Close up image of a man sitting on a sofa with his hands covering his face in a sad and depressed condition.

நோய்த்தடுப்பு நிகழ்வில் வாழ்க்கைமுறை முக்கியத்துவம்

உடல் ஆரோக்கியத்தில், வாழ்க்கைமுறையானது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையின் விளைவாக, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள, முழு உடல் பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன.இத்தகையப் பரிசோதனைகள், உங்களை வழக்கமான உடற்பயிற்சி, சரிவிகித உணவுமுறை உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வழிவகுக்கின்றன. இந்தப் பழக்கவழக்கங்கள், உங்களை நோய் அபாயங்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.

உடல் ஆரோக்கியக் குறைவிற்கு வழிவகுக்கும் காரணிகள்

ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடல் உழைப்பின்மை, மதுப்பழக்கம், புகையிலைப் பயன்பாடு போன்றவை நீரிழிவு, உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், புற்றுநோய், நுரையீரல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வழிவகுக்கின்றன. இவை உடல்நல ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சாத்தியமான முடிவுகளை எடுப்பதன் மூலம், வாழ்க்கைமுறையை மேம்படுத்திக் கொள்ளலாம், மன அழுத்த பாதிப்பைத் திறம்பட நிர்வகிக்க முடியும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவுமுறை, உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள், போதிய அளவிலான ஓய்வு உள்ளிட்ட பழக்கங்களை, தினசரி மேற்கொள்வதன் மூலம், நல்வாழ்க்கையை வாழ முடியும்.

உடல் ஆரோக்கியமும், ஊட்டச்சத்து உணவுமுறையும்…

உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குதல், உடல் கட்டமைப்பைப் பராமரித்தல், உடலில் நிகழும் வேதிமாற்றங்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, புரதங்கள், கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாது உப்புகள் எனப்படும் மினரல்கள், நீர் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் முக்கியத் தேவைகளாக உள்ளன.

புரதங்கள், கார்போஹைட்ரேட்கள் மற்றும் கொழுப்புகள் கொண்ட உணவு வகைகளில் இருந்து பெறப்படும் ஆற்றலானது, உடலின் அடிப்படைச் செயல்பாடுகளுக்கும், வைட்டமின்கள் மற்றும் மினரல்களில் இருந்து பெறப்படும் ஆற்றலானது, மூளை மற்றும் தசைகளின் இயக்கங்களுக்கு மூலாதாரமாக உள்ளது.

அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் சர்க்கரை அதிகம் கொண்ட பான வகைகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு, உடல் ஆரோக்கியம் குறைவதுடன், அதிக உடல் எடை, உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உடல் ஆரோக்கியத்தில் உடற்பயிற்சிகளின் தாக்கம்

நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் திகழ, வழக்கமான உடற்பயிற்சி முறைகள் பேருதவி புரிகின்றன. உடற்பயிற்சிகள் உடல் எடைக் குறைப்பில் உதவுவதுடன், நீரிழிவு, இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளின் அபாயங்களைக் குறைக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மேம்பட்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், எலும்புகள், தசைகள் வலுப்பெறுகின்றன. மூளையின் செயல்பாடு மேம்படுத்தப்படுகிறது.

உடற்பயிற்சி பழக்கமானது, உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் முக்கியப்பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டு இருப்பவர்களுக்கு டிமென்சியா, மன இறுக்கம், பதட்டம், இதய நோய்கள், இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு, உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

நல்ல உறக்கத்தின் முக்கியத்துவம்

போதிய அளவிலான உறக்கம், உடலின் அன்றாட செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன. உறக்க நிகழ்வின் போது, உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கின்றன மற்றும் மூளையின் செயல்பாடுகள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு, உறக்கம் இன்றியமையாததாக உள்ளது. போதிய அளவிலான உறக்கம் இல்லாத நிலை, நாள்பட்ட நோய்களின் வருகைக்குக் காரணமாக அமைகின்றது. சரியான உறக்கம் உள்ளவர்களுக்குச் சிந்தனைத்திறன் பாதிப்பு, மனநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நல்ல உறக்கத்திற்குக் காரணமான பழக்கங்கள்

தினமும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்லுதல், காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

இரவு உறங்கச் செல்வதற்கு 2 மணிநேரங்கள் முன்பாகவே, உணவு சாப்பிடுவது, பானங்கள் அருந்துவதை நிறுத்திவிட வேண்டும்.

டிவி, ஸ்மார்ட் போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு உபகரணங்களை, படுக்கையறையில் அனுமதிக்கக் கூடாது.

கண்களை மூடி தியானத்தில் இருத்தல், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள், உறக்க நிகழ்வை விரைவுபடுத்தும்.

மேலும் வாசிக்க : புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம்

மன அழுத்த மேலாண்மை

இன்றைய நவீன உலகில், அனைவரும் ஏதாவது ஒருவிதமான மன அழுத்தத்திற்கு நிச்சயம் உள்ளாகி உள்ளனர். நாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும் போது, நம் உடலினுள் சுரக்கும் ஹார்மோன், அதனைக் கட்டுப்படுத்தும். இந்த ஹார்மோன் சுரப்பு தொடர்கதையாகும் பட்சத்தில், நரம்பியல் சார்ந்தக் குறைபாடுகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, இதய நோய்கள், விரைவில் முதுமையடைதல், இளம் வயது மரணங்கள் உள்ளிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழ்கின்றன.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, மனநிலையையும் மேம்படுத்த இயலும்.

சுவாசப் பயிற்சியின் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

தியான பயிற்சியின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளை, மனதில் இருந்து நீக்க முடியும்.

யோகா, டை சி போன்ற பயிற்சிகள் உடலின் சமநிலையை மேம்படுத்துவதோடு, நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது.

உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கவல்லப் பொருட்கள்

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை ரத்த மாதிரிச் சோதனைகள், எக்ஸ்ரே சோதனைகள், ஸ்கேன் சோதனைகள் உள்ளிட்டவைகளுக்கு உட்படுத்தினால், அவர்களுக்கு ஏற்பட்டு உள்ள நுரையீரல் பாதிப்பு, இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய், மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிய முடியும்.

புகையிலைப் பொருட்கள்

புகைப்பிடிக்கும் பழக்கம், உடலின் எல்லாப் பகுதிகளையும் பாதிப்பதோடு மட்டுமல்லாது, செயல்திறன் அற்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய், நீரிழிவு, காசநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ஆர்த்தரைட்டிஸ் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

Blurred image of a person lying his head down on a table with his right hand holding a glass filled with alcohol.

மதுப்பழக்கம்

ஆல்கஹால் உள்ளிட்ட மதுபான வகைகளுக்கு அடிமையானவர்களுக்கு, ரத்த அழுத்த விகிதம் அதிகரித்து மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதயச் செயலிழப்பு, மூளை, கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

முழு உடல் பரிசோதனைகளின் அவசியம்

ஒரு நபரின் மருத்துவ நிலையைக் கண்டறியவும், உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் காணவும் உடல் பரிசோதனைகள் உதவுகின்றன. இது உங்களை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

முழு உடல் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், மருத்துவர்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கான தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குகின்றனர்.இத்தகைய ஆலோசனைகள், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும், நல்வாழ்க்கையையும் மேம்படுத்த உதவும்.

இந்தப் பரபரப்பான சூழலில், சீரான வாழ்க்கைமுறை, வழக்கமான உடற்பயிற்சிகள், சரிவிகித உணவுமுறை, போதிய அளவிலான உறக்கம் உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து நல்வாழ்க்கை வாழ்வீராக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.