உங்கள் குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதா?
குழந்தைகளிடையே உள்ள ஒரு குறிப்பிட்ட கற்றல் குறைபாடு டிஸ்லெக்சியா என்று அழைக்கப்படுகிறது. இது அவர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறனைக் கடுமையாகப் பாதிக்கிறது.சொற்கள் மற்றும் எண்களைப் புரிந்து கொள்வது மற்றும் படிப்பது கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. பள்ளியில் பொதுவான கல்விச்சூழலில் வழிமுறைகளைப் பின்பற்ற முயற்சிக்கும் குழந்தைகளுக்கு, இது சவால் மிகுந்ததாக உள்ளது.
இந்தக் குறைபாடு, நோய்ப்பாதிப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது பாதிக்கப்பட்ட நபரின் அறிவுத்திறன் அல்லது கற்கும் ஆர்வத்தைப் பாதிப்பதில்லை.இது அசாதாரண மாற்றமாகக் கூட இருக்கலாம்.
டிஸ்லெக்சியா என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு குறைபாடாகும். இது மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்பாகும். இதனால் சொற்களின் ஒலிகளை அடையாளம் காண்பதிலும், எழுத்துகளுக்கும் ஒலிகளுக்கும் இடையேயான தொடர்பைப் புரிந்து கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சிறந்த அதேசமயம் அவர்களுக்குப் பொருத்தமான கற்பித்தல் முறைகள் மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், அவர்கள் விரைவில் அந்தப் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவர். குழந்தைகளிடையே, டிஸ்லெக்சியா பாதிப்பை முன்கூட்டியே மதிப்பீடு செய்வதன் மூலம், பாதிப்பு தீவிரமடையாமல் காக்கலாம்.
பாதிப்பிற்கான காரணங்கள்
டிஸ்லெக்சியா பாதிப்பு ஏற்படுவதற்கான முதன்மையான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை. இருந்தபோதிலும், இந்தப் பாதிப்பானது, மூளைப்பகுதியில் நிகழும் மாற்றங்களால் ஏற்படுவது அறியப்பட்டு உள்ளது. டிஸ்லெக்சியா பாதிப்பிற்கு, ஒலியியல் செயலாக்கச் சிக்கல்களை, நரம்பியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
டிஸ்லெக்சியா பாதிப்பிற்கு, பரம்பரைக் காரணிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்த நிலையானது, மரபணுக்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இது தனிநபரின் சிந்தனைத்திறனைப் பாதிக்கிறது.
அறிகுறிகள்
டிஸ்லெக்சியா பாதிப்பின் தாக்கம், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுகின்றன. இதன் அறிகுறிகளை, நாம் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய இயலும். பின்வரும் இந்த அறிகுறிகள், உங்கள் குழந்தைகளுக்கு இருப்பின், அது டிஸ்லெக்சியா பாதிப்பாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம், உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
பேசுவதில் தாமதம்
சாதாரண குழந்தையைவிட, டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தை, தாமதமாகப் பேசத் துவங்கலாம். புதிய சொற்களைப் புரிந்துகொள்ளுதல், எழுத்துகளின் வடிவங்களை நினைவில் வைத்துக் கொள்ளுதல், எளிய வடிவிலான பாட்டு உள்ளிட்டவைகளைக் கூட அவர்கள் வாசிக்க மற்றும் புரிந்துகொள்ள் மிகவும் சிரமப்படுவர்.
வாசிப்பதில் சிரமங்கள்
டிஸ்லெக்சியா பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள்,சொற்கள், எழுத்துகள் உள்ளிட்டவைகளை வாசிக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும்போது, இவர்கள் படிக்கவும், புரிந்துகொள்ளவும் சிரமம் கொள்கின்றனர். இவர்கள் எழுத்துகூட்டி வாசிப்பதற்குக் கடினமாக உணர்வர். வாசிப்பு மற்றும் எழுத்துப் பயிற்சி உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய வீட்டுப் பாடங்களை, அவர்கள் நிறைவு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்வதுடன், அதிகச் சிரமப்படும் சூழலும் நிலவுகிறது.
எண்களைப் புரிந்துகொள்வதில் சிரமம்
டிஸ்லெக்சியா பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள், ஆரம்ப வகுப்புகளில் சேரும் போது, அவர்களுக்கு எண் வரிசைகளைப் புரிந்துகொள்வது மிகவும் சிரமமாக இருக்கும். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட எண்கணிதக் குறியீடுகள், அவர்களைக் குழப்பமடைய செய்யும். கிழமைகள், நாட்கள், மாதங்கள் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்துக் கொள்வது, நேரத்தைச் சொல்லக் கற்றுக்கொள்வதும் அவர்களுக்குச் சவாலான நிகழ்வாக உள்ளது.
வழிமுறைகளைப் பின்பற்ற இயலாத நிலை
டிஸ்லெக்சியா பாதிப்பிற்கு ஆட்பட்டகுழந்தைகள் மோசமான வாசிப்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன் காரணமாக, மற்ற குழந்தைகளிடம் இருந்து பெரும்பாலும் ஒதுங்கியே இருப்பர். அவர்களால் தன்னிச்சையாகத் திசைகளைக் குறித்தல், வரைபடம் தீட்டுதல், எளிமையான வீட்டுப்பாடம் போன்ற வழக்கமான செயல்களைக்கூட அவர்களால் மேற்கொள்ள இயலாது.எழுத்து கூட்டிப் படித்தல், விவரங்களைப் புரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள், இவர்களுக்குச் சிரமமாக இருப்பதால், பாடங்களைப் புரிந்து படிக்காமல், மனப்பாடம் செய்யத் துவங்குகின்றனர்.
மேலும் வாசிக்க : ADHD பாதிப்பைக் குணப்படுத்த முடியுமா?
தெளிவற்ற எழுத்துகள்
பென்சில் மற்றும் பேனாக்களைச் சரியாகப் பிடித்து எழுதுவதற்கே, டிஸ்லெக்சியா பாதிப்பு குழந்தைகள், மிகுந்த சிரமப்படுகின்றனர். நிறுத்தக்குறிகள், இலக்கண விதிகள் உள்ளிட்டவைகளை நினைவில் வைத்துக்கொள்ள அதிகம் போராடுகின்றனர். இதன்காரணமாக, அவர்கள் மோசமான கையெழுத்தைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். இவர்கள் வகுப்புச் சோதனைகள் மற்றும் அன்றாட பணிகளை முடித்துக் கொள்ள அதிக நேரத்தை எடுத்துக் கொள்வர். ஆசிரியர்க் கேள்வி கேட்கும்போது, குழந்தைகள் பதில் சொல்ல மிகவும் சிரமப்படுவர்.
சிகிச்சை முறைகள்
டிஸ்லெக்சியா பாதிப்பிற்கு என்று தனிப்பட்ட சிகிச்சைமுறைகள் எதுவும் இல்லை. டிஸ்லெக்சியா நோயறிதல் நிகழ்வானது, பல்வேறு சோதனைகள் மற்றும் பகுப்பாய்வுகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளது. மன அமைதிக்கு அதிக இடையூறு விளைவிப்பதால், சரியான சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவது நல்லது.
இப்பாதிப்பு குழந்தைகளின் நிவாரணத்திற்கு ஏற்ப, பல சிகிச்சை முறைகள், கல்வி நுட்பங்களை மருத்துவர்ப் பரிந்துரைச் செய்கின்றார். இந்தச் சிகிச்சை முறைகள் குழந்தைகளின் கேட்டல், பார்த்தல், தொடுதல் உள்ளிட்ட கற்பித்தல் நுட்பங்கள், வாசிப்புத் திறன்களை மேம்படுத்துகின்றன. சொற்களை உருவாக்கும் ஒலிகளின் பயன்பாட்டை அடையாளம் காண உதவுகிறது. சொற்களஞ்சியத்தை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய சிகிச்சையைச் சரியான நேரத்தில் மேற்கொண்டு, அவர்களை அந்தப் பாதிப்பில் இருந்து விடுபடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேமாக…