இதயப் பகுதியின் MRI ஸ்கேன் – தெரிவிப்பது என்ன?
இதயப் பகுதியின் MRI ஸ்கேன் சோதனை, வலி உணர்வு அற்ற பாதுகாப்பான சோதனை ஆகும். இது இதயம் தொடர்பான தெளிவான ப்டங்களை எடுக்க உதவுகிறது. இது இதயத்தின் பாகங்களைத் தெளிவாக விளக்குவதோடு மட்டுமல்லாது, பாதிப்படைந்த குறிப்பிட்ட பகுதிகளைக் கோடிட்டுக் காட்டவும் உதவுகிறது. மேலும், இதயத்தின் அறைகளின் நிலை, ரத்தத்தின் இயக்கம் மற்றும் வால்வுகள் செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம்.
இதய MRI ஸ்கேன் என்றால் என்ன?
இதயப்பகுதியில், MRI ஸ்கேனரில் உள்ள காந்தம் மற்றும் ரேடியோ அலைகளைச் செலுத்தி, எவ்வித வலியும் இல்லாமல், இதயத்தைத் தெளிவாகப் படம் பிடிக்கும் சோதனை முறையே இதய MRI ஸ்கேன் ஆகும். இதயத்தின் பாகங்களான அறைகள், வால்வுகள் மற்றும் தசைகளையும், அவற்றின் செயல்பாடான ரத்த இயக்கத்தையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இரண்டு அல்லது முப்பரிமாண உயர்தரப் படங்கள் ,மருத்துவருக்கு, இதயத்தில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை அறிந்து, என்ன நோய் ஏற்பட்டு உள்ளது என்பதைக் கண்டறிய உதவுகிறது.
இதய MRI ஸ்கேனின் மூலம் என்னென்ன கண்டறியலாம்?
இதய MRI ஸ்கேன் சோதனையின் மூலம், இதயத்துடன் தொடர்புடைய பின்வரும் பாதிப்புகளை எளிதில் கண்டறியலாம்.
மார்பு வலி, மூச்சுத்திணறல் மற்றும் மயக்க உணர்வு
இதயம் விரிவடைதல்
இதயத் தசைகள் தடித்துப் போதல்
இதயம் செயலிழப்பு
இதயத் தசைகள் சேதம், வீக்கம் மற்றும் தொற்று
இதய வால்வு நோய்கள் குறிப்பாக வால்வுகளில் கசிவு, குறுகலான வால்வுகள்
இதயத்தில் அசாதாரண இரும்பு படிவு
இதயத்தின் பாதுகாப்பு உறையாகக் கருதப்படும் பெரிகார்டியத்தைத் தாக்கும் நோய்கள்
புற்றுநோய் மற்றும் பிற கட்டிகள்
பிறப்பிலிருந்தே காணப்படும் இதயப் பிரச்சினைகள்
உள்ளிட்ட பாதிப்புகளை, இதய MRI ஸ்கேன் சோதனையின் மூலம் கண்டறியலாம்.
இதய MRI ஸ்கேன் எப்போது மேற்கொள்ளப்படும்?
இதயத்தின் வடிவமைப்பு, அதன் பணிகள், அதில் தோன்றும் நோய்ப் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை, தெளிவாகப் படம் பிடித்துக் காட்ட இதய MRI ஸ்கேன் உதவுகிறது. மேற்கண்ட பாதிப்புகள் மட்டுமல்லாது,இந்தத் தருணங்களிலும் , இதய MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்வது அவசியமாகிறது.
மாரடைப்பு வந்தபிறகு, இதயத்திற்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பைச் சரிபார்க்கவும், மேலும் ரத்த குழாய்களில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளின் காரணமாக, ரத்த ஓட்டம் தடைப்படும் நிலை
இதயத்தின் பாகங்கள் தேய்மானம் அடைந்த நிலையில், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய பகுதியைக் குறிப்பிட.
இதயம் சீராக இயங்க தேவையான சிகிச்சையின் அளவைக் கண்டறிய
இதயம் பாதுகாப்பாக இயங்க தேவையான செயல்முறையைத் திட்டமிடசமீபத்தில் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சையின் வெற்றியை மதிப்பீடு செய்ய
இதய MRI ஸ்கேன் சோதனை மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது.
இதய MRI ஸ்கேன் சோதனை வேலைச் செய்யும் விதம்
மற்ற இமேஜிங் சோதனைகளைப் போன்று, இதய MRI ஸ்கேன் சோதனையில், கதிரியக்கம் பயன்படுத்தப்படுவது இல்லை. வலிமையான காந்தம் மற்றும் ரேடியோ அலைகளை, இதயப் பகுதிக்குள் செலுத்தி, வெளிவரும் சிக்னல்களைக், கணினி உதவியுடன் உயர்தரப் படங்களாகக் கிடைக்கின்றன.
இதய MRI ஸ்கேன் சோதனையைத் தவிர்க்க வேண்டியவர்கள்
இதய MRI ஸ்கேன் சோதனை, உடலுக்குத் தீங்கு விளைவிக்காத பாதுகாப்பான சோதனை ஆகும். இருந்தபோதிலும், பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் மற்றும் உடற்பகுதிகளில் மெட்டல் பிளேட் பொருத்திக் கொண்டவர்களுக்கு இந்தச் சோதனை உகந்தது அல்ல. அதேபோல் பேஸ்மேக்கர்ப் பொருத்திக் கொண்டவர்களுக்கு, இந்தச் சோதனை உகந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒவ்வாமைப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் சமீபத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர்கள், இந்தச் சோதனையைத் தவிர்ப்பது நல்லது.
சோதனை நாளில் மேற்கொள்ள வேண்டியவை
உங்கள் மருத்துவர் எதுவும் சொல்லாத நிலையில், நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மற்றும் வழக்கமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
சோதனையின் போது நகைகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், MRI ஸ்கேனரில் உள்ள காந்தம், நகைகளுக்குச் சேதம் விளைவிப்பதுடன், உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
உலோகத்தினால் ஆன மூக்குத்திகள், ஆடைகளில் ஜிப்புகள், உள்ளாடைகளில் ஊக்குகள் , கண்ணாடிகள், காது கேட்க உதவும் மெஷின்கள் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பது நல்லது.
உலோகம் எதுவும் இல்லாத, இலகுவான ஆடைகளை அணிய வேண்டும். இல்லையெனில், மருத்துவமனை அல்லது ஸ்கேன் மையம் வழங்கும் ஆடையினை அணியலாம்.
ஸ்கேன் மையத்தில் நீங்கள் ஸ்கேன் எடுக்கிறீர்கள் என்றால், நகைகள் உள்ளிட்ட பொருட்களை, அதற்கென உள்ள லாக்கரில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்கேன் படங்கள் துல்லியமாகத் தெரிய, கேடோலினியம் என்ற மருந்தை, ஊசி மூலம் உடலில் செலுத்துவர். இந்த மருந்தும், CT ஸ்கேன் சோதனையின் போது பயன்படுத்தப்படும் மருந்தும் வெவ்வேறானது ஆகும்.
MRI ஸ்கேனர் அமைந்து உள்ள மேடையில், நோயாளியைப் படுக்க வைத்து, இந்த ஸ்கேன் சோதனை மேற்கொள்ளப்படும். இதற்கு முன்பாக, மார்புப் பகுதியில் ECG எடுப்பதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, இதயத் துடிப்பு மற்றும் சுவாச அளவு கணக்கிடப்படும்.
மேலும் வாசிக்க : MRI VS X-RAY : கொரோனா பாதிப்பைக் கண்டறிய எது சிறந்தது?
இதய MRI ஸ்கேன் நடைமுறை
இந்தச் சோதனை 30 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் கால அளவு கொண்டது ஆகும். சில தருணங்களில், மருத்துவர் ஸ்கேன் சோதனையின் போது சில் விநாடிகள் மூச்சை அடக்கிக் கொள்ள அறிவுறுத்துவார். ஸ்கேன் சோதனையின் போது, அசையாமல் இருப்பது முக்கியம் ஆகும். ஸ்கேன் சோதனை நடைபெறும் போது, வீடியோகேம் விளையாடும் போது ஏற்படும் சத்தம் போன்று ஒலி கேட்கும். பயப்பட வேண்டாம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அங்குள்ள மணியை அழுத்தி, ஆபரேட்டரின் உதவியைப் பெறலாம்.
பக்கவிளைவுகள்
ஸ்கேன் சோதனைக்குப் பிறகு, வேறு எந்த அசதியும் இல்லை என்றால், உடனடியாக, உங்களது அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.
ஊசி மூலம் உடலில் செலுத்தப்படும் கேடோலினியம் மருந்து, சிலருக்குக் குமட்டல் அல்லது தலைவலி உணர்வை ஏற்படுத்த கூடும்.
இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை அறியவும், அதற்கான சிகிச்சைகளை விரைந்து மேற்கொண்டு, நலம் காண இதய MRI ஸ்கேன் உதவுகிறது என்பது நிதர்சனமான உண்மை.