மனநல மதிப்பீடுகளின் முக்கியத்துவம் அறிவோமா?
மனநோய், உளவியல் குறைபாடுகள், மற்றும் மனநலச் சிக்கல்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனநல உதவிகள் தேவைப்படுகின்றன.வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நமது சிந்தனைகளும் உணர்வுகளும் அமைவதற்கு மன ஆரோக்கியமே அடிப்படை.
உடலும், மூளையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இரண்டும் ஒருசேர இயங்கினால் மட்டுமே, உடல் ஆரோக்கியத்துடன் மட்டுமல்லாது, மன ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். நாம் நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், மனநலம் குறித்த தரவுகளைக் கண்காணிக்கவும் மனநல மதிப்பீடுகள் உதவுகின்றன.
தன்னம்பிக்கை, நல்வாழ்க்கை, சுயமரியாதை மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்ப்பதில் மனநல ஆரோக்கியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனநல ஆரோக்கியத்திற்கு யாரை அணுக வேண்டும்?
மனநல ஆரோக்கியம், நம் வாழ்வின் இன்றியமையாத அம்சம் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். உடல் சார்ந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால், நாம் மருத்துவரை நாடுகின்றோம். மனநலம் சார்ந்தப் பாதிப்பு என்றால், யாரை நாட வேண்டும் என்பதை அறிவீர்களா?
மனநலம் சார்ந்தப் பாதிப்புகளுக்கு, மனநலப் படிப்பில் பட்டம் பெற்றதுடன், பணி அனுபவமும் பெற்ற தொழில்முறை நிபுணர்கள், சிகிச்சைகளை வழங்க முடியும். மனநல நிபுணத்துவம் பெற்றவர்கள் சில வகைகளாகப் பிரிக்கலாம்.
மருத்துவம் சார்ந்த சமூகப் பணியாளர்கள்
மனம் மற்றும் நடத்தைச் சார்ந்தப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்குத் தேவைப்படும் சிகிச்சை நுட்பங்களை மதிப்பீடு செய்வதற்கும், அதைச் செயல்படுத்துவதற்குமான பயிற்சி பெற்றவர்களே, மருத்துவம் சார்ந்த சமூகப் பணியாளர்கள் ஆவர்.
ஆலோசகர்கள் மற்றும் சிகிச்சை வழங்குநர்கள்
மனநலம் சார்ந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனைகளைப் புரிந்து கொண்டு, அவர்கள் அந்தச் சிக்கல்களிலிருந்து வெளியேறும் வகையிலான சிகிச்சைகளை, இவர்கள் வழங்குகின்றனர். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இவர்கள் உரிய தீர்வுகளை வழங்குகின்றனர்.
உளவியல் நிபுணர்கள்
நடத்தை மற்றும் மனம் சார்ந்தப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிப்பவர்களே, உளவியல் நிபுணர்கள் என்று வரையறுக்கப்படுகின்றனர். இவர்களால், நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மனநல மருத்துவர்கள்
மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளான நோயாளிகளுக்கு, மருந்துகளையும், சிகிச்சைகளையும் வழங்கக்கூடிய மருத்துவ வல்லுநர்களே, மனநல மருத்துவர்கள் ஆவர்.
மனநலக் குறைபாடுகளுக்கான காரணங்கள்
மனநலக் குறைபாடுகளுக்கு முக்கியக் காரணமாக, மன அழுத்த பாதிப்பு விளங்குகின்றது.
மரபணு மற்றும் குடும்பப் பின்னணி
மூளையில் நிகழும் வேதிமாற்றங்கள்
ஆல்கஹால் உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு
பணியிடங்களில் ஏற்படும் அழுத்தம்
தீவிர உடல் உபாதை உள்ளிட்ட காரணிகளாலும், மனநலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
மனநலக் குறைபாடுகளின் வகைகள்
மனநலக் குறைபாடுகள் சம்பந்தப்பட்டவர்களின் நடத்தையை மாற்றுவதால், இவை நடத்தைக் குறைபாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.சிந்தனை, மனநிலை, உணர்வுகள் உள்ளிட்டவைகளைப் பாதிப்பவைகளாக இவை உள்ளன.
மனநலக் குறைபாடுகளில் பெரும்பாலானவை, சிறந்த அளவிலான சிகிச்சைத் தேவைப்படும் வகையிலான தீவிர நிலைமைகள் ஆகும்.
மனக்கவலைகள் சார்ந்தக் குறைபாடுகள்
பயம் தொடர்பான குறைபாடுகள்
மன இறுக்கம்
மனநிலைச் சார்ந்தக் குறைபாடுகள்
உணவுமுறைச் சார்ந்தக் குறைபாடுகள்
மன உளைச்சலுக்குப் பிந்தையச் சீர்கேடுகள்
உளவியல் சார்ந்தக் குறைபாடுகள்
மனநல ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகள்
மன அழுத்தம், போதைப் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்டவைகளை நாம் முயன்றால் தடுத்து நிறுத்தி விட முடியும். ஆனால் கீழே தொகுக்கப்பட்டு உள்ள காரணிகளானது, உங்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி, மனநல ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதித்து விடுகின்றன.
பிரியமானவர்களின் இழப்பு மற்றும் துக்கம்
உறக்க நிகழ்வில் ஏற்படும் பிரச்சினைகள்
பணியிலிருந்து நீக்கப்படுதல்
மது மற்றும் போதைப் பொருட்களின் தவறான பயன்பாடு
குடும்பங்களில் நிகழும் வன்முறை நிகழ்வுகள்
துஷ்பிரயோக நிகழ்வுகள்
மன ஆரோக்கிய நிகழ்விற்கும், சமூக ஊடகங்களுக்கும் இடையேயான உறவு, மனநலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைந்து உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள், மக்களை எதிர்மறையாக அதிகம் பாதிக்கின்றது. ஆய்வுகளின்படி, தினமும் 3 மணிநேரத்திற்கு மேல் சமூக ஊடகங்களில் செலவிடுபவர்களுக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
அதிகரிக்கும் கவலை உணர்வு
நாள்பட்ட அளவிலான மன அழுத்தம் அதிகரிப்பு
சமூக விரோத நடவடிக்கைகளின் ஊக்குவிப்பு
சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துதல்
சைபர்க் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மனச்சோர்வு அதிகரிப்பு
உள்ளிட்ட காரணங்களினாலும் மனநலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது ஆகும். மன ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள உதவும் குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளன.
மன ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள உதவும் குறிப்புகள்
விரிவாகப் பேசுங்கள்
உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துங்கள், அதற்காக மற்றவர்களிடம் விரிவாகப் பேசுதல் மிகவும் அவசியமானது ஆகும்.
சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்
தினமும் 5 நிமிடங்கள் கால அளவிலான உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல், ஜிம்மிற்குச் செல்லுதல், தினமும் சிறிது தொலைவிற்குக் காலார நடந்துச் செல்லுதல் உங்களை எப்போதுமே ஈடுபாட்டுடனேயே வைத்திருத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளின் மூலம், எப்போதும் உங்களைச் சுறுசுறுப்பாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வாசிக்க : மனநல ஆரோக்கியத்திற்கான பயனுள்ளக் குறிப்புகள்
நல்ல சத்தான உணவுமுறை
புரதம், வைட்டமின், ஆன்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்த உணவுமுறையை, சரியாக உட்கொண்டு வந்தாலே, உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கியமும் மேம்படும்.
மிதமான அளவில் குடிக்கவும்
நீங்கள் மனச்சோர்வாக இருந்தால், மிதமான அளவு ஆல்கஹால் குடித்தால், உங்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், சிறிது ஆல்கஹால் நம் உடலுக்குச் சென்றவுடன், இன்னும் அதிகமாகக் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதிகமாக அருந்துவதனால், அது நீண்டகாலப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது.
மனநல மருத்துவரை அணுகுதல்
மனநலக் குறைபாடுகளுக்குக் காரணமான மன அழுத்தத்தைக் குறைக்க, மனநலச் சிகிச்சையாளரை அணுகி, அவரின் உதவியை நாட வேண்டும்.
இத்தகைய வழிமுறைகளைக் கையாண்டு, மனநலக் குறைபாடுகளைக் களைவதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு, அந்தப் பாதிப்புகளிலிருந்து விரைவில் நிவாரணம் பெறுவீராக…