மன அழுத்த நிவாரணத்திற்கு யோகா எவ்வாறு உதவுகிறது?
இன்றைய இயந்திரமயமான உலகில், மனிதர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையினால், மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்டவை அழையா விருந்தாளியாக நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஓய்வற்ற உழைப்பு, பொறுப்புகள் அதிகரித்தல், டிஜிட்டல் சாதனங்களுடன் தொடர்ச்சியான பிணைப்பு ஆகியவை நம்மை உடல் மற்றும் மன ரீதியாகச் சோர்வடையச் செய்கின்றன.
மன அழுத்தம்
மன அழுத்த நிகழ்வானது உடலியல் மற்றும் உளவியல் எதிர்வினையாகக் கருதப்படுகிறது. இது உணரப்பட்ட அச்சுறுத்தல் அல்லது சவாலை ஒத்த நிலைக்கு, உடலானது இயற்கையாகவே தெரிவிக்கும் பதில் நடவடிக்கை என்றும் குறிப்பிடலாம். உடலானது, நிதிக் கவலைகள், குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியாததால் ஏற்படும் படபடப்பு, உறவுப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் போன்றவை மன அழுத்தத்தைத் தூண்டுகின்றன. இந்த மன அழுத்தமானது, நீண்ட காலத்திற்கு நீடிக்கும்பட்சத்தில், அது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. உடல், மன அழுத்த பாதிப்பிற்கு உள்ளாகும்போது, கார்டிசோல் மற்றும் அட்ரீனலின் ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் உடல் மற்றும் மனதில் ஆற்றலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன.
உடல்நலத்தைப் பாதிக்கும் மன அழுத்தம்
மன அழுத்த பாதிப்பானது, உடல் ஆரோக்கியம் தொடர்பான கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தப் பாதிப்புகள் சரிவர கவனிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், மோசமான உடல்நலக் குறைபாடுகளை உருவாக்கும் அபாயம் உள்ளது.
மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அவற்றைப் பின்வருமாறு காண்போம்.
மனநலக் குறைபாடுகள்.
இதய நோய்ப்பாதிப்புகள்
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் குறைதல்
உறக்க நிகழ்வில் தடங்கல்கள்
உடல் எடையில் ஏற்றத்தாழ்வுகள்
தசைகளில் அழுத்தம் காரணமாக வலி உணர்வு
சுவாசப் பிரச்சினைகள்
தோல் பாதிப்புகள்
சிந்தனைத்திறன் குறைபாடு
நடத்தை முறையில் மாற்றங்கள்
ஹார்மோன் சுரப்பில் சமநிலை இன்மை
உள்ளிட்ட பாதிப்புகள், மன அழுத்தம் காரணமாக ஏற்படுகின்றன.
யோகா என்றால் என்ன?
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பண்டைய நடைமுறையே, யோகா ஆகும். இது உடல், மனம், ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளைத் தன்னுள் கொண்டு உள்ளது. யோகாப் பயிற்சியானது, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான விரிவான அணுகுமுறையாக விளங்குகிறது. மன அமைதி, சமநிலை, நல்லிணக்கம் உள்ளிட்டவைகளை அடைவதை, யோகா முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
யோகா என்ற வார்த்தைக்கு, ஒன்றிணைதல் அல்லது சேருதல் என்ற அர்த்தம் உள்ளது. கருத்து மனம், உடல், ஆவி உள்ளிட்டவற்றின் ஒருங்கிணைப்பை இது குறிக்கிறது.
யோகாப் பயிற்சியானது, பல்வேறு கூறுகளை உள்ளடக்கி உள்ளது.
ஆசனங்கள்
யோகா நிகழ்வின் முக்கிய பகுதிப்பொருளாக ஆசனங்கள் உள்ளது. ஆசனங்கள், உடலின் வலிமை, சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கச் செய்து, உடல் தோரணையை மேம்படுத்துகிறது.
பிராணாயாமம்
கட்டுப்படுத்தப்பட்ட சுவாசத்தில் கவனம் செலுத்தவல்ல நடைமுறையாக, பிராணாயாமம் நிகழ்வு உள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாது, சுவாசச் செயல்பாட்டை மேம்படுத்தி, தெளிவான மனநிலையை உருவாக்குகிறது.
தியானம்
தியான நிகழ்வானது, மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, நினைவாற்றலை அதிகரிக்கிறது மற்றும் மன அமைதிக்குக் காரணமாக அமைகின்றது.
ஆழ்ந்த தளர்வு நிலை
உடல் மற்றும் மனத் தளர்வை ஊக்குவிக்கும் வகையிலான, இந்த நிலையானது, யோகாப்பயிற்சியின் இறுதியில் மேற்கொள்ளப்படுகிறது.
யோகா நிகழ்வானது, அகிம்சை, உண்மை, சுய ஒழுக்கம் உள்ளிட்ட நெறிமுறைகளை வலியுறுத்துவதாக உள்ளது.
மன அழுத்தத்திற்குத் தீர்வாகும் யோகா
யோகாப் பயிற்சியானது, உடல், மனம் மற்றும் ஞாபகச் சக்தி நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பின் மூலம், மன அழுத்தம் மற்றும் மனப்பதட்ட உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. யோகாப் பயிற்சியை முறையாகச் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
மேலும் வாசிக்க : உறக்கக் கண்காணிப்பு – உறக்க நிகழ்வை மேம்படுத்துமா?
மன அழுத்த ஹார்மோனைக் கட்டுப்படுத்துகிறது
யோகாப் பயிற்சியானது, உடலுக்கு நன்மைகளை விளைவிக்கும் எண்டோர்பின் ஹார்மோன் சுரப்பை ஊக்குவிக்கிறது. இதன்மூலம், உடலுக்கு ஊறுவிளைவிக்கும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோன் சமநிலை நிகழ்வானது, உடல் மற்றும் மனம் தளர்வு பெற உதவுவதுடன், ஆரோக்கியத்திற்கும் பேருதவி புரிகிறது.
மனந்தெளிநிலையை ஏற்படுத்துகிறது
யோகாப் பயிற்சியானது, தெளிவான மனநிலையை ஏற்படுத்தி, நடப்பு தருணத்தை, மிக்க மகிழ்ச்சியுடன் கழிக்க உதவுகிறது. இறந்த கால நினைவுகள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்த கவலைகளை அகற்றுகிறது. இதன்மூலம், மனப்பதட்ட நிலையிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
மேம்பட்ட உறக்கம்
நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் பதட்ட உணர்வானது, உறக்க நிலைகளில் பெரும் இடையூறுகளாக அமைகின்றன. யோகாப் பயிற்சி மேற்கொள்வதைப் பழக்கமாக்கிக் கொண்டவர்களுக்கு, உறக்கக் காலம் மற்றும் தரமான உறக்கம் சாத்தியமாகிறது.
சுய விழிப்புணர்வை மேம்படுத்துகிறது
யோகாப் பயிற்சியானது, சுய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. சுய விழிப்புணர்வானது, மன அழுத்த மேலாண்மை உத்திகளுக்கு வழிவகுக்கிறது.
உணர்ச்சி சமநிலை
உடலின் உணர்ச்சி சமநிலைகளை மேம்படுத்தி, மன அழுத்த பாதிப்பிற்கு எதிர்வினையாற்றுகிறது.
யோகாப் பயிற்சி செய்வதை அன்றாட பழக்கவழக்கமாகக் கொண்டு, மன அழுத்த பாதிப்பு அபாயத்திலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக….