தனிப்பட்ட ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட் திட்டங்கள்
ஒரு குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட வகையிலான உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட அணுகுமுறையையே, தனிப்பட்ட ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட் திட்டங்கள் என்று வரையறுக்கின்றோம். இது குறிப்பிட்ட நபர்களின் வயது, பாலினம், அவர்களது வாழ்க்கைமுறை, உடல்நிலைச் சார்ந்த இலக்குகள் உள்ளிட்ட காரணிகளைப் பகுப்பாய்வு செய்து, அதன்மூலம் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு, உடல்நலக் குறைபாடுகளைச் சரிசெய்து, நல்வாழ்க்கையை, மேம்படுத்த இந்தத் தனிப்பட்ட ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட் திட்டங்கள் உதவுகின்றன. இந்தத் திட்டங்கள், தனிநபர்கள், சரியான அளவில் ஊட்டச்சத்துகள் பெறுவதை உறுதி செய்கின்றது. ஆற்றல் அளவு அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி, உடல்நல ஆரோக்கியம் மேம்படக் காரணமாக அமைகின்றது.
வைட்டமின்கள், மினரல்கள் எனப்படும் தாது உப்புகள் போன்று, தனிப்பட்ட ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட்களின் பயன்பாடும், மக்களிடையே அதிகரித்துவிட்டன. நாம் உட்கொள்ளும் எந்தவொரு உணவும், நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை முழுமையாகத் தருவதில்லை. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்கு, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த உணவு வகைகளை, சப்ளிமென்ட் என்ற பெயரில், தனியாக எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சப்ளிமென்ட்களின் அளவு மற்றும் நேரம் குறித்த வழிமுறைகள் மிக முக்கியம்.
ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட் என்றால் என்ன?
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால், குறிப்பிட்ட சத்துக்களை மட்டும் வழங்கும் உணவுமுறையே ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட் ஆகும்.இது உங்கள் உடலில் ஏற்பட்டு உள்ள குறிப்பிட்ட குறைபாட்டைச் சரிசெய்கின்றது. இதய நலன், மூளை ஆரோக்கியம், சீரண மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, சிறந்த உறக்கம் போன்றவற்றிற்கான சிறப்பு சப்ளிமென்ட்கள் இப்போது கிடைக்கின்றன.
வைட்டமின்கள், மினரல்கள், புரதங்கள், மீன் எண்ணெய்கள், ஹெர்பல் பொருட்கள் போன்ற பல வகைகளில் சப்ளிமென்ட்கள் கேப்சூல்கள், பானங்கள், பொடி வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன.இதன் அதீதப் பயன்பாடு, மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால், இதற்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது.
யார் யார் எடுத்துக் கொள்ளலாம்?
உடல்நல ஆரோக்கியத்தை மேம்பட நினைப்பவர்கள், ஆரோக்கியம் மேம்பட உதவும் வகையிலான வழிமுறைகளை மேற்கொண்டு இருப்பவர்கள் உள்ளிட்டோர்களுக்கு, இந்தத் தனிப்பட்ட ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட் திட்டங்கள் பேருதவி புரிகின்றன. உதாரணமாக, மக்கள் தாங்கள் அன்றாடம் உட்கொள்ளும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து, உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக் கிடைக்காதபோது, அதற்கான மாற்றை, ஊட்டச்சத்துச் சப்ளிமெண்டாக எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்று, கடல் உணவுகளான மீன்கள் உள்ளிட்டவைகளைச் சாப்பிடாதவர்கள் என்றால், அவர்கள் EPA மற்றும் DHA உடன் ஒமேகா -3 சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்வது நல்லது.
50 வயதிற்கு மேற்பட்டவர்கள்
வைட்டமின் D, வைட்டமின் B 12, ஃபோலேட், மற்றும் குறைந்த அளவிலான மல்டிவைட்டமின் சப்ளிமென்ட்
கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பாலூட்டும் பெண்கள்
ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் D. கருத்தரித்தலுக்குத் தயாராகும் பெண்களுக்கு, ஃபோலேட் தேவையான அளவு இருத்தல் அத்தியாவசியமானதாக உள்ளது.
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்
வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் D ( குழந்தைகள் அதிகம் சாப்பிட்டாலும், அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் சரிவரக் கிடைப்பதில்லை)
சைவ உணவுப் பிரியர்கள்
உடல் ஆரோக்கியத்திற்குச் சைவ உணவுமுறைச் சிறந்தது தான் என்றபோதிலும், ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்படும்பட்சத்தில், அசைவ உணவுகள் தான் கைகொடுக்கின்றன. அசைவ உணவுகள் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை, இந்த ஊட்டச்சத்துச் சப்ளிமெண்டுகளே வழங்கிவிடுகின்றன.
மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட்கள்
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைச் சார்ந்த சப்ளிமென்ட்கள் சந்தையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. இதில் எது நமக்குத் தேவையானது என்பதைத் தேர்ந்தெடுப்பதே மிகவும் சவாலான விசயமாக உள்ளது. உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில், மிகவும் அத்தியாவசியமான சில ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட்கள் குறித்து இங்கே விளக்கமாக விவரிக்கப்பட்டு உள்ளது.
கால்சியம் சப்ளிமென்ட்கள்
மாதவிடாய் சுழற்சி நிற்கும் நிலையில் உள்ளப் பெண்களுக்கு, ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால், அவர்கள் கால்சியம் சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைச் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது, வயதான பெண்களுக்கும், கால்சியம் சப்ளிமென்ட்கள் எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
சைவ உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள்
அதிகப் புரதம் மற்றும் அதிகச் சோடியம் கொண்ட உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்களின் உடலில் இருந்து அதிகளவிலான கால்சியம் வெளிபேறுகின்றது.
கால்சியம் உறிஞ்சுதல் குறைபாடு இருப்பவர்கள்
குடல் தொடர்பான பைபாஸ் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டவர்கள்
ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு கொண்டவர்கள்
கார்டிகோஸ்டீராய்டிகளை நீண்டகாலமாக எடுத்துக் கொள்பவர்கள்
உள்ளிட்டோர், கால்சியம் சப்ளிமென்ட்களை, கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்மைகள்
மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களின் உடலில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு சரிவடையத் துவங்குகிறது. இதன்காரணமாக, எலும்புகளின் நிறையும் குறைகின்றது. இவர்கள் தினமும் 1,000 மில்லிகிராம் அளவிலான கால்சியம் சப்ளிமென்ட்களை எடுத்துக் கொண்டால், எலும்புகள் சேதமடைதலை 1 முதல் 2 சதவீதம் வரைத் தடுக்கலாம்.
வைட்டமின் D உடன் இணைந்த கால்சியம் சப்ளிமென்ட்களானது, ரத்த அழுத்தம் உள்ளிட்ட வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை மேம்படுத்துகிறது.
கால்சியம் குறைவாகக் கொண்ட உணவுவகைகளைச் சாப்பிடுபவர்கள், உடலில் அதிகளவிலான கொழுப்பு உடையவர்களாகவும், அதிக BMI எண்ணையும் கொண்டிருப்பர்.
பக்கவிளைவுகள்
கால்சியம் சப்ளிமென்ட்களை அதிகளவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு , பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நாள் ஒன்றுக்கு 2,000 மில்லிகிராம் அளவிலான கால்சியம் சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்பவர்களுக்கு, சிறுநீரகத்தில் கற்கள் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், வயிற்றில் வலி உணர்வு, குமட்டல், எரிச்சல்தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஒமேகா-3 சப்ளிமென்ட்ஸ்
ஒமேகா-3 சப்ளிமென்ட்கள் நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன. விதைகள், கொட்டைகள், ஆலிவ் எண்ணெய், கீரைகள், மீன் போன்றவற்றில் ஒமேகா-3 உள்ளது. ஆனால் இவைப் போதுமானதாக இல்லை. எனவே, ஒமேகா-3 சப்ளிமென்ட்கள் தேவைப்படுகின்றன.
நன்மைகள்
இதய நோய்ப் பாதிப்புகள் மற்றும் இதயச் செயலிழப்பு அபாயம் கொண்டவர்கள், தினமும் ஒமேகா-3 சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்வதன் மூலம், அவர்களது உடலுக்கு, சரியான அளவிலான EPA மற்றும் DHA கிடைக்கும்.
மார்பகம், புராஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய்களின் பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறது.
தினமும் 200 முதல் 2,200 மில்லிகிராம் அளவிலான ஒமேகா – 3 சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம், மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து விடுதலைப் பெறலாம்.
பக்கவிளைவுகள்
நாள் ஒன்றுக்கு 5,000 மில்லிகிராம் அளவிலான ஒமேகா – 3 சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்பவர்களுக்கு, ரத்தம் மெலிதல், அதிகளவிலான கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வைட்டமின் D3 சப்ளிமென்ட்கள்
வேதியியல் அமைப்பின் அடிப்படையில், இரண்டு வகையான வைட்டமின் Dகள் உள்ளன. அவை வைட்டமின் D2 ( ergocalciferol) மற்றும் வைட்டமின் D3 (Cholecalciferol) ஆகும். இதில் வைட்டமின் D3, விலங்குகளில் இருந்தும், வைட்டமின் D2, பூஞ்சைகளில் இருந்தும் தருவிக்கப்படுகின்றன. இரத்தத்தில் வைட்டமின் D அளவை அதிகரிக்க, வைட்டமின் D3 அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் வாசிக்க : ஹிஸ்டமைன் சகிப்பின்மை நிலை – அறிந்ததும், அறியாததும்!
நன்மைகள்
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இவைகள் வலுவான எலும்புகளின் உருவாக்கத்திற்கு முக்கியப் பங்கை வகிக்கின்றன.
மனநிலையைக் கட்டுப்படுத்த உதவும் செரோடோனின் ஹார்மோன் சுரத்தலை ஊக்குவிக்கிறது.
வைட்டமின் D பற்றாக்குறையினால் ஏற்படும் ரிக்கெட்ஸ் அல்லது ஆஸ்டியோமலேசியா பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறது.
பக்கவிளைவுகள்
அதிகளவிலான வைட்டமின் D3 சப்ளிமென்ட்டின் பயன்பாடு, உடலில் அதிகக் கொழுப்பு படிதலுக்குக் காரணமாக அமைகிறது.
சிறுநீரக நோய்ப்பாதிப்புகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றது
வாந்தி, மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர்க் கழித்தல், சோர்வு உள்ளிட்ட குறைபாடுகளைத் தவிர்த்து, உறுப்பு சேதத்திற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, உடல்நல மேம்பாட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் காரணமான ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட்களை, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிகாட்டுதல்களின்படி அளவோடு உபயோகித்து, வளமான வாழ்க்கை வாழ்வீராக…