Pet-CT ஸ்கேன் – அறிந்ததும்…. அறியாததும்!!!
மார்பகப் புற்றுநோயின் பாதிப்பை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய மெமொகிராம் சோதனைப் பயன்பாட்டில் இருப்பது போன்று, புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட குறைபாடுகளைக் கண்டறிய Pet-CT ஸ்கேன் எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் பேருதவி புரிகிறது.
புற்றுநோய் பாதிப்புகள், இதயம் மற்றும் அது சார்ந்த நோய்கள், மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய, மருத்துவ வல்லுநர்கள், Pet-CT ஸ்கேன் முறையையே அதிகம் பரிந்துரைச் செய்கின்றனர்.
PET ஸ்கேன் முறைச் செயல்படும் விதம்
PET ஸ்கேன் முறையில், முப்பரிமாண படங்கள், சோதனை முடிவுகளாகக் கிடைக்கின்றன. இந்த ஸ்கேன் முறையில், உடலில் உள்ள திசுக்களில் காணப்படும் செல்களின் படம் எடுக்க, புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் (FDG) ரேடியோடிரேசர் ஆகப் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய், மூளை, இதய நோய்கள் உள்ளவராகச் சந்தேகிக்கப்படும் உடலின் கரோனரி ரத்தக்குழாய் வழியாக, இந்த ரேடியோடிரேசர் உட்செலுத்தப்படுகிறது. நமது உடல் உறுப்புகள் சீராக இயங்க, குளுக்கோஸ் இன்றியமையாததாகிறது. இந்த ரேடியோடிரேசரில் உள்ள குளுக்கோஸ், திசுக்களில் உள்ள செல்களுக்குள் செல்கின்றது ரேடியோடிரேசர், உடலில் உள்ள செல்கள் முழுவதிலும் பரவி விடுகிறது. பின், இந்த நிலையில், PET ஸ்கேன் எடுக்கப்படுகிறது.
செல்கள் அனைத்திலும் வியாபித்து உள்ள புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ், பாசிட்ரான் கதிர்களை வெளியிடுகின்றது. சாதாரண செல்களை ஒப்பிடும் போது, புற்றுநோய் செல்கள் விரைவாகப் பல்கிப் பெருகும் தன்மைக் கொண்டது. இதன்காரணமாக, பாசிட்ரான் கதிர்கள், மிகவும் விரைவாகவும் மற்றும் எளிதாகவும், புற்றுநோய் செல்களைக் கண்டறிகின்றன.
Pet ஸ்கேனரில் காமா கதிர்கள் அடிப்படியிலான கேமரா அமைப்பு உள்ளது. இந்தக் காமா கேமரா, திசுக்களில் உள்ள செல்களைப் படம் பிடிக்கின்றன. பின், இந்தப் படங்கள் முப்பரிமாண படங்களாக மாற்றப்பட்டு நமக்குக் கிடைக்கிறது. இந்தப் ப்டங்களில், புற்றுநோய் பாதிப்பு உள்ள இடங்களில் நெருப்பு இருப்பது போன்று காட்டும். இதனை ஹாட்ஸ்பாட் என்று குறிப்பிடுகிறோம். புற்றுநோய் பாதிப்பிற்கு உரியச் சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு, மீண்டும் Pet ஸ்கேன் எடுத்துப் பார்த்தால், அந்தச் செல்கள், சாதாரண செல்கள் போன்று தோற்றமளிக்கும். இது புற்றுநோய் பாதிப்பு நீங்கிவிட்டதை உணர்த்துகிறது.
புற்றுநோய் பாதிப்பு இருப்பின் அதனைக் கண்டறியவும், பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், அதற்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பிறகு, அது குணம் அடைந்ததா என்பதைக் கண்டறிய Pet ஸ்கேன் சோதனை, மருத்துவ வல்லுநர்களுக்குப் பேருதவி புரிகிறது.
PET ஸ்கேன் சோதனைக்குத் தயாராவது எப்படி?
PET ஸ்கேன் சோதனையை நீங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டு அதற்கான நேரத்தைக் குறித்தீர்கள் என்றால்,மருத்துவர்ச் சொல்லும் உணவு முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
12 மணிநேரத்திற்கு முன்
கார்போஹைட்ரேட் (சர்க்கரை) குறைவாக உள்ள உணவுப் பொருட்களான இறைச்சி, பாலாடைக் கட்டி, டோஃபு, முட்டைகள், வெண்ணெய், ஸ்டார்ச் சத்து இல்லாத காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.
தானியங்கள், பாஸ்தா, பால், ரொட்டிகள் மற்றும் சர்க்கரை அதிகம் கொண்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
6 மணி நேரத்திற்கு முன்
PET ஸ்கேன் சோதனையை எடுப்பதற்கு 6 மணிநேரத்திற்கு முன்னதாகவே, நீங்கள் உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். தண்ணீர் மட்டும் தேவைப்படும்போது அருந்தலாம்.
இதற்கு முன் CT அல்லது MRI ஸ்கேன் எடுத்து இருந்தால், அதன் பிரதியை, PET ஸ்கேன் சோதனையின் போது வைத்திருப்பது நல்லது.
PET ஸ்கேன் சோதனையில் கிடைக்கும் முடிவுகளை, அதற்குரிய மருத்துவரிடம் காண்பித்து, புற்றுநோய், மூளை, நரம்பு குறைபாடுகள் மற்றும் இதய நோய்களின் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.
வகைகள் அதன் பயன்கள்
ஒவ்வொரு புற்றுநோய் பாதிப்புகளையும், அதன் துவக்க நிலையிலிருந்து கண்டறிய Pet-CT ஸ்கேன் முறையில், ஐசோடோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பயன்படுத்தப்படும் ஐசோடோப்புகளைப் பொறுத்து, Pet-CT ஸ்கேன் முறையை, 4 வகையாகப் பிரிக்கின்றோம்.
Pet-CT ஸ்கேன் முறையில், ஐசோடோப்புகள், திரவ நிலையில் இருக்கும். ஸ்கேன் எடுப்பதற்கு முன்னதாக, இந்தத் திரவ நிலையிலான ஐசோடோப்புகள், ஊசி மூலம் உட்செலுத்தப்படுகிறது. இந்தத் திரவ ஐசோடோப்புகளில் உள்ள டிரேசர், உடலினுள் நுழைந்து, குறிப்பிட்ட புற்றுநோய் செல்கள் உடன் இணைந்து, அந்த இடத்தை ஒளிரச் செய்கிறது. இதன்மூலம், பாதிப்படைந்த இடத்தை, Pet-CT ஸ்கேனின் உதவியுடன் மருத்துவர்கள் கண்டறிகின்றனர்.
F18 FDG, F18 PSMA , செரியணா (18F-FES) மற்றும் நெட்ஸ்பாட் (கேலியம் Ga 68 டொடாடேட்) உள்ளிட்ட ஐசோடோப்புகள் தற்போது பெருமளவில் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன.
F18 FDG
புற்றுநோய் செல்கள், உடலின் மற்ற செல்களைவிட,அதிகச் செயல்திறன் கொண்டதாக இருக்கும் தன்மைக் கொண்டது . மேலும் புற்றுநோய் செல்கள் விரைவாகப் பல்கிப் பெருகும் தன்மை உடையவை. இந்தத் தன்மைக் கொண்ட செல்களை அடையாளம் கண்டு கண்காணிக்க, புளோரோடியாக்ஸிகுளுகோஸ் (FDG) ஐசோடோப் உதவுகிறது. இது அந்த புற்றுநோய் செல்களைத் துல்லியமாகப் படம்பிடிக்க உதவுகிறது.
நுரையீரல், மூளை, குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மட்டுமல்லாது லிம்போமா மற்றும் மெலனோமா வகைப் புற்றுநோய்ச் செல்களைக் கண்காணிக்கவும், அதற்குரிய சிகிச்சைகளை அளிக்கப் புளோரோடியாக்ஸி குளுக்கோஸ்(FDG) உதவுகிறது.
இந்தச் சோதனையைச் செய்து கொள்பவர்கள், சோதனைக்கு 6 மணி நேரம் முன்னதாகவே, உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 200க்கும் மேல் மிகாமல் இருக்க வேண்டும். (ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, குளுகோமீட்டர்க் கொண்டு அளவிட வேண்டும்). திரவ ஐசோடோப்பை உடலில் செலுத்திய பிறகு, ஒரு மணிநேரம் ஓய்வு நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஸ்கேன் எடுப்பதற்கு முன்னர், சிறுநீர்ப்பையைக் காலி செய்துவிட வேண்டும். இந்த ஸ்கேன் சோதனைக்கு, 15 முதல் 25 நிமிடங்கள் ஆகும்.
F18 PSMA
நமது உடலின் முக்கிய சுரப்பியாக உள்ள புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் கட்டியை அடையாளம் காண உதவும் ஆன்ட்டிஜென் (PSMA – prostate-specific membrane antigen) ஆகும்.
புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பின் துவக்க நிலை அறிகுறியான புராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்ட்டிஜென் அதிகரித்து இருப்பதைத் தெரிந்து கொள்ளவும் மற்றும் ஒருவருக்குப் புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய இந்த F18 PSMA வகை உதவுகிறது. மற்ற பட வகைகளில் அடையாளம் காண முடியாத புராஸ்டேட் சுரப்பு புற்றுநோய் செல்களை, இந்த வகை ஸ்கேன் மூலமாகவே, துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.
இந்தச் சோதனையை மேற்கொள்வதற்கு முன் பட்டினி இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஊசி செலுத்தப்பட்ட பிறகு, ஒரு மணி நேரம் ஓய்விலிருந்தால் போதும். ஸ்கேன் எடுப்பதற்கு முன் சிறுநீர்ப்பையைக் செய்து விடுவது நல்லது. இந்தச் சோதனை, 20 முதல் 30 நிமிடங்கள் கால அளவு கொண்டது ஆகும்.
கார்டியாக் Pet ஸ்கேன்
கார்டியாக் Pet ஸ்கேன், இதயம் மற்றும் அதுசார்ந்த பாதிப்புகளைக் கண்டறியப் பெருமளவில் பரிந்துரைக்கப்படும் சோதனை ஆகும். இதயப் பகுதியில் உட்செலுத்தப்படும் ரேடியோடிரேசர், அதில் உள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து விரிவான முப்பரிமாண படங்களாக நமக்கு வழங்குகிறது.
இதய அறைகளுக்கு, ரத்த ஓட்டம் சீராகச் சென்றால் மட்டுமே, நமது உடலில் உள்ள அனைத்துப் பாகங்களும் நல்ல முறையில் இயங்கும். மாரடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படும் போது, இதயத்தின் செயல்பாடுகள் ஆட்டம் காணத் துவங்கி விடுகிறது. இந்த ஸ்கேன் முறை, இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை அளிக்க உதவுகிறது.
செரியன்னா (18F-FES)
புளோரோஎஸ்ட்ராடியோல் F18 என்ற வேதிப்பொருளையே, சுருக்கமாக, செரியன்னா எனக் குறிப்பிடுகிறோம். இது மார்பகப் புற்றுநோய் செல்களுடன் ஈஸ்ட்ரோஜன் ரிசப்டார்ப் பாசிட்டிவ் ஏற்பி உடன் இணைந்து, புற்றுநோய் செல்களை அடையாளம் காண உதவுகிறது.
பயாக்ஸி சோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஈஸ்ட்ரோஜன் ரிசப்டார்ப் பாசிட்டிவ் ஏற்பி இருப்பது தெரியவரும் பட்சத்தில், இந்தச் சோதனை, மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய உதவுகிறது.
இந்தச் சோதனையை மேற்கொள்வதற்கு முன் பட்டினி இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஊசி செலுத்தப்பட்ட பிறகு, 80 நிமிடங்கள் ஓய்வில் இருப்பது அவசியம் ஆகும். இந்தச் சோதனைக்கு முன்னதாக, ஹார்மோன்களின்
செயல்பாடுகளைத் தடைச் செய்யும் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். இந்தச் சோதனை, 20 முதல் 30 நிமிடங்கள் கால அளவு கொண்டது ஆகும்.
நெட்ஸ்பாட் (கேலியம் Ga 68 டொடாடேட்)
நமது உடலில், ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நரம்பு செல்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்கு நியூரோஎண்டோகிரைன் கட்டிகள் என்று பெயர். இந்த நியூரோஎண்டோகிரைன் கட்டிகளில் காணப்படும் சொமாட்டோஸ்டாடின் ரிசெப்டார்களில், இந்த நெட்ஸ்பாட் இணைந்து, பாதிப்பைக் கண்டறிய உதவுகிறது.
நியூரோஎண்டோகிரைன் கட்டிகள் மிகவும் அரிதான வகைப் புற்றுநோய் கட்டி ஆகும். இது பொதுவாக நுரையீரல், குடல் பகுதிகள், வயிற்றுப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்தச் சோதனையை மேற்கொள்வதற்கு முன் பட்டினி இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சோதனைக்கு முன் சொமட்டோஸ்டாடின் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. ஊசி செலுத்தப்பட்ட பிறகு 40 நிமிடங்கள் ஓய்வு நிலையில் இருப்பது அவசியம். இந்தச் சோதனை. 25 முதல் 30 நிமிடங்கள் கால அளவு கொண்டது ஆகும்.
பக்கவிளைவுகள் மற்றும் அபாயங்கள்
PET – CT ஸ்கேன் சோதனை, பாதுகாப்பான சோதனைத் தான் என்றபோதிலும், இதிலும் பக்க விளைவுகள் மற்றும் அபாயங்கள் இருக்கின்றன.
ஒவ்வாமை
PET – CT ஸ்கேன் சோதனையில் பயன்படுத்தப்படும் ரேடியோடிரேசர், சிலருக்கு ஒவ்வாமைப் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. தோலில் அரிப்பு, படை நோய், சுவாசித்தலில் பிரச்சினை உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும். சிலருக்கு அரிதாக அனாபைலாக்சிஸ் நிகழ்வு ஏற்பட்டு, அவர்களது மரணத்திற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
கதிரியக்க வீச்சு பாதிப்பு
PET – CT ஸ்கேன் சோதனையில் கதிரியக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நேரம், கதிரியக்கத் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, அது புற்றுநோய் போன்ற இன்னபிற உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடுகின்றன. PET – CT ஸ்கேன் சோதனை முறையில், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்கே, கதிரியக்கம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குமட்டல்
PET – CT ஸ்கேன் சோதனை மட்டுமல்லாது, எந்தவொரு சோதனை மேற்கொண்டாலும், வாந்தி, குமட்டல், மயக்கம் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். இத்தகைய பக்கவிளைவுகள், சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்பதால், அச்சப்படத் தேவையில்லை.
தலைவலி
PET – CT ஸ்கேன் சோதனையின் போது தலைவலி ஏற்படுவது சாதாரண நிகழ்வு தான். தலைவலி உணர்வு, சில மணி நேரங்களில் சரியாகி விடும்.
தலைச்சுற்றல்
PET – CT ஸ்கேன் சோதனைக்குப் பிறகு, சிலருக்குத் தலைச்சுற்றல் உணர்வு ஏற்படுவது இயல்பானது தான். சில மணிநேரங்களில். இந்த உணர்வு சரியாகி விடும்.
வலி அல்லது அசவுகரியம்
PET – CT ஸ்கேன் சோதனையின் போது, ரேடியோடிரேசர் ஊசி மூலம் உடலில் செலுத்தப்பட்ட பிறகு, அந்த இடத்திலோ அல்லது, உடலின் மற்ற பகுதிகளிலோ, வலி அல்லது அசவுகரியம் ஏற்படலாம்.
இத்தகைய பக்கவிளைவுகள் சாதாரணமானது என்றபோதிலும் , அதைத் தீவிரம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
அபாயங்கள்
PET – CT ஸ்கேன், வலி இல்லாத சோதனை முறை என்றாலும், இதிலும் சில அபாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.இந்தச் சோதனையில் பயன்படுத்தப்படும் ஸ்கேனர், கதிரியக்கத்தை வெளியிடவில்லை என்றாலும், அணுக்கதிரியக்கப் பொருளான புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ், ரேடியோடிரேசர் ஆகச் செயல்படுவதால், கதிரியக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.
PET – CT ஸ்கேன் சோதனையின் போது, நமது உடலில் வைக்கப்படும் குழாய் போன்ற கருவி, நடுக்க உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. சில நோயாளிகளுக்கு, கிளாஸ்ட்ரோபோபியா நிகழ்வையும் உண்டாக்குகிறது. இதுகுறித்து, உரிய மருத்துவரிடம் கலந்தாலோசித்து, தேவைப்படின் குறைந்த அளவில் வேலியம் (டயாஜிபம்) அல்லது அட்டிவன் (லோராஜ்பம்) பயன்படுத்தலாம்.
உடல்பருமன்
அதிக உடல்பருமன் கொண்டவர்களால், PET – CT ஸ்கேன் இயந்திரத்தில் சரியாகப் படுக்க வைக்க முடியாத நிலை உருவாகும் பட்சத்தில், அதில் உள்ள ஸ்கேனரால் துல்லியமாகப் படம் பிடிக்க இயலாமல் போகும். PET – CT ஸ்கேனர்ப் படுக்கைகள், 450 பவுண்டு எடையைத் தாங்கும் வகையிலும், அதன் டயாமீட்டர் 27.5 அங்குலம் (70 சென்டிமீட்டர்) வரை இருக்கும். இதன் அளவு, எல்லையைவிட அதிகரிக்கும் போது, தெளிவான, துல்லிய படங்கள் எடுக்க இயலாத சூழல் உருவாகும்.
தாய்மைக் காலம்
குழந்தைப் பிரசவித்த பெண்கள், PET – CT ஸ்கேன் சோதனைக்கு 24 மணிநேரத்திற்கு முன்பாகவே, குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிட வேண்டும். தேவைப்பட்டால், தாய்ப்பாலை, பாட்டில்களில் சேகரித்து வைத்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.
பெண்கள் கர்ப்பிணிகளாக இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு எவ்வாறு CT ஸ்கேன் செய்வதில்லையோ, அதுபோன்று, PET – CT ஸ்கேன் சோதனையையும் அந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
நீரிழிவு பாதிப்பு
PET – CT ஸ்கேன் சோதனைச் செய்வதற்கு முன்னதாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 200 mg/dL என்ற அளவிற்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதைவிட அதிகமாக இருக்கும்பட்சத்தில், ரேடியோடிரேசரால், செல்களைத் துல்லியமாகக் கண்டறிய இயலாத நிலை ஏற்படும்.
அதேபோல், உங்கள் உடலில் இன்சுலின் ஹார்மோன் அளவும் அதிகமாக இருக்கும் போது, அதிகளவில் ரேடியோடிரேசர்ப் பயன்படுத்தப்படுவதால், சோதனை முடிவுகள் சரியான அளவு கொண்டதாக இருக்கும் வாய்ப்பு குறைவு.
உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரைக் கலந்தாலோசித்து அதற்கேற்ற உணவு முறைகள் மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மேலும் வாசிக்க : PET/CT ஸ்கேன் – சாதகங்களும், பாதகங்களும்…
PET – CT ஸ்கேனின் நன்மைகள்
- புற்றுநோய் பாதிப்பின் துவக்க நிலையை முன்கூட்டியே அறிய PET – CT ஸ்கேன் பேருதவி புரிகிறது. மேலும்
- புற்றுநோய் கட்டி எங்கே உள்ளது?
- அது பரவும் தன்மையைக் கொண்டு உள்ளதா?
- எத்தனைப் பெரியதாக உள்ளது?
- மீண்டும் கட்டி வர வாய்ப்பு உள்ளதா உள்ளிட்டவற்றைக் கண்டறிய உதவி செய்கிறது.
- புற்றுநோய் பாதிப்பு இருப்பின் அதற்குரிய சிகிச்சை முறைகளைக் கண்டறிய உதவுகிறது.
- பயாப்ஸி எனப்படும் திசுப் பரிசோதனை அல்லது அறுவைச் சிகிச்சையின் தேவையைக் குறைக்கிறது.
- நேர விரயத்தைக் குறைக்கிறது.
- மேற்கொண்ட சிகிச்சைப் பலனளிக்கிறதா என்பதைக் கண்காணிக்கிறது.
PET – CT ஸ்கேனர் இயந்திரத்தின் எடை அளவு?
PET – CT ஸ்கேனர் இயந்திரத்தின் எடை 450 பவுண்டுகள் கொண்டதாக இருக்கும். ஸ்கேன் எடுக்க வேண்டிய நபரின் உடல் எடை, அவரது உடல்வாகு, உள்ளிட்டவை ஸ்கேன் முடிவுகளில் எவ்வித மாற்றங்கள் நிகழலாம் என்பதைத் தீர்மானிக்கும்
ஸ்கேன் எடுப்பதற்கு முன் நடப்பது என்ன?
ஸ்கேன் எடுப்பதற்கு முன்னர், கதிரியக்க பொருளான புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ், ஊசி மூலம் உட்செலுத்தப்படுகிறது. இது ரேடியோடிரேசராகச் செயல்படுகிறது.. இந்த ஊசி செலுத்தப்பட்ட பிறகு, 30 முதல் 90 நிமிடங்கள் ஓய்வு நிலையிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான், ரேடியோடிரேசர் உடல் முழுவதும் பரவும்.
ஓய்விற்குப் பிறகு, தொழில்நுட்ப உதவியாளரின் உதவியுடன், ஸ்கேனர் இருக்கும் இடத்தில் படுக்க வைக்கப்படுவீர்கள். முதலில் CT ஸ்கேனும், அதனைத் தொடர்ந்து, PET ஸ்கேனும் எடுக்கப்படும். CT ஸ்கேன் எடுக்கப்படும் போது, சில விநாடிகள், மூச்சை அடக்கிக் கொண்டு இருக்க வேண்டியது கட்டாயம்.
ஸ்கேன் நிகழ்வு முடியும்வரை, அசையாமல் இருக்க வேண்டும். ஸ்கேன் எடுத்து முடித்த உடன், கணினி, எடுத்த படங்களை, முப்பரிமாண படங்களாக மாற்றி, மருத்துவ நிபுணரிடம் வழங்கும்.
கால அளவு
ஒவ்வொரு நோய் தொடர்பான PET – CT ஸ்கேனுக்கும் ஒவ்வொரு நேரம் ஆகும். ஸ்கேன் எடுக்க வேண்டிய நபர், அந்த மையத்தில் குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் இருப்பது அவசியம் ஆகும். இந்தக் கால இடைவெளியில், அந்த நபருக்கு, ரேடியோடிரேசர் மருந்தை ஊசி மூலம் ஏற்றுவது, ஓய்வு நிலையில் இருப்பது, ஸ்கேனர் இயந்திரத்தில் இருக்கும் நேரம் உள்ளிட்டவையே அடங்கும்.
ஸ்கேன் நிகழ்விற்குப் பிந்தைய நடவடிக்கைகள்
ஸ்கேன் முடிந்த பின் உடனடியாக, நாம் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் உடல் முழுவதும் பரவி இருக்கும். ஸ்கேன் நிகழ்வு முடிந்த பின்னர், அதிகளவு நீரைப் பருக வேண்டும்.
எந்த வகைப் புற்றுநோய் வகைகளைக் கண்டறிய முடியும்?
PET – CT ஸ்கேன் சோதனையின் மூலம், கர்ப்பப்பைப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், தோல் புற்றுநோய், உள்ளிட்ட வகைகளைக் கண்டறிய முடியும்.
இந்தச் சோதனையின் மூலம் வீக்கங்களைக் கண்டறிய முடியுமா?
PET – CT ஸ்கேன், செல்களில் நிகழும் உயர் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் கண்டறியப் பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகளாக இல்லாத நிலையில், வீக்கம், தொற்று உள்ளிட்டவற்றையும், இதன்மூலம் கண்டறிய முடியும்.
PET – CT ஸ்கேன் சோதனை எந்த நேரத்தில்பரிந்துரைச் செய்யப்படுகிறது?
புற்றுநோய் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் உங்களுக்குப் பரிசோதனையின் போது தென்படும்பட்சத்தில், PET – CT ஸ்கேன் சோதனை உங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது. அதேநேரத்தில், நீங்கள் புற்றுநோய் பாதிப்பிற்கு மேற்கொண்ட சிகிச்சையின் செயல்திறனையும், இந்தச் சோதனையின் மூலம் கண்டறியலாம்.
PET ஸ்கேன்; CT ஸ்கேன் – இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
CT ஸ்கேன் சோதனையில் எக்ஸ்ரே டிடெக்டர் உதவி உடன், நம் உடலின் திசுக்கள் மற்றும் செல்களைப் படமெடுக்க உதவுகின்றன.
PET ஸ்கேன் சோதனையில், ரேடியோடிரேசர் மற்றும் ஸ்கேனர்ப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் உதவியால், திசுக்கள் மற்றும் செல்களின் செயல்பாடுகளைக் கண்டறிய முடியும்.
கதிரியக்க வீச்சு பாதிப்பு
PET – CT ஸ்கேன் சோதனையில் கதிரியக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நேரம், கதிரியக்கத் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, அது புற்றுநோய் போன்ற இன்னபிற உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடுகின்றன. PET – CT ஸ்கேன் சோதனை முறையில், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்கே, கதிரியக்கம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஹாட்ஸ்பாட் என்றால் என்ன?
Pet ஸ்கேனரில் காமா கதிர்கள் அடிப்படியிலான கேமரா அமைப்பு உள்ளது.இந்தக் காமா கேமரா, திசுக்களில் உள்ள செல்களைப் படம் பிடிக்கின்றன. பின், இந்தப் படங்கள் முப்பரிமாண படங்களாக மாற்றப்பட்டு நமக்குக் கிடைக்கிறது. இந்தப் படங்களில், புற்றுநோய் பாதிப்பு உள்ள இடங்களில் நெருப்பு இருப்பது போன்று காட்டும். இதனை ஹாட்ஸ்பாட் என்று குறிப்பிடுகிறோம்.
மற்ற நோய்களின் பாதிப்புகளையும் கண்டறியுமா?
PET ஸ்கேன் சோதனையில் கிடைக்கும் முடிவுகளை, அதற்குரிய மருத்துவரிடம் காண்பித்து, புற்றுநோய், மூளை, நரம்பு குறைபாடுகள் மற்றும் இதய நோய்களின் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.
PET ஸ்கேன் சோதனை, மூளை, நரம்பு குறைபாடுகள் மற்றும் இதய நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து அப்பாதிப்புகளிலிருந்து நோயாளிகளை நிவாரணம் பெற உதவுகிறது.