மேமோகிராம் – அல்ட்ரா சவுண்ட் ; எது சிறந்தது?
மார்பகப் புற்றுநோய் பாதிப்பு, சர்வதேச அளவில் பெண்களை அச்சுறுத்தி வரும் நிலையில், அதுதொடர்பான சிகிச்சைகள், முன்கூட்டியே கண்டறியும் சோதனைகள் உள்ளிட்டவைகள், மருத்துவ சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், இந்தக் கட்டுரையில், நாம் மேமோகிராம் மற்றும் மார்பக அல்ட்ரா சவுண்ட் சோதனைகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் வேற்பாடுகளை விரிவாகக் காண்போம்….
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை நாம் முன்கூட்டியே கண்டறிந்தால், அதற்குரிய சிகிச்சைகளை அளித்து வந்தால், அதனால் ஏற்படும் மரணங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய, மருத்துவர்கள் மேமோகிராம் சோதனை முறையையே அதிகம் பரிந்துரைச் செய்கின்றனர்.
மேமோகிராம்
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சோதனை முறை மேமோகிராம் ஆகும். இந்தச் சோதனையில், மார்பகப் பகுதியில் எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்தச் சோதனையின்மூலம், மார்பகப் பகுதியில் ஏதாவது அசாதாரண மாற்றங்கள் இருக்கின்றனவா என்றும், அது புற்றுநோய் கட்டிகளா என்றும் அடையாளம் காண முடியும்.
மேமோகிராம் சோதனையின் பலன்கள் யாவும், அனைத்துப் பெண்களுக்கும் ஒரேமாதிரி இருப்பது இல்லை. 40 வயது பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை மேமோகிராம் சோதனையை மேற்கொண்டால், அவர்களுக்கு ஒருவேளை, மார்பகப் புற்றுநோய் பாதிப்பிற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டால், பாதிப்பின் தீவிரத்தை நாம் கணக்கிட முடியும். புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள் பெண்கள், குறிப்பிட்ட இடைவெளிகளில், இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, அந்தப் பேராபத்தில் இருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.
மேமோகிராம் சோதனையின் செயல்முறை
மேமோகிராம் சோதனையின் போது, கதிரியக்க நிபுணர், பென்ணின் மார்பகப் பகுதியில் இரண்டு தகடுகளை, மார்பகத்தின் மேல் மற்றும் கீழ்புறமாகவும் மற்றும் பக்கவாட்டிலும் பொருத்தி, குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்துவார். ஊடுருவும் இந்த எக்ஸ்ரே கதிர்கள், டிடெக்டரில் பட்டு, மார்பகப் பகுதியை இரண்டு பரிமாண படங்களாக 100க்கும் மேற்பட்ட படங்களை எடுக்கும். பின் கணினி, இந்தப் படங்களை ஒருங்கிணைத்துத் தெளிவான, முழுமையான படமாக வழங்கும்.
மார்பகப் பகுதியில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் உள்ளனவா என்பதை, இந்தப் படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக, நாம் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்ற முடிவிற்கு வந்துவிடத் தேவையில்லை. டயக்னாசிஸ் மேமோகிராம் உள்ளிட்ட கூடுதல் சோதனைகளைச் செய்து, அதுகுறித்த தெளிவினைப் பெறலாம்.
மேமோகிராம் சோதனையின் பரிந்துரைகள் மற்றும் வரம்புகள்
மேமோகிராம் சோதனையின் போது, எக்ஸ்ரே கதிர்கள் (குறைந்த அளவே) பயன்படுத்தப்படுவதால், கர்ப்பிணிகளுக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தச் சோதனை, அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவது இல்லை.
அதேபோல், 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் பரிசோதனைச் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு, மேமோகிராம் சோதனைப் பரிந்துரைக்கப்படுவது இல்லை.
பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு, மேமோகிராம் சோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், அவர்களின் மார்பகப் பகுதியில் இருக்கும் அசாதாரண மாற்றங்கள் தெளிவாக அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
அல்ட்ரா சவுண்ட் சோதனை
மேமோகிராம் சோதனையில், மார்பகப் பகுதியில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவர் டயக்னாஸ்டிக் மேமோகிராம் அல்லது அல்ட்ரா சவுண்ட் சோதனைக்குப் பரிந்துரைச் செய்வார். இந்தச் சோதனை, மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் சோதனை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒலி அலைகளை, நமது உடலினுள் செலுத்தி படம் எடுக்கும் சோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் சோதனை அல்லது சோனோகிராம் சோதனை என்று அழைக்கின்றோம். மார்பகப் பகுதியில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய அப்பகுதியில் ஒலி அலைகளைச் செலுத்திப் படம்பிடிக்கின்றோம். இந்தச் சோதனையில், டிரான்ஸ்டியூசர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவியை, மார்பகப் பகுதியின் மீது வைத்துத் தேய்க்கும் போது, அதிலிருந்து வெளியாகும் ஒலி அலைகள், மார்பகத்தின் மீது ஊடுருவிச் சென்று பின் டிரான்ஸ்டியூசருக்குத் திரும்பி வந்து படமாக உருவாக்கம் பெறுகிறது.
அல்ட்ரா சவுண்ட் சோதனையானது, மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் சோதனை அல்ல. மேமோகிராம் சோதனையின் முடிவுகளில், மருத்துவ வல்லுநர்களால் தெளிவானதொரு முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும் போது, மருத்துவர்கள், அல்ட்ரா சவுண்ட் சோதனைக்குப் பரிந்துரைச் செய்கின்றனர்.
அல்ட்ரா சவுண்ட் சோதனையில், எக்ஸ்ரே கதிர்கள் போன்ற எந்தக் கதிர்களும் பயன்படுத்தப்படாததால், இது பாதுகாப்பான சோதனையாகக் கருதப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு, பெரும்பாலும் இந்தச் சோதனையே பரிந்துரைக்கப்படுகிறது.
பயாப்ஸி சோதனையின் போது, மார்பகப் பகுதியின் சரியான இடத்தில் இருந்து திசுவை எடுக்க, அல்ட்ரா சவுண்ட் சோதனைப் பேருதவி புரிகிறது. 20 வயது பெண்களுக்கு, இந்தச் சோதனையே பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க : எந்த வயதினருக்கு மேமோகிராம் சோதனைக் கட்டாயம்?
மேமோகிராம் vs அல்ட்ரா சவுண்ட்
மேமோகிராம் சோதனை உடன் ஒப்பிடும் போது, அல்ட்ரா சவுண்ட் சோதனை, பல்வேறு வகையான படங்கள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும், மார்பகப் பகுதியில் உள்ள கால்சியம் படிவுகளை, அல்ட்ரா சவுண்ட் சோதனையில் அடையாளம் காணப்பட இயலாதது, சற்று பின்னடைவே ஆகும்.
மார்பகப் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனைகளில், அல்ட்ரா சவுண்ட் சோதனையை, பின்னுக்குத் தள்ளி, முன்னணி வகிக்கிறது மேமோகிராம்….