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல
குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாதல் என்பது வெறும் இன்பம் தேடும் செயல்பாடு மட்டுமே. இது ஒருவரின் ஒழுக்கம் அல்லது உடல் வலிமையுடன் தொடர்பற்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான நேரங்களில், குடி மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குத் தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை, இந்தச் சமூகம் வழங்க மறுக்கிறது. ஏனெனில், சமூகம், இதைத் தார்மீகப் பிரச்சினையாகக் கருதுகிறது. அப்பழக்கத்திற்கு அடிமையானவரின் பிரச்சினையின் மூலத்தைக் கண்டுபிடிக்க முயலாமல், அந்த குறிப்பிட்ட நபருக்கு, ‘ மோசமான நபர்’ என்ற முத்திரையைக் குத்திவிடுகிறது.
சுற்றத்தார்களின் அழுத்தமும் முக்கிய காரணம்
பெரும்பாலான நபர்கள், எவ்விதப் பிரச்சினை இல்லையென்றபோதிலும், நண்பர்கள், சுற்றத்தார்களின் கட்டாயத்திற்கு இணங்க குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். இது மிகப்பெரிய அளவிலான பிரச்சினைக்கு வழிவகுத்து விடுகிறது. சுயக் கட்டுப்பாடு நிகழ்வின் மூலமாகவே இந்தப் பாதிப்பில் இருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ள இயலும். உங்களைக் குடிக்க மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் நபர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்கவும். இதன்மூலம் அவமானம், சேதாரம் உள்ளிட்ட எதிர்மறை நிகழ்வுகளிலிருந்து தப்பிக்க முடியும்.
தீர்மானம் நிறைவேற்றவும்
குடிப்பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து,பாதிக்கப்பட்ட நபர் உணர வேண்டும். இந்தப் பாதிப்பில் இருந்து மீள உதவும் காரணங்களான உடல் ஆரோக்கியம் பேணுதல், நன்றாக மற்றும் போதிய அளவிலான உறக்கம், உறவுகள் மேம்படுவதற்கான நடைமுறை உள்ளிட்டவைகளைப் பட்டியலிட்டு, அதைக் கடைப்பிடிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அதன்படி நடக்க வேண்டும். இதன்மூலம், நீங்கள் படிப்படியாக, குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள்.
அளவாகக் குடிக்கவும்
குடிப்பழக்கத்தின் பாதிப்பில் இருந்து விடுபட நினைக்கும் நபர், இவ்வளவுதான் தினமும் குடிக்க வேண்டும் என்று வரம்பை நிர்ணயிக்க வேண்டும். அந்த அளவைத் தாண்டிச் செல்ல ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உங்கள் உடல், எந்த அளவிற்கு மதுவை ஏற்றுக்கொள்கிறது என்பதைக் கண்டறிய, மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சாலச்சிறந்தது. இதன்மூலம், உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க இயலும்.
எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பதைப் பதிவு செய்யவும்
நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு முறையும், குடிக்கும் அளவைக் கண்காணிக்கவும். என்ன மதுவகையைக் குடித்தீர்கள், எவ்வளவு குடித்தீர்கள், எங்கு குடித்தீர்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரியுங்கள். இந்தத் தரவுகளை, இதற்கு முந்தைய உங்கள் தரவுகளுடன் ஒப்பீடு செய்யுங்கள். அதிக வேறுபாடு இருக்கும்பட்சத்தில் மருத்துவரிடம் கலந்தாலோசனை மேற்கொண்டு, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை ஆராயுங்கள்.
மதுவகைகள் கிடைப்பதைக் கடினமானதாக ஆக்கவும்
மதுவகைகள் உங்கள் கைக்கு எட்டாதவரை, அதைக் கைவிடுவது என்பது உங்களுக்கு எளிமையான நிகழ்வாகவே அமையும். எந்தவொரு பானமும், எளிதாகக் கிடைப்பதால் மட்டுமே, நாம் அதற்கு மிக விரைவாக அடிமை ஆகும் சூழல் உருவாகிறது.
குடிப்பழக்கம் இல்லாத நாள்களைக் கடைப்பிடிக்கவும்
ஒவ்வொரு வாரமும் ஒருநாள் அல்லது இரண்டு நாள்களுக்கு மதுவகைகளைத் தொடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவும். உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை உணர, சிறிது காலத்திற்கு அதில் இருந்து விலகி இருப்பது நல்லது. இது குடிப்பதை நிறுத்தினால், நீங்கள் புதுவித உத்வேகத்துடன் இருப்பதை உங்களுக்கு உணர வைக்கும்.
மற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள்
உங்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்போதெல்லாம், மற்ற நிகழ்வுகளில் கவனத்தைச் செலுத்தி, மனதைத் திசைதிருப்ப நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள், பிடித்த விளையாட்டுகளை விளையாடுங்கள், புதிய திறமைகளைக் கற்றுத் தேர்ச்சி பெறலாம், நண்பர்களுடன் சாப்பிட வெளியே செல்லுங்கள், புதிய பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள். பழைய நண்பர்களைச் சந்தியுங்கள். இசைக்கருவி வாசித்தல் போன்ற புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். இவற்றின் மூலம் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
சமூகத்தின் ஆதரவும் அவசியம்
குடி மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல… இந்தப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். மருத்துவர், ஆலோசகர், சிகிச்சையாளர் உள்ளிட்டோரின் ஆதரவும் மிக முக்கியம் ஆகும்.
மேலும் வாசிக்க : குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
சலனப்படுவதைத் தவிர்க்கவும்
உங்களுக்குக் குடிக்கத் தூண்டுதலை உருவாக்கும் நபர்களிடம் இருந்தும், அதுதொடர்பான சூழல்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். விடுமுறை, குடும்ப விழாக்கள், நண்பர்கள் சந்திப்புகளில் மது அருந்துவதைத் தவிர்க்கவும். இது குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்ற நிலையை உருவாக்கும். நீங்கள் சோகமாகவோ அல்லது தனிமையாக இருக்கும் நேரத்தில், சிலருக்குக் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். தனிமையில் இருக்கும் சூழலைப் போதுமான அளவிற்குத் தவிர்க்க வேண்டும். குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்போது தியானம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மன அழுத்தத்தைச் சமாளிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும்.
நிலைத்தன்மை மிக அவசியம்
குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க நீண்ட காலம் ஆக முடியும். பலன் தரவில்லை என்பதால், துவக்கத்திலேயே துவண்டுவிடாமல் இருப்பது அவசியமாகும். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் நிகழ்வு என்பது, பல்வேறு தொடர் முயற்சிகளுக்குப் பிறகே வெற்றி அடைகிறது. இதற்காக, நீங்கள் பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். மனதைத் தளரவிட்டுவிடக் கூடாது.
மேற்கண்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, குடிப்பழக்கம் என்ற அரக்கனிடம் இருந்து முழுமையாக விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோமாக…