MRI ஸ்கேன் – அறிந்ததும்….அறியாததும்…
மருத்துவ உலகில், காந்த அதிர்வுகளைக் கொண்டு உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை ஸ்கேன் முறையில் படம் பிடிக்கும் முறையை, MRI ஸ்கேன் என்று அழைக்கின்றோம்.
Magnetic Resonance Imaging (காந்த அதிர்வு இமேஜிங்) என்பதன் சுருக்கமே MRI ஸ்கேன் சோதனை ஆகும். இது கதிரியக்கத் தொழில்நுட்பம் அடிப்படையிலான சோதனை ஆகும். இந்தச் சோதனையில், உடலின் பாகங்களைப் படம் எடுக்க வலிமையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
உடலில் ஏற்படும் காயங்கள், கட்டிகள், இதயம் சார்ந்த சில பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைக் கண்டறியவும் MRI ஸ்கேன் சோதனைப் பயன்படுகிறது. எக்ஸ்ரே சார்ந்த சோதனைகளில் அறியப்படாத தகவல்களை அறிய எம் ஆர் ஐ ஸ்கேன் உதவுகிறது.
எகஸ்ரே சோதனைகள், உடலில் கால்சியம் நிறைந்த எலும்பு பகுதிகளை மட்டும் துல்லியமாகப் படம்பிடிக்க உதவுகின்றன. நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகள் மற்றும் திசுக்களில் நீர் உள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை அறிய எக்ஸ்ரே சோதனைப் போதுமானதாக இல்லை. இந்நிலையிலேயே, எம் ஆர் ஐ ஸ்கேன் சோதனையின் பயன்பாடு அவசியமாகிறது. எம் ஆர் ஐ ஸ்கேன் சோதனை, உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் உட்புற கட்டமைப்பைத் துல்லியமாக, படம்பிடிக்க உதவுகிறது.
MRI ஸ்கேன் செயல்முறை
MRI ஸ்கேனர், இரண்டு சக்திவாய்ந்த காந்தங்களைத் தன்னகத்தே கொண்டு உள்ளது.
மனித உடல் பெரும்பாலும் நீர் மூலக்கூறுகளால் ஆனது. நீர் என்பது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுவால் கட்டமைக்கப்பட்டது ஆகும். ஒவ்வொரு அணுவின் மையப் பகுதியிலும் புரோட்டான் எனப்படும் சிறிய துகள் காணப்படுகிறது. இதற்குக் காந்த உணர்திறன் அதிகமாகஉள்ளது.
சாதாரணமாக, நமது உடலில் உள்ள நீர் மூலக்கூறுகள் ஒழுங்கற்ற வகையில் விரவிக் கிடக்கும். நமது உடல், எம் ஆர் ஐ ஸ்கேன் சோதனைக்கு உட்படும் போது, ஸ்கேனரில் உள்ள முதல் காந்தம், உடலில் விரவிக் கிடக்கும் நீர் மூலக்கூறுகளை ஒரே திசைக்கு ( வடக்கு அல்லது தெற்கு) கொண்டு வருகின்றது.
மென் திசுக்களில் காணப்படும் நீர் மூலக்கூறுகளில் உள்ள புரோட்டான்கள் மீது, ஸ்கேனரில் உள்ள காந்தப்புலம் செயல்படுகிறது. இவ்வாறு காந்தமயமாக்கப்பட்ட புரோட்டான்கள், ஸ்கேனரில் இருந்து வெளிவரும் ரேடியோ அலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், எதிரொலிகளை அனுப்புகின்றன. ஸ்கேனர் உடன் இணைக்கப்பட்டு உள்ள கணினி, இந்த எதிரொலிகளை, படங்களாக ஒழுங்கமைக்கின்றன. எம் ஆர் ஐ ஸ்கேன் சோதனை முறையால், உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களை எந்தக் கோணத்தில் இருந்தும் தெளிவாகப் படம் பிடிக்க முடியும்.
ஸ்கேன் எடுக்க உள்ள நபர், ஸ்கேனர் இருக்கும் அறைக்கு வருவதற்கு முன்னதாகவே, கைக்கடிகாரம், சாவிகள், நகைகள் உள்ளிட்ட உலோகப் பொருட்களைக் கழற்றி வைத்துவிட வேண்டும்.
MRI ஸ்கேன் எடுக்கும் முறை
நகரும் வகையிலான ஸ்கேனர் டேபிளில், நீங்கள் படுக்க வைக்கப்படுவீர்கள். இதில் படுத்தவுடன், ஸ்கேன் எடுத்து முடிக்கும்வரை, நீங்கள் எந்த ஒரு அசைவுகளையும் மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு அசைய நேர்ந்தால், அது மங்கலான மற்றும் தெளிவற்ற படங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஸ்கேன் எடுக்கும்போது, சிறிய சிறிய சத்தங்கள் எழும். இது நோயாளியை அச்சுறுத்து விடக்கூடாது என்பதற்காக, காதுகளில் பஞ்சுகளை வைத்துக் கொள்ள அறிவுறுத்துவர். இல்லையெனில், நோயாளியின் காதில் ஹெட்செட்டை மாட்டிவிட்டு, அவருக்குப் பிடித்த பாடலைக் கேட்க வைப்பர்.
ஸ்கேன் எடுக்கப்படும் பகுதியில் சிறிது உஷ்ண உணர்வை உணர முடியும்.
ஸ்கேன் சோதனைக்கான கால அளவு பொதுவாக ஒரு மணி நேரம் ஆகும். நோயாளியின் பாதிப்புத் தன்மையைப் பொறுத்து, இந்தக் கால அளவு வேறுபடலாம்.
மேலும் வாசிக்க : முழு உடல் PET ஸ்கேனை எப்போது மேற்கொள்ள வேண்டும்?
பயன்பாடுகள்
எம் ஆர் ஐ ஸ்கேனின் உருவாக்கம், மருத்துவத் துறையின் மைல்கல் வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர், இனி மனித உடலின் முக்கிய அம்சங்களை, எம் ஆர் ஐ ஸ்கேன் உதவியுடன் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
- மூளை மற்றும் தண்டுவடப் பகுதியில் காணப்படும் அசாதாரண மாற்றங்கள்
- உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் கட்டிகள், நீர்க்கட்டிகள் மற்றும் அசாதாரண மாற்றங்கள்
- மார்பகப் புற்றுநோய் அதீதப் பாதிப்பு அபாயம் கொண்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
- முழங்கால், முதுகு மற்றும் மூட்டுப் பகுதிகளில் ஏற்படும் காயங்கள்
- சில வகை இதயப் பிரச்சினைகள்
- கல்லீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் நோய்கள்
- பெண்களின் கர்ப்பப்பைப் பகுதியில் ஏற்படும் வலியை மதிப்பிடல்
- மலட்டுத்தன்மைத் தொடர்பான மருத்துவத்திற்கு வரும் பெண்களின் கருப்பையில் அசாதாரண மாற்றங்கள் உள்ளிட்டவைகளைக் கண்டறிய எம் ஆர் ஐ ஸ்கேன் உதவுகிறது.
MRI ஸ்கேன் சோதனை, மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான பாதிப்புகளைக் கண்டறிய உதவுவதோடு மட்டுமல்லாது, அதற்கு உரிய சிகிச்சையை மேற்கொள்ள உதவுகின்றது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.